குழந்தை அழகாய் இல்லை
என்று அவள் சொல்லிக்
கொண்டிருந்தாள்.
பயணம் நெடுக
அதன் வாய் எச்சில்
என் மேல் தெறித்துக்
கொண்டிருந்தது.
இடம் மாற்றி அமர வேண்டும்
என்று அவளும்
குழந்தை அதன் இடம்
மாறக் கூடாது என்று நானும்
முணுமுணுத்துக் கொண்டிருந்தோம்.
அவ்வப்போது என் மேல்
விழுந்த அதன் பார்வை
எனக்கானது என்றே
நம்பினேன் ..
என் சுட்டு விரலை
தற்செயலாய் பிடித்தபோது
நான் குழந்தையானேன் ..
இறங்குமிடத்தில்
என்னைப் பற்றிய
எந்த சிந்தனையுமின்றி
திரும்பிக் கூடப் பார்க்காமல்
போக முடிந்தது குழந்தையால்.
அடுத்த நாள்.. அடுத்த மாதம் என்று
நினைவில் வரும் போதெல்லாம்
என் சுட்டு விரலில் உணர்கிறேன்
இன்றும் அதன் ஸ்பரிசம்.
12 comments:
அது கடவுளைத் தொடுவதுபோல. நான் இன்றும் பயணங்களில் எத்தனைக் குழந்தைகளைப் பார்த்தாலும் அதன் பாதங்களின் விரல்களையும் கைகளின் விரல்களையும் தொட்டு அனுபவிக்கும் ஏகாந்தத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அதனை நீங்கள் உங்கள் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.
சுட்டுவிரலில் ஒட்டிக்கொண்ட குழந்தையின் ஸ்பரிசம் போலவே கவிதையின் உணர்வுகளோடு ஒட்டிக்கொண்டுவிட்டது மனசு..!
சுட்டுவிரலில் ஒட்டிக்கொண்ட குழந்தையின் ஸ்பரிசம் சொன்ன கவிதையின் உணர்வுகள் ஒட்டிக்கொண்டுவிட்டது மனதில்....
=தனலட்சுமி, திருச்சி.
எங்களாலும் மறக்க முடியாது இனி.
அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லி நகர்ந்தாலும் குழந்தையின் நினைவில் நிற்காத நம்மையும் நம் நினைவில் நிற்கும் குழந்தையின் ஸ்பரிசமும் மனதில் இடறிக் கொண்டே இருக்கும்.
குழந்தையின் அந்த "எள்ளல் பார்வை கம் உதட்டுச் சுழிப்பு"ம் கவிதைக்கான விதையாய். அருமை ரிஷபன் ஜி.
குழந்தையென்றாலே அப்படித்தான் கல்லும் கனியும். இனிய கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
குழந்தையும் அதன் ஸ்பரிசமும் என்றும் நினைவில் இருக்கும். குழந்தைகள் என்றும் ரசிக்கப்படுபவர்கள்தான். அருமை.
நிறைய பயணங்கள்,நிறைய குழந்தைகள்,நிறைய ஸ்பரிசங்கள்,நிறைய நினைவுகள்,நிறைய காத்திருப்புகள்,.....கொஞ்சம்தான் அவை கவிதைகளாக் .....வாசக பெரும்பரப்பில் நானும் ஒரு பயணியாய் காத்திருக்கிறேன் .மீண்டும் இப்படி ஒரு குழந்தை ...கவிதையின் ஸ்பரிசத்துக்காக....வாழ்த்து.
நிறைய உருவகப்படுத்தலாம் போல. நல்ல கவிதை. ஹரணியின் பின்னூட்டம் யோசிக்க வைத்தது.
குழந்தையின் ஸ்பரிசமாகவே உணர வைக்கிறது வரிகள்.அருமை அருமை !
அருமை
Post a Comment