January 02, 2013

சாரம்

வீட்டிற்குள் நுழைந்தபோது பானு குழந்தைக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்ததும் சிநேகமாய்ச் சிரித்தாள்.

ஆனால் சரவணன் முகம்தான் சோர்ந்து இருந்தது.

"என்ன சரவணா! வேலை கிடைச்ச பின்னால ஆளே மாறிட்டே?" என்று சீண்டினாள்.

சரவணன் எதுவும் பேசாமல் நின்றான். குழந்தை, வாயிலிட்ட சாதம் விழுங்காமல் உம்மென்று வைத்திருந்தது. அரை மணி நேரமாகும் ஒரு டவரா சாதம் ஊட்ட. பானு சலிக்காமல் விளையாட்டுக் காட்டிக் கொண்டே முழுவதையும் ஊட்டி விடுவாள். தினசரி, சரவணனுக்கும் இது ஒரு பொழுதுபோக்கு. இன்று அதில் கூட சுவாரசியம் காட்டவில்லை.

"உள்ளார உப்புமா வச்சிருக்கேன். கொஞ்சம் டேஸ்ட் பார்க்கறியா?" என்றாள் பானு மீண்டும்.

"வேணாம்!"

"ஏன், வர வழியிலே ஏதாவது சாப்பிட்டியா? ஆங்… முன்னே மாதிரியா… இப்ப ஐயா வேலைக்குப் போறீங்க. வீட்டு டிபன் ருசிக்குமா? அன்னபூர்ணா அடை அவியல் மாதிரி வருமான்னு கேட்கத்தானே தோணும்!"

உண்மையில் எதுவுமே சாப்பிடவில்லை. காபி கூடக் குடிக்கவில்லை. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதுமே தகவல் கேள்விப்பட்டதும் அதிர்ந்தான்.

"பானு வீட்டுல, அவருக்கு டிரான்ஸ்பர் வந்திருக்காமே உனக்குத் தெரியுமா?" என்றாள் அவன் தங்கை கவுரி.

"எப்ப…?"

"தெரியலே… உடனே கெளம்பணும் போல இருக்கு. பதவி உயர்வும், டிரான்ஸ்பரும். அவசியம் போயே ஆவணுமாம்."

"எ…ந்த ஊருக்கு?"

"தூத்துக்குடின்னு நினைக்கிறேன். என்னடா உனக்கே தெரியாதா? ஒரேயடியா அண்ணி அண்ணின்னு உருகுவே! அவங்க வீடே பழியாக் கிடப்பியே!" என்றாள் கவுரி.

வாஸ்தவம்தான். பானு அறிமுகமான பிறகுதான் சரவணனுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பே எற்பட்டது. ‘தண்டச்சோறு’ என்ற நினைப்பில், வேலை கிடைக்காத அவலத்தில் மனம் குமுறிக் கொண்டு இருந்தவனை மனிதனாக உணர வைத்து, தளர்ந்து போகாமல் வார்த்தைகளால் தூக்கி நிறுத்தி, அலுக்காமல் வேலை தேட வைத்து, இதோ… இன்று ஒரு பெரிய பைனான்ஸ் 
கம்பெனியில் கணக்கு எழுதும் வேலைக்குச் சொந்தக்காரனாக்கி விட்டாள்.

நெகிழ்ந்துதான் போனான். பெற்றவர்கள் கூடத் தராத நெஞ்சுரம். சிநேகிதியாய்ப் பழகி, மருண்டு போன நேரங்களில் கலகலப்பாக்கி, குடும்பத்தில் ஒருவனாய் உணர வைத்து, செய்யும் சமையலில் கூட அவனுக்கும் ஒரு பங்கு என்று பகிர்ந்து ‘அண்ணி… அண்ணி’ என்று ஏங்கவே வைத்து விட்டாள்.

அப்படிப்பட்டவள் இதோ வெளியூர் போகிறாளா? அதுவும் சரவணன் வேலையில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளா? இனி எந்த வீட்டுக்குள் உரிமையாய்க் காலடி எடுத்து வைக்க முடியும்? எந்த முகம் இவன் தளர்ந்து போகும்போது தைரியம் தரும்?

"சரவணா…!" பானு அருகில் நின்று ஏறக்குறைய அலறியிருக்க வேண்டும்.

திடுக்கிட்டு விழித்தான்.

"நல்ல புள்ளை போ! இதோ பாரு… இவன் கூட சாப்பிட்டு முடிச்சுட்டான். சரி இந்தா டிபன்! உனக்குப் பிடிக்கும்னு வெஜிடபிள் உப்புமா செஞ்சேன். சாப்பிட்டுட்டு வா! கோவில் வரை போகணும்."

உப்புமாவின் சுவை மீறி மனசுக்குள் பிரிவின் கனம் இறங்கியது.

"ஏன் உம்முனு இருக்கே, உடம்பு சரியில்லையா?" கரிசனம் குரலில் இழைந்தது பானுவுக்கு.

"நீ…ங்…க… வெளியூர் போறீங்களா?" குரல் தழுதழுத்தது சரவணனுக்கு.

"ஓ… அதுதானா?… சர்த்தான் போ, அதுக்கா இப்படி இடிஞ்சு போயிட்டே?"

பானு பெரிதாகச் சிரித்தாள்.

"புரியாம பேசாதீங்க! நான் இனிமே…"

சரவணனுக்கு உள்ளூர எரிச்சல் வந்தது. என்ன மனுஷி இவள்? பிரியத்தைக் கேலி செய்து கொண்டு…

"சரி, வரியா வெளியே போகலாம்?"

குனிந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். பானு வீட்டைப் பூட்டிக் கொண்டு நடந்தாள். அதே வரிசையில் பழைய வீட்டை இடித்து அடுக்கு மாடிக் கட்டடம் கட்டிக் கொண்டிருந்தனர். தெருவில் செங்கற்கள் அடுக்கி… மணல் மேடு பெரிதாய் நின்றது. ஏகப்பட்ட தொழிலாளர்கள். சித்தாள்களும், வேலையாட்களுமாய்.

"ரோட்டுக்கு அந்தப் பக்கம் போயிரலாம். தூசி அடிக்குது" என்றான்.

"அதோ பார்த்தியா!" பானு சுட்டிக்காட்டிய திசையில், எழும்பிக் கொண்டிருந்த கட்டடம்.

"என்ன…?

"சாரத்தில் எத்தனை ஆளுங்க வெள்ளை அடிக்கிறாங்க பாரு!"

'அதில் என்ன ரசனை…' என்பது போலப் பார்த்தான்.

"இன்னும் ரெண்டு மாசத்துல பிளாட்ஸ் தயாரான உடனே சாரத்தை என்ன செய்வாங்க?" என்றாள் குழந்தை போல.

"எடுத்துருவாங்க… அப்புறம் அது எதுக்கு வேஸ்ட்டா?"

பானு சிரித்தாள்.

"அதே மாதிரிதான் நானும்! தளர்ந்து போன உனக்கு சாரமா என்னோட பழக்கம் உன்னைத் தூக்கி நிறுத்தி புது தெம்பு கொடுத்துப் புத்துணர்ச்சி ஊட்டியது. இப்ப உனக்கே தன்னம்பிக்கை வந்திருச்சு! உனக்கென ஒரு வேலை இருக்கு. கடமைகள் இருக்கு. தங்கை கல்யாணம் இருக்கு. இனிமே சாரம் எதுக்கு?"

வாழ்க்கையை ரொம்ப எளிமையாய் உணர்த்தி விட்டவளைப் புரிந்து கொண்ட பாவனையில் பார்த்துப் புன்னகைத்தான்.




21 comments:

Rekha raghavan said...

அபாரம்.

ரேகா ராகவன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான கதை.

அற்புதமான நடை.

சிலரால் மட்டுமே இதுபோல ஓர் புதுத்தெம்பையும் உற்சாகத்தையும் பிறருக்குத் தர இயலும்.

சோர்ந்து போனவருக்கு அதைவிட மிகப்பெரிய சொத்து ஏதும் இல்லை தான்.

சாரம் என்ற தலைப்பும் அருமை.

கட்டடங்கள் சாரத்தை எடுத்த பிறகும் நிற்கும்.

ஆனால் என்னைப்போன்ற சிலரால் இதுபோன்ற சிலரின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் மீண்டும் சோர்ந்துதான் போகும்.

அதுதான் சாரத்திற்கும், அன்பினைப்பொழிந்து வந்த மனிதர்களுக்கும் உள்ள வித்யாசம்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன்
வீ.....ஜீ
[VGK]

ஸ்ரீராம். said...

ஒரு கவிதை கதையாகியிருக்கிறது.

சீனு said...

அருமை சார் .... கடைசி வரியில் அத்தனை உண்மை இருக்கிறது .. அத்தனை தெளிவு இருக்கிறது

நிலாமகள் said...

நுட்பமான ஒரு நட்பை... உறவை விகல்பமில்லாமல் சொன்ன விதமும், சொல்லவந்ததை இலகுவாக உள்ளிறக்கும் திறமையும் ... எத்தனை எழுதினாலும் எனக்கெல்லாம் வர வாய்ப்பே இல்லை சார் ! டக் என மேஜிக் செய்து விடும் எழுத்தாற்றல்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிகவும் நெகிழ்ச்சியான கதை! ரிஷபனின் கை வண்ணத்தில் ஒளிர்ந்த கதைகளில்

இதுவும் ஒன்று !

ஜீவி said...

வீட்டிலிருக்கும் ஏழெட்டு மூங்கில் கழிகளை எடுத்து நிறுத்திக் கட்டி
உபயோகித்தாலும், அவை சாரமாகத் தெரியாது. ஏதோ வீட்டில் கிடக்கும் பொருட்களை அவசர அவசிய சந்தர்ப்பங்களுக்கு உபயோகித்த மாதிரி மனசில் தோன்றும்.

அதே மாதிரி தான்---

சித்தப்பா, பெரியப்பா, மாமா, மாமனார் என்று நெருங்கிய சொந்தச் சாரங்களும் இருக்கு. ஆனால் சாரங்களாக அவைத் தெரியாது. அந்தச் சாரங்களுக்கு தாங்குவதற்கு கடமையிருப்பது போல ஒரு உணர்வு.

அதுவே, அப்படியான கடமையில்லாத வெளியார் பக்கபலமாக இருந்து தாங்கி வழிகாட்டும் பொழுது--

வெளியிலிருந்து வண்டியில் வந்து இறங்கிய மூங்கில் சாரங்கள் தாம்!

கடமைகள் இருந்தாலும், தங்கை கல்யாணத்தை நடத்தி வைத்தாலும்
சரவணன் சாரமாகத் தெரியமாட்டான் இது தான் சொந்த சாரத்திற்கும் அயல் சாரத்திற்கும் இருக்கும் வினோத வேறுபாடுகள்.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்க்கையை ரொம்ப எளிமையாய் உணர்த்தி
வாழ்வின் சாரத்தை வர்ஷித்த அருமையான சாரமான கதைக்குப் பாராட்டுக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

Dear Sir,

இந்தத்தங்களின் கதை நான் எவ்வளவு முறைப்படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் போது ஒருவித புதிய ’சாரம்’ அதில் இருப்பதை உணர முடிகிறது.

கட்டடங்கள் சாரத்துடன் இருக்கும் போது அவை அழகற்று குடியிருக்க லாயக்கு இல்லாமல் இருக்கின்றன.

ஆனால் சாரம் போன்ற இது போன்ற உறவுகளும், நட்புள்ளங்களும் நமக்குத் தரும் SUPPORT இருக்கிறதே, அவைகளின் மதிப்பினை வார்த்தைகளில் சொல்லி முடித்து விட முடியாது.

அதில் நமக்கு எவ்வளவு ஒரு புதிய உற்சாகமும், பேரெழுச்சியும் கிடைக்கின்றன ! ;)))))

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் அலுவலகத்திலேயே கூட, நம்முடன் நம் இலாகாவில், நம் பிரிவினில் பணியாற்றி வந்த ஒருவர், நமக்கு பலவிதங்களில் சாரமாக இருந்திருக்கக்கூடும்,

திடீரென்று ஒருநாள் அவருக்கு பணிமாற்றம் வரும்.

நம் இலாகாவிலேயே வேறு பிரிவுக்கு மாறக்கூடும்.

அல்லது வேறு இலாகாவுக்கோ, வேறு கட்டடத்திற்கோ அல்லது வேறு வெளியூருக்கோ கூட மாற்றலில் செல்ல நேரிடும். அல்லது சிலர் பணி ஓய்வு பெற்றுச்செல்லவும் கூடும்.

நம் மனம் இவையெல்லாம் தாங்கமுடியாமல் கஷ்டப்படும் என்பதும் உண்மையே.

என்னுடன் நெருங்கிப் பழகிய ஒருசிலர் விஷயங்களில் நான் இதுபோன்ற சம்பவங்களால் மனதுக்குள் மிகவும் அழுதுள்ளேன்.

>>>>>>>>>>

ezhil said...

அருமையான நட்புறவுக் கதை . ஜீவி அவர்களின் விளக்கமும் அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றாவது அலைபேசி, மின்னஞ்சல், சுட்டிகள் மூலம் உலகில் உள்ள யாரையும் எந்த நேரத்திலும், மிகச்சுலபமாக தொடர்பு கொண்டு
பேசி மகிழ்ந்திட முடிகிறது.

இந்த வசதிகள் இல்லாத அந்த நாட்களில், மனதுக்குள் நினைத்து நினைத்து மருகியது தான் மிச்சம்.

இந்தத்தங்களின் படைப்பு என்னையும் என் நினைவலைகளையும் எங்கெங்கோ கொண்டு சென்றது.

மறக்க மனம் கூடுதில்லையே.

http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html


காரசாரமில்லாத சமையல் ஒரு சமையல் அல்ல.

அதுபோல நம் நலம் விரும்பியான நட்புடன் கூடிய சாரங்கள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையே அல்ல.

நல்லவேளையாக இந்த வலையுலக்கில் தங்களைப்போல அன்புள்ள சாரங்கள் நிறையவே எனக்கு இன்றும் உள்ளனர்.

அதனால் அடியேனாகிய கட்டடம் இன்னும் தாங்கப்பட்டு கீழே விழாமல்
பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சாரங்கள் அனைவருகும்
என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
வீ.....ஜீ
[VGK]

vasan said...

கட்ட‌ட‌ம் முழுமையான‌தும் க‌ட்டிய‌ சார‌ங்க‌ள்,
அடுத்த‌ கட்டிட‌ம் க‌ட்டும் இட‌த்திற்குப் போகும்
புது க‌ட்டிட‌த்தின் வாச‌லில் கட்ட வாழை ம‌ர‌ங்க‌ள்
வ‌ண்டியில் வந்திர‌ங்கும். அதுவே "வாழ்வின் சார‌ம்"
ச‌ரிதானா ரிஷ‌ப‌ன்ஜி?

G.M Balasubramaniam said...


வாழ்வில் எத்தனையோ சாரங்கள். ஏற உதவும் ஏணிகள்.நன்றியோடு நினைவு கொள்ளல் அவசியம்.

Ranjani Narayanan said...

உங்கள் பாணியில் மிகவும் நெஞ்சைத் தொட்ட கதை.
பாராட்டுக்கள் ரிஷபன் ஸார்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Remember reading this before. Nice story. Thanks for sharing with us

ஷைலஜா said...

தலைப்பைப்புகழ்வதா கதை நடையைப்பாராட்டுவதா கதைக்கருத்தைப்போற்றுவதா?
அனைத்தையும் அழகாய் எழுத ரிஷப்னால் மட்டுமே முடியும்!

RAMA RAVI (RAMVI) said...

கதை எளிமையா தெரிந்தாலும் கருத்தின் ஆழம் மிகச்சிறப்பு. நெகிழ வைக்கிறது.

உஷா அன்பரசு said...

சாரம்- மனதை கவர்ந்தது.

கே. பி. ஜனா... said...

சாரமுள்ள கதை!

கே. பி. ஜனா... said...

சாரமுள்ள கதை!