November 03, 2012

வேறென்ன கேட்பேன்?

தமிழ்ப் பதிவர் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு தொடர் 3 வலைத்தளங்களில் பிரசுரமாகிறது...


நண்பர் மோகன் ஜி எடுத்துக் கொடுக்க.. நானும் மூவார் முத்துவும் (ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி) பின் தொடரப் போகிறோம் ..

முதல் பகுதி இதோ.. (மோகன் ஜி அவர்களின் வலைத்தளத்தில்  காணலாம்.)  http://vanavilmanithan.blogspot.in/2012/11/blog-post.html
=================================================================

உத்திஉத்தி கம்மங்கட்டு வூட்டப் பிரிச்சி கட்டு


காசுக்கு ரெண்டுகட்டு கருணைக் கிழங்குடா

தோல உரியடா தொண்டையில வையடா

வையடா வையடா வையடா....

சிவபாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு உத்திஉத்தின்னு இறங்கினாப் போதும்..

நாலு பேரையாவது ஏறக் கட்டிட்டுத் தான் லைனையே தாண்டுவான். சடுகுடு ஆட்டந்தான்னு இல்லை, வாலிபால், கோக்கோ எதுவானாலும் அதில் அவன் சூரன் தான் சந்தேகமேயில்லை.

ஆனாலும் அவன் சகவாசம் கூடாது என ரொம்பவே ஆராமுது வீட்டில் கண்டிப்பு காண்பிப்பார்கள் .அவனும் அவன் மூஞ்சியும்..

மேலக் கவரைத் தெருவில் இன்று ஆராமுதுக்கு தெரிந்தவன் அவன் ஒருவன் தான். தெரிந்த மீதி பேரெல்லாம் எங்கெங்கோ.. அந்த விவரமெல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தெரியத்தானே போகிறது? சிவபாதத்தையே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

முப்பது வருஷம் தெரிஞ்சுக்காம இருந்தது ரெண்டு மணி நேரத்திலயா குடிமுழுகிப் போகும்.? ஏதோ கண்ணை மூடுமுன் தான் திரிந்த மண்ணை ஒரு தரம் பார்த்துடணும்னு ஒரு வெறி. அதுக்காக அதைப் பார்த்தப்பபின்னே ஆராமுது கண்ணை மூடிடுவான்னு நினைக்க வேண்டாம். ‘கிழட்டுப் பொணத்துக்கு பாம்பு காது,பானை வயிறு’ன்னு பங்கஜமே சர்டிபிகேட் இல்லே குடுத்திருக்கா? நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான். உடம்பு துவஜஸ்தம்பம்தான் இன்னமும்.

ஆச்சு அணைக்கரை வந்தாச்சு.. பல்லாங்குழியாய் ரோடு எல்லாபுறமுமாய் பஸ்ஸோ ஆட்டி எடுத்தது.. செய்யறதையெல்லாம் செஞ்சி போட்டு தெகிரியமாய் இந்த ஊருக்கே வரையா படவான்னு உலுக்கிஉலுக்கிப் போட்டது ஆராமுதை..

என்னைப் பார்த்தா யாருக்கும் அடையாளம் தெரியுமா? ஆராமுதுக்கு வழியெங்கும் இந்தக் கேள்வி மாளாத யோசனையாய் நீண்டபடி வந்தது. இருபத்தினாலு வயசிருக்குமா அப்போ? தன் வயசுக்காரர்கள் ஆறேழு பேர் இருப்பமா? மீதியெல்லாம் இப்போ அமாவாசையானா எள்ளுஜலம் வாங்கிண்டு மாட்டின போட்டோலயோ, பேரபிள்ளையளோட பேருலயோ ஒட்டிண்டிருப்பா. அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!

அப்படி யாரும் தன்னை தெரிஞ்சிண்டா தான் என்ன? அவமானப் படும்படி ஏதும் சொன்னாத்தான் என்ன? ஆம்படையாளும்,பிள்ளையும்,சொச்சத்துக்கு மருமகளும் செய்யாத அவமானமா? செத்திருக்கணும் அப்பவே செத்திருக்கணும்.. உசிரில்லே வெல்லக் கட்டி?

பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. புழுதி பறக்க இருந்த பழைய பொட்டவெளியா? கட்டடமும், கடைகளும்,ஏ.டி.எம்முமா எல்லாமே மாறிப் போச்சு.. இன்னமும் அந்த மூத்திர நாத்தம் மட்டும் இல்லையின்னா அந்த இடம் பஸ் ஸ்டாண்டுன்னு தெரியாம போயிருக்கும். ஆராமுது ஆட்டோவைப் பிடித்துக் கொண்டார்.

“மேலக் கவரைத் தெருவுக்கு விடப்பா”.

ஏற இறங்க பார்த்த ஆட்டோக்காரன். ~அது என்னாதுங்க எனக்கு தெரியாத தெருவு. இந்த வெளங்காத ஊருல?

“பண்டாபீஸ் பக்கத்துல”.

“பண்டாபீஸா. அப்படின்னா?”

அங்கே போய்க் கொண்டிருந்த இன்னொரு பாம்புக் காதுக்கு இந்த சம்பாஷணம் விழுந்தது. “நம்ப மந்திரி தெருவத்தான் அப்போ மேலக் கவரைத் தெருன்னு சொல்லுவாங்க. சாரு அங்க யாரைப் பார்க்கணும்?” அருகில் வந்து நெற்றியில் உள்ளங்கையை சார்பாக்கி ஆட்டோவினுள் பார்த்தார்.

இவரண்டை சொல்லலாமா?..”சிவபாதம் சிவபாதம்னு’

அவருக்கு நீங்க என்னவாகனும்..

“கிட்டின சொந்தம்”

“நீங்க பார்த்தா பிராம்மணா போலிருக்கேளே?”

“அயல்லே கொண்டாங்கொடுத்தான்னு இருக்க முடியாதா?”

“அது சரி! நீ போப்பா” என்றவர் முனகிக்கொண்டே போனார்..’நல்ல கொண்டான் கொடுத்தான்’

தெருமுக்கிலேயே ஆராமுது இறங்கிக் கொண்டார். எல்லாமும் மாறிப் போச்சு.. எல்லாமுமே.. என் அவமானம் ஒண்ணைத் தவிர

ஓட்டு வீடுகள், தாயம்மாவின் குடிசை, தெருவின் ரெண்டு பக்கமும் இருந்த முனிகிபாலிட்டி தண்ணீர் குழாய்கள், வீடுகளை ஒட்டிக் கறுத்து தேங்கி நின்ற சாக்கடைகள் எதையும் காணோம். பிளாட்டுகள் வந்திருந்தன. சோடா பவுண்டன்.. நிலா பியூட்டி பார்லர்...

வந்தாச்சு . ரெண்டு மாடி வீடு . இதுவாய்த்தான் இருக்கணும். “சிவபாதம்!”

“யாருங்க அது.?” அவன் மனைவியாகத்தான் இருக்க வேணும்..

உள்ளே பேச்சுக் குரல்.. மீண்டும் பால்கனிக்கு அவள் வந்தாள். “மேல வாங்க. தைரியமா வாங்க.. இது கடிக்காது” என்றாள் நாயை வாஞ்சையோடு பார்த்தபடி.

கடிச்சாத்தான் கடிக்கட்டுமே என்று நினைத்துக் கொண்டார் ஆராமுது.

படுக்கையில் சாய்ந்திருந்த சிவபாதம் கண்களை சுருக்கிக் கொண்டார்.

“தெரியுதா?”

“வா ஆராமுது..” குரல் கம்மி கண்கள் கலங்கின சிவபாதத்துக்கு.

“எப்படி இவ்வளவு தூரம்?”

“அடடா! இவ்வளவு வருஷத்துக்கப்புறமும் என்னை அடையாளம் தெரிஞ்சுதா?”

“தெரியாம பின்னே? ஆறுமாசமா ரெண்டு பேருக்காய்த்தான் காத்திருக்கேன்.. அதுல நீ ஒண்ணு.. நீ வருவே நீ வருவேன்னு தாண்டா அந்தராத்மா அலறிக்கிட்டு கிடந்தது..” இருமலும் இரைப்புமாய் திணறியது சிவபாதத்தின் குரல். “இனிமே கவலை இல்லே. இன்னொருவன் தன்னால வந்துடுவான்”

“இன்னொருத்தானா? யாரது?” இளைத்த அவர் கரம்தொட நீண்டது ஆராமுதின் வலக்கை.

“தர்மராஜன்.. யம தர்மராஜன்..”


 (தொடரும்)

  இதன் அடுத்த பகுதியை நான் தொடர்கிறேன்..  கூட வரிங்களா..??    

15 comments:

நிலாமகள் said...

நாங்க‌ ரெடி!

ஸ்ரீராம். said...

வேறென்ன கேட்போம்..... தொடருங்கள் என்றுதான்!

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறோம்... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

நாங்க ரெடி... தொடருங்க...

கதம்ப உணர்வுகள் said...

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அருமையான முயற்சி ரிஷபா....

மோகன் ஜி தொடங்கி வைத்ததை நீங்க தொடரும்போது வாசிக்க நாங்களும் காத்திருக்கோம்பா...

கதை படிச்சிட்டு கருத்து இடுகிறேன்பா...

ADHI VENKAT said...

நாங்க ரெடி... ஆவலுடன் உள்ளோம். கதையை எப்படி கொண்டு போக போறீங்களோ....

settaikkaran said...

நானும் ரெடி தான்! :-)

திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைப்பதிவின் மூலம் உங்கள் வலைப்பதிவு ‘என் விகடன்’ வலையோசையில் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிந்தேன். வாழ்த்துகள்! மேலும் தொடர்வேன்!

Matangi Mawley said...

Been offline for quite sometime... And what a welcome present! Waiting for part 2!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம் காத்திருக்கேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள் சார்.

கதம்ப உணர்வுகள் said...

ஆரம்பமே களைக்கட்டுதே... அந்தக்காலத்துல தொலைக்காட்சி தொல்லை இல்லை... பெண் பிள்ளைகள் அடுப்படி, பூவேலை, தையல் அப்டின்னு இருக்க... ஆண்பிள்ளைகளின் பொழுதெல்லாம் இப்படி விளையாடி விளையாடி தான் தீர்க்கிறது போலும்...எடுத்ததுமே சினிமா டைட்டில் சாங் போல கோதாவில் இறங்குமுன்.... பண்டு பழையப்பாட்டு வரிகள் போல ஆஹா... உத்தி உத்தி கம்மங்கட்டு.... தொடக்கமே ரசிக்கவைத்தது மோகன் ஜீ...

சிவபாதம் தான் நம்ம கதையின் ஹீரோன்னு தெரிஞ்சுப்போச்சு.... ஆனா அடாவடி ஹீரோவாக ஒரு க்ரூப்ல எல்லாருமே ஸ்மார்ட்டா இருக்கமாட்டாங்க.. நம்ம ஆராமது போல பயந்து பயந்து... சிவபாதம் போல தடாலடியா பாய்ந்து எல்லாரையும் களமிறங்கி வதம் செய்துட்டு வெற்றி வாகை சூடிடும் ஏகலைவன் போல? அதனால தான் ஆராமுது வீட்டில் சேரக்கூடாதுன்னு சொல்லி இருப்பாங்களோ? இல்ல அவனும் அவன் மூஞ்சியும் அப்டின்னா??? கோபத்தில் சொல்லி இருப்பாங்க போகட்டும்... ஆனா சிவபாதம் சகவாசமே வேணாம்னு சொல்றது எதனாலயா இருக்கும்??? கண்டிப்பா ரிஸ்கை ரஸ்க் போல சாப்பிடும் கேரக்டர் சிவபாதம்னு முதல் பத்தி படிச்சதுமே தெரிஞ்சுப்போச்சு..

கதம்ப உணர்வுகள் said...

கதை என்றோ எத்தனையோ வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை ஆராமுது மூலமாக நமக்கு தெரியக்கொடுக்கிறார்னு தெரிந்துவிட்டது... ம்ம்ம்ம்ம் அடுத்து?? ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா முப்பது வருஷத்துக்கு முன்னாடி ரெண்டும் கெட்டான் வயதில் ஒன்னா விளையாடி களித்த பொழுதுகளை அசை போடறதா இருந்தா அதை அவர் வீட்டிலயே உட்கார்ந்து போட்டுட்டு இருந்திருக்கலாமே ஏகாந்தத்தில் கண்களை மூடிக்கொண்டு... ஆனா என்னவோ மனசுல இருக்கு ஆராமுதுக்கு கண்டிப்பா... அதனால தானோ என்னவோ முப்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை ஆராமுது நினைக்கும்போது கோபமும் இழையோடுவதை அறியமுடிகிறது.... அது சரி... பங்கஜம் தான் ஆராமுதுவோட பெட்டர் ஆஃபாக்கும்.. நல்ல ப்ரஹஸ்பதி புண்ணியவதி புருஷனை என்ன தைரியமா கெழட்டுப்பொணம்னு சொல்றா யப்பா... வயசானாலேயே மரியாதை குறைஞ்சிடுமா என்ன? இல்ல பாரியா பர்த்தாவின் இடையில் மரியாதை தான் எதுக்குன்னு இருக்கிறாளோ என்னவோ...

சாகறதுக்கு முன்னாடி யாருக்குமே இப்படி ஒரு எண்ணம் இல்ல இல்ல ஒரு வெறி இருக்கத்தான் செய்யும். நம் உசிரு நம் மண்லயே போனா தான் என்னவோ டைரக்டா சொர்க்கம் போயிடுவோம்னு நினைப்பதாலா? ஹுஹும் கிடையவே கிடையாது.. நம்ம வீட்டிலயே, நம்ம முற்றத்துலயே, நம் நெருங்கின சொந்தங்கள் நட்புகள் எல்லோரும் அருகே இருக்க எல்லோரையும் பார்த்த திருப்தியில் மனசு ஒரு செகண்ட் மூச்சு விட மறந்து போற நேரத்துல இதான் சாக்குன்னு காத்திருக்கும் யம கிங்கரர்கள் பாசத்தை வீசி உசிரை பிடிச்சுக்கிட்டு கொண்டு போயிடறாங்கப்போல???

கதம்ப உணர்வுகள் said...

அந்த காலத்து உணவு எப்படி எல்லாம் மனுஷாளை உயிர் போகாம கடைசி நொடில கூட மூச்சை இழுத்தி நிறுத்தி வைக்கிறதே அப்டின்னு நினைச்சா ஹுஹும் தப்பு.. மனசுல இருக்கும் நிறைவேறாத ஆசைகளோ விருப்பமோ அதான் நிறுத்தி வைப்பது.. பங்கஜத்தோட டயலாக் மோகன் ஜி அட்டகாசமா எழுதி இருக்கீங்க.. கெழட்டு பொணத்துக்கு பாம்பு காது அடேங்கப்பா எத்தனை கூர்மை.... பானை வயிறு எவ்ள சாப்பிட்டாலும் போறலை போலிருக்கே.. இந்த வசனம் ரொம்ப ரசித்தேன்பா.. “ நோக்காடெல்லாம் குரங்கு மனசுக்கு தான் உடம்பு துவஜஸ்தம்பம் தான் “ அப்படின்னா மனசு மரத்துக்கு மரம் தாவற குரங்கு போல எண்ணங்களை கயிறு கட்டி இழுக்க முடியாத அளவு தூரம் பயணிக்கிறதோ என்னவோ? அந்த அலுப்பும் அயற்சியும் தான் முனக வைக்கிறதோ? உடம்பு நல்லாதான் இருக்காமே... துவஜஸ்தம்பம் தான் ஆஹா எங்கருந்து இப்படி வார்த்தைகள் தேடி தேடி பிடிக்கிறீங்க மோகன் ஜி? துவஜஸ்தம்பம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப வருஷத்துக்கு முன்னாடி பாட்டி சொல்லக்கேட்டிருக்கேன்.. தூண் தூண் தானே?? அத்தனை உறுதியா உடம்பு இருக்கிறதுனால தான் பாம்பு காதாவும், எதை சாப்பிட்டாலும் ஜீரணிக்கிற பானை வயிறாவும் இருந்திருக்கு ஆராமுதுக்கு....


ஆராமுது 24 வயசா இருந்தப்பவும் ரோடு இந்தகதி தான்... இத்தனை வருஷம் ஆனப்புறமும் ரோடு பல்லாங்குழியா தான் இருந்திருக்குது... ராமா ராமா... இந்த ரோட்டுக்கு மட்டும் இன்னும் அகலிகைக்கு கிடைச்ச மாதிரி சாபவிமோசனம் கிடைக்கலையே.. ஆராமுதை குலுக்கி எடுக்கிறதாக்கும்.... செய்றதை எல்லாம் செஞ்சுட்டு என்ன தைரியம் ஊருக்கு வர அப்டின்னு யாரு கேப்பா?? ஆஹா கதைல நைசா பொடி வெச்சுட்டீங்களே மோகன் ஜி. தலைய பிச்சுக்க வேண்டியது தான் என்னவா இருக்கும் அப்டின்னு....

ஆராமுதுக்கு எப்படி எல்லாம் சந்தேகம் வருது யப்பா. ஆனா அந்த டௌட் நியாயமானது தான் கண்டிப்பா...இத்தனை வயசாகி தொண்டு கிழமாகி நாடி நரம்பெல்லாம் தளர்ந்து மறதி அதிகமானது போல ஆராமுது நண்பர்களுக்கும் இதே நிலை தானே... அதான் இந்த யோசனை.... ஆஹா வயசானதை எப்படி எல்லாம் எழுதி இருக்கீங்கப்பா... இதே வயதுடையவர் இவருடன் இருந்தவர்களில் பலர் அமாவாசையான எள்ளுஜலம் வாங்கிண்டு போட்டோல யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா... ம்ம்ம்ம்ம் அப்புறம்??? பேரப்பிள்ளைகளோட பேருல ஒட்டிண்டு... ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்?? என்னது இது.. செத்தவாளைப்பத்தி தப்பா பேசப்படாதோன்னோ? ஆராமுது ஏன் இத்தனை கோபமா சொல்லிண்டிருக்கார்? ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும். அவர்களால பாதிக்கப்பட்ட வெறியும் வேதனையும் விரக்தியும் எரிச்சலுமா??

கதம்ப உணர்வுகள் said...

வயசானப்பின் வரும் சிரமங்கள் எல்லோருக்கும் ரொம்ப அவஸ்தையானவை... முதலில் வீட்டிலேயே மரியாதை குறைவது மகன் மருமகள்ல தொடங்கி பொண்டாட்டி வரை அஃறிணைல அழைப்பது... அது அது அப்டின்னு... வயசானவங்க வீட்டில் இருப்பதை ஒரு துச்சமா நினைத்து தன் இஷ்டப்படி இருப்பது... தடுக்கவோ அறிவுரை செய்யவோ நினைத்தால் என்னவோ பெரிய க்ரஹச்சாரம் அனாச்சாரம்னு காதை பொத்திண்டு இவாளை கொடுமைப்படுத்தி முத்தத்துலயோ இல்ல ஒண்டு சந்துலயோ அவங்களோட ஜாகைய மாத்திடறது... கொடுமைப்பா... ஆராமுது எவ்ளோ சோகமா சொல்லி இருக்கார் பாருங்க... ஆம்படையாக்கிட்ட, புள்ளைக்கிட்ட, மருமகக்கிட்ட எத்தனை அவமானப்பட்டாரோ... உடம்பும் மனசும் பலகீனமானதும் வார்த்தைகளை ஏத்துக்கும் பக்குவத்துக்கு மனசை எருமைமாட்டு தோலாக்கிக்கிறாங்க. ஹூம்.... இல்லன்னா உசிரு கவரிமான் ஜாதியா போயிருந்திருக்குமே.. அப்டி பார்த்தா நாட்டுல 75 பர்செண்ட் முதியோர்கள் முதியோர் இல்லம் போயிருந்திருக்கமாட்டாங்க. உயிரை விட்டிருப்பாங்க.. ஹூம்..

வருஷம் எத்தனை ஆனாலும், என்னென்ன மாறினாலும் நம்ம சுதந்திர ஆண்கள் சுவற்றை பார்த்தால் உடனே சித்திரம் போடுவதை நிறுத்தவும் மாட்டாங்க. திருத்திக்கவும் மாட்டாங்க.. மாத்திக்கவும் மாட்டாங்கன்னு இந்த வரில தெரிஞ்சுட்டுது... இல்லன்னா பஸ் ஸ்டாண்டுனு ஆராமுதுக்கு தெரியாம போயிருந்திருக்குமே..

ஆட்டோக்காரனுக்கு எங்க 30 வருஷ முன்னாடி இருந்த தெரு தெரியப்போறது. வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு போனாலே மாற்றங்கள் எத்தனை வேகமா பயங்கரமா ஆகிட்டு இருக்குன்னு மிரண்டு இருக்கேன் நான்... ஆட்டோக்காரன் டயலாக் செம்ம அசத்தல் மோகன் ஜி... எப்டி எப்டி ?? வெளங்காத ஊரா?

ஆராமுது போலவே இன்னொரு பாம்புகாது ஹாஹா.. அப்டின்னா அவரும் அந்த காலத்து மனுஷா போலிருக்கு. அதான் சட்டுனு அட்ரஸ் சொல்லிட்டு.. க்யூரியாசிட்டி பாருங்க. அங்க யாரை பார்க்கனும்? இவரு அதுக்கு மேலே சொல்லலாமா வேணாமான்னு யோசிச்சதோட நிக்காம கிட்டின சொந்தமாம்ல?

பாம்புகாது சும்மா இருக்குதா பாரேன்..... கிட்டின சொந்தமாஆஆஆஆஆஅ? ஆனா நீங்க பிராம்மணாள் போல இருக்கேளே... நொட்டை சொல்லியே பழக்கப்பட்டு... ஊர்வம்பு பேசியே பொழுதைப்போக்கி.... அடுத்தவீட்டில் என்ன நடக்குதுன்னு காதை முழ நீளத்துக்கு அடுத்த வீட்டில் கொடுத்துட்டு இருக்கும் இது போல பாம்புகாது ஆளுங்களால தான் எத்தனை அவஸ்தை.... கொண்டான் கொடுத்தானாம்? அதென்னப்பா... புது புது வார்த்தைகள் மோகன் ஜி .. இப்ப தான் கேட்கிறேன். இதுக்குமுன்னாடி எங்கயோ ஒரு படத்துல படம் நினைவுக்கு வரமாட்டேங்குதே.. கலைஞரின் பேரன் ஒரு பையன் நடிச்ச படத்துல ஒரு வார்த்தை வருமே.. அந்த படம் பார்த்துட்டு கொஞ்சநாளைக்கு நானும் என் மகனும் இதே வரியை சொல்லி சொல்லி எல்லாரையும் உண்டு இல்லன்னு ஆக்கினோம்பா... நல்ல வசனம்பா அது. இதை படிச்சதும் அது தான் நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு போனதும் பிள்ளையை போன் செய்து கேட்கனும்... என்னமா எழுதுறீங்கப்பா.. இடை இடையே இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் கதைக்கு இடையே சுர்ர்ர்ர்ர்ர்ருனு பச்சைமிளகாய் கடிச்ச ருசி போல் அத்தனை அருமைப்பா.... ரசிக்க வைத்தது...

கதம்ப உணர்வுகள் said...

இத்தனை வருஷம் கழிச்சு அவமானம் மட்டும் மாறலைன்னு ஆராமுது சொல்லும்போது “ இந்த கதையின் உயிர்நாடியே இந்த ஒரு வார்த்தையில தான் இருக்கு “ என்னமோ நடந்திருக்கு பெரிதாய் உயிரா மானமான்னு பார்த்து உயிரை விட நாம ஒன்னும் கவரிமான் ஜாதி இல்லையே.. மானத்தை இழந்து சொந்த ஊரை விட்டு ஓடினவரா இருந்திருப்பார் போல....

சிவபாதத்தின் எண்ண அலைகளும் ஆராமுது எண்ண அலைகளும் அடிக்கடி சங்கமித்து மோதிக்குமோ? அந்தராத்மா அலறியதுன்னா?? காத்துட்டு இருந்திருக்காரா... இத்தனை வருஷமாவா? சினிமா பார்ப்பது போல் செம்ம ஃப்ளோ மோகன் ஜி...

இரண்டு பேர்னு சொன்னது மரணத்தையா? இல்ல ஆராமுதுவுக்கு செய்தது போல யாராவது தர்மராஜனுக்கு எதுனா செய்திருப்பாரோன்னு படிக்கிறவங்க குழம்பி போயிடாமல் இருக்க யமதர்மராஜன்னு முடிச்சது நிம்மதி....

செம்ம கதைக்களம் மோகன் ஜி... பரந்த இந்த மேடை உன்னுடையது.. இந்த நாள் உன்னுடையது... ஆடு.... ஆடு.... சதிர் கட்டி ஆடி தீர்த்திட்டீங்கப்பா... இனி ரிஷபன் அடுத்து என்ன எழுதப்போறார்னு படிக்க போகிறேன்பா...

அருமையான விஷயம் சுழல் தொடர்ச்சி.... ஜாம்பவான்கள் மூணு பேரு.... ஆட்டத்தை ஆரம்பிச்சு வெச்சிட்டீங்க... இதோ அடுத்து ரிஷபன்...எளிமையா திடுக் திடுக்னு ஒருவரி கொடுத்து திக்குமுக்காட வைப்பார்.... அடுத்து ராமமூர்த்தி சார்.. நையாண்டியான எழுத்துகள் ரசிக்க வைக்கும்..

பாசந்தி ருசிக்க அடுத்து அடுத்தடுத்து கொடுத்தால் சுவைக்க கசக்குமா என்ன? ரசிப்போம்பா.. முப்பெரும் தேவருக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்...