May 03, 2012

காதல் காதல் காதல் - 1

சில சினிமாப் பாடல்கள் கேட்டவுடன் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டுவிடும். மனசுக்குள் டேப் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி சில மனிதர்களும். அதிலும் குறிப்பாய் அழகான பெண்கள். இங்கே அழகு என்று சொல்வது மனசைக் கவர்கிற ஏதோ ஒன்று. புற வடிவம் மட்டுமல்ல.
அப்படித்தான் வித்யா என்னைக் கவர்ந்தாள்.
'
ரெண்டாவது மாடிக்குப் போ. கடைசி காபின். உன் புரபோசல் அவகிட்டேதான் இருக்கு. நேத்தே நாம வென்டார்க்கு பதில் போட்டிருக்கணும்'
என் பாஸ் அனுப்பியபோது அரைமனதாய்த்தான் விவாதித்து விட்டு கிளம்பினேன்.
'
ஸார்.. ஃபைனான்ஸ் கேட்ட எல்லா டிடெய்லும் இருக்கு. அவங்க ரைஸ் பண்ண குவெர்ரீஸ்க்கு பதில் சொல்லியாச்சு. ஃபைலை ஒவ்வொரு தடவையும் நாமதான் கொண்டு போய் கொடுக்கறோம். திரும்பப் போய் வாங்கறதும் நாமதான். அப்புறம் அவங்க ரெஸ்பான்சிபிலிட்டிதான் என்ன?'
'
கணேஷ்.. போங்க. இது நம்ம வேலை. நாமதான் அல்டிமேட்லி ரெஸ்பான்சிபிள்'
என்னுள் கோபம் எழும்போது தரையில் மானசீகமாய்க் காலை உதைப்பேன். இப்போதும். படியிறங்கிப் போகும்போது (லிப்டை முடிந்தவரை தவிர்ப்பது என் பழக்கம்) எதிரில் கோமதி வந்தாள்.
"
என்ன மேடம்.. லஞ்சுக்கா.. எனிதிங் ஸ்பெஷல்"
"
இன்னிக்கு நானே கேண்டீன் தான். நீங்க சாப்பிடப் போகலியா. மணி ஒன்றரை"
"
மணி பார்த்து சாப்பிட.. எனக்கு இனி அடுத்த ஜென்மத்துலதான் முடியும்"
இரண்டாவது மாடியில் கடைசி கேபின் நெருங்கும்போது நான் இதுவரை பார்த்திராத அந்த நபர் குறித்த முழு கோபம் மனசுக்குள் ஜ்வாலைகளாய் அனலடித்தது.
"
என்ன.. எப்பதான் ஃபைல் கிளிய.."
வார்த்தைகள் உதடுகளைத் தாண்டாமல் தொற்றிக் கொண்டு நின்று விட்டன. அப்படியே ஊஞ்சலாடின.
"
யெஸ்.. பிளீஸ்"
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே.. எந்தன் நெஞ்சத்தை முள்ளில் தைக்காதே.. மனசுக்குள் டேப் ஓட ஆரம்பித்து விட்டது.
"
சொல்லுங்க ஸார்.. எனி ப்ராப்ளம்"
அதான் ப்ராப்ளமே.. அழகாய் உதடுகளைக் குவித்து.. எனி ப்ராப்ளம் என்றால் என் இதயம் லேசாய் நின்று இயங்குகிறதே.. ரசாயன மாற்றங்களைத் தாங்க முடியாமல் உடம்பு நடுங்கியது.
"
ஹி..ஹி.. சும்மா.. ஃபைல் பார்க்க வரலே.. நீங்க மெதுவா அனுப்புங்க.."
"
ஓ.. பர்ச்சேஸா.. உங்க ஃபைல் இதானே.. கம்பேரிடிவ் ஸ்டேட்மெண்ட் நீங்க போட்டதா"
பிரித்துக் காட்டிய பக்கத்தில் இப்போது பளிச்சென்று தெரிந்த தப்பு.. முன்பு ஏன் தெரியவில்லை?!
"
ஸாரி.. "
வசீகரமாய்ச் சிரித்தாள்.
"
ஜெனரலா உங்க புரபோஸல்ல தப்பே வராது. கவனிச்சிருக்கேன். இந்த தடவை நோட்டீஸ் பண்ணதும் உங்களை நேர்ல பார்க்கணும்னு தோணிச்சு. அதனாலதான் ஃபைலை அப்படியே வச்சுட்டேன்."
"
யூ ஆர் ஃபிட் ஃபார் மேனேஜ்மெண்ட்.."
புரியாத மாதிரி பார்த்தாள்.
"
எல்லாம் சரியா போகும்போது ஒண்ணும் சொல்லமாட்டாங்க. தப்பு பண்ணா மட்டும் கூப்பிட்டு ஃபயர் பண்ணுவாங்க"
இதற்கும் சிரிப்புத்தான் அவளிடம். சிரிப்பு என்றால் உதடு பிரியாமல் கண்ணும் முகமும் பூபூக்கும் சிரிப்பு. எக்ஸெல் காலை வாரி விட்ட என் ஃபார்மேட்டில் தேவையான திருத்தம் செய்து மறுபடி கொண்டு போய் கொடுத்தபோது அடுத்த புரபோஸல் எனக்கு எப்போது வரும் என்று மனசு ஏங்கியது. அதையே வாய் விட்டு சொல்லி விட்டேன்.
"
முன்னால எனக்கு புரபோசல் வந்தா லேசா எரிச்சல் வரும். எப்ப பாரு எனக்கே வேலை வைக்கிறாங்கன்னு. இப்ப அடுத்த புரபோசல் எப்ப வரும்னு இருக்கு"
"
ஏன்.."
"
அப்பதானே உங்களை.." நிறுத்தி விட்டேன்.
அளவுக்கு மீறி ஜொள் விடுவதை மனசு உணர்த்தியது.
"
தேங்க்ஸ்" என்றாள் இயல்பாக.
"
எதுக்கு"
"
யாராவது காம்ளிமெண்ட் பண்ணா நன்றி சொல்ல வேண்டாமா"
ஒரு விஷயம் நான் சொல்லியே ஆக வேண்டும். அழகான பெண்கள் அவர்கள் அழகாய் இருப்பதை உணர்ந்து இயல்பாகவும் இருந்தால் அவர்களின் வசீகரம் இரட்டிப்பாகி விடுகிறது.
இருக்கைக்குத் திரும்பினால் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது எனக்கு..

எங்கள் அலுவலகக் கட்டிடம் கொல்கத்தா கட்டிடங்களை ஞாபகப்படுத்தும்! அத்தனை பழசு. நடுவில் 15 வருடங்களுக்குப் பிறகு வெள்ளை அடித்தார்கள். கணிணிகள் எல்லோர் மேஜையிலும் இருக்க, அதற்கான பவர் கனெக்ஷன் ஒயர்கள் குறுக்கே போகும். தடுக்கி விழாமல் இருக்க நடக்கிற பாதையில் ஒயர்களின் மீது ரப்பர் ஷீட் போட்டிருப்பார்கள். அதிலும் ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட் அரதப் பழசு. எஅத ரெக்கார்டையும் தூக்கிப் போடாமல் ஆடிட் அது இது என்று காரணம் சொல்லி மூட்டை கட்டி வைத்திருப்பார்கள். அரசு அலுவலகத்தை நினைவுபடுத்தும்!
யார் மனதில் தேவதை புகுந்ததோ.. மொத்தமாய் குளிரூட்டலாம் என்று ஒரு திட்டம் உருவானது. முதல் கட்டமாய் ஐந்து மாடிகளில் ஐந்தாவது மாடியில் இருக்கும் எங்கள் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்ட்டை பொலிவுபடுத்தலாம் என்று டெண்டர் விட்டார்கள்.
மாடர்னைசேஷன் என்று தனிப் பிரிவாகப் பிரித்து ஒரு டெபுடி ஜெனரல் மேனேஜரை நியமித்து கூடவே என்னையும் அதில் சேர்த்திருந்தார்கள்.
மேலே படியேறி வந்தவனை பாஸ் அழைப்பதாகச் சொன்னதும் 'சாப்பாடு அவுட்டா' என்று யோசித்தபடி உள்ளே போனேன்.
"
ஃபைல் வந்துரும் ஸார்"
"
ஒரு புது அஸைன்மெண்ட்"
"
எ..ன்ன"
"
மாடர்னைசேஷன் குரூப்பில் நீயும் இருக்கே"
"
ஸார்.. ஏற்கெனவே ஓவர் லோட்.."
"
ஃபைனான்ஸ்ல வித்யா ரெப்ரெசென்டேட்டிவ்"
"
எப்ப ஸார் மீட்டிங்" என்று உடனே பல்டியடித்தேன்.
"
குட்.. உன்கிட்டே இதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.. உடனே ஆக்ஷன்ல இறங்கிடறே"
"
ஹி..ஹி.."
என் வழிசலைப் பொருட்படுத்தாமல் ஃபைலை வீசினார்.
"
நாளைக்கு நம்ம டிபார்ட்மெண்ட் மேலே எந்தப் புகாரும் வந்திரக்கூடாது. ஜிஎம் பர்சனலா கவனிக்கிறார். நம்ம ப்ளோர் சக்ஸஸ் ஆனா.. அதே ஃபேஷன்ல மத்த நாலு ஃப்ளோரும் வொர்க் ஆகும். புரிஞ்சுதா"
"
ஓக்கே.. ஸார்"
"
யூ மே கோ"
சாப்பாடு கசந்தது. இண்டர்காமில் இரண்டாவது மாடியை அழைத்தேன்.
"
வித்யா ஹியர்"
"
வாழ்த்துகள்"
"
எதுக்கு"
"
மாடர்னைசேஷன் டீம்ல இருக்கீங்களே"
"
அப்ப நான் உங்களுக்கு வாழ்த்து சொல்லணுமா பதிலுக்கு"
"
எ..ப்படித் தெரியும்"
"
ஹன்ச்.."
"
வாவ்.. ரியலி நீங்க பிரில்லியண்ட்"
"
முதல்ல அழகு.. இப்ப புத்திசாலித்தனம்.. அப்புறம்"
எந்த உணர்ச்சியும் காட்டாமல் வித்யா பேசியது என்னை என்னென்னவோ செய்தது.
"
எந்தத் தப்பும் செய்யாம சக்ஸஸ்ஃபுலா முடிக்கணும்"
"
எ..ன்ன"
"
இ..ந்த பிராஜக்டை சொன்னேன்"
"
ஓக்கே"
வைத்து விட்டாள்.
பிறகுதான் தெரிந்தது. என்னுடைய ரொட்டீன் வேலைகளுக்கிடையே இந்த ஸ்பெஷல் பிராஜக்ட்டும் எனக்கு. ஏற்கெனவே விழி பிதுங்கும். என்ன.. இந்த வேலைக்கு நிச்சயமாய் வித்யா உடனிருப்பாள்.
அவசரம் அவசரமாய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாடர்னைசேஷன் ஃபைலைப் புரட்டினேன். முதல் மீட்டிங்கில் எப்படியும் என் புத்திசாலித்தனத்தைக் காட்டி விட வேண்டும். வித்யாவை இம்ப்ரெஸ் செய்ய இதை விட்டால் வேறு சான்ஸ் இல்லை.
குறிப்பெடுக்க ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
மெயிலில் தகவல் வந்திருந்தது.
'
முதல் கூட்டம் நாளை மதியம் இரண்டு மணிக்கு.. மினி கான்பரன்ஸ் ஹாலில்.'
என்னுடைய வழக்கமான ஃபைல்களைப் பார்த்துவிட்டு, ரேட் நெகோஷியேஷனுக்கு வரச்சொல்லி மெயில் அனுப்பி விட்டு, ஃபைனான்ஸ் அப்ருவலுக்கு ஃபைல் அனுப்பிவிட்டு.. சோம்பல் முறித்தபோது டீ வந்தது.
இன்று மதியம் சாப்பாட்டைத்தான் அரக்க பரக்க சாப்பிட்டேன். டீயை ரசித்துக் குடித்தேன். என் நண்பனின் அறிவுரை. 'எந்த வேலையைச் செஞ்சாலும் முழு மனசா.. அந்த நிமிஷம் அந்த வேலை மட்டும்தான்கிற மாதிரி.. டைவர்ஷன் இல்லாம ஈடுபாட்டோட செய். உனக்கு வாழ்க்கைல அலுப்பே வராது'
ரசனை! ஃபைலைப் பார்த்தாலும் சரி.. வித்யாவை நினைத்தாலும் சரி. ஈடுபாடு மட்டுமே.
எழுந்து அடுத்த மேஜை நண்பரைக் கடந்து போகும்போது அவர் ஃபோனில் பேசியது கேட்டது.
"
வித்யா வீட்டுக்குப் போயிட்டாங்களா.. அப்ப என் புரபோசல்?"
எதிர்முனையில் என்ன சொன்னாரோ..
"
அடடா.. ஸாரி.. அது எனக்குத் தெரியாது.. என்னவாம்.. எந்த ஹாஸ்பிடல்"
நின்றேன். குரலில் படபடப்பில்லாமல் கேட்டேன்.
"
என்னவாம்"
"
வித்யாவோட குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம். அடிக்கடி ஃபிட்ஸ் வருமாம்.. நல்ல வேளை வேலைக்கு வச்சிருக்கிற அம்மாவே டாக்டர்கிட்டே கூட்டிகிட்டு போயிட்டாங்க. ஃபோன் செஞ்சிருக்காங்க. இவங்க இப்ப கிளம்பிப் போறாங்க"
வித்யாவின் குழந்தை.. வித்யா மணமானவள்.
இருக்கைக்குத் திரும்பி இண்டர்காமில் நண்பனை அழைத்தேன்.
"
ஏண்டா பொய் சொன்னே.. வித்யா அன்மேரீட்னு"
"
அப்படித்தான் நினைச்சேன்.. இரு.. இரு யாரோ அப்படித்தான் என்கிட்டே சொன்னாங்க.."
அவன் ஹலோ.. ஹலோ என்று கத்தும்போதே ரிசீவரை வைத்து விட்டேன்.

என் குடும்பத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லவே இல்லை. நானும் என் அம்மாவும் மட்டும்தான். அப்பா ஃபோட்டோவில் பார்த்ததுதான். சற்றே முரட்டுப் பார்வை. ஆனால் பிரியமாக இருந்தார் என்று அம்மா சொல்லுவாள். என்ன பிரியம்.. எட்டு மாத உறவுக்குள் பிரியம் எல்லாம் கண்டு பிடிக்க முடியுமா என்ன. எனக்குத் தெரியவில்லை.
அவர் வாங்கிக் கொடுத்த முதல் புடவை, வாட்ச் (இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது), அம்மாவுக்குப் பிடித்த ஜாதிப்பூ (பாலிதீன் கவரில் இப்போது), அப்பா கடைசியாய் போட்டுக் கொண்ட ஷர்ட் (வாஷ் செய்யப்படாமல்), 'என் செல்லக் குட்டிக்கு' என்று அப்பா எழுதிய பரிசுப்பொருள் (அவர்களின் சங்கேத பாஷை என்று என் யூகம்), இருவருமாய்ச் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் (ஸ்டுடியோவில் வெளியே விளம்பரத்திற்கு வைத்திருந்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று) கடை வீதி வழியே போனால் அம்மா அந்த இடம் வரும்போது விசும்புவது புரியும்.
'
ஏம்மா மறுபடி கல்யாணம் பண்ணிக்கலே.. என்னை ஒரு மாத்திரையில அழிச்சுட்டு புதுசா எல்லாத்தியும் ஆரம்பிச்சுருக்கலாம்ல'
'
நீ உருவானது அவருக்குத் தெரியும்டா.. வெளி உலகத்தை எட்டிப் பார்க்கப் போறேன்னு உனக்காக கற்பனையில மிதந்தார்.. அடுத்த வாரம் டெலிவரி இருக்கலாம்னு டாக்டர் சொல்லியிருந்தார். தலை தீபாவளிக்காக வந்தார்.. பைக்ல திரும்பும்போது பைபாஸ் ரோட்டுல எப்ப அடிபட்டாரோ.. கார்த்தால லாரிக்காரன் பார்த்துட்டு டிராபிக் போலிசுக்குத் தகவல் சொல்லியிருக்கான். வந்து பார்த்தப்ப உயிர் இல்ல..'
நிறைய தடவை கேட்ட கதை.
'
கர்ப்பிணிப் பெண் ரொம்ப அழக்கூடாதுன்னா.. நான் அழலே. நீ பிறந்ததும் மனசார அழுதுக்கலாம்னு. டெலிவரி ஆனதும் சுத்தி முத்தி பார்த்தேன்.. அந்த வலியிலயும். அப்பா எங்கேயாச்சும் நிக்கறாரான்னு. உன்னைப் பார்க்க அவர்தான் முதல்ல நிப்பேன்னு சொல்லியிருந்தார்..'
'
இருந்தாராம்மா'
அம்மா சிரித்தாள்.
'
நீ வர வர என்னை விட பூஞ்சையா மாறிகிட்டு வர..'
'
நிச்சயம் அப்பா என்னைப் பார்த்திருப்பார்..'
'
ம்ம்.. அப்படித்தான் அப்புறம் ஒரு நாள் கனவுல வந்து சொன்னார். உன்னை நல்லா வளர்க்கணுமாம்.. அவர் இல்லேன்னு விரக்தில விட்டுரக் கூடாதுன்னார்..'
'
ஓ.. அதனாலதான் நீ வேற கல்யாணம் பண்ணிக்கலியா'
'
தோணலைடா..'
அம்மாவின் முகத்தில் தெரிந்தது நிஜம். அவள் கையைப் பற்றிக் கொண்டபோது ஜில்லென்றிருந்தது.
'
அம்மா.. இப்படிக் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே.. உன் வாழ்க்கை வீணாப் போச்சுன்னு எப்பவாச்சும் தோணியிருக்கா'
'
நீ இருக்கும்போதா?!'
கேட்டிருக்கக் கூடாது. அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். மடியில் படுத்துக் கொண்டபோது நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது.
'
நாம வளர்ந்துட்டா சில விஷயங்களை மிஸ் பண்றோம்ல.. உதாரணமா சின்ன வயசுல எப்படி சுவாதீனமா அம்மா மடியில படுத்துக்கறோம். அதுவே வயசானா விலக வேண்டியிருக்கு'
அம்மாவிடம் அதைச் சொன்னேன்.
'
நல்ல வேளை எனக்குக் கொடுப்பினை இருக்கு'
அந்த நிமிடம் காலம் எனக்குக் கொடுத்த வரம். என் வாழ்க்கைப் புத்தகம் அந்தப் பக்கம் மட்டும் எதுவும் எழுதப்படாமல் வெள்ளையாய்ப் புரண்டது. சில நிமிட உணர்வுகளை எதற்குப் பகிரங்கப் படுத்த வேண்டும்?
அது அனுபவிக்க மட்டும்.
இன்று அம்மாவிடம் என் காதலை.. அது பூத்த மறு நிமிடம் வாடியதை.. சொல்ல நினைத்தேன்.
"
ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் இரண்டு பெண்கள் நிச்சயம்.. இல்லியாடா.."
"
ம்ம்"
"
யார் அந்த இன்னொரு பெண்?"
அம்மா எதிலும் நேரடித் தாக்குதல்தான்.
"
எப்படித் தெரியும்மா"
"
நீ சில சமயம் வளரவே இல்லைன்னு தோணுதுடா"
இதே புத்திச்சாலித்தனம் வித்யாவிடம் எனக்கு தென்பட்டு அதுவே ஈர்த்திருக்கிறது.
"
வித்யா"
அவளைப் பற்றி சொன்னேன்.
"
போ.. நாளைக்கு. அவ குழந்தைக்கு என்ன பிரச்னைன்னு நாசூக்கா கேளு. ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா பிராமிஸ் பண்ணு. செஞ்சு கொடு.."
எதிர்பார்ப்பில்லாத சுத்தமான அன்பை எனக்கு உணர்த்தி விட்டாள்.(தொடரும்)

(தேவி - 02.05.2012)

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சுவரஸ்யமான அருமையானதோர் ஆரம்பம்.

அடுத்த பாகத்தைப் படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இங்கே அழகு என்பது புறவடிவம் மட்டுமல்ல//

100% கரெக்ட்.

புறவடிவமே முக்கியமில்லை என்பேன், என் அனுபவத்தில்.

வேறு ஏதோ ஒன்று, ஒரு பேச்சு, ஒரு பார்வை, ஒரு புத்திசாலித்தனம், ஒரு நகைச்சுவை, ஒரு அன்பு, ஒரு பாசம், ஒரு நேசம், ஒருசெயல், ஒரு நல்லகுணம், ஒரு ஈகை, ஒரு இரக்கம், வலுவில் இழுத்துப்பிடித்துப் பேசுவது என்று ஏதோ ஒன்று நம்மை சுண்டியிழுத்து கவர்ந்து விடுகிறது என்பதே உண்மை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதற்கும் சிரிப்புத்தான் அவளிடம்.
சிரிப்பு என்றால் உதடு பிரியாமல் கண்ணும் முகமும் பூபூக்கும் சிரிப்பு//

இந்த வரிகளுக்காகவே தங்கள் கையைப்பிடித்து குலுக்கணும் போல உள்ளது, எனக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இப்ப அடுத்த பிரபோசல் வேலை எப்போ வரும்னு எதிர்பார்ப்பா இருக்கு//

ஆஹா! சூப்பர், சார்
[உணர்வுகளின் பிரதிபலிப்பு]

//வாவ்... ரியலி... நீங்க பிரில்லியண்ட்//

//முதலில் அழகு, இப்ப புத்திசாலித்தனம்... அப்புறம்”//

அருமையான வார்த்தைகள் [எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக]

வை.கோபாலகிருஷ்ணன் said...

//'நீ உருவானது அவருக்குத் தெரியும்டா.. வெளி உலகத்தை எட்டிப் பார்க்கப் போறேன்னு உனக்காக கற்பனையில மிதந்தார்.. அடுத்த வாரம் டெலிவரி இருக்கலாம்னு டாக்டர் சொல்லியிருந்தார். தலை தீபாவளிக்காக வந்தார்.. பைக்ல திரும்பும்போது பைபாஸ் ரோட்டுல எப்ப அடிபட்டாரோ.. கார்த்தால லாரிக்காரன் பார்த்துட்டு டிராபிக் போலிசுக்குத் தகவல் சொல்லியிருக்கான். வந்து பார்த்தப்ப உயிர் இல்ல..'//

முடிவில் எழுதியுள்ள தாயாரின் சோகம் யாரையும் கலங்க வைப்பதாக உள்ளது.

வரிக்கு வரி பாராட்ட வேண்டிய கதை தான் .... ;)))))))

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

அழகான பெண்கள் அவர்கள் அழகாய் இருப்பதை உணர்ந்து இயல்பாகவும் இருந்தால் அவர்களின் வசீகரம் இரட்டிப்பாகி விடுகிறது.//எதிர்பார்ப்பில்லாத சுத்தமான அன்பை எனக்கு உணர்த்தி விட்டாள்.//

வசீகரிக்கும் வரிகள் !

Rathnavel Natarajan said...

அருமை.

அமைதிச்சாரல் said...

தேவியிலேயே வாசிச்சேன்,.. ரொம்ப அருமையான ஆரம்பம்.

RAMVI said...

அலுவலக வேலை,சின்னதாக துளிர்விடும் காதல், பின் சோகம் என்று எல்லாவிதமான உணர்வுகளுடன் சுவாரசியமாக இருக்கு ஆரம்பம்.

//'நீ உருவானது அவருக்குத் தெரியும்டா.. வெளி உலகத்தை எட்டிப் பார்க்கப் போறேன்னு உனக்காக கற்பனையில மிதந்தார்.. அடுத்த வாரம் டெலிவரி இருக்கலாம்னு டாக்டர் சொல்லியிருந்தார். தலை தீபாவளிக்காக வந்தார்.. பைக்ல திரும்பும்போது பைபாஸ் ரோட்டுல எப்ப அடிபட்டாரோ.. கார்த்தால லாரிக்காரன் பார்த்துட்டு டிராபிக் போலிசுக்குத் தகவல் சொல்லியிருக்கான். வந்து பார்த்தப்ப உயிர் இல்ல..'//

சோகம் கலங்க வைத்தது.

vasan said...

வார்த்தைக‌ளால் எப்ப‌டி காட்சிக‌ளை வ‌ரைகிறீர்க‌ள்? ரிஷப‌ன்!
பேனா எப்ப‌டி உங்க‌ள் கைக‌ளில் தூரிகையாகிவிடுகிற‌து?

அப்பாதுரை said...

அம்மாவுடன் உரையாடல் ஏற்படுத்திய திக் இன்னும் அடிக்கிறது.. ஒரு மாத்திரை வரி உலுக்கியது.
விறுவிறுபாக இருக்கிறது.

G.M Balasubramaniam said...

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதும் வரிகள் எப்போதும் ஈர்க்கும். உங்கள் நடை ஈர்க்கிறது. வாழ்த்துக்கள்.

ரேகா ராகவன் said...

ஆரம்பமே அமர்க்களம். என்னா நடை, என்னா விறுவிறுப்பு! எங்கேயோ போயிட்டீங்க சார்.