June 23, 2013

காணாமல் போனவன் - 4

எழுத்தாளர் 'சிகரன்', ரமேஷின் வீட்டிற்குள் நுழைந்தபோது புயலடித்து ஓய்ந்த அமைதி.

மஞ்சரியின் முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை. ராகவியும் பாபுவும் கூட 'அங்கிள்' என்று பிரியமாக ஓடிவருபவர்கள், இன்று அமைதியாய்.

"என்னம்மா ஆச்சு? உடனே கிளம்பி வாங்கண்ணான்னு சொன்னதும் எனக்கு எதுவும் புரியல."

"உங்க நண்பர் அடிச்ச கூத்தை நீங்களே கேளுங்க!"
மஞ்சரியின் முகத்தில் கோப அலை.

"என்னடா பண்ணித் தொலைச்ச?"
சிகரன் கேட்டதும் ரமேஷின் முகம் இறுக்கமாய்.

"சொல்லித் தொலைடா!"
நட்பின் உரிமையில் சிகரன் அதட்டலாய்க் கேட்டான்.

"எப்படி சொல்லுவார்... மனசாட்சியே இல்லாம ஒரு காரியத்தைப் பண்ணிட்டு?"
மஞ்சரி குமுறினாள்.

"ஒண்ணு நீயாச்சும் சொல்லும்மா... இல்ல, அவனை சொல்ல விடு!"
சிகரனுக்கு என்ன நடந்ததென்று புரியாத குழப்பம்.

மஞ்சரியே சொல்லிவிட்டாள். அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவள் சொல்லிக் கொண்டே போக, கேட்டுக் கொண்டிருந்த சிகரனுக்கும் அவள் கோபம் நியாயமாய்த்தான் பட்டது.

"என்னடா?... ஏண்டா இப்படிப் பண்ண?"
ரமேஷ் அருகில் அமர்ந்து நிதானமாய்த்தான் கேட்டான்.

"நான் செஞ்ச முறை வேணா அதிரடியா இருக்கலாம். ஆனா, நான் செஞ்சது ஒரு காரணத்தோட..."

ரமேஷ் முதல் முறையாய்ப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

"என்ன காரணமாம் அண்ணா... இப்படி நடுக்காட்டுல தவிக்க விட்டுப் போனதுக்கு?"

"அதுக்கு முன்னால நான் சொல்றதக் கொஞ்சம் கேளு! போன வாரம் எங்க ஆபீஸுக்கு ரெண்டு பேர் வந்தாங்க. அவங்க கூடவே எங்க அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜரும் செக்யுரிட்டியும்."

அவன் என்ன சொல்ல வருகிறான்?... புரியாமல் பார்த்தார்கள்.

"வந்தவங்க ரெண்டு பெரும் வேற யாரும் இல்ல... எங்க ஆபீசுல வேலை பார்த்து... போன மாசம் ஹார்ட் அட்டாக்ல காலமாயிட்ட சங்கர்ராமனோட மனைவியும் மகனும்தான்."

"அதுக்கு?..."

"நான் சொல்ல வரதை முழுசாக் கேளுங்க! அவன் மனைவிக்கு அவனைப் பத்தி எதுவுமே தெரியல. அவனோட சேமிப்பு... சம்பளம்... வங்கிக் கணக்கு... டிபாசிட்ஸ்... இப்படி எதுவுமே தெரியல. எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம்! ரெண்டு பேர் அப்போ, சங்கர்ராமன் அவங்ககிட்ட கடன் வாங்கினதா சொல்லவும்... அதுவும் பெரிய தொகை... அவன் மனைவி அழ ஆரம்பிச்சுட்டாங்க. அவனுக்கு பைனல் செட்டில்மெண்ட் வர பணமே இந்த மாதிரி கடன் செட்டில் பண்ண சரியாப் போயிடுமோன்னு."

ராகவியும் பாபுவும் கூட வந்து அமர்ந்து விட்டார்கள்.

"எங்க ஆபீஸ்ல அப்புறம் நாங்க பேசும்போது, எங்க வீட்டுலயும் எங்களைப் பத்தி எவ்வளவு தூரம் தெரியும்னு சந்தேகம். மஞ்சரிகிட்ட இதைப் பத்தி நான் பேச ஆரம்பிச்சப்ப அவ சரியா காதுல வாங்கல. வாயை மூடிட்டுப் போங்க... நீங்க எல்லாம் பார்த்துக்குவீங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டா. எனக்கு அப்பதான் இந்த ஐடியா வந்திச்சு. திடீர்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தா என்ன பண்றான்னு பார்க்கலாம்னு..."

"என்னடா இது?..."

"இப்பவும் சொல்றேன்... நான் செஞ்சது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா, எனக்கு வேற வழி தெரியல. மஞ்சரி கொஞ்சமாச்சும் அவளைச் சுத்தி போட்டிருக்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து... இந்த விவரமும் தெரிஞ்சுக்கணும்னு எனக்கு ஆசை. காரை விட்டு இறங்கி காணாம போன மாதிரி நடிச்சேனே தவிர, பின்னாலேயே இன்னொரு கார்ல வந்தேன். கோவிலுக்கும் போனேன். மாமா வீட்டுக்கும் போய் சமாளிச்சு, ஒரு கதை சொல்லி அவங்களையும் கன்வின்ஸ் பண்ணிட்டேன். பின்னாலேயே வந்து அதே இடத்துல ஜாயின் பண்ணிட்டேன்."

சிகரன் அவனையே வெறித்தான். என்ன வேடிக்கை இது!...

"மஞ்சரி! இப்போ சொல்லு... இந்த மாதிரி திடீர்னு எதுவும் நடந்தா அப்போ உனக்கு என்ன செய்யணும்னு ஒரு தெளிவு வந்திருக்கா? இல்லே, அழுகைதான் உன்னால முடியுமா?"

மஞ்சரி திணறினாள்.

"எப்படியும், அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டா யாரா இருந்தாலும் சமாளிச்சு வந்திருவாங்கன்னு நீங்க சொல்லலாம். அதுக்குள்ள அவங்க எவ்வளவு நஷ்டப்படுவாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா? வீடு... சமையல்... டி.வி-ன்னு ஒரு குறுகிய வட்டத்துல இல்லாம கொஞ்சம் இப்படியும் கவனம் திருப்பினா, இடிஞ்சு போகாம எழுந்து நிற்கிற தைரியம் வரும்னு எனக்குத் தோணிச்சு. நான் செஞ்சது தப்புன்னா ஸாரி! என் நோக்கம் நாம எப்பவும் நல்லா இருக்கணும்! வாழ்க்கைங்கிறது என்னோட... இல்லாட்டி உன்னோட முடியப் போகறதில்ல. நம்ம குழந்தைகளும் நல்லா இருக்கணும்!"

சிகரன் ரமேஷையே பார்த்தான்.

"நீ செஞ்சது சரியா தப்பான்னு நான் தீர்ப்பு சொல்லப் போறதில்ல. மஞ்சரிக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்ட. அதை உன் பாணில சொல்லிட்ட. கதை எழுதற எனக்கு இது ஒரு சுவாரசியமான தீம். மஞ்சரிக்கு சமாதானம் சொல்ல வேண்டியது நீதான். ஒரு சின்ன அட்வைஸ்... இந்த மாதிரி அடுத்த தடவை மடத்தனம் பண்ணாத! பாவம் மஞ்சரி, புள்ளைங்க!"

சிகரன் எழுந்து நின்று கை குலுக்கி விடைபெற்றுப் போனான். தற்செயலாய்த் திரும்பிப் பார்த்தபோது மஞ்சரியை ரமேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது!

(முடிந்தது)

22 comments:

ஹுஸைனம்மா said...

காரணம் சரிதான். ஆனாலும், கோவம் வரத்தான் செய்யுது. :-)

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா...! இதுக்குத்தான் தலைமறைவா...? இனி மஞ்சரி அவர்கள் எல்லா கணக்குகளையும் கற்று விடுவார்கள் என்று நினைக்கிறேன்...!

சுவாரஸ்யமான கதையின் முக்கியத்துவம் அருமை...

வாழ்த்துக்கள்... நன்றி...

நிலாமகள் said...

"எப்படியும், அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டா யாரா இருந்தாலும் சமாளிச்சு வந்திருவாங்கன்னு நீங்க சொல்லலாம். அதுக்குள்ள அவங்க எவ்வளவு நஷ்டப்படுவாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா? // உண்மைதான்.

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது. ஆனால் வீட்டுக்குள் பாதுகாப்பாக சொகுசாக இருக்கும் பெண்களுக்கு 'எனக்கப்புறம்...' என்று கணவர்கள் ஆரம்பித்தாலே பகீர் என்றாகிறது. நல்ல அதிர்ச்சி வைத்தியம் தான்.

நாம எங்க போனாலும் நமக்குள் இருக்கும் எழுத்துக்காரர் விழிப்பாகவே...:)

நிலாமகள் said...

வாழ்க்கைங்கிறது என்னோட... இல்லாட்டி உன்னோட முடியப் போகறதில்ல. நம்ம குழந்தைகளும் நல்லா இருக்கணும்!//

இதுதான் நிதர்சனம். நல்ல விறுவிறுப்புடன் நல்ல படிப்பினையுடன் ...

என்னமோ போங்க சார்... பொறுப்புகளுக்கு பயந்ததும் அந்தக் கால உடன்கட்டைக்கு காரணமோ...

sury siva said...


இந்தாம்மா... மஞ்சரி... இந்தாள நம்பிடாதே !! சொல்றது நம்பும்படியா இல்ல.
எதுக்கும் அண்ணன், தம்பி யாருனாச்சும் இருந்தா ஒரு கண் இந்தாள் மேல வச்சுக்க சொல்லு.

நீயும் கொஞ்சம் தலைப்புலே முடிஞ்சு வச்சுக்கோ..

தினப்படி எங்க போறாரு அப்படின்னு கவனிச்சு வச்சுக்கோ..

ஆனானப்பட்ட முருகனே தெய்வானையை விட்டுட்டு வள்ளி பக்கம் சாஞ்சுட்டாரு.
கண்ணன் ஆகப்பட்டவர், சத்யபாமாவை விட்டுட்டு ருக்மணியைத் துறத்திப் பிடிச்சுண்டு போயிட்டாரு.
இல்லை வைஸி வர்ஸாவோ ..

ஆத்துக்காரர் ராமர் தான். இருந்தாலும் பர்ஸ் மேலே கவனமா இரு.

அதான். சொல்லிப்புட்டேன்.

சுப்பு தாத்தா.

ரிஷபன் said...

//இது உண்மையில் என் வாழ்வில் நடந்தது. என் கணவரை திடீரென்று பிரிந்து இந்த கதையில் போலவே நான் எதுவும் தெரியாமல் மிகவும் துன்பப்பட்டேன். கதை மூலம் சிறந்த அறிவுரை.//

நிஸா

ராமலக்ஷ்மி said...

/ இந்த மாதிரி அடுத்த தடவை மடத்தனம் பண்ணாத! பாவம் மஞ்சரி, புள்ளைங்க!"/

அதானே.சரியாச் சொன்னார் சிகரன். அதிர்ச்சி வைத்தியத்துக்கு உடனடி பலன் இருக்குமாயினும் பேசிப் புரிய வைத்திருக்கலாம். முடிவு சுபம்!

aavee said...

அருமையான முடிவு.

வெங்கட் நாகராஜ் said...

நாலு பகுதிகளையும் மொத்தமாகப் படித்தேன்.

அதிர்ச்சி வைத்தியம் தந்து விட்டார்.... பல வீடுகளில் இப்படித்தான் எல்லாம் கணவருக்குத் தெரியும் என கண்டுகொண்டாது விட்டு விடுகிறார்கள்.

middleclassmadhavi said...

EzhuththaaLar sigaram!

சாந்தி மாரியப்பன் said...

பொருத்தமான காரணம்தான், ஆனாலும் ஒத்துக்க முடியலை. அதிர்ச்சியில் ஏதாவது விபரீதமா நடந்திருந்தா அதைச் சரி செய்ய முடியுமா?..

பெண்களும் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

அனைவருக்கும் அன்பு  said...

சுப்பு தாத்தா கருத்தை வழிமொழிகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"நீ செஞ்சது சரியா தப்பான்னு நான் தீர்ப்பு சொல்லப் போறதில்ல. மஞ்சரிக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்ட. அதை உன் பாணில சொல்லிட்ட. கதை எழுதற எனக்கு இது ஒரு சுவாரசியமான தீம்.//

தங்கள் பாணியில் சொல்லியுள்ள அருமையான தீம் தான். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

ராஜி said...

வாழ்க்கைங்கிறது என்னோட... இல்லாட்டி உன்னோட முடியப் போகறதில்ல. நம்ம குழந்தைகளும் நல்லா இருக்கணும்!
>>
இந்த ஒரு புள்ளியில்தான் எல்லா குடும்ப சக்கரமும் சுழலுது..,

G.M Balasubramaniam said...


அதிரடியான அதிர்ச்சி வைத்தியம்...வேறு வழி தெரியலையா. ?

sury siva said...

//இந்த ஒரு புள்ளியில்தான் எல்லா குடும்ப சக்கரமும் சுழலுது..,//

esso es.

subbu thatha.
www.subbuthatha72.blogspot.in
www.subbuthatha.blogspot.com

Ranjani Narayanan said...

நான்கு பகுதியையும் ஒன்றாகப் படித்துவிட்டேன்!
பல பெண்களுக்கு கணவனைப் பற்றி, சேமிப்பு பற்றி, முக்கியமாக கடன்கள் பற்றி தெரிவதில்லை. கணவர்களும் சொல்வதில். மனைவிகளுக்கு எல்லாம் அவர் பார்த்துப் பார்ப்பார் என்ற அசாத்திய நம்பிக்கை கணவன்மார்களுக்கு இதெல்லாம் தெரிந்தால் அவள் கவலைப் படப்போகிறாள் என்று.

இருவருக்கும் இடையே இதையெல்லாம் பற்றிய ஒளிவு மறைவு இல்லாத பேச்சு மிகவும் முக்கியம்.

இந்தக் கதை வாழ்க்கையின் நிதர்சனத்தை சொல்லுகிறது.

இராஜராஜேஸ்வரி said...

அதிர்ச்சி வைத்தியம்
சுவாரஸ்யமான தீம் ..!

ஹ ர ணி said...

அன்புள்ள ரிஷபன்.

காணாமல் போனவன். நான்கு பகுதிகளையும் படித்துவிட்டேன். காலத்திற்குத் தேவையான கதை. பல பெண்களுக்கு விழிப்பு வரவேண்டிய கதை. உண்மைதான். இது கொஞ்சம் நினைத்துப்பார்க்கக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை அதைவிட்க் கொடுமையானது. எனவேதான் இப்படியொரு எச்சரிக்கை நமக்குள் எப்போதும் இயங்கிகொண்டேயிருக்கவேண்டும். அப்போதுதான் வாழ்கிற நிமிடங்களைப் பணம் செலவழிப்பதுபோல நிதானமாகச் செலவிட்டு பொருளுடன் வாழ்வோம்.

ஜீவி said...

இசை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

Dear Sir,

//ரிஷபன் என்னும் பெயருடைய சகோதரரர் மிக அழகாகக் கவிதை வடிப்பார். அவரது தளம் சலங்கையின்றி ஆடுகின்றது இப்போது. இதுபோல் ஒரு சிலரின் தளம் வாசிக்க முடியாமல் உள்ளது. இதனைச் சரி செய்து கொள்ளுங்கள்//

வலைச்சர ஆசிரியர் Ms.அம்பாளடியாள் அவர்கள், எழுதியுள்ளது.

http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html

தங்கள் தகவலுக்காக.

-=-=-=-=-=-=-=-

பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

vgk

Ranjani Narayanan said...

வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!