சக்கரத்தாழ்வார்
சந்நிதிக்கு முன் ஒரு மேடை அ திண்ணை இருக்கும். ஸ்ரீரங்கவாசிகளுக்கு அது பரிச்சயம்.
பிரதட்சிணம் முடித்து வருபவர்கள் அதில் அமர்ந்து விட்டு போவார்கள். பியூன் எப்போதாவது
அதில் உட்காருவார். வழக்கமாய் ஓரிருவர் அதில் மூலையாய் உட்கார்ந்து ஜபிப்பார்கள்.
எனக்கு
படிப்பு முடித்து வேலை கிடைக்காத சமயம். அம்மா தொணதொணவென்று சொல்லிக் கொண்டிருப்பாள்.
போடா.. சக்கரத்தாழ்வாரைச் சுத்து.. ஒரு மண்டலம்.. வேலை கிடைக்கலன்னா சொல்லு.
இது
யாரோ அம்மாவுக்கு மந்திரித்து விட்டது. அம்மா வெகுளி. யார் சொன்னாலும் அப்படியே நம்பி
விடுவாள்.
உங்காத்து
பூஜை ரூம்ல ரெட்டை விளக்கு ஏத்து..
ஒரு
மட்டைத் தேங்காயை ஆஞ்சநேயர் சந்ந்தில வேண்டிண்டு கட்டிட்டு வா அப்புறம் சொல்லு காரியம்
நடக்கலன்னா
ஆத்து
வாசல்ல.. ஆத்தைப் பார்த்துண்டு நில்லு.. வலது கை.. ஒரு சிட்டிகை சர்க்கரை.. தரையில
போடு.. எண்ணி முப்பதே நாள்.. நீ நினைச்சது நடக்கும்.
காட்டழகிய
சிங்கர்ட்ட போ.. அவன் கால்ல விழு. நீதான்னு சொல்லிட்டு வந்துரு. ஜாம் ஜாம்னு வேலை தேடி
வரும்..
அப்பளம்
இடும்போது கண்ணீர் விட்டால் உப்புக் கரிக்கும்மா என்று கிண்டல் செய்தால் கேட்க மாட்டாள்.
ஊறுகாய் கை வலிக்கக் கிளறுவாள். கை முறுக்கு ஸ்பெஷலிஸ்ட் என்று புகழ்ந்தால் போதும்.
ஒரு சம்புடம் நிறைய முறுக்கு சுத்தி எடுத்துண்டு போவாள்.
எங்கே
விட்டேன்.. ஆங்.. சக்கரத்தாழ்வார்.. இதை ஜபிக்கச் சொல்லு.. ஓம் க்ரீம் க்லீம் க்ருஷ்ணாய..
கோவிந்தாய.. கோபி ஜன வல்லபாய.. என்று யாரோ கிறுக்கி எழுதிக் கொடுத்ததை என் கையில் திணித்து
விரட்டி விட்டாள். சந்தி வேளையில் ஜபி என்று.
முதலில்
நெருடியது. தப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். தாடி வைத்த மாமா ஒருத்தர் என்னையே முறைத்துப்
பார்த்துக் கொண்டிருந்தார்.
‘என்னடா
சொல்றே’
‘மஹா
சுதர்சன மந்திரம்’
‘சொல்லு..’
சொன்னேன்.
தலையில் அடித்துக் கொண்டார். தப்பா சொல்கிறேனாம்.
பிழை
திருத்தி 108 தடவை சொல்ல வைத்து விட்டு போனார். சேவிக்க வந்தவர்கள் வேடிக்கை பார்த்து
நின்றதில் மானம் போனது. அம்மாவிடம் போய்ச் சொன்னால் கோவில் திக்கைப் பார்த்து கண்ணீர்
விடுகிறாள்.
‘நன்னாப்
பார்த்தியா அவரை.. சட்டுனு மறைஞ்சிருப்பாரே’
‘இல்லம்மா..
நடந்து போனார்’
‘போடா..
உன் கண் பார்வை மறையறவரை அப்படி.. அப்பவே அந்த மாமி சொன்னா.. ரொம்ப உசத்தியான மந்திரம்டி..
கை மேல பலன் கிடைக்கும்னு.. உனக்கு அவரே மாறு வேஷத்துல வந்து உபதேசம் பண்ணிட்டு போயிருக்கார்’
எனக்கே
குழம்பியது. அதற்குப் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை என்பதால் குழப்பம் நிரந்தரமாக
என்னில் தங்கி விட்டது. ஆனால் அவர் தான் என் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயத்தை உண்டாக்கியவர்.
அம்மு..
“பட்சணம்
பண்ற மாமி வீடு இதானே”
ஒண்டுக்
குடித்தன ஸ்டோர் முன் நின்று அந்த ரெட்டை ஜடை கீச்சுக் குரலில் கேட்கவும் அம்மா என்னை
விரட்டினாள்
“போய்ப்
பாருடா யாருன்னு”
அரை
மனதாக எழுந்து வந்தேன்.
“பட்சண
மாமி..”
“எங்கம்மா
பேர் வசந்தா”
“ஸாரி..
பேர் தெரியாது.. அவங்களைப் பார்க்கணும்” என்றாள்.
கூடவே
என் மீது குறுகுறுவென்று ஒரு பார்வை. பொழுது போகாமல் கொள்ளிடக்கரையில் இருந்த ஜிம்முக்கு
போவேன். கர்லாக் கட்டை சுழற்றி.. தம்ஸ் எடுத்து.. சட்டை போடாத பளிச் மார்பில் அவள்
பார்வை பதிந்ததும் அவசரமாய் உள்ளே ஓடினேன்.
“உன்னைப்
பார்க்கத்தான்”
இட்லி
மாவுக் கையுடன் அம்மா வந்தாள். ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு பின்னாலேயே நானும்.
“100
கைமுறுக்கு வேணும்.. பாப்பா மாமி உங்களைப் பார்க்கச் சொன்னா..”
“எப்போ
“
“நாளைக்குக்
கார்த்தால”
அப்போதே
இருட்டத் தொடங்கி விட்டது. அம்மாவுக்கு என்னைக் கோவிலுக்கு விரட்டவேண்டிய நேரம். அம்மா
யோசிக்கவும் வந்தவள் வேகமாய்ச் சொன்னாள்.
“பாப்பா
மாமி ஸ்பெஷலா சொல்லச் சொன்னா.. “
“ம்ம்..
சரி,, அட்வான்ஸ் இருக்கா”
கையில்
சுருட்டி வைத்திருந்த நோட்டுகளை நீட்டினாள். அம்மா முகத்தில் ஜோதி தெரிந்தது.
“கார்த்தால
வா.. ரெடியா இருக்கும்”
அம்மா
வேகமாய் உள்ளே போக வந்தவள் என்னைப் பார்த்தாள்.
“உங்களுக்கு
ஒரு அதிர்ஷ்டம் இருக்கு”
என்ன
சொல்கிறாள்..
“அன்னிக்கு
உங்க மந்திரத்தைத் திருத்தம் சொன்னவர் பெரிய உபாசகராக்கும்”
ஓ..
இவளும் வேடிக்கை பார்த்த கூட்டத்தில் ஒருத்தியா..
“கண்ணா..
இங்கே வாடா”
அம்மாவின்
குரல் கேட்டது.
“கண்ணன்..
ம்ம்.. பேர் நன்னா இருக்கு”
சுழற்றித்
திரும்பியவளின் ஜடையில் ஒன்று என் மேல் பட்டுப்
போனது.
இரவு
தூங்கப் போனபோது மணி ரெண்டு. அம்மா அப்படியே சரிந்து விட்டாள். நான் எடுத்து பத்திரப்
படுத்தி வைத்து விட்டு வாசல் திண்ணைக்கு வந்தேன். வழக்கமாய் நான் படுக்கும் மூலை காலியாய்
இருந்தது. அடித்துப் போட்ட மாதிரி வலி. எப்போது தூங்கினேன்.. தெரியவில்லை..
“மாமி..
“
அம்முவின்
குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்த போது நன்றாக விடிந்திருந்தது. அம்மா அம்முவிடமிருந்து
காலி சம்படங்களை வாங்கிக் கொண்டு உள்ளே போனாள். முறுக்கை நிரப்பிக் கொண்டு வந்தாள்.
கனத்தோடு
தூக்க முடியாமல் அம்மு திணறவும் அம்மா சொன்னாள்.
“போடா..
அவாத்துல கொடுத்துட்டு வா”
“பரவாயில்ல
மாமி.. ஒண்ணொண்ணா எடுத்துண்டு போறேன்”
“இருக்கட்டும்.
அவன் எடுத்துண்டு வருவான்”
இரண்டையும்
இரண்டு கையில் ராமலட்சுமணர்களைச் சுமப்பது போல எடுத்துக் கொண்டு அவள் பின்னால் போனேன்.
ஒரு ஜடை தட்டிப் போன இடத்தை அடுத்த ஜடை தட்டும் போது சுவாரசியமாய் இருந்தது பின்னாலிருந்து
பார்க்க.
அம்மு
அதன் பின் அடிக்கடி கண்ணில் பட ஆரம்பித்தாள். கோவிலில்.. சாத்தார வீதி பூச்சந்தையில்..
துலா ஸ்நானத்தில்.. ரெங்கன் புறப்பாட்டில்..
நாலு
வீதியும் சுற்றி வந்து திருவந்திக் காப்பு சேவித்து விட்டுத்தான் போவாள். ஆண்டாள் ரெங்கா
என்று பிளிறும்போது அவள் கண்கள் ஜொலிக்கும் அழகே தனி.
ஓம்
ஐம் க்ரீம் க்லீம்.. அம்மு எனக்குக் கிடைப்பாளா பெருமாளே.. கோபி ஜன வல்லபாய.. வேலை
கிடைச்சதும் அம்முவைக் கல்யாணம் பண்ணிக்கணும்..
சேவார்த்திகள்
வரும் திசை பார்த்து உட்கார்ந்து ஜபிக்கப் போக.. (ஒருவேளை.. அம்மு வருவாளோ இப்போ) தெற்கைப்
பார்த்து உட்காராதே.. திரும்பு என்று தெரிந்த மாமி அதட்டி விட்டுப் போனாள்.
டவுன்
ரோட்வேய்ஸில் கணக்கு எழுதும் வேலை கிடைத்தது. கோவிலில் எடுபிடி வேலைக்குப் போய் பழகி
இருந்ததிலும்.. அவ்வப்போது ரெங்கனை ஏளப்பண்ணதிலும் என் சௌகர்யத்திற்குப் போய் கணக்கு
எழுதலாம் என்கிற வசதி வந்தது. ‘கண்ணனைக் கூப்பிடு.. சேவை பண்ணி வைக்க’ என்று முதலாளி..
அவருக்கு வேண்டியவர்களை.. அவருக்குக் காரியம் ஆகிற வேலைகளுக்கு.. என்னோடு அனுப்பி வைத்து..
மூலஸ்தானத்தில் கணையை எடுத்து உள்ளே நிறுத்தி ‘நன்னா சேவிச்சுக்குங்கோ’ என்று ஒரு தடவைக்கு
ரெண்டு தடவை கைவிளக்கு காட்டி.. வளர்த்துவானேன்.. என் கையிலும் காசு புழங்க ஆரம்பித்தது.
அம்மாவுக்கு
எடுத்த கருநீலப் பட்டுப் புடவை.. அம்மா அழுதாள்.
எனக்காடா..
எனக்காடா..
உனக்குத்தாம்மா..
உன்
ஜபம் உன்னைக் கைவிடலடா..
அப்போதுதான்
அம்மு வந்தாள். புடவை கட்டியிருந்தாள் தாவணிக்குப் பதிலாக. கையில் நாலு மூலையும் மஞ்சள்
தடவிய பத்திரிகை.
“அம்மா..
உங்களுக்கு நானே கொண்டு வந்து என் கையால தரணும்னு”
என்னைப்
பார்க்கக் கூட இல்லை. வந்தாள். கொடுத்தாள். நமஸ்கரித்தாள். போய் விட்டாள்.
அம்மாதான்
கல்யாணத்திற்குப் போனாள். பட்டுப் புடவை கட்டிக் கொண்டு.
ரோட்வேய்ஸ்
முதலாளி கார் எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் கேட்டிருக்கிறார். கண்ணன் வரவே இல்லியே..
என்னாச்சு.
வரலியா..
அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
வேலைக்குப்
போகாம எங்கடா போற..
தலை
கவிழ்ந்து பதில் சொல்லாமல்.. சாப்பிடாமல் படுத்துத் தூங்கிப் போகிறவனைத் திகைப்புடன்
பார்த்தாள்.
’இப்போ
அவனுக்கு நேரம் சரியில்லை.. ஒரு மண்டலம் சக்கரத்தாழ்வாருக்கு..’
அம்மா
தினமும் என்னை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறாள். சக்கரத்தாழ்வார் திண்ணையில்
உட்கார வைக்கிறாள். முடிந்தவரை பிரதட்சிணம் செய்கிறாள். தீர்த்தம் கையில் வாங்கி வந்து
என் முகத்தில் தெளிக்கிறாள். திரும்ப அழைத்துக் கொண்டு போகிறாள்.
நிச்சயம்
எனக்காக இல்லாவிட்டாலும் அம்மாவுக்காக.. அம்மாவின் நம்பிக்கைக்காக.. நான் சரியாகி விடுவேனாம்.
தெரு சொல்கிறது.
அவன்
நிச்சயம் நல்லா இருப்பாம்மா.. என்கிட்ட வேலைக்கு வருவான்.. எனக்கு நம்பிக்கை இருக்கு..
வீடு தேடி மாசாமாசம் வந்து.. வேலை பார்க்காமலே என் சம்பளப் பணத்தைக் கொடுத்து விட்டுப்
போகிறார் ரோட்வேய்ஸ் முதலாளி.
திண்ணையில்தான்
இப்போதும் என் படுக்கை. நடுத் தூக்கத்தில் நான் அம்மு என்று முனகுவதை.. நல்லவேளை..
யாரும் கேட்கவில்லை இதுவரை.
3 comments:
அருமை! நெகிழ வைக்கிறது!
அம்மு.....
சற்றே இடைவெளிக்குப் பிறகு இங்கே மீண்டும் வந்தேன். படித்தேன்....
நெகிழ்ச்சி....
அம்மு பறந்து போனாளே .....
அவனை மறந்து போனாளே :(
அம்மு கிடைத்தவன் அதிர்ஷ்டசாலி !
Post a Comment