September 09, 2011

சைக்கிள்


சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள நினைத்தபோது பாபு (எ) ராஜகோபால் தான் நினைவுக்கு வந்தான்.
எதிலுமே தடாலடி. தெரு கவுன்சிலர் பெண்ணையே கலாய்த்தவன். அதுவும் இவனைப் பார்த்தால் வெகுளியாய் சிரிக்கும்.
எனக்குத் தெரிந்து சுமாராய் சைக்கிள் ஓட்டிய முதல் நபர் எங்கள் தெரு எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார்.
வீட்டு வாசலில் அவர் ஏற முயற்சிக்கும்போது, அரை பர்லாங் தள்ளி யாரோ நடந்து வருவது.. ஏதேனும் ஒரு வாகனம் கண்ணில் பட்டால் இறங்கி விடுவார். பெடல் செய்து ஏறினால் சுலபம் என்று யாரோ சொன்னதைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு பாதி தெரு வரை தார் ரோட்டில் காலைத் தேய்த்து புது ரோடு போட வேண்டிய அவசியம் உண்டாக்கிவிடுவார்.
’ரொம்ப ஈசிடா’
பாபு தைரியம் கொடுத்தான். ரகசியமாய் சிகரட் பிடிப்பான். எங்கள் மத்தியில் அவன் பிடிக்கும்போது ‘வளையம் விடு’ என்று நேயர் விருப்பம் வைப்போம்.
அவன் எங்காவது போக வேண்டியிருந்தால் அப்போது வருவான்.
‘வாடா.. கத்துத் தரேன்’
ஏறத்தெரியாது. இறங்கத் தெரியாது. ஆனால் எப்படியோ ஓட்ட மட்டும் கற்றுக் கொண்ட நேரம் அது.
பாபு பிடித்துக் கொள்ள நான் ஏறி ஓட்ட ஆரம்பித்ததும் அவன் லாவகமாய் (லாகவமா, லாவகமா என்கிற குழப்பத்தை நண்பர் சௌரிராஜன் தான் அழகாய் தீர்த்து வைத்தார். லவ்.. லாவகம் .. இப்படி ஞாபகம் வச்சுக்குங்க. அவரிடம் கேடகல.. லகுவாய் இருப்பதால் லாகவம்தானே என்று. லகுவை விட லவ் பிடித்துப் போனதால்) ஏறி அமர்ந்து இடத்தைச் சொல்லுவான்.
இறங்கப் போகிற இடம் வந்ததும் அவன் குதித்து சைக்கிளைப் பிடித்துக் கொள்ள நான் குதிப்பேன்.
இரண்டு சம்பவங்கள் மறக்க முடியாதவை.
மேலூர் சாலையில் ஓட்டிப் போனபோது எதிரில் ஒரு பாட்டி தடி ஊன்றி நடந்து வந்தார். என் சைக்கிளுக்கு அவர் மேல் என்ன பாசமோ.. பாபு எச்சரித்தான். ‘பார்த்து ஓட்டுடா.. பாட்டி’
அரைகுறையாய்க் காதில் வாங்கிக் கொண்டு பாட்டி மீது விட்டேன்.
குச்சி இரண்டாக உடைந்து விட்டது. பாட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை.
‘கட்டைல போக’ என்றார் ஸ்பஷ்ட்மாக.
இனி நன்றாக ஓட்ட வரும் என்று தைரியம் வந்தது! பாட்டியின் ஆசிர்வாதம்.
அடுத்த சம்பவம். சைக்கிளை போட்டுக் கொண்டு விழுந்து காலில் சிராய்ப்பு.
வண்டிக்கும் அடி.
‘என்னடா பண்றது..’
“கடைக்காரர் உன்னை பெண்டு நிமிர்த்திடுவார்..” என்றான் பாபு சைக்கிள் பெண்டை முடிந்தவரை நிமிர்த்திக் கொண்டு.
கஷ்ட காலத்தில் குறுக்கு புத்தி சரியாக வேலை செய்கிறது.
கடைக்கு ஐம்பதடி வரை தள்ளிக் கொண்டு போய்.. டக்கென்று குரங்கு பெடல் அடித்து.. கடை வாசலில் லாவகமாய் (!) நிறுத்தி..
“எவ்வளவுண்ணே”
பேரம் பேசாமல் பைசாவைக் கொடுத்து விட்டு முட்டி வலி கூடப் பார்க்காமல்
வேகமாய் ஓடி வந்து விட்டேன்.
பத்தாவது நிமிஷம் பஞ்சாயத்துக்கு கடைக்காரர் வீட்டுக்கு வந்து விட்டார்.
‘என்ன தம்பி.. வண்டிய டாமேஜ் பண்ணிட்டு நைசா கொண்டு வச்சிட்டீங்க’
‘அப்படியா.. நல்லாத்தானே இருந்திச்சு.. ஓட்டிகிட்டு வந்தேனே’
பக்கத்தில் நின்ற என் சுற்றம் என் அப்பாவித்தனத்தைப் பார்த்து ‘உலக நாயகன்’
பட்டம் கொடுக்க நினைத்தபோது..
‘ஒழுங்கா ரிப்பேர் காசு கொடுத்துருங்க’
கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
‘கடைல இனிமே எடுக்காத.. பக்கத்து வீட்டு சைக்கிள்ல கத்துக்க’
அந்த சைக்கிள் மேலே ஏறி அமர காலைத் தூக்க்க்க்க்க்கி.. கிட்டத்தட்ட திரிவிக்கிரம அவதாரமே எடுக்க வேண்டும். அதை ஓட்டியவர் ரெங்காராவ் கெட்டப்பில் ஆறரை அடி உயரம்.
இரவல் கொடுக்கக் கூடாது என்றே அப்படி ஒரு சைக்கிள்.
சீட்டில் இருந்தால் பெடல் பண்ண முடியாது. பெடல் பண்ண கீழிறங்கினால்.. இரவு தூக்கத்தில் யாரையாவது உதைத்துக் கொண்டிருப்பேன் வலி பொறுக்காமல்.
இரண்டு கையும் விட்டு அழகாய் ஓட்டிப் போகிறவர்களைக் கண்டால் உள்ளூர பொறாமையும், பிரமிப்பும் வருகிறது இப்போதும்.





26 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் சைக்கிள் அனுபவம், படிக்க நன்கு நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ளது.

நான் முதல் நாள் சைக்கிளை மோதியதும் ஒரு பாட்டி மேல் தான். தெருவோரமுள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு சைக்கிள் கற்றுக்கொடுப்பதாகச் சொன்ன பாலு என்ற பையன் இடுப்பை வளைக்காமல் ஓட்டு, நான் பின்னால் கேரியரை பிடித்துக்கொண்டு உன்னுடன் தான் ஓடி வருகிறேன். தைர்யமாக ஓட்டு என்று சொல்லி, நடுவில் எங்கேயோ எஸ்கேப் ஆகி விட்டான்.

எனக்கு ப்ரேக் போட்டு காலை ஊன்றி இறங்கத்தெரியாமல் நேராக அந்த் குழாயடியில் விட்டுவிட்டேன். அதில் முட்டி மோதி சைக்கிள் சறிய கீழே விழுந்தேன்.

பாட்டி மேல் லேசாக மோதியதில் காலிக்குடம் ஒன்றை கையில் எடுத்து என்னை மொத்த வந்தாள் அந்தப்பாட்டி.

பிறகு ஏதோ சொல்லி சமாளித்து மொத்து வாங்காமல் காப்பற்ற ஓடி வந்து விட்டான் அந்த பாலு என்ற பையன்.

மறுநாள் முதல் நானே கவனமாக ஓட்ட ஆரம்பித்து விட்டேன். ப்ரேக் அடித்து காலை ஊனவும் ஆரம்பித்து விட்டேன்.

மிக நன்றாகவே சைக்கிள் பல வருஷம் ஓட்டியும், இந்தக் குரங்கு பெடல் மட்டும் எனக்கு இப்போதும் அடிக்கத்தெரியாது.

நல்லதொரு நகைச்சுவைப்பதிவுக்கு நன்றி, சார்.

ராமலக்ஷ்மி said...

சைக்கிள் நினைவுகள் அருமை.

raji said...

அதென்ன சார் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சதுமே எல்லாருமே பாட்டி மேலேயே மோதறோம்.ஆசிர்வாதத்துக்காகவா?

உலக நாயக நடிப்பும் திரிவிக்கிரம அவதார பாணி சைக்கிளும் நல்ல நகைச்சுவைப் பகிர்வுதான்.பகிர்விற்கு நன்றி

raji said...

அதென்ன சார் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சதுமே எல்லாருமே பாட்டி மேலேயே மோதறோம்.ஆசிர்வாதத்துக்காகவா?

உலக நாயக நடிப்பும் திரிவிக்கிரம அவதார பாணி சைக்கிளும் நல்ல நகைச்சுவைப் பகிர்வுதான்.பகிர்விற்கு நன்றி

Philosophy Prabhakaran said...

இந்த மாதிரி பதிவெல்லாம் பழைய ஸ்டைல் சாரே... புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க...

KParthasarathi said...

நான் குரங்கு பெடல் ஓட்டுகிற காலம்.சொந்த சைக்கிள் இல்லை.வாசலில் யார் சைக்கிள் வைத்தாலும் எடுத்து ஓட்டுகிற ஒரு சுவாதீனம்.என் அம்மா டாக்டர் வீட்டுக்கு ரிக்சாவில் கிளம்பிக்கொண்டிருந்தார்.அப்பொழது யாரோ ஒருவருடைய சைக்கிள் என் கையில் சிக்கியது.
"பார்த்தா, இன்னொருத்தர் சைக்கிளை தொடாதே.தொட்டால் தோலை உறிச்சுடுவேன்" என்று அம்மா மிரட்டி விட்டு சென்றாள்.அவர் ரிக்சா கொஞ்சம் தூரம் சென்ற பிறகு நான் வண்டியை எடுத்தேன்.குரங்கு பெடலில் உற்சாகமாய் ஒட்டி சென்றதில் ஒரு ரிக்சாவில் மோதினேன்.என்னோட போறாத வேளை அது அம்மா சென்ற ரிக்சா.

நீங்க சுவைபட எழுதினது பழைய ஞாபகங்களை கிளறியது.

வெங்கட் நாகராஜ் said...

சைக்கிள் நினைவுகள் என்றுமே இனியவை.... எனக்குக் குரங்கு பெடலே கிடையாது. நேராக சீட் சவாரி தான்...

யார் மேதும் மோதியதில்லை....

உங்கள் நினைவுகளை நீங்கள் விவரித்த விதம் அருமை.... நான் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது....

நெய்வேலியின் சாலைகளில் கையை விட்டபடி செய்த சாகசங்கள் நினைவுக்கு வருகிறது....

settaikkaran said...

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறவர்கள் எல்லாருக்குமே கீழே விழுந்த அனுபவமும், மற்றவர்களைக் கீழே தள்ளிய விகிதமும் சமவிகிதத்தில் இருக்கும் போலிருக்கிறது. :-))

குறையொன்றுமில்லை. said...

சைக்கிள் ஓட்டக்கதுக்க முட்டியெல்லாம் நல்லா பேத்துக்கணும் ஆனாதான் ஓரளவாவது கத்துக்க முடியும்.ஹி ஹி

rajamelaiyur said...

சைக்கிளில் இருந்து விழுந்த தழும்பு இன்னும் இருக்கிறது

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?

கதம்ப உணர்வுகள் said...

ஹாஹா ரிஷபா என்னப்பா இது சைக்கிள் ஓட்டுவதில் நீங்க எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்கன்னு படிச்சுக்கிட்டே வந்தால் கடைசில இன்னமும் குரங்கு பெடல் அடிப்பதோடு நிறுத்தியாச்சா?

நிஜம்மா சொல்லுங்க பயம் தானே?

எனக்கும் பயம் தான் சைக்கிள் ஓட்ட சொல்லி கொடுக்கிறேன்னு பள்ளம் பள்ளமா தேடி போய் விழுந்தேன்

ஒரு குப்பைத்தொட்டி கூட பாக்கி வைக்காமல் அத்தனை குப்பைத்தொட்டிலயும் அபிஷேகம் தான்...

உங்க இந்த பகிர்வு படிச்சப்ப எனக்கு சிரிப்பு தாங்கலை...

எப்டி எப்டி பெண்டு எல்லாம் நிமிர்த்தி நைசா கொண்டு போய் கடைல வெச்சிட்டு காசு கொடுத்துட்டு நல்லப்பிள்ளை போல வந்துட்டால்?? விடுவாங்களா?? :)

சைக்கிள் ஓட்ட தெரியலன்னா பிரச்சனை இல்லப்பா... ஆனால் ரோட்டில் யார் மேலேயும் மோதிராம சைக்கிள் ஓட்டுங்கப்பா.. பாவம்பாட்டியின் குச்சி...

ஆனா கட்டையில போக சொல்லிருந்திருக்கவேணாம்...

ரசிக்கவைத்த பகிர்வு ரிஷபா....

Rekha raghavan said...

உங்களின் அனுபவங்களை படித்தபோது நான் சைக்கிள் கற்றுக்கொண்டது பிளாஷ்பேக்காகியது. என்ன உங்களுக்கு நண்பன். எனக்கு என் சொந்த அண்ணணே! இருவருக்கும் சைக்கிள் ஓட்டத் தெரியாதெனினும் என் அண்ணன் தைரியமாக கடைக்காரரிடம் அவனுக்கு ஓட்டத் தெரியும் என்றும் எனக்கு கற்றுக்கொடுக்கவே வாடகைக்கு எடுப்பதாக கூறி கடையிலிருந்து பள்ளி மைதானம் வரை தள்ளிக்கொண்டே வந்து அப்புறம் விழுந்து வாரி இருவரும் கற்றுக்கொண்டது தனி கதை. நல்ல பதிவு.

vasu balaji said...

நம்ம கேசுதானா ஹி ஹி:))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பகிர்வு எழுதப்பட்டுள்ள நடை சுஜாதாவை நினைவு படுத்துகிறது.

கவி அழகன் said...

பழைய யாபகங்கள் கண் முன் வருகிறது

Anonymous said...

///அடுத்த சம்பவம். சைக்கிளை போட்டுக் கொண்டு விழுந்து காலில் சிராய்ப்பு.
வண்டிக்கும் அடி.
‘என்னடா பண்றது..’
“கடைக்காரர் உன்னை பெண்டு நிமிர்த்திடுவார்..” என்றான் பாபு சைக்கிள் பெண்டை முடிந்தவரை நிமிர்த்திக் கொண்டு.
கஷ்ட காலத்தில் குறுக்கு புத்தி சரியாக வேலை செய்கிறது.
கடைக்கு ஐம்பதடி வரை தள்ளிக் கொண்டு போய்.. டக்கென்று குரங்கு பெடல் அடித்து.. கடை வாசலில் லாவகமாய் (!) நிறுத்தி..
“எவ்வளவுண்ணே”
பேரம் பேசாமல் பைசாவைக் கொடுத்து விட்டு முட்டி வலி கூடப் பார்க்காமல்
வேகமாய் ஓடி வந்து விட்டேன்./////


அநேகமாக இது எல்லார் வாழ்விலும் நடந்திருக்கும் என்றே நம்புகிறேன்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதைப் படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது..இரண்டு நாள் முன்பு,ஆஃபீஸ் ஸ்டாஃப் ஒருவரின் பையன் கல்யாணம்.. நண்பன் சொன்னான்..எங்க வீட்லேர்ந்து நான் டூவீலர்ல வரேன்..வந்து உன்னை பிக்கப் பண்றேன்..இரண்டு காலயும் போட்டுண்டு உட்கார்ந்தால் தான் எனக்கு பேலன்ஸ் வரும் என்று சொல்லும்போதே சொரேர் என்றது..சரி பையன் அமெச்சூரோ என்று பயம்..இருந்தாலும் ஒரு கூடுதல் பொறுப்பு ஒன்று, எனக்கு..அதை அப்புறம் சொல்கிறேன்...சரியான டயத்திற்கு நண்பன் வரவே, நானும் கிளம்பினேன்..கையில் பையோடு!

கீதமஞ்சரி said...

பழைய நினைவுகளை மீள்பார்வை பார்க்கவைக்கும் உங்கள் பதிவுக்கு நன்றி. சைக்கிள் பழகுவது ஒரு கலைதான் போலும். என் அனுபவத்தையும் நினைத்துக் கொண்டேன். :)

Anonymous said...

ரிஷபன் மிக சுவையான அனுபவம். ஊரில் சொப்பர் சைக்கிள் வந்த நேரம், நாம் கழுத்துறை எஸ்டேட்டில் இருந்தோம். சைக்கிள் ஓட உதவி செய்யுங்களேன் என்று கணவரைக் கேட்டேன். சரி என்று பின்னாலே பிடித்தார், நான் அமர்ந்து ஓட்டினேன். அவர் பிடிக்கிறார் என்று எண்ணி மிக அருமையாக ஓட்டினேன்.(வீட்டு முற்றத்திலேயே) ஆனால் அவர் பின்னாலே பிடிக்கவில்லை நானாக அப்படியே ஒட்டிவிட்டேன். ஆச்சரியமான ஆச்சரியம் நானாக ஓடினேன். இது தான என் அனுபவம்.
வேதா. இலங்காதிலகம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

முடியவில்லை...இதோ இன்னும் கொஞ்சம்..’பையில் என்ன?’ என்று நண்பன் கேட்க,கொஞ்சம் காவேரிப் பாலத்தில நிறுத்து’ என்றேன்.
“சரி..அதுக்கு முன்னால, நாம பெட்ரோல் போட்டுட்டுப் போலாம்”
பங்குக்கு ரோடைக் க்ராஸ் பண்ணனும்.
சரியான ட்ராஃபிக். நம்ம ஆளு,சாதாரணமா ஒரு செக்கை க்ராஸ் பண்றதுக்கே, அந்த பக்கம்..இந்த பக்கம் பார்த்து தான் க்ராஸ் பண்ணுவாரு..இது ரோடு கேட்கணுமா? எனக்கோ உதறல்!
மெள்ள க்ராஸ் பண்ணி, பெட்ரோல் போட்டுட்டு, வண்டியை எடுத்துண்டு, காவேரிப் பாலம் வந்தாச்சு.
மெள்ளப் பையைத் திறந்தேன்..
2 பிள்ளையார்..போன வருஷ ஒண்ணு (அரியர்ஸ்) இந்த வருஷப் பிள்ளையார்..மனசைக் கல்லாக்கிண்டு காவேரிலப் போட்டேன்..
“பிள்ளையாரப்பா..என்னால ஒன்னைக் காப்பாத்த முடியல..ஆனா. நீ அப்ப்டி இருந்துடாதே!’
“சரி..போலாமா?”
“ம்”
” கொஞ்சம் தள்ளி உட்காரேன்..உன்னையும் சேர்த்து இழுக்கறா மாதிரி இருக்கு..பயமா?”
யதேச்சையாய் வானத்தைப் பார்த்தேன்..கொஞ்ச நாள் முன் விபத்தில் இறந்த உறவுக் கார பையன் கையை ஆட்டி சிரிப்பது போல ப்ரமை..
ஆனால் வாயோ..” பயமா..எனக்கு நெவர் என்று உளறிக் கொட்டியது..
வரும் போது சூப்பரா ஓட்டி கொண்டு வந்தான், நண்பன்..எனக்கும் பயம் போய் விட்டது!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபா..சாரி கொஞ்சம் ஓவரா கும்மி அடிச்சுட்டேன்....

ரிஷபன் said...

மூவார் முத்தே.. தனி பதிவே போட்டிருக்கலாம்..

RVS said...

ரெக்கை கட்டி பறக்குது உங்களது சைக்கிள் பதிவு.

வார்த்தைப் ப்ரயோகங்கள் அற்புதம் சார்!! :-))

ADHI VENKAT said...

உங்கள் சைக்கிள் அனுபவம் என் சிறுவயதில் அப்பாவும், தம்பியும் சேர்ந்து எனக்கு ஓட்ட பழக்கி தருகிறேன் என்று சொல்லியது நம்பி ஏறி இரண்டடி எடுத்து வைத்ததும் பேலன்ஸ் பண்ண முடியாமல் கீழே விழுந்து கை காலில் அடிப்பட்டு கொலுசு அறுந்து போய் அழுது கொண்டு வீட்டுக்கு வந்தவள் தான்.

அதற்கப்புறம் எவ்வளவோ தரம் ”நீ உயரமா இருப்பதற்கு விழ மாட்டே” என்று சொல்லியும் கற்றுக் கொள்ள வில்லை.

கொசுவத்தி சுத்த வைத்த பதிவு.

R. Jagannathan said...

சௌகரியமான பதிவு! யார் வேண்டுமானாலும் கட் அண்ட் பேஸ்ட் செய்து தன் ப்ளாகில் (நண்பன் பெயரை மட்டும் மாற்றி) போட்டுக்கொள்ளாலாம்!
என் அனுபவம் ஒன்று: நண்பன் மோஹனுடன் (டேய், நீ எங்கே?) டபிள்ஸ் போய் போலிஸ் பிடித்து (ஸ்ரீரங்கத்தில் தான்) போலிஸ் வேனில் எங்களையும் சைக்கிளையும் போட்டுக்கொண்டு போனார்கள். ரங்கனாதரை எவ்வளவோ வேண்டிக்கொண்டும் மணி (திருவெங்கடாசாரி) பார்த்துவிட்டான். ஆத்தில் சொல்லிவிடுவானோ என்று எத்தனை பயம்! கீழ சித்திரை வீதியில் கோர்ட். ஜட்ஜ் (அது சரியாக என்ன போஸ்ட்டோ?)பெண்மணி 3 ரூபய் அபராதம் போட்டாள். அப்பவிடம் எப்படி ஒண்ணரை ரூபாய் கேட்பது என்று பயந்து, மோஹனிடமே வாங்கி கட்டிவிட்டோம். அதைவிட முக்கியம், அங்கு முடுக்குத் தெரு பெண்டிர் எல்லாம் காத்துக்கொண்டிருந்ததும், அவர்களிடம் போலிஸ் சகஜமாக பேசிக்கொண்டும், வெற்றிலை போட்டுக் கொண்டும் இருந்ததுதான். அவர்களில் ஒரு பெண் எங்களை சிரித்துக் கொண்டே பார்த்து, ‘என்ன தம்பிகளா, டபிள்சா?’ என்று கேட்டதும் நாங்கள் ஓடி வந்தது தான் க்ளைமாக்ஸ். மறக்க முடியுமா? - ஜெ.