January 06, 2016

அம்மு - 13





ஆபிஸ் ட்ரெய்ன் என்று 9.15 வண்டிக்கு பெயர். ரெயில்வே ஊழியர்கள் பெரும்பாலும் அந்த பாசஞ்சரில் போவதால். ஜங்ஷனில் இறங்கி ரெயில்வே லைனோடு நடந்து குறுக்குப்பாதையில் போய் (போகிற வழியில் தான் ரெயில்வே கேண்டின்) மெயின் ரோட்டைப் பிடித்தால் எங்கள் கல்லூரி.
ஸ்ரீரங்கம் ஸ்டேஷன் எப்போதுமே பாபுலர். ராக்போர்ட்டோ.. பல்லவனோ.. ராமேஸ்வரமோ.. எந்த வண்டியாய் இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விடக் கூடுதலாய் நின்று பயணிகளைப் பத்திரமாய் உதிர்த்து விட்டுப் போகும்.
கல்லூரி நாட்களில் கேட்கவேண்டுமா.. டவுன் ஸ்டேஷனில் இறங்கிப் போகும் ஸ்ரீரங்கம் பெண்கள்.. பிளாட்பார்ம் முழுக்க நாலைந்து பேராய் குழுமி நிற்பார்கள்.
நல்ல பேர் வாங்கிய என்னைப் போல ஓரிரு மடிசஞ்சிகளைத் தவிர மற்ற பையன்கள் என்ன விஷமிக்கலாம் என்று அலைவார்கள். ஜன்னல் இல்லை பெரிய கதவே வைத்த ஜாக்கட் முதுகுக்காரி மேல் மிளகு சைஸ் கல்லை விட்டெறிந்த பாபு அந்நாளில் ஹீரோ.
கல்லடி வாங்கியவள் ஆறடிக்குக் குறையாத உயரம். பெயர் கூட ஷோபாவோ என்னவோ. அவள் அண்ணனும் அதே ட்ரெய்ன். போய் புகார் செய்ய ‘நீ ஒழுங்கா ட்ரெஸ் பண்ணுடி’ என்று மானத்தை வாங்கினான்.
வண்டி கிளம்பியதும் தான் சிலர் ரன்னிங்கில் ஏறுவார்கள். ஒரு முறை நானே லேட்டாகி ஓடி வந்து தொற்றியபோது டவுன் ஸ்டேஷன் போவதற்குள் முழி பிதுங்கி விட்டது. குறிப்பாய் காவிரிப்பாலம் கிராஸ் செய்யும் தருணம். அப்போது மீட்டர்கேஜ் வேறு. தடதடவென்ற சத்தம். கீழே காவிரி (அப்போது) ஆக்ரோஷமாய் ஓடிக் கொண்டிருந்தாள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம். டவுன் ஸ்டேஷனில் வண்டி நின்றதும் வேகமாய் உட்பக்கம் நகர்ந்து மூச்சு விட்டேன்.
எங்கள் கல்லூரி ஸ்ட்ரைக்கிற்கு பெயர் போனது. நடந்த நாட்களை விட கல்லெறிந்த நாட்கள் தான் அதிகம். பிளாசா தியேட்டரை குத்தகைக்கு எடுத்தவர்கள் என்கிற கியாதி எங்களுக்கு உண்டு.
சார்லஸ் ப்ரான்ஸன்.. ஷான் கேனரி.. பட் ஸ்பென்சர்.. டெர்ரன்ஸ் ஹில்.. இப்படி என் வாழ்க்கையில் புகுந்தவர்களோடு.. அம்முவும்.
பியு முடித்து விட்டு பிகாம் முதலாண்டில் போனபோது சின்னதாய் பரு வந்தது. சித்தியா கேலியாகச் சிரித்தார். ‘கண்ணனுக்கு ஆசை வந்தாச்சு’
கிளியரிசில் போட்டாலும் அடங்காத தொல்லை. கிள்ளிடாதே என்று அட்வைஸ். ஆசை என்றால் என்ன என்று புரியாத.. மனப் பிரதேசத்தின் ஒரு மூலையில்.. தொட்டிச் செடியில் பூத்த ஒற்றை ரோஜா போல ஒரு படபடப்பு.
ஸ்டேஷனில் முதன் முதலில் ஒற்றையாய் நின்ற பெண் அம்மு. பிற பெண்கள் எல்லாம் தோழியரோடு நின்ற நாட்களில் இவள் மட்டும் தனியாய்.
அதனால் கவனம் ஈர்த்தாள். அலங்காரம் இல்லை. தலை முடி நீளம். பேசும் போது மற்ற பெண்கள் போல ஈசான்ய மூலை பார்ப்பது.. படபடவென்று சிமிட்டுவது எல்லாம் இல்லாமல் நேராய்ப் பார்வை. அவளுக்கு ஒரு தம்பி.. ரெங்கு.. இருப்பது அவள் ஒருநாள் டிபன் பாக்ஸை விட்டு வந்ததில் தெரிந்தது. ஓடி வந்து கொடுத்து விட்டு – பார்த்துப் போடா ரெங்கு – டுர்ரென்று மானசீகக் கார் ஓட்டிப் போனான். அப்போதெல்லாம் பிளாட்பார்ம் டிக்கட் மிரட்டல்கள் இல்லை. கட்டிய வேட்டியுடன் தோளில் துண்டுடன் காலை வாக்கிங் போகலாம் இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடி வரை ப்ளாட்பார்மில். கார்ட் தெரிந்தவர். டிக்கட் செக்கர் தெரிந்தவர். எஞ்சின் ட்ரைவர் தெரிந்தவர்.
எப்போதாவது வருகிற வட இந்திய – எப்போதோ குளித்த – பக்தர்களைத் தவிர பெரும்பாலும் வெறிச்சோடிக் கிடக்கிற ஸ்டேஷன். பைப்பைத் திறந்தால் பீச்சியடிக்கும் காவிரி நீர். இருவாட்சி வேணுமாம்மா என்று பூக்காரி நம்பிக்கை இல்லாத தொனியில் கேட்டு கடந்து போவாள். இருவாட்சிப் பூ பார்த்திருக்கிறீர்களா..
அம்மு ஜாதிப்பூ ப்ரியை. அதுவும் லைட் ரோஸ் கலந்த மாதிரி இருக்கிற வாசனை தூக்குகிற ஜாதிப்பூ. (டிஸ்கோ ஜாதி என்றும் சொல்வார்கள். டிஸ்கோ சாந்தி என்று தப்பாகப் படிக்க வேண்டாம்). தெரியாமல் நான் இருவாட்சி வாங்கிக் கொடுத்து.. அம்மு எனக்கு ஜாதிப்பூ தான் பிடிக்கும் என்று முகத்திற்கு நேராய் சொன்னதும் நீட்டிய பூக்கையுடன் விழித்த நாள் இன்னும் மனசில் அழியாக் கோலமாய்.
அது ஒரு விபரீத நாள். முதல் பீரியட் கிடையாது. அமாவாசை என்பதால். ஆனால் நாங்கள் வழக்கம் போல ஆபிஸ் வண்டிக்குக் கிளம்பி விடுவோம். ரெயில்வே கேண்டினில் ரெண்டு இட்லி ஒரு மக் சாம்பார் வாங்கிக் கரைத்துக் குடித்து விட்டு மப்பில் வகுப்பிற்குப் போவோம். ரெயில்வே ட்ராக்கில் நடந்த போது பாபு சவால் விட்டான்.
நான்.. பாபு.. சுந்து.. சிவா நால்வரும் ஒரு செட். டிராக்கிலிருந்து தனியார் பகுதி வழியே (இரும்பு வேலி பிரித்து) நடந்தபோது ஒரு பச்சைப் பாம்பு அப்பிராணியாய் ஓடியது.
அடிரா பாம்பை.. என்று பாபு கத்தினான்.
பாவம்டா.. அது விஷம் இல்லை இது நான்.
எங்கள் சர்ச்சையில் அது புதருக்குள் மறையப் போனது. பாபு அடித்து விட்டான் அதற்குள். கடைசியாய் என்னை ‘நீயுமா’ பார்வை பார்த்த பிரமை.
பாபு சீண்டினான். “கண்ணன் கிட்ட ஒரு கல்லு கொடுடா. அவனும் அடிக்கட்டும்”
”வேணாம்டா” கெஞ்சினேன்
எங்க ப்ரெண்ட்ஷிப் வேணுமா வேண்டாமா
மிரட்டினான். 99 சதவீதம் செத்திருந்த பாம்பின் மேல் என் கல் பட்டது.
”அட.. கண்ணனுக்குக் கூட துணிச்சல் வந்தாச்சு”
“அப்போ டெஸ்ட் பண்ணிர வேண்டியதுதான்”
“நம்ம ஸ்டேஷன்ல நிக்கிதே.. அந்த ஒத்தைக் கிளி.. அவகிட்ட போய் நீ பேசணும்”
“போடா.. என்னால முடியாது”
”நாளைக்குப் பேசற”
என்னைத் தனியே விட்டு முன்னால் போய்விட்டார்கள். பின்னால் துரத்திக் கொண்டு ஓடினேன்.
மறுநாள். இன்னும் கூட்டம் சேரவில்லை. ஒவ்வொருவராய் வருகிற நேரம். அம்மு வந்து விட்டாள். நாங்களும். ’போடா.. போய்ப் பேசு’
கால்கள் துவண்டன. வார்த்தை வராமல்  தந்தியடித்தேன். பார்வையால் கெஞ்சினேன். ‘போ’ 
அம்முவை நெருங்கி…
“என்னடா கண்ணா” என்றாள் ஸ்பஷ்டமாய்.
“க.. க..”
“வசந்தி அண்ணா தானே நீ”
“ஆ.. ஆமா”
“இன்னிக்கு உங்காத்துக்கு வரேன்னு சொல்லு”
எப்படித் திரும்பி வந்தேன் என்று புரியவில்லை. பாபு என்னைப் பார்த்த பார்வையில் பொறாமை தெரிந்தது. பெரும்பாலும் அவன் வாய்ச் சவடால் தான். கூசாமல் ஏ கதைகள் சொல்வான். தெருப் பெண்களுக்கு பட்டப் பெயர் வைப்பான். கோழி என்று ஒரு முறை யாரையோ அழைத்து அடி வாங்கினான்.
”என்னடா சொன்னா”
“சாயங்காலம் எங்காத்துக்கு வராளாம்”
“நாங்களும் வரோம்”
சொன்னபடி அம்மு வந்தாள். வசந்தியும் அவளும் கேமிரா ரூமில் (அதற்கு ஏன் அந்தப் பெயர் என்று இன்று வரை தெரியாது. ஒரே இருட்டாக இருக்கும். அக்கம்பக்க குழந்தைகளை வைத்துக் கொண்டு பேய்க் கதைகள் சொல்ல எனக்கு அந்த அறைதான் வசதி) பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாபு சைக்கிளில் வந்தான்.
“அவங்க வரலியா”
“நான் மட்டும்தான் வந்தேன்.. எங்கே அவ”
“வேணாம்டா போயிரு”
பாபு ‘மாமி’ என்றழைத்துக் கொண்டு என்னை விலக்கி உள்ளே போனான்.
வசந்தி “அம்மா இல்லை.. கோவிலுக்குப் போயிருக்கா” என்று சொன்னது கேட்டது. நானும் உள்ளே ஓடினேன்.
“தேர்த்தம் குடேன்”
“மர பீரோ மேல சொம்புல இருக்கு. எடுத்துக்கோ”
அம்மு கிளம்புகிற வரை பழியாய் வாசலில் என்னைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான். அம்மு வெளியே வந்தாள்.
“அம்மு.. நானும் அந்தப் பக்கம் தான் போறேன்.. கொண்டே விடட்டுமா” என்றான் பட்டென்று.
அம்மு அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. போய்விட்டாள். போகுமுன் என்னை ஒரு முறை முறைத்து விட்டு.
பிளாசாவிற்கு படம் போய்விட்டு.. கரண்ட் போய்.. அப்புறம் படம் போட்டு வீடு திரும்ப இருட்டி விட்டது. அம்மு எதனால் லேட் என்று இப்போது  ஞாபகம் இல்லை. ஸ்டேஷனில் அவளும் இறங்கினாள்.
“நில்லுங்கோ”
நின்றேன்.
“உங்கம்மா உங்களை ரொம்ப நம்பியிருக்கா.. சகவாசம் சரியில்லை உங்களுக்கு.. பார்த்துக்குங்கோ”
என் கண்களைப் பார்த்து சொன்னாள். போய் விட்டாள்.
அன்றிரவு நான் படிக்க ஆரம்பித்தேன். அந்த மாத டெஸ்ட்டில் நான் வாங்கிய மார்க்கை வசந்தி சொல்லியிருக்க வேண்டும் அம்முவுக்கு.
‘பூ வாங்கித் தரீங்களா எனக்கு’ என்றாள் போகிற போக்கில்.
இருவாட்சி வாங்கிப் போனேன். ஜாதிப் பூ பிடிக்கும் என்று தெரிந்தது. பிகாம் முதல் வகுப்பில் தேறிய இருவரில் நானும் ஒருவன். கிளியரிசில் பிறகு உபயோகிக்கவில்லை. காஸ்டிங் பண்ணுங்கோ என்றாள். டால்மியா சிமெண்டில் கல்லூரி மூலமாய் இண்டர்வியூவிற்கு அழைப்பு வந்த ஏழு பேரில் நானும் ஒருவன்.
அம்முவின் மார்க்கிற்கு மத்திய அரசு வேலை கிடைத்து விட்டது. சென்னை போஸ்டிங். நாலு வருஷம். எங்கிருக்கிறாள் என்று தெரியாத நாட்கள். என்ன முயற்சித்தும்.
‘எனக்கு ரொம்ப முடியலைடா’ என்று அம்மா வற்புறுத்தி.. கல்யாணமாகி பெரிய மனுஷியாய் இருந்த வசந்தியும் கிடுக்கிப் பிடி போட லதாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.
சமீபத்தில் அம்முவைப் பார்த்தேன். அவள் ஆபிசில். லிப்ட் கதவு திறந்து நான் வெளியே வந்தபோது சற்று தொலைவில் அம்மு. வயசாகி இருந்தாலும் அதே நேர்ப்பார்வை. கம்பீரம். ‘கண்ணா’
“எப்படி இருக்கீங்க”

“இருக்கேன் அம்மு”

(படம் உதவி கூகிள்.  நன்றி திரு மணியம் செல்வன்)

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

சில பெண்கள்தான் நம் வாழ்க்கையைத் தீர்மாணிக்கிறார்கள் என்பதில் ஐயம் இல்லை! அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்த மாத டெஸ்ட்டில் நான் வாங்கிய மார்க்கை வசந்தி சொல்லியிருக்க வேண்டும் அம்முவுக்கு......... ‘பூ வாங்கித் தரீங்களா எனக்கு’ என்றாள் போகிற போக்கில்.//

மிகவும் ரஸித்தேன்.

// ‘எனக்கு ரொம்ப முடியலைடா’ என்று அம்மா வற்புறுத்தி.. கல்யாணமாகி பெரிய மனுஷியாய் இருந்த வசந்தியும் கிடுக்கிப் பிடி போட லதாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.//

மிகவும் யதார்த்தமான வரிகள்.

//தெரியாமல் நான் இருவாட்சி வாங்கிக் கொடுத்து.. அம்மு எனக்கு ஜாதிப்பூ தான் பிடிக்கும் என்று முகத்திற்கு நேராய் சொன்னதும் நீட்டிய பூக்கையுடன் விழித்த நாள் இன்னும் மனசில் அழியாக் கோலமாய்.//

தன் விருப்பு வெறுப்புக்களை பட்டென்று சொல்லிவிடும் குணச்சித்திர கதாபாத்திரமாக் அம்முவைக் காட்ட இந்த ஒரு நிகழ்வே போதுமானதாக உள்ளது. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

G.M Balasubramaniam said...

சரளமான நடை . காதல் என்றால் என்னவென்று தெரியாத வயது நினைவுகள் நாட்கள் பட எண்ணி ஏங்கும் மனம் அருமை

வெங்கட் நாகராஜ் said...

இருவாட்சி.... ஜாதி மல்லி.... போலவே கதையும் சுகம்.....

இராஜராஜேஸ்வரி said...

ஜாதிப்பூவாய் மணக்கும் நினைவலைகள்...