August 23, 2012

ரயிலில்..

சென்னை எக்மோர்.

பல்லவனுக்காகக் காத்திருந்தோம். பெஞ்சில் இரண்டு பேர். சூழ்நிலை மறந்து.. அவள், அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டு.. இருவருமே அப்படி ஒரு அழுகை. என்ன காரணம் என்றே புரியவில்லை. இயல்பான அழுகை. 
அப்புறம் அவர்களாகவே சமாதானமானார்கள். 

ஏன் அழுதார்கள்.. புரியவில்லை.

ரயிலில் ஏறியதும் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம்.  எனக்கு அருகில் ஒரு இருக்கை காலியாய். அதற்குரியவர் வந்ததும் சொல்லி விட்டு மாற்றிக் கொள்ளலாம் என்கிற நினைப்புடன் நான்.

தாம்பரத்தில் ஒரு பெண்மணி வந்தார். எழுந்து நின்றேன். ஜன்னல் பக்கம் அவர் அமர.. நான் என்னிடத்தில் உடகார்வதற்குள் இன்னொரு பெண்மணி வந்து ஜம்மென்று என்னிடத்தில் அமர்ந்தார்.

“இது என் சீட்” என்றேன்.

“இல்ல.. என் சீட்”

“சி2  58 என்னோடது..”

”59 என்னோடது..”

“அது அடுத்த சீட்..”

“அங்கே அவங்க உட்கார்ந்திருக்காங்களே”

“ அதை அவங்ககிட்ட கேளுங்க” இது நான்.

உடனே அந்தப் பெண்மணி “இது என் சீட்” என்றார்.

எனக்கு வாழைப்பழ காமெடி ஞாபகம் வந்தது.  அலுத்துப் போய் எதிரில் காலியாய் இருந்த சீட்டில் அமர்ந்து விட்டேன். சற்று தள்ளி டிடிஆர்..

மெல்ல எங்கள் பகுதிக்கும் வந்தார்.  இரு பெண்மணிகளுக்கும் டிக் அடித்து கொடுத்தார்.  அப்புறம் என் டிக்கட்டை வாங்கிப் பார்த்தார்.

இப்போதுதான் அவருக்குக் குழப்பம்..

மறுபடி அந்தப் பெண்மணியிடம் டிக்கட்டை வாங்கிப் பார்த்தார்.

“இதுல டிராவல் பண்ணமுடியாதுங்க”

“ஏன்”

“இது வைகைக்கு வாங்கினது.. நீங்க பைன் கட்டணும்.. 340 ரூபா கொடுத்தா அடுத்த கம்பார்ட்மெண்ட்ல வரலாம்..  ஏசில வரமுடியாது”

என்னோடு மல்லுக்கட்டி விவாதித்த பெண்மணி மொபைலில் யாரையோ திட்டினார். அப்புறம் எழுந்து போனார்.

இன்னொரு சம்பவம்..

கணவன்.. மனைவி.. குழந்தை. வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை குழந்தைக்கு ஊட்ட முயல அது பிடிவாதமாய் டிரெயினில் வாங்கிய ஏதோ டிபனுக்கு ரகளை செய்தது.  வீட்டு உணவை தள்ளிவிட பார்த்தது.

அப்பா கோபமாகி ஒரு அடி வைத்து விட்டார். அழுகை. அப்புறம் அரைகுறையாய் சாப்பிட்டது.  நான் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால்.. அப்பா மடியில் குழந்தை.. அவர் மார்போடு சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்க.. அவர் ஒரு கை அணைத்துக் கொண்டு.. இன்னொரு கை தலையை வருடிக் கொண்டு.. அவர் முகத்தில் ததும்பிக் கொண்டிருந்த இனம் புரியாத உணர்வுகள்.. சங்கடம்.. லேசான வருத்தம்..

அப்புறம் குழந்தை விழித்துக் கொண்டு.. முழுப் பயணமும் அப்பாவின் கொஞ்சலை அனுபவித்துக் கொண்டு.. ரசனையாய் இருந்தது.

எல்லோரும் அம்மாவைக் கொண்டாடுகிறார்கள். அப்பாவின் பாசம் அழகான கவிதை. 

22 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பயணம்.... நானும் உங்களுடன் பயணித்தேன்... கவனித்தேன்... :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“இது வைகைக்கு வாங்கினது.. நீங்க பைன் கட்டணும்.. 340 ரூபா கொடுத்தா அடுத்த கம்பார்ட்மெண்ட்ல வரலாம்.. ஏசில வரமுடியாது”

என்னோடு மல்லுக்கட்டி விவாதித்த பெண்மணி மொபைலில் யாரையோ திட்டினார். அப்புறம் எழுந்து போனார்.//

நல்ல ஜோக் தான். ரஸித்தேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அப்புறம் குழந்தை விழித்துக் கொண்டு.. முழுப் பயணமும் அப்பாவின் கொஞ்சலை அனுபவித்துக் கொண்டு.. ரசனையாய் இருந்தது.

எல்லோரும் அம்மாவைக் கொண்டாடுகிறார்கள்.

அப்பாவின் பாசம் அழகான கவிதை.//

ஆமாம். சார்.

ஆனாலும் சில அப்பாக்களுக்கு மட்டுமே அதுபோன்ற பாசத்தைக் தன் குழந்தைகளிடம் காட்டமுடிகிறது.

நிலாமகள் said...

'அப்பாவின் பாச‌ம் அழ‌கான‌ க‌விதை'

வாஸ்த‌வ‌ம்தான்.
ந‌ம் ப‌.தியாகு கூட‌ ஒரு க‌விதை போட்டிருக்கிறார்... 'த‌ந்தைமை' என்று...

அப்பா என்றால் அறிவு ம‌ட்டும‌ல்ல‌ வாத்ச‌ல்ய‌மும் தான்! அந்த‌க் கால‌ அப்பாக்க‌ள் காட்ட‌ நேர‌ம‌ற்று ம‌ன‌தில் புதைத்திருந்த‌தை இந்த‌க் கால‌ அப்பாக்க‌ள் ச‌ற்றேனும் முளைவிட‌ச் செய்கின்ற‌ன‌ர்.

ஸ்ரீராம். said...

அப்பாவின் பாசம் இன்னும் எழுதப் படாத கவிதை மாதிரி...எங்கும் இருப்பது, யாரும் அதிகம் சொல்லாதது. வைகை-பல்லவன் சம்பவம் போல நாங்கள் மதுரையில் அக்னி நட்சத்திரம் திரைப் படம் பார்த்த/பார்க்க முயன்ற சம்பவம்! மத்தியக் காட்சிக்கு ரிசர்வ் செய்யப் பட்டிருக்க கவனிக்காமல் ஆறு மணிக் காட்சியில் அமர்ந்து அந்த சீட் காரர்களுடன் வாக்குவாதம் செய்தோம்!!! டிக்கெட் கிழிப்பவர் வந்து எங்களைக் கிழிக்கும் வரை!

கே. பி. ஜனா... said...

சுவையான சம்பவங்கள்!

அப்பாதுரை said...

இரண்டு சம்பவங்களும் சுவாரசியம். மல்லுக்கு நின்றவர் பாவம் தெரியாமல் செய்தது தானே?

ஹுஸைனம்மா said...

நல்ல கவனிப்பு... எழுத்தாளரல்லவா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


அப்பா பாசம் என்பது ஒரு எழுதப் படாத கவிதை தான்!

நாங்கள் கீழே விழுந்து அடிபட்டால் கூட 'அண்ணா' என்று

தான் கத்துவோமாம் ! எங்கள் அம்மாவின் ஆதங்கம் இது !!

ரயில் பயணமே சுவாரஸ்யம் தான் ! அதுவும் ரிஷபனின்

எழுத்துக்களில் !!

வல்லிசிம்ஹன் said...

இதனால் அறியப் படுவது யாதேனில் சீட்டுக்குச் சண்டை எங்கே வேணுமானாலும் வரலா.
அந்தக் குழந்தைக்கு ஒவ்வாத பொருளைக் கொடுக்க அப்பாவுக்கு மனமில்லை. அழகான காட்சியை மனதில் கொண்டுவந்திருக்கிறீர்கள்

இராஜராஜேஸ்வரி said...

அப்பாவின் பாசம் அழகான கவிதை.
!!!!

ப.தியாகு said...

என் மகனை / மகளை அடிக்க கை உயர்த்துவேன் (அவ்ளோ குறும்பு) என்றாலும் அவர்களின் கண்கள் மிரட்சியில் விரிய பார்த்ததும் தாளாமல் அவர்களை அணைத்துக்கொள்ளத்தான் செய்கிறேன் ரிஷபன் ஜி, நான் அடி வாங்கியதெல்லாம் என்னோடு போகட்டும் என்று. இரண்டாம் ரயில் அனுபவம் நெகிழ (இப்படி நினைவுகூர) வைக்கிறது.
இந்த இடுகை அன்புத்தோழி நிலாமகள் அவர்களை, என் கவிதையை பகிர்ந்துகொள்ளச்செய்ததில் இன்னும் மகிழ்கிறேன். அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்.

ப.தியாகு said...

என் மகனை / மகளை அடிக்க கை உயர்த்துவேன் (அவ்ளோ குறும்பு) என்றாலும் அவர்களின் கண்கள் மிரட்சியில் விரிய பார்த்ததும் தாளாமல் அவர்களை அணைத்துக்கொள்ளத்தான் செய்கிறேன் ரிஷபன் ஜி, நான் அடி வாங்கியதெல்லாம் என்னோடு போகட்டும் என்று. இரண்டாம் ரயில் அனுபவம் நெகிழ (இப்படி நினைவுகூர) வைக்கிறது.
இந்த இடுகை அன்புத்தோழி நிலாமகள் அவர்களை, என் கவிதையை பகிர்ந்துகொள்ளச்செய்ததில் இன்னும் மகிழ்கிறேன். அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்.

கவி அழகன் said...

அழகிய படைப்பு

G.M Balasubramaniam said...

பல நேரங்களில் அப்பாவின் பாசம் கண்டுகொள்ளப் படுவதில்லை என்பதுதான் நிஜம். சுற்றிடத்தை சற்றே கவனித்தால் பதிவுகளுக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். கூர்ந்து கவனித்து எழுதியதற்கு பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய அனுபவத்தை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

வாழ்த்துக்கள்...

மஞ்சுபாஷிணி said...

ம்ம்ம்ம்ம்...

ரசனையான பகிர்வு ரிஷபன்...

முதல் பகிர்வு படித்தபோது நினைத்துப்பார்த்தேன். அந்த பெண்மணியிடம் நீங்கள் சீட் நம்பர் சொல்லியும் அந்த பெண்மணி தன் நியாயத்தை????? சொல்லிக்கொண்டு அசையாமல் இருக்க நீங்கள் ஹூம் சலித்துக்கொண்டு எதிர்சீட்டில் அமர... டிடிஆர் வந்து அந்தம்மா தலையில் இடி விழும்படி ஃபைன் கட்டச்சொல்ல அப்ப கண்டிப்பா அந்த பெண்மணியை நீங்க பார்த்த பார்வையில் ஐயோ பாவம் என்ற கருணை தான் இருந்திருக்கும்.... என்ன தான் முகம் தெரியாத ஒருவர் நம்மிடம் சண்டை போட்டாலும் அவருக்கு பிரச்சனை என வரும்போது நம் மனம் தாளாது சட்டென உதவ தான் நினைத்திடும்... ரிஷபனும் அப்டி தான் கண்டிப்பா நினைச்சிருப்பீங்க. இல்லன்னா அனுபவ பகுதில இந்த காட்சி இடம்பெற்றிருக்காது என்பது என் திண்மையான எண்ணம்.. அப்டி தானே ரிஷபன்????

அடுத்த காட்சி....

குழந்தைகளை சமாளிக்கவே முடியறதில்லப்பா... உண்மையே... அடிக்கவும் மனசு வரமாட்டேங்குது... திட்டினாலும் குழந்தை மனம் சுருங்கிடுமோ என்ற டென்ஷன் மனசுக்குள் கிளம்பிடும்.. ஹைஜினிக்கா இருக்காது வெளியே விற்கிற பண்டங்கள் என்று தானே வீட்டில் சமைத்து கொண்டு வந்தால் குழந்தைக்கு வெளியே விற்கும் பண்டங்கள் அதன் கலர் மணம் அட்ராக்ட் செய்துவிடுகிறது.. ஆனால் சுவையும் இருப்பதில்லை ஆரோக்கியமும் இல்லை.. ஆனால் குழந்தை தானே.. எப்படி புரிந்துக்கொள்ளும்?? அப்பாக்கு சட்டுனு கோபம் வந்துரும் அம்மா அளவுக்கு பொறுமை இருப்பது சிரமம் தான்.. ஆனால் அப்பாவின் கோபம் நீர்க்குமுழி போல.. கோபம் வந்த இடமே தெரியாது சட்டுனு வந்த கோபமும் போயிடும்.. குழந்தையின் அழுகை தான் அடித்தது , இதெல்லாம் நினைத்து தான் அவர் மனம் சங்கடப்பட்டிருக்கும் ச்சே நல்லதனமா சொல்லி இருந்தாலே கேட்டிருக்குமோ அப்டின்னு யோசிச்சிருப்பார் போல... அவர் யோசனையின் பிரதிபலிப்பு தான் அவர் முகத்தில் மாறுதலை கொண்டு வந்திருக்கும்.. உங்க கண்கள் அவர் முக மாறுதலையும் அவரின் முந்தைய செய்கையையும் படம் பிடித்துவிட்டது... அதை அழகிய காட்சியாக இங்கே விவரித்திருக்கிறது...

உண்மை தான் ரிஷபன்.. அப்பாவின் பாசம் ஒரு கவிதை தான்.. ஆனால் இதுவரை அப்படி ஒரு பாசத்தை நான் அனுபவிக்கவில்லை... ஆனால் ரசித்தேன் உங்கள் காட்சி விவரிப்பில் அப்பாவின் பாசத்தை மெல்லிய கவிதையாக ரசிக்க வைத்தது ரிஷபன்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

சௌக்கியமாப்பா நீங்க?

கவி அழகன் said...

Oru payanathil vithiyasamana iru anupavankal

Rasan said...

சுவை மிக்க ரயில் பயணங்கள். அப்பாவின் பாசம் அளவிட முடியாதது.
அப்பா தன் குழந்தையிடம் அன்பாக எடுத்துக் கூறியிருக்கலாம். பெற்றோர் தங்களின் குழந்தைகளை அடிப்பதை தவிர்க்க வேண்டும்.
முதல் சம்பவத்தில் அந்த அம்மணி அறியாமால் செய்த தவறு.
என்னுடைய தளத்தில்

ஏணிப்படி

தன்னம்பிக்கை

நம்பிக்கை

தொடருங்கள்.


ரிஷபன் said...

உண்மைதான் மஞ்சு. எப்படியாவது அவருக்கு ரயிலில் இடம் கிடைத்துவிட வேண்டும்.. இறக்கி விட்டு விடக்கூடாது என்று தவித்தேன் மனசுக்குள். நல்லவேளை.. ஏசியில் இடம் இல்லாவிட்டாலும் வேறு ஜெனரல் பெட்டியில் இடம் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார் டிடி ஆர். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பின்னூட்டம் பார்த்து சந்தோஷம்.

மோகன்ஜி said...

உண்மை தான் . அப்பாக்களின் பாசம் ஏனோ தாய்ப் பாசம் அளவுக்கு பேசப் படுவதில்லை.

யோசிக்க வேண்டிய விஷயம்.

அப்பாக்கள் எல்லோரும் ஒரு போராட்டம் நடத்தினால் என்ன ரிஷபன் சார்?

மஞ்சுபாஷிணி said...

உங்க எழுத்துகள் நிறைய படித்திருக்கிறேன்..நான் படித்தவரை நீங்கள் கருணை மனதுள்ளவர் என்று நானறிவேன்.. முன்பு ஒரு கதை என்று ஒரு குட்டிப்பையனும் தாத்தாவும் பார்க்குக்கு விளையாட வந்து ஒரு நாய்க்குட்டியை தாயிடம் விட்டு போகச்சொல்லி பையன் சொல்லுவதாக எழுதி இருந்தீர்கள்.. அந்த நிகழ்வு உங்கள் மனதை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை புரிய அதிக சமயம் எடுக்கவில்லை ரிஷபன் எனக்கு... அதனால் தான் நீங்க அந்த சமயத்தில் என்ன நினைச்சிருப்பீங்கன்னு யூகிக்க முடிந்ததை சொன்னேன்பா..

அன்பு நன்றிகள் ரிஷபன்...