January 31, 2014

பூஞ்சிறகு




"மிழ்"
"என்ன"
"தமிழ்"
"சொல்லு"
"தமிழ்"
"பிசாசே"
அடுத்த நிமிஷம் மெசேஜ் அடிப்பதை விட்டு போன் அடித்து விட்டேன்..
"ஹைய்யோ.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பா"
"என்ன பிடிச்சிருக்கு"
"எப்படி உனக்கு அந்த நேம்ல என்னை கூப்பிடணும்னு தோணிச்சு"
"அடக் கடவுளே.. "
"கூப்பிட்டியா"
"உன்னை இல்ல"
"சொல்லு.. எப்படி உனக்கு அந்த பெயர்ல அழைக்க தோணிச்சு"
"அது வசவுடா மவனே"
"இருக்கட்டுமே.. எனக்குப் பிடிச்சிருக்கே"
"இப்ப மணி என்ன தெரியுமா"
"பன்னண்டு.."
"ராத்திரி பன்னண்டு"
"அப்படியா"
"டேய்.. எனக்குத் தூக்கம் வருது.. பகல் முழுக்க கம்ப்யூட்டர்ல.. இப்போ செல்லுல.. என்னால முடியல"
"ஒரு வரி பாடு.. ஒரே வரி.. விட்டுடறேன்"
"பிசாசு" என்றாள் மறுபடியும்.
ஏதோ ஹம் செய்தாள்.
"புரியல.. ஆனா நல்லா இருக்கு"
"சரி.. தூங்கு"
"துளசி எப்படி இருக்கார்"
"துள..சி?"
"மறந்துருச்சா"
"ஓ.. அவரா.. இப்போ எதுக்கு அவர் ஞாபகம்"
"ப்ளூட் எங்கிருந்தோ கேட்டுது"
"ஹ்ம்ம்.. இன்னிக்கு நீ என்னைத் தூங்க விடப் போறதில்ல.. அது புரிஞ்சிருச்சு"
"டயர்டா இருக்கியா"
"அதைத்தானே பிசாசு அப்போ பிடிச்சு சொல்றேன்"
"சரி.. தூங்கு"
"ம்ம்"
"உன்னோட ம்ம் ரொம்ப அழகு"
"...."
"எப்படின்னு கேட்க மாட்டியா"
"..."
"ஓ.. தூங்கிட்டியா.."
"..."
"சரிப்பா.. குட் நைட்"
மொட்டை மாடியில் ஒரு காகம் துணி உலர்த்தும் கொம்பில் உட்கர்ந்திருந்தது. அதுவும் காதல் வயப்பட்ட காகமாய் இருக்கலாம். ஏதேனும் ஒரு கவிதை கூட மனசுக்குள் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
இப்போதும் குழலோசை கேட்டது. பிரமையா..

துளசி... தமிழைச் சந்தித்தது அவரால்தான்.
தாம்பரத்திலிருந்து எக்மோர் செல்லும் போது 'செந்தமிழ்த் தேன்மொழியாள்' அடுத்த பக்கமிருந்து காற்றில் வந்தாள். அப்படியே மனசைக் கட்டிப் போடுகிற இசை. குழல் பேசியது. அவரிடம். அருகில் வர வர.. புரிந்தது.. அவருக்கு இசைக் கண் மட்டுமே என்று.
பழைய பாடல்களைக் குழலில் பிழிந்து காதுக்கு அமுதூட்டினார்.
கை நீட்டவில்லை. யாராவது அவரைத் தொட்டால் நின்று பெற்றுக் கொண்டார். ஒரு வினாடி நன்றி மின்னுகிற முகம் மீண்டும் புல்லாங்குழலுக்குள் புதைந்து கொண்டது. என் பெட்டிக்கு முன் வரிசை இருக்கைகளில் அத்தனை கூட்டமில்லை.
"உட்காருங்க தோழரே"
கணீரென்று ஒரு குரல் கேட்டது.
யாரது.. எட்டிப்பார்த்தேன். அவள் கண்கள் தான் அப்போதும் இப்போதும் நீந்தத் தெரியாத என்னைச் சுழற்றி நடுக்கடலில் விட்டு விடுகிறது.
"மன்னிக்கணும். உட்கார்ந்து பேச எனக்கு அவகாசமில்லை" என்றார் புன்முறுவலுடன்.
"ஒரே நிமிஷம்"
சீட்டின் நுனியில் அமர்ந்தார்.
"இந்தாங்க"
100 ரூபாய்த் தாள் அவர் கைகளில் வைக்கப்பட்டது.
"உங்க இசைக்கு மரியாதை செய்யத் தோணிச்சு.. அதான் உட்காரச் சொன்னேன்.. இனி உங்க விருப்பம் போல.."
அவர் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்திருந்தார். கண் கலங்கியிருக்க வேண்டும்.
பிறகு எழுந்து போய் விட்டார்.
எந்த ஸ்டேஷனில் இறங்கினாள் என்று கவனிக்கத் தவறி விட்டேன்.
இது முதல் சந்திப்பு.
அடுத்த வாரத்தில் மறுபடியும் அவளைப் பார்த்தபோது நிமிடத்தில் மனசுக்குள் மணி அடித்தது.
துளசியும் சொல்லி வைத்த மாதிரி வந்தார். அவள் அருகில் வரும் போது 'வணக்கம்' என்றாள்.
துளசி நின்று சிரித்து விட்டுப் போனார்.
ரு மாத இறுதியில்.. கவிதை நூல் வெளியீட்டு விழா ஒன்றில் மறுபடி அவளைப் பார்த்தேன். வாசலில் கடை பரப்பியிருந்த தொகுப்புகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'பிரபஞ்சத்தின் பின்னால் எனக்கொரு இடம்' தொகுப்பை எடுத்தவள் அதை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டாள்.
சட்டென்று முன்னால் நகர்ந்து 'ஆட்டோகிராப் வேணுமா' என்றேன் சிரிப்புடன்.
செம ஷார்ப் ! பின் அட்டையை திருப்பிப் பார்த்தாள்.
'அவசியமில்லை.. உங்க கவிதை சொல்லாத எதையும் உங்க கையெழுத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை"
அதான் தமிழ்! மனதில் பட்டதை அப்படியே பட்டவர்த்தனமாய் போட்டு உடைப்பவள்.
"அதுல என் செல் நம்பர் இருக்கு" என்றேன் விடாமல்.
"புக்கை ரிடர்ன் எடுத்துப்பாங்களா" என்றாள்.
விலகி வழிவிட்டேன். சரியான பச்சை மிளகாய்.
இரண்டு மூன்று நாட்கள் ஓடி விட்டன. நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால் மெசேஜ் அனுப்பி இருந்தாள்.
"கவிதையின் ஆத்மாவைப் பிடித்திருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்- தமிழ்"
பேசலாமா, வேண்டாமா என்று யோசிப்பதற்குள் என் விரல் அழுத்திவிட்டது.
முழு ரிங்கும் போய் 'நீங்கள் அழைக்கும் நபர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை' என்று என்மேல் கரிசனம் உள்ள ஒரு பெண் சொன்னார்.
என்னை நானே மனசாரத் திட்டிக் கொண்டேன்.
அப்போதுதான் அவள் அழைத்தாள்.
"சொல்லுங்க"
"நன்றி.. கவிதையைப் பாராட்டியதற்கு"
"ஒரு மெசேஜ் போதுமே"
"உட்கார வச்சு நன்றி சொல்லி இருக்கணும்.. அதானே முறை"
"புரியல"
"ரயில்ல.. ப்ளூட் வாசிக்கிறவர்"
"ஓ.. "
"அதைப்பத்தி கூட ஒரு கவிதை எழுதி வச்சிருக்கேன்.. அடுத்த தொகுப்புல வரும்"
"அவருக்கு வேற ஏதாச்சும் உருப்படியா பண்ணனும்.."
" எந்த மாதிரி"
"சரி.. நன்றி.. வச்சிரவா"
வைத்து விட்டாள்.
ன்ன செய்யப் போகிறாள் என்று இன்னொரு கூட்டம் வரை புரியாமல் இருந்தது. சமூக ஆர்வலர் கூட்டம் ஒன்றில் புதிர் அவிழ்ந்து விட்டது. தற்செயலாய்த்தான் நானும் அங்கே போனேன். நிகழ்ச்சியின் நடுவில் ஒரு அறிவிப்பு.
"இதோ இசையால் நம் பார்வைகளை விசாலமாக்கப் போகிறார்.. துளசி"
துளசி மேடைக்கு வந்தார்.
'.. கல்லிலே கலை வண்ணம் கண்டான்..' அலைபாயுதே.'
வாசித்துக் கொண்டே போனார். எழுந்து போக இருந்த சிலர் கூட அப்படியே நின்று விட்டார்கள். ஒருவர் தன் விருப்பமாய் 'புல்லாங்குழல் கொடுத்த' வாசிக்கச் சொன்னார்.
அரை மணி நேரம் கூட்டத்தைக் கட்டிப் போட்டிருந்தார். விழா அமைப்பாளர் எங்கிருந்தோ ஓடோடி வந்தார்.
"புல்லாங்குழலிசை என்று சொன்னதும் நான் கூடப் பெரிதாய் நினைக்கவில்லை. இப்போது இசை கேட்டதும் என்னை மறந்தேன். அருமையான இசையைக் கண்டுபிடித்துக் கொடுத்த தோழருக்கும் நன்றி"
வற்புறுத்தி தமிழை மேடையேற்றினார்.
தமிழ் மௌனமாய் வணக்கம் சொன்னாள்.
துளசிக்கு சன்மானம் கொடுத்தார்கள்.
வாங்கிக் கொள்ளுமுன் அவர் மைக்கில் சொன்னார்.
"நீங்க ரசிச்சீங்களான்னு எனக்குத் தெரியாது.. அதைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.."
இடைவெளி கொடுத்து சிரிப்புடன் சொன்னார்.
"உங்க கைத்தட்டல்கள்"
பத்து நிமிடம் விடாமல் கை தட்டினார்கள். தமிழ் அழுதிருக்க வேண்டும் அதை அவள் மறைக்கவில்லை. பட்டுக் கத்தரித்தாற்போல பேசுகிற அவளுக்குள் இருந்த பூஞ்சிறகைக் கண்டு கொண்ட ஆனந்தம் எனக்கு.
துளசியை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.
"வணக்கம் துளசி.. அருமையான இசைக்கு நன்றி" என்றேன் கைப்பிடித்து குலுக்கி.
யாரோ அவரை இடித்துக் கொண்டு வேகமாய்ப் போனார்கள். தடுமாறி சுதாரித்துக் கொண்டார்.
"நீங்க எங்கே போகணும்"
இடத்தைச் சொன்னார்.
"அட.. நானும் அந்தப் பக்கம்தான்.. வாங்க ஆட்டோல போயிரலாம்.. இறக்கி விட்டு போறேன்"
தமிழ் என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.
"உங்களுக்கு ஏன் சிரமம்"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை.. அவர் வாசிச்சதைக் கேட்டேன்.. அவர் பேசியும் கேட்கலாமேன்னு"
அரைமனதாய் நின்றாள்.
துளசியும் சொன்னார்.
"பரவாயில்லம்மா.. நான் அவர் கூட போயிடறேன்"
ஆட்டோவில் தமிழைப்பற்றியே நான் பேசியிருக்க வேண்டும். துளசியைப் பேச விடாமல். அவர் என்னிடம் எதுவும் சொல்ல வில்லை. மனசுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ.
இரவில் வீடு திரும்பும்போது அநியாயத்திற்கு லேட் ஆகிவிட்டது.
'நன்றி' என்று தமிழின் மெசேஜ் வந்தது.
'பேசலாமா' என்று கேட்டேன்.
'குட் நைட்' என்று பதில் வந்தது.
எல்லாத் துவாரங்களிலும் காற்று இசையாகி விடுவதில்லை என்று பதிலுக்கு அனுப்பினேன்.
கைகளைப் பின்னுக்கு வைத்துப் படுத்திருந்தேன். அழைப்பு வந்தது கேட்கவில்லை முதலில். முழுவதும் ஒலித்து அடங்கி விட்டது. கொஞ்சம் பொறுத்து அடுத்த முறை ஒலித்த போது எனக்கும் கேட்டது.
"ம்ம்" என்றேன் யாரென்று பார்க்காமல்.
"அவரைப் பேசவே விடலை போலிருக்கே"
தமிழ் !
எழுந்து அமர்ந்து விட்டேன்.
"எதுக்கு பொய்லாம்.. உங்க வீடு அங்கியா இருக்கு"
"எனக்கு மட்டும் ஈரம் இல்லியா மனசுல.. உங்க அளவு இல்லாட்டியும் சுமாராவாச்சும் இருக்கு"
பதில் பேசவில்லை.
"நன்றி அழைச்சதுக்கு" என்றேன்.
"ஒன்பதரைக்கு தாம்பரமா.. நீங்க வர நேரம்" என்றாள்.
"என்ன.." என்றென் சட்டென்று புரியாமல்.
"மக்கு"
வைத்துவிட்டாள்.
ம்மா மட்டும் அப்பா இல்லை. என்ன ஆனாரோ.. அவரைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தாள். ஒரு அண்ணன். ஆனால் வீட்டோடு இல்லை. ஆண்களைப் பற்றி ஒரே வார்த்தையில் மதிப்பீடு வைத்திருந்தாள். 'உதவாக்கரைகள்'
'என் வாழ்க்கையில் எந்த ஆணுக்கும் இடமில்லை என்றுதான் நினைச்சேன்.. ஹூம்..'
நான் பதில் சொல்லவில்லை. அவளுக்குப் பிடிக்காது.
பேசிக் கொண்டே போனோம். மாம்பலத்தில் இறங்கிப் போனாள்.
"உங்க ஆபிஸ் எக்மோர்னு தெரியும்.. என் பின்னால வராம போங்க"
மாலையில் சரியாக என் நேரத்திற்குக் காத்திருந்தாள்.
"போலாமா"
மறுபடி தாம்பரம் வரை.
இறங்கியதும் சொன்னாள்.
'இவ்வளவுதான்.. இதுக்குப் போய் உங்க மனசை அலைபாய விடாம கவிதைல செலுத்துங்க.. பை'
போய் விட்டாள்.
அழுகிற சின்னப் பிள்ளைக்கு கமர்கட் கொடுக்கிற மாதிரி !
அடுத்த கூட்டத்தில் முன் வரிசையில் இருந்தவளைப் பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன். முடிகிற நேரத்தில் எப்படி மறைந்தாளோ.. தெரியவில்லை. என் பார்வை அவளிருக்கும் இடத்தை அலசிக் கொண்டே வந்தது. கண்டு பிடிக்க முடியவில்லை.
துவண்டு போனது மனசு.
பின்னாலிருந்து குரல் கேட்டது.
"போலாமா"
தமிழ் !
கோபுரத்தில் கல்லிடுக்கில் விழுந்த பறவை எச்ச விதை துளிர்த்து நிற்பதைப் போல எங்கள் காதலும்.. அப்படித்தான் தமிழின் பார்வையில்..
'எப்ப வேணா யாராச்சும் பிடுங்கிப் போட்டுருவாங்க' என்றாள்.
"இது காட்டுக்குள்ள இருக்கற கவனிப்பாரற்ற கோவில்.. மரமாகி நிலைச்சிருக்கும்.." என்றேன்.

செல் சிணுங்கியது. தமிழ்.
"ம்ம்.."
"தூக்கம் வரலை"
"ஆமா"
"எனக்கும்டா பிசாசு"
"நம்ம கல்யாணத்துக்கு நிச்சயம் துளசியை அழைக்கணும்"
"அவர் மட்டும்தான்.. "
எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் ஆண்டாளின் காதல் ஒலிக்கத் தொடங்கியது

(கல்கியில் பிரசுரம் )

23 comments:

இராஜராஜேஸ்வரி said...


"பூஞ்சிறகாய் -
புல்லாங்குழல் இசையாய்
வருடும் கதை..!

கல்கி பிரசுரத்திற்கு வாழ்த்துகள்..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா... கல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் ஐயா... நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான காதல் உணர்வுகளை பிரதிபலித்த கதை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

ezhil said...

உங்கள் கவிதையைப் போலவே இந்தக் கதை அழகு.

ராஜி said...

பிசாசு
>>
செல்லப்பேர் நல்லா இருக்கு

Rengasamy santhanam said...

This is like Rajam's paintings. differently effective and delicious.

Yaathoramani.blogspot.com said...

என்னுள்ளும் அந்த இசை
பொங்கி வழிவதைப் போன்ற
பிரமையை தங்கள் பதிவு
ஏற்படுத்திப்போகிறது
சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அற்புதம்.

ADHI VENKAT said...

பூஞ்சிறகு காதலை மென்மையாக வருடிப் போயிற்று... அருமை..

பாராட்டுகள் சார்..

கதம்ப உணர்வுகள் said...

அற்புதமான தலைப்பு.... பூஞ்சிறகு... ஆமாம் மயிலிறகாய் வருடி விடுகிறது மனதை கதையின் வரிகள்.

கதையின் கரு... மெல்லியக்காதல்... ஆத்மார்த்த காதல்.... அதைச்சொல்ல தவிக்கும் மனசு... பிடிபடாமல் வழுக்கிக்கொண்டே செல்லும் தமிழ்....

பிசாசு... செல்லமாய் காதலில் இழுபடும் சொல்....

தமிழ்.... இதுவே அழகான நெஞ்சம் வரை தித்திக்கும் பெயர்...

உங்க கதைகளில் நீங்க அதிகமாக பிரயோகிக்கும் நூலிழை இசை... இதிலும் ஆட்சி செய்கிறது..

மனதை மயக்கவைக்கும் புல்லாங்குழல் இசையில் துளசி சார் நிலைக்கிறார்.

காதலில் கம்பீரம் எப்போது தோன்றுகிறது? நேசம் என்பது ஒரு பெண்ணை மட்டும் அல்ல அவள் சார்ந்த எல்லாவற்றையும் நேசிப்பது தான் கம்பீரம்... அந்த கம்பீரம் இந்த கதையின் நாயகனிடம் உள்ளது என்பதை அழுத்தமாக சொன்ன வரிகள்.... நான் போகும் வழி தானே “ வாங்களேன் உங்களை ஆட்டோவில் இறக்கி விட்டுடறேன் “

ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதும் அவர் திறமையை கௌரவிப்பதும் வெகு குறைவான இந்த இயந்திர உலகில் மனித நேயமுள்ள மனிதர்களும் உள்ளனர் என்பதை நிரூபித்த கதை இது.

கண்பார்வை இல்லை என்றால் கையேந்த தான் வேண்டுமா என்ன? இல்லை என்று நெற்றியடியாக சொன்ன கதையிது.

கதம்ப உணர்வுகள் said...

நுணுக்கமான சின்ன சின்ன விஷயங்கள் கூட இந்த கதையில் அழகாய் ரசிக்க வைத்தது “ அது வசவுடா மகனே “ “ உன்னோட ம்ம் ரொம்ப அழகு “ “ மொட்டைமாடியில் ஒரு காதல் வயப்பட்ட காகம் அதன் மனதில் ஓடும் கவிதை வரிகள் “” அவசியமில்லை உங்க கவிதை சொல்லாத எதுவும் உங்க கையெழுத்து சொல்லப்போவதில்லை “ “ கவிதையின் ஆத்மாவை பிடித்திருக்கிறீர்கள் “ “ நீங்க ரசிச்சீங்களா எனக்கு தெரியாது அதை கண்டுப்பிடிக்க ஒரே வழி இடைவெளி விட்டு கைத்தட்டல்கள் “ இந்த மாதிரி நுணுக்கமா குட்டி குட்டி விஷயங்களை கூட வாசிக்கும் வாசகர்கள் ரசிக்கும்படி எழுதும் திறன்.... உங்க எழுத்தின் இத்தனை கால அனுபவத்தின் கல்வெட்டு என்று கூட சொல்லலாம்..

ஒரு சிறுகதையில் அழகாய் எமோஷனலாய் மனசுக்குள் நிலைக்கிற மாதிரி வாசிக்கிறவங்க ரசிக்கிற மாதிரி... யார் மனசையும் புண்படுத்தாத சொற்களை வைத்து இத்தனை அழகா எழுத முடிகிறது என்பதற்கு உங்களுக்கு என் சல்யூட்...

கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உங்க எழுத்து வண்ணத்தில் உயிர் கொடுத்து கண்முன் நடமாட விட்டிருக்கீங்க என்பதே உங்க கதைக்கு வெற்றி..

இரு மனங்களின் நேசம் இறுதி வரை நிலைத்திருக்க அவசியமானது இரு மனங்களின் ஒத்த சிந்தனைகள்...

கதம்ப உணர்வுகள் said...

சோஷியல் ஆக்டிவிட்டீஸ்... சோஷியல் சர்வீஸ்... அதிகமா இந்த காலக்கட்டத்தில் முன் வராதபோது ஒரு சிலரால் தான் இதுப்போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தன்னோடு தன் மனித நேயத்தையும் துளிர்விட்டு மரமாக்க முடிகிறது..

கைத்தேர்ந்த சிற்பியின் கை வண்ணத்தில் உருப்பெறும் சிலை எப்படி தன் புன்னகையால் உயிர்க்கிறதோ...

கைத்தேர்ந்த ஒரு கதாசிரியரால் மட்டுமே கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வாசிக்கும் கதையை நிஜம் என்று கையடித்து சத்தியம் என்று சொல்ல வைக்க முடிகிறது.

கதையாய் நினைத்து வாசிக்கவே முடியவில்லை... நிஜம் தான்... ஆமாம் அந்த தமிழை எங்காவது கூட்டத்தில் தாம்பரத்தில் பார்ப்போமா? புல்லாங்குழல் இசை கேட்கும்போது அது கண்டிப்பாக இசையை கண்ணாக கொண்டிருக்கும் துளசி சாராக தான் இருக்குமோ என்று நம்மையும் அறியாமல் நம்மை எதிர்ப்பார்ப்புகளோடு திரும்பி பார்க்க வைத்துவிடும்...

அத்தனை தத்ரூபம் இந்த கதை...

இதில் எனக்கு மூன்று கதாப்பாத்திரங்களும் பிடித்திருக்கிறது. அதிலும் குறும்புக்கண்களுடன் மனித நேயத்துடன் நெஞ்சம் நிறைந்த காதலுடன் தமிழ் மனதில் இடம்பிடிக்க இயல்பாய் குறுகுறுக்கும் கவிதைகளை கண் முழுக்க தேக்கி வைத்திருக்கும் கதையின் நாயகனின் செயல்கள் , சொற்கள், நாயகியிடம் பேசும் வார்த்தைகள் அத்தனையும் மிகவும் பிடித்துவிட்டது...

பொங்கல் நன்னாளில் அற்புதமான ஒரு படைப்பு... எளிமையான ஆனால் வலிமையான காதலை இத்தனை தத்ரூபமாய் சொல்லி செல்லும் அழகு....

பொங்கல் வாழ்த்துகளூடே.... இந்த பிரம்மாண்ட மென்மையான காதலைச்சொன்ன பூஞ்சிறகு கதை வெளியீட்டுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும் இதுப்போன்ற அழகிய கதைகள்.... வாசிக்கும் எங்கள் எதிர்ப்பார்ப்புகளை கூட்டிக்கொண்டே..... ...

கோமதி அரசு said...

அருமையான காதல் கதை.
திருமணத்திற்கு துளசியின்
புல்லாங்குழல் இசை அனைவர் மனதையும் நிறைக்க போகிறது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

மனதை நெருடும் கதை
கல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

-நன்றி
-அன்புடன்-
-ரூபன்-

geethasmbsvm6 said...

பூஞ்சிறகு மெல்ல வருடிக் கொடுத்தது. அருமை.

geethasmbsvm6 said...

தொடர

KParthasarathi said...

கதை ரொம்ப பிடிச்சது.

Sandhya said...

Kathaiyei romba nandraaga kondu poneergal! Unarvugalai azhagaaga velippaduththineergal!

Romba pidiththathu, ungal kathai!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதை. பூஞ்சிற்கு போல எங்கள் மனதையும் வருடிச் சென்றது..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

பால கணேஷ் said...

மிக தாமதமாய் கவனித்திருக்கிறேன் நான். ஸாரிண்ணா...! உங்கள் கதைகளுக்கு தென்றலாய் மனதை வருடிச் சென்று இதம் தரும் ஒரு தனித்துவ குணம் உண்டு. பூஞ்சிறகும் தப்பாமல்! வெகு இயல்பாய் வந்துவிழும் உங்களின் உரையாடல்கள் சற்றே பொறாமை கொள்ள வைப்பவை என்னை எப்போதும்!

raji said...

இப்படி எழுத நான் இன்னும் எத்தனை எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ?