December 12, 2015

அம்மு 11

அம்முவிடம் என் காதலைச்  சொல்லத்  தேர்ந்தெடுத்த இடம்  கிணற்றடி..  அதுவும்  வீட்டில் அத்தனை பேரும்  நம்பெருமாள் வருகிறார் என்று வீட்டு வாசலில்  நிற்கிற நேரம்.
“குடத்துல ஜலம் இல்லைடா “ என்று அம்மா சொல்லியிருந்தாள்.
வாசலில் கொட்டு சத்தம் கேட்டது.   பெருமாள் வருகிறார்.  ‘யானை வந்தாச்சு ‘ என்கிற அலறல் கேட்டது.  ஆச்சு..  இனி பிரபந்த கோஷ்டி .. பின்னாலேயே பெருமாள் வந்து விடுவார்.   ஆறரை மணிக்கு வேட்டு சத்தம் கேட்டாலே புறப்பாடு ஆயிருச்சு என்று மொத்த ஸ்ரீரங்கமும் உற்சாக  தீப்பற்றிக் கொள்ளும்.
“நீ போம்மா .. ஜலம் எடுத்து வச்சுட்டு பின்னாலேயே ஓடி வரேன் “ என்றேன்.
படிப்பு வரவில்லை.  கணக்கு போர்டில் எழுதியிருப்பது எத்தனை தடவை பார்த்தாலும் புரியவில்லை.
குரல் மட்டும் கொஞ்சம் இனிமையாய் அமைந்ததால் பிரேயரில் உபயோகிக்கிறார்கள்.  இன்னமும் டிசி கொடுக்காததற்கும்  வருடாவருடம் பாஸ் போடுவதற்கும் அதுதான் காரணம்.  சர்வமத பாடல்கள் அத்துப்படி என்பதால் எல்லோருக்கும் மனதுக்கினியவன் ஆகிவிட்டேன்.
கிணற்றில் நீர் இழுக்கும் போதும் என் வாயில் ஹம்மிங்..  அம்மு  ‘கண்ணா’ என்று கூப்பிட்டதும் சட்டென்று தூக்கி வாரிப் போட்டது.
எனக்குப் பிடித்த நீலக் கலர் தாவணி.  சைடில் வகிடு எடுத்திருப்பாள் எப்போதும்.  கன்னத்தில் நிரந்தரமாய் ஒரு குழி.  தெற்றுப்பல்.  நேராய்ப்  பார்த்துத் தொலைப்பதால்  ஒரு ஜுரம் பற்றிக் கொள்ளும்.
“என்ன.. அம்மு.. “ என்றேன் திணறலாய்.
“ பெருமாள் சேவிக்கப் போகலியா “
“ஜலம் எடுத்து வச்சுட்டு போகச் சொன்னா அம்மா”
“ம்..”
“எனக்குத்தான்  கொடுத்து வைக்கல  “  என்றாள் .
புரிந்தது .  வெளியே  வர  முடியாது.
“அம்மு .. “
“என்னடா “
அவள் கண்களில் ஒரு சோர்வு  தெரிந்தது.  இந்த நேரத்தில் போய் சொல்லணுமா  என்று தயங்கினேன்.
“சொல்லுடா “ என்றாள்  கனிவாய்.
“உன்னைப் பிடிச்சிருக்கு “
“ப்ச் .. அதான் தெரியுமே “
“நான் சொல்ல வந்தது .. “
“போடா.. பெருமாள்  ஆத்தைத் தாண்டிப் போயாச்சு .. ஓடு “
குடத்தை வைத்து விட்டு ஓடினேன். .  பட்டா வீட்டைத் தாண்டிப் போய் விட்டார்.  பின்னாலேயே  ஓடிச் சேவிக்க வேண்டியதாச்சு.   திரும்பி வந்தபோது அம்மு  கொல்லைப்புற படியேறி மொட்டை மாடி ரூமுக்குப் போய்விட்டாள்.
எப்படியோ சொல்லியாச்சு.  அவளுக்குப் புரிந்திருக்கும்.  என்னை விட மூன்று வயசு மூத்தவளாச்சே.. அந்த அளவுக்குக் கூடவா புரியாது..
அம்முவின் படிப்பை நிறுத்தி விட்டார்கள்.  அவள் அப்பா சமையல் வேலை. ஒரு காண்ட்ராக்டில் இருந்தவரை நிரந்தரமாய்  வருமானம் வந்து கொண்டிருந்தது.  நெளிவு சுளிவு புரிந்ததாய் நினைத்துக் கொண்டதும் தனியே ஆரம்பித்தார்.  அதிலிருந்து பிரிந்து வந்தவர்கள் சிலருடன்.  அவர்கள் கெட்டிக்காரர்கள். பார்ட்னராய் இல்லாமல் சம்பளமாய் பேசிக் கொண்டார்கள். இவர் முழு லாபமும் தனக்கு என்று தப்புக் கணக்கு போட்டதில் முதல் காண்ட்ராக்டிலேயே சரியான அடி.
‘அண்ணா.. இந்தத் தொழில்ல ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. போகப் போக  பாருங்கோ.. நம்ம வரதனும் அப்படித்தான் ஜெயிச்சு வந்தார்..’
நன்றாக ஏற்றி விட்டார்கள்.   மூன்று நாள் உழைப்பின் பின் அவர்கள் காசும் சாமானுமாக திரும்பிப் போக இவர் கைக் காசு நஷ்டத்துடன் வீட்டுக்கு வந்தார்.  மாமி வாயில்லாப் பூச்சி.  அம்முவிற்குப் பின் இரண்டு பெண்கள்.. ஒரு பையன் கடைக்குட்டி.  குடும்பம் அல்லாடிக் கொண்டிருந்ததை யாரிடமும் சொல்ல முடியாமல் உடையவர் சன்னிதிக்குப் போய் அழுது விட்டு வருவாள்.
அந்த நேரம் சாம்பு வந்தான்.  முரட்டு உருவம். எப்போதும் பான் பராக் வாயில்.  தூரத்தில் வரும் போதே ஒரு நாற்றம் அடிக்கும். அவன் உபயோகப் படுத்தும் ஸ்பெஷல் செண்ட்..  அம்முவின் அப்பாவிற்கு ஊக்கம் கொடுத்தான்.
‘உங்களை  நன்னா மொளகா அரைச்சிட்டா..  இனிமே நான் சொல்றபடின்னு சொல்லிருங்கோ.. ‘
அம்முவின் அப்பா மறுபடி ஏமாறப் போகிறார் என்று புரிந்தாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
போதாக் குறைக்கு என் அம்மாவையும் கரைத்து விட்டான்.
‘கண்ணன் சும்மாதானே இருக்கான்.. என் கூட அனுப்புங்கோ.. தொழிலைக் கத்துத் தரேன்.. பின்னால அவனும் தனியா காண்ட்ராக்ட் எடுக்கலாம் ‘
அம்மாவுக்கு அப்போதே  பரணிலிருந்து பணம் கொட்டியது மனக் கண்ணில்.  போடா என்றாள்.  மாதுர் வாக்ய பரிபாலனம்.   போனேன்.
5000 அவன் ஒதுக்கிக் கொண்டு அம்முவின் அப்பாவிடம் 2000 கொடுத்தான்.  எனக்கு 500.
அம்முவின் அப்பா கண்களில் நீர்.  கை நஷ்டம் இல்லாமல் ஒரு வரவு. அம்முவின் அம்மா உடையவருக்கு 12 பிரதட்சிணம்  செய்தாள் அன்று.
என் முதல் சம்பாத்தியம்.   பள்ளிக்கு சிக்கல் இல்லாமல் இந்த வேலை ஓடிக் கொண்டிருந்தது.   நடுவில்  எப்போதாவது பள்ளி நாளில் வந்தால்  பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன்.  பிரேயருக்கு இன்னொரு மாணவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வருடம் முதல் முறையாக  பெயில் போட்டார்கள்;
அம்முவைப் பெண் கேட்டு சாம்பு பேசி இருந்தான்.  அம்முவின் அப்பாவிற்கும் வேறு வழி தெரியவில்லை.
அம்முவை ஆண்டாள் வேஷத்தில் பார்த்தேன்.  கல்யாணப் பெண்ணாய்.  அரக்குக் கூறைப் புடவை.. ஜெகஜ் ஜோதியாய் இருந்தாள்.
‘அவளுக்குப் பசிக்கப் போறது..  இந்தா .. ஒரு வாய்  காப்பியாவது கொடுத்துட்டு வா ‘ என்று என்னை அனுப்பினார்கள்.  போனேன்.   அவள் மட்டும் தனியே.  மணப் பெண்ணின்  சினேகிதி என்று யாரும் கூட இல்லை.
“அம்மு.. இந்தா “
கண்ணில் மை இட்டிருந்தார்கள்.  அம்மு நல்ல நிறம்.  அரக்கில் இன்னும் ஜ்வாலையாய்.
“அம்மு “
காபியை சீந்தவில்லை.
“அழகா இருக்கே “
பதில் சொல்லவில்லை.
“உனக்குப் பிடிச்சிருக்கு தானே “
மௌனம்.
“யாரையாச்சும் வரச் சொல்லட்டுமா .. தனியா இருக்கியே”
ஊஹூம்.  அசைவே இல்லை.
“அம்மு  ..  என்னம்மா “
எப்போதும் தெளிவாய் நேருக்கு நேராய்ப் பார்த்து பேசுகிறவள்..  இன்று  எங்கோ வெறித்தாள்.
“ஏண்டா..  எனக்கு  முன்னாலேயே   பொறக்கல.. “
மணப்பெண் அறை வாசலில் ஆட்கள் வருகிற சத்தம் கேட்டது அப்போது.


5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சோகமான முடிவாய் இருந்தாலும், கடைசியில் என்றும் நெஞ்சில் நிற்கும் ஓர் சுகமான உரையாடல் ....

“ஏண்டா.. எனக்கு முன்னாலேயே பொறக்கல.. “ :)

அம்முன்னா அம்முதான் .... அதற்குள் இப்படி வெள்ளரிப்பழம்போல ஒரேயடியா வாளிப்பா வளர்ந்து 11வதுக்கு வந்துட்டாளே .... ஸ்வீட் சிக்ஸ்டீன் அம்மு வாழ்க !

வெங்கட் நாகராஜ் said...

அடடா..... மனதைத் தொட்ட அம்மு.....

ஒரு கேள்வியே அவளது எண்ணத்தினைச் சொல்லி விட்டதே.....

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Yarlpavanan said...

சிறந்த பதிவு
தொடருங்கள்

G.M Balasubramaniam said...

கைகூடாத காதல்தான் கைகூட முடியாத காதலும் தான் கதையை உயிர்ப்பிக்கிறதோ.