August 25, 2013

ஜ்வல்யா

ஊசி போட
எதிரே டாக்டர்..
‘அழமாட்டா தானப்பா
ஜ்வல்யா’
அவளாகவே சொல்லிக் கொள்கிறாள்..
‘ஊசி வேண்டாமே’
அழுகிறேன் நான் !



நட்சத்திரங்களை
எண்ணும்போது
என் விரலகளையும்
சேர்த்துக் கொள்கிறாள்
ஜ்வல்யா..
‘கையை நீட்டுப்பா’ என்று !



என்னைத் தூங்க
வைத்ததும்
அம்மாவிடம்
போய் விடுகிறாள்
ஜ்வல்யா..
ஒவ்வொரு இரவும் !



’இரு..
அப்பாகிட்ட
பேசிட்டு வரேன்’
என்கிறாள்
சினேகிதியிடம்
ஜ்வல்யா..
இரு பெரிய மனுஷிகளின்
தனிமையில்
குறுக்கிட்ட எனக்குத்தான்
நெருடல் !



தவறவிட்ட
கூட்டத்தில்..
கைப்பற்றிய
குழந்தை
’நான் ஜ்வல்யா இல்லை’
என்கிறது..
சிரிப்புடன்!








ஜ்வல்யாவைத்
தேடிக் கொண்டே
இருக்கிறது
மனசு..
எதிர்ப்படும் எந்தக் 
குழந்தையைக் கண்டாலும் !




11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கள் மனதும் தேடிக் கொண்டே
இருக்கிறது....

இராஜராஜேஸ்வரி said...

ஜ்வல்யாவைத்
தேடிக் கொண்டே
இருக்கிறது
மனசு..
எதிர்ப்படும் எந்தக்
குழந்தையைக் கண்டாலும் !

குழந்தையாய்
குதூகலிக்கிறது மனது..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஜ்வல்யாவைத்
தேடிக் கொண்டே
இருக்கிறது
மனசு..
எதிர்ப்படும் எந்தக்
குழந்தையைக் கண்டாலும் !//

குருவுக்கும் சிஷ்யனுக்கும் இந்த ஜன்மத்தில் அந்த பாக்யம் கிட்டவில்லை தான்.

அதனால் கற்பனையில் எல்லோரையுமே ஜ்வல்யாவாகவே நினைத்து நாம் மகிழ வேண்டியுள்ளது.

ஆனால் எல்லோரும் நாம் எதிர்பார்க்கும் நம் ஜ்வல்யாவாகவே இருப்பதும் இல்லை. என்ன செய்வது?

மிக அழகான படைப்பு. பாராட்டுக்கள்.

ராஜி said...

ஊசி போட்டா அழ மாட்டா தானப்பா!

எனக்கு ஊசின்னா பயம், டாக்டர் ஊசி போட எழுதி கொடுத்தா நைசா கீழ போட்டுட்டு வந்துடுவேன். ஆனா, தூயா பயமில்லாம ஊசி போட்டுக்குவா!

Yaathoramani.blogspot.com said...

மனதை அப்பும் சோகத்தை
அடக்க முடியவில்லை
நான் கவிதையை வேறு விதத்தில்
அர்த்தம் செய்து கொள்வதால்..
படைப்பின் சிறப்பென்பது அதுதானே ...

நிலாமகள் said...

ஏக்கமுடன் நாங்களும் உங்கள் பின்... தேடித் தேடி...

Ranjani Narayanan said...

உண்மையிலேயே ஜ்வால்யா எங்கே என்று தேடிக் கொண்டிருந்தேன். இங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி!
இனி தொடர்ந்து மழலை பேசட்டும் ஜ்வால்யா!

உங்களின் கடைசி வரிகளில் எங்களையும் தொலைத்துவிட்டோம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கையில் வெண்ணெய்.......நெய்யைத் தேடுகிறீர்கள்.

சீக்கிரம் பையனுக்குக் கல்யாணத்தைப் பண்ணுங்கள் ரிஷபன்.

G.M Balasubramaniam said...


குழந்தைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். உங்கள் பதிவுகள் சிலவற்றின் மூலம் நீங்களும் என்னைப் போல்( அல்ல அல்ல ) நானும் உங்களைப் போல் என்று நினைக்கிறேன். வாத்சல்யத்துடன் ஒரு சோக இழையும் தெரிகிறதே. பதிவுக்குப் பாராட்டுக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

எங்கள் மனதும் தேடிக்கொண்டே இருக்கின்றது

ராமலக்ஷ்மி said...

/
’இரு..
அப்பாகிட்ட
பேசிட்டு வரேன்’
என்கிறாள்
சினேகிதியிடம்
ஜ்வல்யா..
இரு பெரிய மனுஷிகளின்
தனிமையில்
குறுக்கிட்ட எனக்குத்தான்
நெருடல் ! /

:)!

இனிக்கிறது அத்தனையும். தொடருங்கள் ஜ்வல்யாவை. தொடருகிறோம் நாங்களும்.