June 07, 2013

ரசவாதம்

தன்யா அப்படிச் சொல்வாள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

"ஆர் யூ ஃப்ரி நௌ..." என்றாள் இண்டர்காமில்.
"ம்..."
"ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்....அங்கே வரேன்...."
நேரே என் சீட்டுக்கு வந்தாள். புன்முறுவலித்தாள்.
"வீட்டுக்கு வந்திருந்தேன். சாரு சொன்னாளா..."
தலையசைத்தேன். எதிரில் அமர்ந்தாள்.
"படிப்பு எல்லாம் எப்படி இருக்கு."
"ப்ச்.."
"ஏதோ பெயிண்டிங் பண்றேன்....முடிஞ்சப்புறம் காண்பிக்கறேன்னீங்களே, முடிஞ்சுடுச்சா..."
"ஊஹூம்...."
என் குரலில் அலுப்பு. பதில்களில் வெறுமை. முக இறுக்கம். எதுவோ அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
"சங்கர்....உங்ககிட்டே மனசு விட்டுப் பேசணும்னு வந்திருக்கேன். என்னோட பர்சனல் விஷயம்" என்றாள் கண்களில் கெஞ்சலுடன்.
கொஞ்சம் நிமிர்ந்தேன்.
"என்னது" என்றேன்.
"வந்து....எப்படி சொல்றது...ஓக்கே...நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்....அதனாலதான் தைரியமா பேசறேன்.....எனக்கு....எனக்கு...."
ஆர்வமாய் அவளைக் கவனித்தேன்.
போகிற இடமெல்லாம் புத்துணர்ச்சி பரப்பும் உற்சாகப் பந்து அவள். எப்போதும் புன்சிரிப்பும், 'ஏதாவது உதவி தேவையா' என்ற உதவிக் கரமும் அவளை நேசத்துக்கு உரியவளாகச் செய்திருந்தன. மற்றவர்களின் ஆர்வம் உணர்ந்து பேசுகிற தன்மை அவளுக்கே உரியது.
அவளுக்குள்ளும் ரகசியமா....அதுவும் என்னிடம் பகிரும் விதமாய்...என்னவாக இருக்கும்?
"சங்கர்...இதை நான் சொல்லலேன்னா ஏதோ என்னைக் கண்டே பயப்படறேன்னு தோணிரும்...ஐயாம் நாட் எ ஹிபோகிரைட்..
யெஸ்....உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...ஐ அட்மிட் இட்..." என்றாள் பட்டென்று.
பார்வை விலகாமல் ....கண் சிமிட்டாமல் என்னைப் பார்த்தாள். முகத்தின் குழந்தைத்தனம் மாறவில்லை.
எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இயக்கங்கள் அற்றவன் போல அமர்ந்திருந்தேன்.
"ஆனா.....இப்ப கொஞ்ச நாளா....உங்களை பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு...சங்கர்.....என் மனசுல துடிப்புள்ள ஒரு உருவம்தான் சங்கரா நிக்கிது...என் கண்ணெதிரில் இருக்கிற நிஜ மனுஷன்....எதோ பிரமை பிடிச்சாப்பல...மனசுக்குள்ளே பேசி....எங்கேயோ வெறிச்சு...நோ....திஸ் ஈஸ் நாட் மை சங்கர்...ஹி இஸ் ஸம்திங் எக்ஸலெண்ட்...."
பேசிக்கொண்டே போனாள்.
என்னுள் ஏதோ உடைந்தது. என்னவென்று சொல்வேன். எனக்குள் உதயமாகும் புதுப்புது துடிப்புகள் எல்லாம் உணர்வாரும், தூண்டுவாரும் இன்றி ஜீவனற்றுப் போகிற அவலம். எனக்கும் என்னை ரசிக்கிற மனிதர்கள் தேவை என்பதை எப்படிச் சொல்வேன்?
அழலாம் போலிருந்தது. என் மனசு பார்வையில் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை கைகளில் உருட்டியபடி வேடிக்கை பார்த்தேன்.
"என்னால நம்பவே முடியலே சங்கர்...எவ்வளவு ஆக்டிவா இருக்கிறவரு நீங்க...இது ஏதோ டெம்பரரி ஸெட் பேக்...ஜஸ்ட் ஏதோ ஒரு மயக்கம்...நிச்சயமா உங்களால இதிலேர்ந்து விடுபட முடியும். என்னால அந்த பெயிண்டிங்கை மறக்கவே முடியாது சங்கர்...அந்த குட்டிப் பையன் வீட்டு வாசல்ல அவன் அம்மாவுக்காக காத்திருக்கிறது...நீங்க எனக்கு வொரி ஃபர்ஸ்ட் காண்பிச்ச ஓவியம்... ஞாபகமிருக்கா..." என்றாள் முகமெல்லாம் பரவசமாய்.
எனக்கும் அது தொற்றிக் கொள்ள பழைய நினைவுகளில் இனிமையாய் அமிழ்ந்தேன்.
"அந்த சங்கரை மறுபடி நான் பார்க்கணும்...எனக்கு ஆசையா இருக்கு!" என்றாள்.
எனக்குள் என்னென்னவோ எண்ணங்கள்.
'இல்லை....என்னால் முடியாது' என்கிற பதில் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழந்தது.
எதிரில் முழுமையாய் .....என்னை மனப்பூர்வமாய் நேசிக்கிற ஒரு ஜீவன் அமர்ந்து....என் ரசனைகளைப் பகிர்ந்து...தூண்டி விட்டு...
'ஏதாவது செய்யணும்' என்கிற வேகம்தான் வந்தது.
மெலிதாகச் சிரித்தேன்...கண்களில் பழைய தன்னம்பிக்கை சுடர்விட.
அவளுக்கும் அது புரிந்தது.
"சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்...இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்...நாளைக்கு எங்கேயோ...ஆனா....எங்கே போனாலும்...எப்படி இருந்தாலும்...என்னால உங்களை மறக்கவே முடியாது...."
"தேங்க்ஸ்" என்றேன் முனகலாக.
"சாருவை மறுபடி பார்க்கணும்" என்றாள்.
"இந்த ஸண்டே வாயேன்....வேற கமிட்மெண்ட்ஸ் இல்லேன்னா...."
"ம்...ம்..." யோசித்தாள்.
"உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் இருக்கும். என்னோட பெயிண்டிங்" என்றேன் குதூகலமாய்.
"ஹை.....அப்படின்னா வரேன்."
எழுந்து நின்றாள்.
"இந்த நிமிஷ சங்கர்தான் நிஜம்....இவரைத்தான் நான் அடிக்கடி பார்க்கணும்....சரியா..."
போய் விட்டாள்.
வீடு திரும்பும்போது கூட ஊதுபத்தி தொட்ட கைவிரலாய்...மனசுக்குள் மணம்.
சாரு என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.
"என்ன...ஆபிஸ் விட்டுருச்சா...உங்களை.." என்றாள்.
"நான் விட்டுட்டேன்..." என்றேன்.
பிஸ்கட், டீ வந்தது. திடீரென்று நினைத்துக் கொண்டவளாய்ச் சொன்னாள்.
"நேத்திக்கு தன்யா வந்திருந்தா..."
"அப்படியா?"
"நான் இதுல சேரட்டுமா... எனக்கும் மாறுதலா இருக்கும்" என்றாள் ஏதோ ஒரு ஃபார்மை நீட்டி.
வாங்கிப் பார்த்தேன். லயன்ஸ் கிளப்.
"சேரேன்..."
சிரித்தாள்.
"இதுல பார்த்தீங்களா...ஒரு கேள்வி..."
'இஸ் யுவர் ஹஸ்பெண்ட் எ லயன்?' என்ற வரியைக் காட்டினாள்.
"என்ன எழுதட்டும்...'யெஸ்'னா....எப்ப பார் கர்....புர்...னு இருக்கீங்களே" என்றாள் விளையாட்டாய்.
எனக்கும் சிரிப்பு வந்தது.
மனசுக்குள் காலையிலிருந்து திமிறிக் கொண்டிருந்த உற்சாகம்....என்னை மாடிக்கு விரட்டிக் கொண்டிருந்தது.
என்னுடைய பெயிண்ட்டிங் ரூம்.
படியேறினேன். பின் தொடர்ந்தாள். இவள் எதற்கு வருகிறாள். புது வழக்கமாய்....
மாடி அறையில் இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.
அரைகுறையாக முடித்திருந்த பெயிண்டிங் ஸ்டாண்டில் பொருந்தப்பட்டு...தயார் நிலையில் .....பிரஷ்....கலர்கள்...
"உங்களுக்காகத்தான்..." என்றாள் திரும்பிப் பார்த்ததும்.
புரிந்தது. இவளிடம் தன்யா பேசியிருக்கிறாள்.
"என்ன பெண் அவள்....நினைக்க நினைக்க மனசுக்குள் நெகிழ்ந்து போனேன்.
'ஐயோ பாவம்....உங்களைப் புரிஞ்சுக்காத மனைவி' என்கிற ரிதியில் பேசியிருந்தால் என் தன்னிரக்கம் அதிகமாகியிருக்கும்.
'அவளும் மனுஷிதானே....நீங்க அவளைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்களா' என்று கேட்டிருந்தால் பதிலுக்கு வாதம் பண்ணியிருப்பேன், சீண்டப்பட்டவனாய்...
ஊஹூம்....எதுவுமில்லை.
என்னை மட்டும் தனியாளாய் அளவிட்டு...எனக்கும் உணர்த்தி...'இதுதான் நீ...இப்படி இரேன்' என்கிற பாவனையில் பேசி...ரசவாதம் நிகழ்த்தி விட்டாள்.
நிச்சயம் இதே போலத்தான் சாருவிடமும் பேசியிருப்பாள்.
மனிதரை அளவிடுகிற திறமை எல்லோருக்கும் வந்து விடாது. அப்படியிருந்தாலும் பாசிட்டிவாய் தூண்டுகிற நேசமும் இணைந்து விடாது. இரண்டும் சேர்ந்தவளாய் தன்யா....

என் கை பிரஷ்ஷில் வண்ணங்கள் புது ராகம் இசைக்க ஆரம்பித்தன.


(ராஜம் மாதர் மலரில் பிரசுரம்)  

16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மனிதரை அளவிடுகிற திறமை எல்லோருக்கும் வந்து விடாது. அப்படியிருந்தாலும் பாசிட்டிவாய் தூண்டுகிற நேசமும் இணைந்து விடாது. இரண்டும் சேர்ந்தவளாய் தன்யா....//

தன்யா கதாபாத்திரம் மிகவும் அருமை.

என் வாழ்க்கையிலும் இதுபோன்ற ஒரு சில தன்யாக்களை அவ்வப்போது சந்தித்துள்ளேன்.

“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ!” ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ரஸித்த இடங்கள்:

//எதிரில் முழுமையாய் ..... என்னை மனப்பூர்வமாய் நேசிக்கிற ஒரு ஜீவன் அமர்ந்து.... என் ரசனைகளைப் பகிர்ந்து...தூண்டி விட்டு... 'ஏதாவது செய்யணும்' என்கிற வேகம்தான் வந்தது.
மெலிதாகச் சிரித்தேன்...கண்களில் பழைய தன்னம்பிக்கை சுடர்விட.
அவளுக்கும் அது புரிந்தது.//

//"சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்... இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்... நாளைக்கு எங்கேயோ... ஆனா.... எங்கே போனாலும்... எப்படி இருந்தாலும்... என்னால உங்களை மறக்கவே முடியாது...."//

//வீடு திரும்பும்போது கூட ஊதுபத்தி தொட்ட கைவிரலாய்...மனசுக்குள் மணம்.//

கையைக்கொடுங்கோ, கண்ணில் ஒத்துக்கொள்ளணும். ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் கை பிரஷ்ஷில் வண்ணங்கள் புது ராகம் இசைக்க ஆரம்பித்தன.//

எனக்கும் இப்போ பிரஷ்ஷைக்கையில் எடுக்க வேண்டும்போல ஓர் எழுச்சியை ஏற்படுத்திவிட்டன இந்த வரிகள். மகிழ்ச்சியாக உள்ளது.


//(ராஜம் மாதர் மலரில் பிரசுரம்) //

மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பாஅன் இனிய நல்வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

Ranjani Narayanan said...

இதைபோல ரசவாதம் செய்ய சிலரால் மட்டுமே முடியும்.
தன்யா மனதில் நிறைந்து விட்டாள்.
ராஜம் மாத இதழில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...


ஒவ்வொருவரும் அவராகவே இயங்க சில நேரங்களில் தூண்டுகோல் தேவைப்படுகிறது. இன்னும் நன்றாய் இயங்க தன்யா போல் catalyst -கள் புரிதலுக்குத் துணை போகிறார்கள். வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை கவர்ந்த தன்யா...

VGK ஐயாவின் ரசனை மீதம்...

நன்றி... வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கதாபாத்திரங்கள்..... ஒவ்வொருவரும் இப்படி உணர்ந்து நடந்து கொண்டால்.... நிச்சயம் வாழ்க்கை இனிக்கும்....

middleclassmadhavi said...

DhanyaakkaL vaazhga!
Very nice and touching story.

இராஜராஜேஸ்வரி said...

ரசவாதம் நிகழ்த்தி -பாசிட்டிவ்வாய் தூண்டுகிற நேசமும் இணைந்து மணம் கமழும் மனம் நிறைந்த அருமையான கதை..பாராட்டுக்கள்..!

ராமலக்ஷ்மி said...

அருமையான கதை.

சிவகுமாரன் said...

தன்யா மட்டுமல்ல தங்கள் பேனாவும் தான் . ரசவாதம் செய்கிறது.
அருமை.

நிலாமகள் said...

மனிதரை அளவிடுகிற திறமை எல்லோருக்கும் வந்து விடாது.

உங்க தன்மையான குரலில் கேட்பது போலவே ஒரு பிரமை... படிக்கும் போது. ஆர்பாட்டம், அலங்காரமற்ற மென்மை ...!!

பத்மா said...

ஏங்கப்பா !இப்படி ஒரு தோழி போதுமே

செம positive கதை சார் .
லைக்க்க் இட்.

அப்பாதுரை said...

தன்யாவின் motivation என்னவென்று யோசிக்க வைத்தாலும், தன்யாக்கள் தேவையென்று புரியவைத்த கதை. மாம்பழ நடை.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://veeduthirumbal.blogspot.com/2013/06/blog-post_18.html

Unknown said...

வீடு திரும்பும்போது கூட ஊதுபத்தி தொட்ட கைவிரலாய்...மனசுக்குள் மணம்.//

ஆகா!என்ன உவமை!பதிவு முழுவதுமே ரசவாதம் செய்கிறது அன்பரே!