August 31, 2012

நாளை வரும்

இருண்டிருந்த முகத்தைப் பார்த்ததுமே பூரணிக்குத் தகவல் புரிந்திருக்க வேண்டும். என்னை எதுவும் கேட்காமல் நகர்ந்து போனாள். ஹாலின் மூலையில் கட்டிலில் படுத்திருந்த அப்பா என்னைப் பார்த்தார்.


"என்னடா"

"இந்த வாரமும் கிடைக்காது"

"எதனால"

"கேட்டா என்னவோ சொல்றான்.. ஹெட் ஆபீஸ் போயிருக்கு.. அனுமதி வரல.. அப்படி இப்படின்னு"

"இப்ப என்ன செய்யப் போறே"

"பணம் வராமல் மேற்கொண்டு ஒரு வேலையும் நடக்காதுன்னு காண்டிராக்டர் சொல்லிட்டார்"

பெருமூச்சு விட்டேன். இத்தனைக்கும் எதற்கு எடுத்தாலும் லஞ்சம். ஒரு லட்சம் கடனுக்கு 5000 முதலிலேயே எண்ணி வைத்தாகி விட்டது.

"வந்திரும் ஸார்.. போங்க" என்றவன் இரு வாரங்களாய் இழுத்தடிக்கிறான்.

அப்பாவுக்கு நான் 5000 கொடுத்தது தெரியாது. தெரிந்தால் சத்தம் போடுவார்.

'அப்பவே சொன்னேன். சொந்த வீடெல்லாம் நமக்கு கொடுப்பினை இல்லேன்னு'

பூரணிக்கும் அதிருப்திதான். முதலில் சொந்த வீடு என்ற மயக்கத்தில் இருந்தவள் இன்று தன் நகைகளை எல்லாம் அடகு வைக்க நேர்ந்ததில் துவண்டு போய்விட்டாள்.

பூரணி கொண்டு வந்த காபியில் டிகாஷன் தான் அதிகம். பால்காரனுக்கு போன மாசமே பாக்கி.

பாபு ஓடி வந்தான்.

"அப்பா.. வீடு பார்க்க போகலாமா"

"இன்னிக்கு வேலை எதுவும் இல்லைடா"

"தண்ணீ விடணூமே"

"வேணாம்.. நாளைக்கு போகலாம்" என்றேன் அலுப்பாய்.

"பிளீஸ்ப்பா.."

அருகில் வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டான். சரி.. வீட்டோடு இருந்து என்ன செய்யப் போகிறேன்.. வெளியில் போனாலாவது மன இறுக்கம் தளரலாம். போனோம்.

போகிற வழியிலேயே கணேசன் எதிர்ப்பட்டார்.

"என்னடா வீடு எந்த அளவுல இருக்கு"

'இன்னமும் கடன் தேவைப்படுகிற அளவில்' என்று நினைத்தபடி சிரித்தேன்.

"உன் கிட்டே சொன்னேனா.. என் வீட்டை வித்துரலாம்னு.. யாரும் பார்ட்டி தெரிஞ்சா சொல்லேன்"

"என்ன" என்றேன் திகைப்புடன்.

"ஆமா.. ஆச்சு.. அவளும் போயிட்டா. நான் மட்டும் ஒண்டியா இங்கே இருந்து என்ன செய்யிறது.. நல்ல விலை கிடைச்சா தள்ளிட்டு பையனோட போய் செட்டில் ஆயிரலாம்னு"

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. பத்து பதினைந்து வருடங்கள் இருந்திருப்பாரா.. இதோ இன்று விலை பேசுகிறார்.

"சொல்றேன்" என்றேன் நகர்ந்து வரும்போது.

கூரை அளவில் வளர்ந்த என் வீட்டின் எதிரே நின்றேன். இந்த வீட்டையும் ஒரு நாள் நான் விலை பேசப் போகிறேனா.. பாபு வேறெங்காவது வேலை கிடைத்துப் போனால் நானும் கூடவே போக வேண்டியிருக்குமா.. பிறகு ஏன் இன்று இத்தனை ஆலாடுகிறேன்.. இப்போதே விலை பேசினால் என்ன..

விரக்தியில் எண்ணங்கள் தறிகெட்டு ஓட ஆரம்பித்தன.

"அப்பா"

பாபு என் கையைப் பிடித்து இழுத்தான். நாலரை வயதுக்கு முரட்டு பலம்.

"என்னடா"

"இதுதானேப்பா என் ரூம்"

வீட்டு பிளான் போடும் போதே அவனுக்கென்று ஒரு அறையை நிச்சயித்து விட்டான். வருகிற அவன் நண்பர்கள், என் உறவுகள் எல்லோரிடமும் சந்தோஷமாய் சொல்லிக் கொள்வான்.

"இங்கேதான் டேபிள் போட்டு.. சேர் போட்டு.. பாடம் படிப்பேன்.. எழுதுவேன்"

ஜன்னலோர இடத்தில் மானசீக மேஜை வைத்து போஸ் கொடுத்தபோது அவன் முகத்தில் ஏகப்பட்ட மலர்ச்சி

ஏன் பூரணி மட்டுமென்ன.. சமையலறை வடிவமைத்தது. அட்டாச்டு பாத் ரூம். படுக்கையறை அமிப்பு என்று பேசியது.. அப்பாவும் தான். இப்பதான் நமக்கு வேளை வந்திருக்கு என்று குதூகலப்பட்டது.. எத்தனை நாட்கள் விவாதம். மனைப் பூஜை முதல் அனுபவித்த சந்தோஷம்.. எப்படி இதையெல்லாம் மறந்து போனேன்..

போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது.. துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ள வேண்டிய நானே ஏன் விரக்தி கூண்டில் வலிய சிக்குகிறேன்..

பாபு வீட்டை சுற்றி ஓடி வந்தான். உடலெங்கும் பரவசம். உல்லாசம்

"எப்பப்பா குடி வரப் போறோம்.."

"ரொம்ப சீக்கிரத்துல" என்றேன் புன்னகையுடன்.

23 comments:

vasan said...

நான், என்னோடு பேசிக் கொண்ட‌து போல‌வே இருக்கிற‌து ரிஷ்ப‌ன்ஜி.
இசிஆரில் வீடு க‌ட்டிக்கொண்டிருந்த‌போது ம‌னதிலாடிய‌ ப‌ல‌ப்ப‌ல
எண்ண‌ல‌லைக‌ளில் சில‌. ஓ மை காட். ந‌டுத்த‌ர‌வ‌ர்க்க‌த்திற்கான‌
சாப‌மும் வ‌ர‌மும் க‌ல‌ந்த‌ ஒரு "காம்ப‌வுண்டு புராட‌க்ட்" இந்த‌ சொந்த‌ வீடு.

இராஜராஜேஸ்வரி said...

போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது..

ரொம்ப சீக்கிரத்துல"குடிவரும் ஆசை நிறைவேறும் நம்பிக்கை தந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

G.M Balasubramaniam said...


நம்பிக்கைதானே சார் வாழ்க்கையில் எல்லாம்.

இந்திரா said...

சின்னச்சின்ன சந்தோசங்கள் ஒன்றிணைந்ததுதான் வாழ்க்கை..
நல்லதொரு பதிவு.

Ramani said...

ரத்தினச் சுருக்கம் என்பதற்கு
சரியான உதாரணம்
அந்தக் கடைசி ஒரு வரி
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

சேட்டைக்காரன் said...

உங்களது புனைவுகளின் சிறப்பம்சமான யதார்த்தம் இந்தக் கதையிலும் வியாபித்திருக்கிறது! க்ளாஸ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாக எதார்த்தமாக உள்ளது சார். பாராட்டுக்கள்.

//போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது.. துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ள வேண்டிய நானே ஏன் விரக்தி கூண்டில் வலிய சிக்குகிறேன்..//

இதே நிலைமையில் தான் பலரும் இன்று.

சீக்கரம் குடியேற வாழ்த்துகள்.

பிரியமுள்ள,
vgk

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அதி அற்புதமான கதை!
ஒவ்வொருவருக்கும் அவரவர் வீடு கட்டிய அனுபவம் ஞாபகம் வந்தே தீரும்!

ஸ்ரீராம். said...

நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்று நம்பிக்கை....

எல் கே said...

நடுத்தர வர்கத்தின் கனவே இதுதானே சார்,,,

நிலாமகள் said...

போராடாமல் எது வாழ்வில் சுலபமாய் கிடைக்கிறது.. துவண்டு விடாமல் நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ள ...

Yes,yes,yes...!

பால கணேஷ் said...

மிக இயல்பான மனிதர்களும். பாஸிட்டிவ் திங்கிங்கும்... அருமை ஸார். நம்பிக்கை ஒன்றுதானே வாழ்வின் அச்சாணி!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு. நான் ரசித்த உங்கள் கதைகளில் இதுவும் ஒன்று.

ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும்போது இன்னும் அதிக தாக்கம்....

அப்பாதுரை said...

கண்ணுக்குத் தெரியாத ஆக்சிஜன் என்பது இதைத் தானோ?

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னம்பிக்கையே மன உறுதி... நன்றி...

மோகன்ஜி said...

வீடு கட்டும் தருணம் வாய்க்கும் பெரிய கவலைகளும் சின்னசின்ன சந்தோஷங்களும் கலந்த தவிப்பு .அருமையான படைப்பு ரிஷபன்!

கிருஷ்ணப்ரியா said...

நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது ரிஷபன் உங்களிடம்....
அருமை...

மஞ்சுபாஷிணி said...

அன்பின் ரிஷபன்,

உங்க கதைகளை படிக்கும்போது சொல்லத்தெரியாத பல உணர்வுகள் என்னை என்னவோ செய்யும்... அதாவது கதையின் பாத்திரங்கள் உயிர்ப்பெற்று என் முன் பேசுவது போல நடமாடுவது போல நியாயத்தை எடுத்துரைப்பது போல.. இப்படி எத்தனையோ.... இயல்பான நீரோட்டம் போல கதையின் வரிகள்... கதாபாத்திரங்களாவே நான் மாறிவிட்டேனோ என்னும் அளவுக்கு அதில் எதார்த்தம் மட்டுமே தொக்கி நிற்கும்...

மேக்கப் போட்டு நடித்தால் தான் நடிகைகள் நடிகர்கள் சோபிப்பார்கள் அழகாய் தெரிவார்கள் திரையில்... ஆனால் ரிஷபன் உங்கள் எழுத்துகளில் அந்த மேக்கப் துளி கூட இல்லாமல் இருப்பதால் தான் கதை பிரகாசிப்பது.... இதுவரை பல கதைகள் படித்துவிட்டேன் உங்கள் வலைப்பூவில்... ஒவ்வொரு கதையும் என் மனதில் பசுமரத்தாணி போல் ஏதேனும் ஒரு மெசெஜ் நறுக்குனு சொல்லிவிட்டு அமைதியாக இருக்கும்....

நிறைகுடம் ரிஷபன் நீங்க... உங்க எழுத்துகளில் இருக்கும் கம்பீரம் தான் உங்க வலைப்பூவுக்கு அழகு சேர்க்கிறது.. எதார்த்தமான நடை... என் வீட்டிலேயே என் கண்முன்னே நடக்கிற நிகழ்வாக மட்டுமே இதுவரை உங்கள் கதைகளை படித்துக்கொண்டு வருகிறேன்....

இந்த கதையிலும் வாழ்க்கையை அனுபவித்து முடித்துவிட்டு நினைவுகளும் மனைவியின் சுவாசமும் நிரம்பிய வீட்டை அதன் பழமையை விற்றுவிட்டு மகனோடு போய் செட்டில் ஆகப்போகிறேன்னு சொன்னது அவர் வரை அது நியாயமே... மனைவியின் நினைவுகளுடன் தள்ளாத வயதில் தனிமையில் வீட்டில் மோட்டுவளையம் பார்த்தபடி நாட்களை நகர்த்துவதா அல்லது மகனுடன் இறுதிவரை காலம் கழிப்பது சரியா என்ற கேள்விக்கு அந்த பெரியவர் எடுத்த முடிவு தான் சரியானது.. அட பரவாயில்லப்பா 15 வருடங்கள் வீட்டில் இருந்தார்.. இனி யாருமில்லை என்ற நிலையில் வீட்டை விற்கும்படி ஆனது....

மஞ்சுபாஷிணி said...

ஆனால் நம் ஹீரோ அப்படியா??? எத்தனை கனவுகளுடன் சொந்தவீடு கட்ட ஆரம்பித்தார்... அவர் மட்டுமா?? அவருடைய மகன் பாபு, பூரணி, அப்பா எல்லோருக்கும் அந்த ஆசை துளிர்த்து அது மரமாகி வேர் ஊன்றியாச்சே.. என்ன இருந்தாலும் சொந்த வீடு போல் வருமா? சுதந்திரமா தோட்டம் வைக்கலாம் வீட்டைச்சுற்றி.... நைட் எத்தனை மணி நேரமானாலும் லைட் எரியலாம்.. சத்தமா பேசலாம் சிரிக்கலாம். நம்மை தேடி நட்புகளும் உறவுகளும் வந்து கொண்டாடிவிட்டு போகலாம்.. மணிக்கணக்கா மொட்டைமாடியில் உட்கார்ந்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணலாம்.. நிலாச்சோறு சாப்பிடலாம்... குடும்பத்துடன் வீட்டுக்குள் சத்தமாக பாட்டுக் கேட்கலாம். தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.. இப்படி எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கே. அதோடு மட்டுமா??

சொந்த வீடு கட்டுவதும் நம் வீட்டில் உள்ள பெண்ணுக்கு கல்யாணம் செய்வதும் ஒன்று தான்.... பார்த்து பார்த்து நம் விருப்பதிற்கேற்ப நம் ரசனைக்கேற்ப வீட்டிலுள்ள ஒவ்வொரு இணுக்கும் வடிவமைத்து கிரஹப்ரவேசம் வரை வந்து பால் காய்ச்சும்போது சொந்தங்களும் நட்புகளும் வந்து ஆஹா என்னமா கட்டி இருக்கான்பா வீட்டை ரசிச்சு ரசிச்சு ரச்னையோட... சொல்லும்போது நமக்கு மனம் நிறைந்து போகும்...

தொட்டதுல இருந்து தொடர்ந்து லஞ்சம் லஞ்சம் லஞ்சம் தான்.. லஞ்சம் இல்லாம எந்த வேலையும் ஆகாது என்பது மட்டுமல்ல நாளுக்கு நாள் கம்பி, சிமெண்ட், கல், மேஸ்திரில தொடங்கி சித்தாள் பெரியாள் கூலி வரை விலை ஏறிக்கொண்டே போவதும், முன்பு போல ஆட்கள் நியாயமாக வேலை செய்து இப்பல்லாம் பார்க்க முடிவதில்லை.. வேலை கொஞ்ச நேரமும் அரட்டையும் காபி டீயும் தான் அதிக நேரம்... காண்ட்ராக்டரிடம் கொடுக்கும்போதோ அங்கே இன்னும் நிலை மோசம்... இதெல்லாம் ஆயாசம் வரவழைக்கும் வேதனை தான்.. ஆனால் என்ன செய்வது.... ஒன்றைப்பெற சில சிலதை இழக்கவேண்டி இருக்கே...

என்னைக்கோ வளர்ந்து ஆளாகி பாபு வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டா இந்த வீடு நாமும் விற்க வேண்டி வருமோன்னு ஏன் நெகட்டிவா நினைக்கிறார் நம்ம ஹீரோ?

மஞ்சுபாஷிணி said...

காலசுழற்சி இருக்கே அது பலவித மாற்றங்களை கொண்டுவரும் ஆற்றல் பெற்றது.. யாரறிவார்? பாபு இங்கே இந்திய மண்ணிலேயே நல்ல வேலை கிடைக்கப்பெற்று இங்கேயே திருமணம் முடித்து பேரன் பேத்திகள் சூழ இங்கேயே இவர் ஆசை ஆசையா கட்டப்போகும் வீட்டில் தன் காலம் முடியும் வரை இருக்கும்படி கூட ஆகலாமே?

பாபுவின் ஆசைகளை சொல்லும்போது அப்படியே கண்முன் காட்சிகள் விரிந்தன ரிஷபன்... நல்லவேளை சிந்தனை அறுபட்டு பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறினார் நம்ம ஹீரோ... நமக்கும் அருமையான கதையும் கிடைத்தது... யார் இப்படி அல்லல்பட்டதுன்னு தான் தெரியலை.... அனுபவங்கள் மட்டுமல்ல இதோ உங்களின் கதைகள் கூட எங்களுக்கு பாடங்கள் தான்பா.. நாளை வரும் தலைப்பு ரொம்ப பொருத்தம்பா....பாசிட்டிவ் தாட்...

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்... சொன்னது ரொம்பவே சரி....

அன்பு வாழ்த்துகள் ரிஷபன் கதை பகிர்வுக்கு....

ஸ்வர்ணரேக்கா said...

இயல்பாய், படிப்பவர்கள் தங்களையே அந்த இடத்தில் வைத்து பார்க்கும் வகையில் நன்றாய் இருக்கிறது...

கீதமஞ்சரி said...

வாழ்க்கையின் பிரச்சனைகளைப் புறம் தள்ளவைக்கும் நம்பிக்கை... அது உங்கள் கதையின் மூலம் வாசகர்க்கும் கிடைக்கிறதெனில் என்ன சொல்ல? அதுதானே உங்கள் எழுத்தின் வெற்றி. பாராட்டுகள் ரிஷபன் சார்.

கே. பி. ஜனா... said...

அந்தக் கடைசி வரி...super telling!