December 21, 2012

குஞ்சம்மா




"குஞ்சம்மா"


சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரைப் பார்க்கத்தான் இன்று ஸ்ரீரங்க விஜயம். ரெயில்வே ஸ்டேஷனில் சிறு பெட்டியுடன் தனியே இறங்கியவளை அந்த அதிகாலை இருட்டில் யார் கவனிக்கப் போகிறார்கள்..

ரொம்ப நாளாச்சு. இப்படி விஸ்ராந்தியாய் வெளியே வந்து. எப்போது ஏசி கார். கூடவே தம்பூர் போடுகிற பெண். சுருதிப் பெட்டி.. சில சமயங்களில் கணவர் ராஜகோபாலன்.. எப்போதாவது மகள் மதுவந்தி..

இன்று யாரும் வேணாமென்று தனியே.

'நிஜமாத்தான் போறியா..'

"ஆமா'

'ஒரு வாரத்துக்கா'

'ஆமாப்பா' கேள்வி மேல் கேள்வி கேட்ட கணவரைக் குழந்தை போலப் பார்த்தாள்.

'ஏதாச்சும் கச்சேரி பேச வந்தா..'

"பார்த்துக்கலாம்பா.. என் நம்பரைத் தரவேணாம்..'

'ஆர் யூ ஓக்கே'

புருவம் சுழித்து அவளைப் பார்த்தவரை நேருக்கு நேர் பார்த்து சிரித்தாள்.

"ஐயாம் பைன்'

ஏசி டூ டயரில் ஏற்றிவிட்டு கடைசி நிமிடம் அவள் மனம் மாறுமா என்பது போலப் பார்த்தார்.

'ஸீ யூ பா.. டேக் கேர்'

இதை விடத் தெளிவாய் அவள் சொல்லமுடியாது. ராஜகோபாலன் திரும்பி நடந்து போனபோது லேசாய் கோபம் தெரிந்தது. இரவு பத்தரைக்கு என்றாலும் அத்தனை தூக்கக் கலக்கத்திலும் சிலர் அவளை அடையாளம் கண்டு கொண்டார்கள். சிலர் நாசூக்காய் ஒதுங்க ஓரிருவர் அருகே வந்து சிரித்தார்கள்.

'உங்க பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும் மேடம்'

'ம்..'

'இப்ப எதுவும் கச்சேரியா மேடம் திருச்சில'

'இல்லம்மா. பர்சனல்'

'ஓ..'

அவள் இசையை நேசிக்கிறவர்கள்.. ஆத்மார்த்தமான அன்பில் வழிபவர்கள்.. மெல்ல நகர்ந்து குட் நைட் சொல்லிப் போனபோது அந்த நிமிடம் அவர்களுக்காய் ஏதாவது பாடலாமா என்று தோன்றிவிட்டது அவளுக்கு.

இதுதான்.. இந்த குணம்தான்.. அவளை இன்னமும் ஜீவனோடு வைத்திருக்கிறது.. அதுவே சிலரிடம் அவளை கேலிக்கு ஆளாக்குகிறது..

'அன்னிக்கு ஒரு கல்யாணத்துல பார்த்தேன்.. உக்கிராண அறையில் இவ ஒரு கிழிச பாய் மேல உக்கார்ந்துண்டு நகுமோமு பாடிண்டிருக்கா.. சுத்தி சமையக்காராளும்.. எச்செல எடுக்கிற மாமிகளும்..என்ன கூத்து இது'

இவள் காது கேட்கவே விமர்சனம்.

'மைக் செட் இல்ல..எல்லாம் சேரிக் கூட்டம்..புள்ளையார் கோவிலாம்.. கும்பாபிஷேகமாம்.. வந்து பாடுவீங்களான்னு கேட்டதும் உடனே சரின்னுட்டாளாம். போக வர ஆட்டோவாம்..'

'புரட்சிக்காரின்னு நினைப்பு'



லோயர் பர்த்தில் படுத்திருந்தவளுக்கு நினைவலைகளின் அதிர்வுகள். தூக்கம் வரவில்லை. எதனால் கிளம்பினாள் என்று புரியவில்லை. அதுவும் இன்றே கிளம்பணும்போல ஒரு படபடப்பு..

'குஞ்சம்மா'

குரல் மனசுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எந்த வேலையும் பார்க்க விடாமல். இன்று சாதகம் செய்யும் போதும். அந்த நிமிஷம் தான் முடிவெடுத்து விட்டாள்.

'நான் ஸ்ரீரங்கம் போறேன்.. ஒரு வாரம் அங்கேதான்'

சாருமதியின் குணம் தெரியும் அவள் தீர்மானித்து விட்டால் அவ்வளவுதான். அவசரமாய் டிக்கட் ஏற்பாடு செய்து வந்து ஏற்றியும் விட்டாச்சு. ராஜகோபாலன் சும்மா இல்லை. போகும்போதே ஸ்ரீரங்கத்திற்கு போனும் செய்து விட்டார். ' அவ தனியா வரா'



ரயிலடியை விட்டு வெளியே வந்தபோது ஆட்டோக்காரர் வந்தார்.

'ஆட்டோ வேணுமா'

பதில் சொல்வதற்குள் கைப்பெட்டியை யாரோ பிடுங்கிய மாதிரி இருந்தது.

'யா.. யாரு.'

உடம்பெல்லாம் தேமல். முகத்தில் சிரிப்பு வந்த சுவடே இல்லை. 'ஹ்ம்ம்' என்கிற கனைப்பு மட்டும்.

"சேது.. நீயா"

கோணலாய் சிரித்தான். நிச்சயம் அவளை விட வயசு கூடுதல்தான் அவனுக்கு. ஆனால் சாரு அவனை பெயர் சொல்லிக் கூட அழைத்ததில்லை.

"அம்மா சொன்னா.. நீ வரேன்னு"

அம்மா. எப்படித் தெரியும். சாரு விக்கித்தாள்.

"வா.. போகலாம்"

"ஆட்டோல போலாம் சேது"

உள்ளடங்கி உட்கார சேது நுனியில் பட்டும் படாமலும் அமர்ந்தான். தெருப் பெயர் சொன்னாள். ஆட்டோ கிளம்பியது.

"அம்மா சொன்னாளா.. நான் வரேன்னு.. எப்படி தெரியும்.."

இதென்ன குழந்தைத் தனமாய் ஒரு கேள்வி என்பது போல சேது அவளைப் பார்த்தான்.

"போன வாரமே சொல்லிட்டா.. நீ வரப் போறேன்னு.. இன்னிக்கு காலைல அவதான் எழுப்பினா. போடா ஸ்டேஷனுக்குன்னு"

சாருமதிக்கு அழுகை வந்தது.

"யார் வரப் போறான்னு கேட்டேன்.. நம்ம குஞ்சம்மாடான்னு சிரிச்சா.. அம்மா சிரிசசு ரொம்ப நாளாச்சு தெரியுமோ"

ஆட்டோ போன வேகம் குறைவு போலத் தோன்றியது சாருமதிக்கு. அப்போதே அந்த வினாடியே அம்மாவைப் பார்க்கணும்..

'என்னவோ பெத்த அம்மா மாதிரில்ல துள்ளறா..' குரல்கள் மறுபடி கேட்க ஆரம்பித்துவிட்டன.

'போடி வெளியே.. பாட்டு கத்துக்கணும்ன.. சரின்னு விட்டா இப்ப சொத்துக்கு ஆசை வந்துருச்சா'

'எனக்கு எதுவும் வேணாம்.. அம்மா மட்டும் போதும்'

'இந்த ஜாலக்கெல்லாம் வேணாம். இழுத்து இழுத்து ஸ்வரம் பாடறதுல்லாம் மேடையோட வச்சுக்கோ.. '

அம்மா எதுவும் பேசாமல் படுத்திருந்தாள் அன்று. சாருமதியை வலுக்கட்டாயமாய் வெளியேற்றியபோது. அன்றும் ஸ்டேஷனுக்கு சேதுதான் ஓடி வந்தான்.

'சாதகம் பண்றதை விட்டுராதேன்னு அம்மா சொல்லச் சொன்னா.. இந்த விபூதியை இட்டுக்க சொன்னா'

'நீயே இட்டு விடு சேது'

ஒரு மகானைப் போல நெற்றியில் பூசி விட்டான். கண்ணில் விழுந்து கரித்தது.

'அம்மாவைப் பார்த்துக்கோ'

தலையாட்டினான். போய் விட்டான்.

இத்தனை நாட்கள் கழித்து இதோ மீண்டும் அம்மாவைப் பார்க்க..

வீடு சூரிய வெளிச்சத்தின் வரவிற்காகக் காத்திருந்தது. ஆட்டோவை அனுப்பி விட்டு படியேறினாள். உள்ளே ஹாலில் இருட்டு. கூடத்தின் மூலையில் கட்டில் அதே இடத்தில். பழம்புடவை போர்த்திக் கொண்டு படுத்திருந்த உருவம்.

சேது பின் பக்கம் கிணற்றடிக்குப் போய் விட்டான்.

'குஞ்சம்மா'

அம்மாவின் குரல் தீனமாய்க் கேட்டது. ஒரு காலத்தில் கணீரென்று இவளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தவளா...

"அ..ம்மா" ஓடிப் போய் அவள் அருகில் நின்றாள்.

''உக்காருடி' சைகை செய்தாள்.

"எப்படி இருக்கே"

"ம்ம்.. என்னம்மா ஏன் என் கிட்ட சொல்லல"

அம்மா சிரித்ததில் நிறைய அர்த்தங்கள்.

"பாடிண்டிருக்கியா"

"ம்ம்"

"ரெண்டு நாள் என் கூட இருக்கணும்னு தோணித்தா"

"ஆமாம்மா"

"தெரியும். நீ வருவேன்னு.. போ குளிச்சுட்டு வா. பூஜை ரூம் இப்போ பொம்மனாட்டி கை படாம சோபை போயிடுத்து.. சேதுதான் இப்போ விளக்கேத்தறான்"

கிணற்றடிப் பக்கம் போனாள், சேது அம்மாவின் புடவைகளை அலசி உலர்த்திக் கொண்டிருந்தான். ஆங்காங்கே கிழிசல்.



அவனும் அன்னியம் தான். அவளைப் போல. ஆனால் அவனுக்கு எந்தத் தொல்லையும் வரவில்லை. அவனை விரட்டவில்லை யாரும்.  போன வருஷம் அம்மாவைப் பற்றி கேள்விப்பட்டு அவள் இங்கே வந்தபோது சேது இருந்தான். பார்த்ததும் வெளிப்பார்வைக்கு தெரியாமல் ஒரு சிலிர்ப்பு. அழுக்கு வேட்டி. காவித் துண்டு. அவனைப் பார்க்கவே என்னவோ செய்தது. ஆனால் மிக நாசூக்காய் அதைக் காட்டிக் கொள்ளாமல் அம்மாவை நமஸ்கரித்தாள்.

"அம்மா.. உங்க கிட்ட பாட்டு கத்துக்கணும்னு வந்திருக்கேன்மா"

அம்மா அப்போது இன்னும் கொஞ்சம் தெம்பாய் இருந்தாள். கொல்லைப் பக்கம் போக நடக்க முடிந்தது. புடவையை தானே அலசி உலர்த்தினாள். துலா ஸ்னானத்திற்கு காவேரி போனாள்.

சரியென்றும் சொல்லவில்லை. போ என்றும் விரட்டவில்லை. கூடத்தில் தன் பெட்டியை வைத்துவிட்டு அம்மா முன் அமர்ந்தவளை கவனிக்காதவள் போல சேதுவிடம் ஏதோ ஜாடை செய்தாள்.

பார்த்தாலே அசூயை வழிகிற அந்த ரோக உடம்பிலிருந்து சாஸ்வதமான ராகம் பீரிட்டுக் கிளம்பியது.

தோடியை ஆலாபனை செய்தான். கொஞ்சமும் பிசிர் தட்டவில்லை. அது சேது இல்லை.. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால். யாரோ ஒரு மகா வித்வான்.

சாருமதிக்கு ஏதோ புரிந்தது. எழுந்து அம்மாவை நமஸ்கரித்தாள். திரும்பி சேதுவையும். சேதுவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. யாரையோ அவள் நமஸ்கரிக்கிறாள் என்பதுபோல அமர்ந்திருந்தான்.

"யார்னே தெரியல.. கேட்டா பேர் மட்டும் சேதுவாம்.. என்ன பிறவியோ.. கர்மாவைக் கழிச்சுட்டு போக வந்திருக்கு. போடான்னாலும் கேக்கல.. கூடவே ஒட்டிண்டு..'

அம்மா சிரித்தாள்.

சாருமதி இப்போது தன் பால்யத்திற்கு திரும்பி விட்டாள். சங்கீத பாடம் ஆரம்பித்த நாட்கள். குருவே சரணம். குருவே தெய்வம்.

அடுத்தடுத்த நாட்களில் அம்மாவுக்கு இவள் மீதும் கரிசனம் திரும்பியது. இது நாள் வரை இருந்த பாடாந்தரம் மறந்து புதிதாய் ஒரு உலகத்தில் பிரவேசித்த மாதிரி. ராஜகோபாலன் எப்போது அழைத்தாலும் 'அப்புறம் பேசலாமே' என்று தவிர்த்து அம்மாவின் அருகிலேயே இருந்தாள். ஒரு தடவை அவள் தாய் மனசு தளும்பி விட்டது. மதுவந்தியின் பிஞ்சுக் குரல் கேட்டு.

'வந்துருவேன்டா செல்லம்.. பிளீஸ்டா.. பாட்டி இருக்காளோல்லியோ.. உனக்கு.. எதுவானாலும் கேளுடா'

அப்புறம் அன்று புது சிட்சையில் மகள் மறந்து போனாள்.



சேதுவின் குரல் கேட்டது. "குளிச்சாச்சா"

அட.. தன்னை மறந்து இது என்ன.. வேகமாய் வெளியே வந்தாள். தலைக்கு துண்டை சுருட்டி வைத்துக் கொண்டு.

அழகாய் ஸ்ரீசூர்ணம் நெற்றியில்.. அம்மாவுக்குப் பிடிக்கும்.. ஆண்டாள் மாதிரி இருக்கேடி.. பூஜை அறை ஒரு வித நெடி அடித்தது. துடைத்து சுத்தம் செய்ய அரை மணி ஆனது. இரு குத்து விளக்குகளையும் சேது தேய்த்து வைத்திருந்தான். ஐந்து திரிகளையும் போட்டு விளக்கேற்றினாள். ஊதுபத்தி மணம் கமழ்ந்தது. கூடம் பிரகாசமானது.

பாடினாள். இந்த நிமிஷம் யார் கைதட்டலும் தேவையில்லை. ஆராதனை போல. மனம் விட்டு. மனம் லயித்து. மனம் கசிந்து. ராகம் குழந்தையாய் மாறி கூடம் முழுக்க தவழ ஆரம்பித்தது. அது தவழ்ந்த இடமெல்லாம் பூக்களின் வாசனை..

அம்மாஎப்போது எழுந்தாள் என்று தெரியவில்லை.. எப்படி நடந்து வந்தாள் என்று புரியவில்லை.. ஏதோ ஒரு உணர்வில் கண் விழித்துப் பார்த்தபோது அம்மா அவள் மடியின் அருகில் வந்து.. சாருமதி உடனே பற்றிக் கொண்டு விட்டாள்.

"அம்மா"

சேதுவுக்குக் கூட கண்களில் ஆச்சர்யம். உணர்ச்சியே காட்டாத பரப்பிரும்மம்.

"நன்னா இருப்பேடி குழந்தே.. ஷேமமா இருடி"

அம்மாவின் எச்சில் தெறித்தது அவள் மேல். தன் புடவையால் துடைத்து விட்டாள். இருவருமாய் அம்மாவை மெல்லப் பற்றிக் கொண்டு போய் கட்டிலில் விட்டார்கள். கஞ்சியை மெல்ல புகட்டி விட்டாள். தன் எலும்புக் கையால் அம்மா சாருவைப் பிடித்துக் கொண்டு விட்டாள். விடவே இல்லை.. கடைசி மூச்சு பிரிகிறவரை.

அக்கம்பக்கம் வந்தார்கள். சொந்தங்களும்.

பரபரவென்று இறுதிக் காரியங்கள். திருமங்கை மன்னன் படித்துறையில் கொழுந்து விட்டெறிகிற நேரம் வரை சாரு மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டிருந்தாள். கொள்ளிடத்தில் குளித்து வீடு திரும்பி அம்மாவின் கட்டில் முன் அமர்ந்து மறுபடியும் வாய் விட்டு.. சேதுவும் கூடவே.

அம்மா வந்தாள். 'போதும்டி குழந்தே.. எனக்கு திருப்தியாச்சு.. கிளம்புடி.. '

ரெயிலுக்கு சேது வந்தான். அவன் கையிலும் ஒரு துணிப்பை.

எதுவும் பேசவில்லை. இவளை பெட்டியில் ஏற்றி விட்டான். திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான்.

சென்னை எக்மோரில் ராஜகோபாலனுடன் மதுவந்தியும் வந்திருந்தாள்.

"அ..ம்மா" அந்தக் குழந்தை அழுதபோது இந்த வளர்ந்த குழந்தையும் அழுததை எல்லோரும் தான் பார்த்தார்கள்.

    (நன்றி :  கல்கி சீஸன் ஸ்பெஷல் )    

31 comments:

sury siva said...

சங்கராபரணம் கேட்க வந்தேன்.

சஹானா கேட்டேன்.

என்ன மென்மை !
அம்மையல்லவா !!

சுப்பு ரத்தினம் @ சுப்பு தாத்தா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Dear Sir,

லேடஸ்டு 23.12.2012 கல்கியில் பக்கம் 60-65 இல் இந்தக்கதையை நான் படித்து விட்டேன்.

பாராட்டி ஓர் மெயில் அனுப்ப மேட்டர் தயாரித்து வைத்திருந்தேன்.

அதை அனுப்ப முடியாமல் மின் தடைகள் நடுநடுவே ஏற்பட்டது.

மீண்டும் வருவேன் >>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை.

அதேபோலவே தங்களின் இதுபோன்ற கதைகளும் என்னை அப்படியே மயங்கச் செய்கின்றன.

சூப்பர் சார்...

>>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

குஞ்சம்மா என்னும் சாருமதியை அப்படியே “ஆண்டாள்போல” என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்.

கல்கியில் ‘தமிழ்’ அவர்கள் வரைந்துள்ள ஓவியம், தங்களின் கதைக்கும், அதில் வரும் கதாநாயகிக்கும் பெருமை சேர்ப்பதாக மிகப்பொருத்தமாக உள்ளது.

மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

சேது என்ற கதாபாத்திரம் இந்தக்கதைக்கு தாங்கள் கொடுத்துள்ள மிகச்சிறந்ததோர் ப்ளஸ் பாயிண்ட்.

அதுவும் கிழிந்த நாராகக் கிடப்பவளின் கிழிந்த புடவைகளை அலசிப்பிழிந்து உலத்தும் இடத்தில் ... கைகளைத்தாருங்கள் ...
கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும் ... நான்.

அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையின் ஒவ்வொரு வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தன.

இருப்பினும் நான் லயித்துப்போனது:

1] இதுதான்.. இந்த குணம்தான்.. அவளை இன்னமும் ஜீவனோடு வைத்திருக்கிறது.. அதுவே சிலரிடம் அவளை கேலிக்கு ஆளாக்குகிறது..

2] உள்ளடங்கி உட்கார சேது நுனியில் பட்டும் படாமலும் அமர்ந்தான். தெருப் பெயர் சொன்னாள். ஆட்டோ கிளம்பியது.

3] அழகாய் ஸ்ரீசூர்ணம் நெற்றியில்.. அம்மாவுக்குப் பிடிக்கும்.. ஆண்டாள் மாதிரி இருக்கேடி.. பூஜை அறை ஒரு வித நெடி அடித்தது. துடைத்து சுத்தம் செய்ய அரை மணி ஆனது. இரு குத்து விளக்குகளையும் சேது தேய்த்து வைத்திருந்தான். ஐந்து திரிகளையும் போட்டு விளக்கேற்றினாள். ஊதுபத்தி மணம் கமழ்ந்தது. கூடம் பிரகாசமானது.

4]பரபரவென்று இறுதிக் காரியங்கள். திருமங்கை மன்னன் படித்துறையில் கொழுந்து விட்டெறிகிற நேரம் வரை சாரு மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டிருந்தாள். கொள்ளிடத்தில் குளித்து வீடு திரும்பி அம்மாவின் கட்டில் முன் அமர்ந்து மறுபடியும் வாய் விட்டு..

எனக்கு என்ன சொல்லி தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை சார்.

மனமார்ந்த பாராட்டுக்கள்....
அன்பான வாழ்த்துகள் ......
பகிர்வுக்கு நன்றிகள் ........

என் எழுத்துலக மானஸீக குருநாதராகிய தாங்கள் நீடூழி வாழவும் இதுபோன்ற சுவையான சுகமான மேலும் பல படைப்புக்களை தொடர்ந்து தந்திடவும், ஸ்ரீரங்கம் பெருமாளையும் தாயாரையும் வேண்டிக்கொள்கிறேன்.

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதஸி சமயம் இந்தக்கதை கல்கியில் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது, சார்.

பிரியமுள்ள
வீ.......ஜீ
VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'அன்னிக்கு ஒரு கல்யாணத்துல பார்த்தேன்.. உக்கிராண அறையில் இவ ஒரு கிழிச பாய் மேல உக்கார்ந்துண்டு நகுமோமு பாடிண்டிருக்கா.. சுத்தி சமையக்காராளும்.. எச்செல எடுக்கிற மாமிகளும்..என்ன கூத்து இது'

இவள் காது கேட்கவே விமர்சனம்.

'மைக் செட் இல்ல..எல்லாம் சேரிக் கூட்டம்..புள்ளையார் கோவிலாம்.. கும்பாபிஷேகமாம்.. வந்து பாடுவீங்களான்னு கேட்டதும் உடனே சரின்னுட்டாளாம். போக வர ஆட்டோவாம்..'

'புரட்சிக்காரின்னு நினைப்பு'//

இந்தக்கதையை நீங்கள் எப்போதோ எழுதி அனுப்பி, கல்கியில் வெளிவந்து 4-5 நாட்கள் ஆகியுள்ளது.

ஆனாலும், நேற்று 20.12.2012 மதியம் கேள்விப்பட்ட அதிர்ச்சி தரும் செய்திகளை எண்ணிப்பார்க்க வைக்குது இந்தக்கதை.

காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போன்ற ஓர் Co-incident ஆகத் தெரிகிறது. என்ன ஓர் ஆச்சர்யம் பாருங்கோ.

>>>>>>>>

சாந்தி மாரியப்பன் said...

லயித்து வாசித்தேன். அடடா!!.. என்ன ஒரு உணர்வோட்டம். அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அப்பப்பா.... அப்படியே கட்டிப் போட்டு வைத்த ஒரு உணர்வு.... கண்ணெடுக்காமல் படித்து முடித்தேன்....

ராமலக்ஷ்மி said...

நெகிழ வைத்த கதை. மிக அருமை.

dlakshmibaskaran said...

அருமை தெரியாதவர்கள் கையில் அகப்பட்ட அலாவுதீன் விளக்குகள் போல, திறமை வாய்த்த பெண்களுக்கு அமையும் சூழல் பெரும்பாலும் ஆரோக்யமாகப் பார்க்கப் படுவதில்லை. குஞ்சம்மாவின் தற்காலிக முடிவு பாராட்டுக்குரியது. அதன்மூலம் நியாயமான தனது விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொண்டு குழந்தையின் நிமித்தம் குடும்பத்தையும் சமன் செய்து நிலைநிறுத்திக் கொள்ளும் அவளின் பாங்கு சபாஷ் போட வைக்கிறது. என்றாலும் அந்த சேது பாத்திரம் தான் கடைசி வரை மனதில் ஒட்டிக் கொள்கிறது . உள்ளுக்குள் அபாரமாய் சங்கீத ஞானம் வைத்துக் கொண்டு வந்த இடத்தில் மிக எளிமையாய் பொருந்திப் போகும் சுபாவம்...".சேது! யு ரியல்லி ஸ்டே இன் மை ஹார்ட் " என்று வாய்நிறைய சொல்ல வைக்கிறது. சேதுவின் கதாபாத்திரத்தை ரிஷபன் சித்தரிக்கும் விதம் கூட அழகுதான். நிறைவான கதை..= dhanalakshmi trichy

மனோ சாமிநாதன் said...

//ராகம் குழந்தையாய் மாறி கூடம் முழுக்க தவழ ஆரம்பித்தது. அது தவழ்ந்த இடமெல்லாம் பூக்களின் வாசனை..//

அருமையான‌ வ‌ரிக‌ள்! ராக‌ம் குழந்தையாக‌, பூக்க‌ளாக‌ வ‌சீக‌ரிப்ப‌தாய் அருமையான‌ க‌ற்ப‌னை! நெகிழ்ச்சி ஏற்ப‌டுத்திய‌ சிறுக‌தை!

ஸ்ரீராம். said...

கல்கியிலேயே படித்தேன். ரசித்தேன்

ezhil said...

அருமையான கதை.... உணர்ச்சிகரமாக அமைந்திருந்தது...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

'ககன குதூகல'மாய் இருந்தது மனம், கதையைப் படித்து முடித்ததும் !

ஜீவி said...

'குஞ்சம்மா' என்று தலைப்பைப் பார்த்ததுமே அவர் நினைவு தான் வந்தது.

'அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரை..' என்று அடுத்த வரியைப் படித்ததும், அந்த ஒரே ஒருத்தரான அவர் கணவரின் நினைவும் கூடவே வந்தது.

இருவருக்கும் மிக நெருக்கமான 'கல்கி' பத்திரிகையில், அதுவும் இசை சீஸன் ஸ்பெஷலில் வெளிவந்தது மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.

vasan said...

மானசீக‌மான டெலிப‌தி பதிவு.
பூஜைய‌றை ம‌ன‌மும், பூ ம‌னசுமாய்
பாத்டிர‌ங்க‌ளும், க‌ள‌மும்.
அருமை ரிஷப‌ன்ஜி.

வைகோ சார் குறிப்பிட்ட‌ விஷ‌ய‌ம்
என்னுள்ளும் எழுந்து வ‌ருத்திய‌து.
சுப்புடுவே பார‌ட்டிய‌‌ ராட்ஷ‌ஸி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஜீவி said...
'குஞ்சம்மா' என்று தலைப்பைப் பார்த்ததுமே அவர் நினைவு தான் வந்தது.

'அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரை..' என்று அடுத்த வரியைப் படித்ததும், அந்த ஒரே ஒருத்தரான அவர் கணவரின் நினைவும் கூடவே வந்தது.

இருவருக்கும் மிக நெருக்கமான 'கல்கி' பத்திரிகையில், அதுவும் இசை சீஸன் ஸ்பெஷலில் வெளிவந்தது மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.//

அன்புள்ள திரு ஜீவி ஐயா, நமஸ்காரங்கள்.

தங்கள் பார்வையில் தான் எத்தனை நுட்பங்கள் என வியந்து போனேன்.

தெய்வீகக்குரல் கொண்ட
அந்த அம்மா .......
அந்த ஐயா .........
க ல் கி ............

அடேங்கப்பா! நீங்கள் சொல்வது தான் கரெக்ட், சார்.

இப்பேர்ப்பட்ட உயரிய நோக்குள்ள தங்களைப்போய் என் மிகச்சாதாரண அடை பதிவுக்கு வருகை தரவும் விமர்சனம் செய்து கருத்திடவும் வேண்டும் என நான் நினைப்பது மிகவும் பேராசை தான்.

இருப்பினும் மோதிரக்கையால் குட்டுப்ப்ட வேண்டும் என்று ஓர் சின்ன சபலம்.

இதோ இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

வருவீங்களோ, மாட்டீங்களோ!
எல்லாம் சம்மதமே!!

தங்கள் மீது தனிப்பிரியமுள்ள,
VGK

கே. பி. ஜனா... said...

நெஞ்சம் கவர்ந்துவிட்டது 'குஞ்சம்மா' சிறுகதை. முதல் செக்வன்ஸிலேயே கதையின் மைய உணர்வை சிக்கெனப் பற்றிக்கொள்ள வைத்து.. தேவையற்ற ஒரு வார்த்தை கூட இல்லாமல் வழுக்கிக் கொண்டு விரைய வைத்து.. எப்போதென்று தெரியாமலே அந்த உணர்வில் ஐக்கியமாக வைத்துவிட்டீர்கள்! உங்கள் தொகுப்பில் மகுடம்.
தி. ஜா.ர. கதை ஒன்றைப் படித்தாற்போல...
//'ஸீ யூ பா டேக் கேர்!' இதைவிட தெளிவாக அவள் சொல்லமுடியாது// உங்கள் கதையில் ரசித்த நல்ல வரி. ஆம், இந்த கதையை இதைவிட தெளிவாக சொல்ல முடியாது. 'ஸீ யூ சார், டேக் கேர்!'

நெய்வேலி பாரதிக்குமார் said...

ரிஷபன் ..மனதை என்னவோ செய்தது கதை .. எத்தனை போராட்டங்களை கடந்து அவர்களின் சாரீரம் ஒலிக்கிறது .... எத்தனை மனங்களை குளிர்வித்துவிட்டுப் போகிறது ..ஆனாலும் எத்தனை பேர் உணர்கிறோம் அவர்களின் கொதிப்புகளை ... சங்கீத சீசனுக்காக எழுதப்பட்டிருக்கலாம் ... ஆ னால் எனகென்னவோ நித்யஸ்ரீயின் நினைவு வந்துவிட்டது

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீரங்க விஜயம் ராகம் குழந்தையாய் மாறி கூடம் முழுக்க தவழ ஆரம்பித்தது. அது தவழ்ந்த இடமெல்லாம் பூக்களின் வாசனையுடன்
ஸ்ரீரங்க வாசனை நிரம்பி மனம் கவர்ந்த அருமையான கதைக்கு நிறைவான பாராட்டுக்கள்..

ஹ ர ணி said...

அன்புள்ள ரிஷபன்..

கல்கியில் வந்த அன்றைக்கே கதை படித்துவிட்டேன். இசைபோல மென்மையும் தன்மையும் இழைகிறது. வாழ்த்துககள். தொடர்ந்து இசைத்து வழங்குங்கள்.

Ranjani Narayanan said...

ஒன்றுமே எழுதத் தோன்றவில்லை எனக்கு. மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது உங்கள் கதை!
அந்தக் குஞ்சம்மாவும் இப்படித்தானோ?

உஷா அன்பரசு said...

அருமையான சிறுகதை. தங்கள் இரு சிறுகதைகளை வலைச்சரத்தில்( வகுப்பு முதல் நாளில்) பகிர்ந்துள்ளேன்.மிக்க நன்றி!

நிலாமகள் said...

எப்பவும் போல் ஆற்றோட்டமான உங்க நடை... புரண்டு படுக்கும் கிளிஞ்சல்களும் கூடவே பயணிக்கும் சருகுகளும் உதிரும் பூக்க்களுமாய் நழுவும் மணலை இறுக்கிக் கொள்ளும் சிறு ஜந்துகளின் மென் கால்களின் உறுதியோடு கதைக் கருவை ஆழப் பற்றுகிறது மனசு. உங்க டெலஸ்கோப் எங்க பார்வையின் வீச்சை எளிதாக்குகிறது

கோமதி அரசு said...


அருமையான் கதை.கதை படித்து கண்கள் குளமாகின.
டிசம்பர் மாத கதை.
கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

கதம்ப உணர்வுகள் said...

குஞ்சம்மா....

கதையில் ராகம் மட்டுமா இழைகிறது..... அன்பும் ஒவ்வொரு இழையாக தன்னை இணைத்துக்கொண்டு.....

கதையாய் நினைத்து படிக்க இயலவில்லை..... வாசிப்போர் ஒவ்வொருவரும் தன்னை குஞ்சம்மாவாக நினைக்கும்படியான வரிகளின் அமைப்பு....

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமான காரக்டர்.....இத்தனை புகழின் உச்சியில் இருக்கும் சாருமதிக்கு சட்டென ஸ்ரீரங்கம் போகவேண்டும் என்ற உந்துதல் எப்படி ஏற்பட்டது? இத்தனை அற்புதமான பந்தமா இருவர் இடையில்? அம்மாவின் இறுதி மூச்சை குஞ்சம்மாவின் அன்பு இழுத்து பிடித்துவைத்துக்கொண்டிருந்ததோ? கதையின் தாக்கம் மனதில் தேக்கிவைத்துவிட்டது.. சில நாட்கள் இந்த தாக்கம் மனதை விட்டு அகலவே அகலாது....

எல்லோருக்குமே கிடைத்துவிடாத அரிய வரப்ரசாதம் சங்கீதம்... அதை கற்கும் ஆர்வமும் அதனால் அம்மாவை தேடி சரண் அடையும் விதமும்.... சேதுவின் வெளிப்புறத்தோற்றம் அசூயை ஏற்படுத்திய ஷணம் அம்மாவின் பார்வை சேதுவை பார்க்க சேதுவின் தோடி ஆலாபனை எல்லோரையும் சட்டென கட்டி நிறுத்திவைக்கும் அற்புதம்.... பரப்ரும்ஹம்..... எதுவுமே தன்னை அசைக்கவில்லை என்பது போன்று....

இந்த கதையில் சங்கீதத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக குஞ்சம்மா அம்மாவிடமிருந்து இசையை கற்க... கற்ற இசையை புகழுடன் வாழ சாருமதியாக இருந்தாலும்.. அம்மாவின் இறுதி நொடி.... குஞ்சம்மாவுடன் பிணைத்து வைத்திருக்க....

நினைக்க நினைக்க ஆச்சர்யம் மண்டுகிறது மனதில்.....

இசை, அம்மாவின் அன்பு இந்த இணைப்பில் குடும்பம் கூட ஓரடி தள்ளி தான் நிற்கிறது.... மனம் விச்ராந்தியாக இருக்க இசையின் முக்கியத்துவம் பற்றி கதையில் மிக அழகாய்......

சேது எங்கிருந்தோ குழந்தையில் வந்து அம்மாவிடம் சேர்ந்ததை நுணுக்கமாய் சொன்ன விதம்......

கதையை மிக அழகாய் நகர்த்துவிதம் ரசித்தேன்....

புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்படாத பிறவியாக சாருமதி இருந்ததால் தான்... எச்சிலை எடுக்கும் மாமிகள் சமையற்கட்டில் சமையல் செய்வோர் பாடு என்றதும் கிழிந்தபாயில் அமர்ந்து பாட முடிந்தது..... குஞ்சம்மா சாருமதி ஆனாலும் தன் மனதை மாற்றாமல் இருப்பதை காணமுடிகிறது....

ரயிலில் ஏறி அமர்ந்ததும் அவள் இசையில் கட்டுண்டு மயங்கி இருப்போர் அவள் இசையை ரசித்து அதில் மூழ்குவோர் மரியாதையுடன் அன்புடன் அருகே வந்து நலன் விசாரித்து செல்வதைப்பற்றி எழுதியபோது கதையில் சங்கீதவித்வான்களுக்கான மரியாதை எங்கு சென்றாலும் அவர்களுக்கான சிறப்பினை உணரமுடிகிறது...

அம்மாவின் குரலும் அன்பும் எப்போதும் குஞ்சம்மாவை பின் தொடர்ந்தபடியே....

சாருமதியின் மனதில் குஞ்சம்மா உயிர்ப்புடனே இருப்பதை படிக்கும் வாசகர்கள் அறிவதற்காக அமைத்த வரிகள் தானே திடீர் என்று அம்மாவை பார்க்கத்தோணி ஸ்ரீரங்கம் கிளம்பியது? ராஜகோபாலன் என்ன சொல்லியும் தடுக்க முயன்றும் முறியடித்து கிளம்பிட வைத்தது?

குஞ்சம்மாவின் இசை இறுதி வரை இற்றுப்போகாதிருக்க அம்மா சொல்லி அனுப்பியது சாதகம் செய்யச்சொல்லு விட்டுடாமல்.... சேது இந்த இருவரின் அன்பு பந்தத்துக்கு இடையே ஒரு இணைப்பாக..... அம்மாவை தன்னுடனே வைத்துக்கொள்ள முயன்று போராடி முடியாதென்ற விரக்தியில் தோற்றக்களை முகத்திலும் மனதிலும் விரட்ட.... சேது பின்னாடியே ஓடி வந்து “ அம்மா உன்னை விட்டுடாம சாதகம் செய்யச்சொன்னா.... இந்த விபூதிய இட்டுக்கோ “ என்று சொன்னபோது நீயே இட்டுவிடு என்று சொல்லும்போது குஞ்சம்மாவின் அன்பு அம்மாவின் மூச்சுடனே இணைத்துவிட்டு செல்கிறேனே என்ற தவிப்பை எழுத்தில் அறியமுடிகிறது....

ஸ்ரீரங்கம் இல்லாத கதை இல்லை.... அன்பு இல்லாத இழை இல்லை...... சங்கீதத்தின் உயர்வை வரி வரியாக சொல்லிச்செல்கிறது.... எந்த புகழும் சாருமதிக்குள் இருக்கும் குஞ்சம்மாவை கொன்றுவிடவில்லை....

அம்மாவின் இறுதி மூச்சு குஞ்சம்மாவின் மடியில் தான் என்று பகவான் சாஸ்வதமாக நிர்ணயித்ததை பூஜை ரூமில் இருந்து குஞ்சம்மா பாடும்போது கைத்தட்டல் இல்லாமல் பக்கவாத்தியம் இல்லாமல் கூடம் முழுக்க வீடு முழுக்க ராகம் குழந்தையாய் தவழ... இந்த உவமையை ரசித்து வாசித்தேன்பா....

கதம்ப உணர்வுகள் said...

படுத்த படுக்கையாய் இன்னொருவரின் உதவியால் சுவாசம் மட்டுமே நிறைந்திருக்க.... கட்டிலோடு கட்டிலாக கிடந்த அம்மா.... எப்படி எப்படி எப்படி எழுந்து.. நடந்து பூஜை அறை வரை வந்து குஞ்சம்மாவின் மடியில் தலை சாய்க்க முடிந்தது? அப்போது குஞ்சம்மாவின் கைகளை பிடித்த அம்மாவின் கை இறுதி மூச்சை நின்றப்பின்னரும் விடவில்லை... இந்த வரி படிக்கும்போது பெருகும் கண்ணீரை கட்டுப்படுத்தும் சக்தி இல்லாமல் இருந்ததை அறியமுடிந்தது....

குஞ்சம்மாவாக ஸ்ரீரங்கத்திற்கு இதற்காகவே வந்தது போல வந்து அம்மாவின் மனதை நிறைத்து இறுதி காரியங்களை முடித்து வைக்கும் வரை துளி கண்ணீரைக் கூட விடாமல் சேமித்து.... தன் குழந்தை மதுவந்தியை பார்த்ததும் தன்னுள் இருந்த குழந்தை தன் அம்மாவை இழப்பை நினைத்து குழந்தையாய் அழும் குஞ்சம்மாவை வாசிப்போருக்கு இனம் காட்டிய அற்புதம் கதாசிரியரின் எழுத்துக்கு இத்தனை சக்தியா?

எங்கிருந்தோ வந்து குழந்தையில் அம்மாவிடம் அடைக்கலமான சேது... அம்மாவின் இறுதி மூச்சு நின்றப்பின் குஞ்சம்மாவை ரயிலேற்றி விட்டப்பின் எங்கோ சென்று மறைந்தது... சேதுவின் காரக்டருக்கு எழுத்தாளர் சேர்த்த பலம் இது....

கதை படித்து முடித்தபோது கதை படித்த உணர்வு சிறிதும் இல்லை... அம்மாவை, அம்மாவின் அன்பை அம்மாவின் இசையை குஞ்சம்மாவின் சங்கீதத்தில் லயிக்கவைத்து சேதுவை கண்டு பிரமிக்க வைத்து குஞ்சம்மாவின் ராகத்தில் எங்கள் மனதையும் இழையவைத்து அம்மாவின் இறுதி மூச்சில் எங்களையும் அழவைத்து இறுதியில் சாருமதியாக ராஜகோபாலனிடம் வந்து சேரும்போது மனம் கனத்து சாருமதி குழந்தையாய் கதறும்போது எங்களையும் கண்கலங்கவைத்த ஒரு சகாப்தத்தை அருகிருந்து கண்டது போன்று......


அற்புதமான தலைப்பும் கதையின் வார்ப்பும் கதாபாத்திரங்களின் இயல்பும் ஒவ்வொரு வரியிலும் நுணுக்கமாய் உணர்வுகளை புகுத்திய விதம் சிறப்புப்பா....

உங்கள் கைகளில் ஜீவராகம் இழைவதைப்போன்ற ஒரு உணர்வு எனக்கு இந்த கதையை வாசித்து முடிக்கும்போது...

கதம்ப உணர்வுகள் said...

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரிஷபா... இப்படிப்பட்ட உணர்வுப்பூர்வமான எழுத்துகள் என்றும் தொடர்ந்திட வேண்டுகிறேன்....

ஜூலியட் said...

மிக அருமை.... சுவாரஸ்யம் அதிகம்........ காட்சிகளை அப்படியே கண்ணில் கொண்டு வந்து நிறுத்தியது..........தங்களின் எழுத்து.........வாழ்த்துக்கள் ரிஷபன்

ஜூலியட் said...

மிக அருமை.... சுவாரஸ்யம் அதிகம்........ காட்சிகளை அப்படியே கண்ணில் கொண்டு வந்து நிறுத்தியது..........தங்களின் எழுத்து.........வாழ்த்துக்கள் ரிஷபன்