February 21, 2016

அம்மு 19




அம்மு என்னிடம் சொன்னபோது முதலில் எனக்குப் புரியவில்லை. நல்ல தூக்கத்தில் எழுப்பி முழு நினைவுக்கு வருவதற்குள் சொல்லப்பட்ட விஷயம்.
‘ நீங்க அப்பா ஆகப் போறேள்’
‘அப்பா தூங்கிண்டு இருப்பாரே’
‘ஹைய்யோ.. முழிச்சுக்குங்கோ ‘
மிரள மிரள விழித்தேன்.
‘நீங்க அப்பா ஆகப் போறேள் ‘ என்றாள் நிறுத்தி நிதானமாய்.
அம்முவின் முகம் இருட்டில் ஜொலித்தது. 45 நாள் சிசுவை வயிற்றில் தொட்டுப் பார்த்தேன்.
“அம்மு. அம்மாட்ட சொன்னியா “
“முதல்ல உங்ககிட்ட”
“அம்மாவை எழுப்பட்டுமா”
“லூசா நீங்க “
கொஞ்ச நேரம் கொஞ்சினோம். அம்மு தூங்கி விட்டாள் என்று புரிந்ததும் ஹாலுக்கு வந்தேன் . அம்மா தூக்கத்தில் புரண்டாள். எழுப்புவதா.. ச்சே..
திரும்பி விட்டேன். அம்மாவின் குரல் கேட்டது.
“என்னடா கண்ணா “
அம்மாவின் கைகள் என்ன மிருது. என் கண்ணீர் நனைத்தது. பேச அவசியமில்லாத தருணங்கள் வாழ்வில் சில.
“நிஜம்மாவாடா.. நினைச்சேன்.. அவ முகத்தைப் பார்த்து..”
“அவளே கார்த்தால சொல்வாம்மா “
அம்மா எழுந்து பெருமாள் சன்னிதிக்குப் போனாள். கோவிலாழ்வார் தூக்கத்தில் இருந்தார். உள்ளிருந்த தவழும் கிருஷ்ணன் என்ன சொன்னாரோ.. அம்மா ஜ்வலிக்கிற முகத்துடன் வந்தாள்.
“போடா.. போய்த் தூங்கு.. அவ தனியா படுத்துண்டிருக்கா “
அம்முவைத் தலையில் தாங்கிய கால கட்டம் அது. கை உசத்தினாலே போய் பறித்துக் கொண்டு வந்து நின்றோம். இது பிடிக்குமோ அதுவோ என்று தினம் செய்தவைகளை அம்மாளு சாப்பிட்டு புஷ்டி ஆகிக்கொண்டிருந்தாள்.
சீமந்தம் முடிந்ததும் அம்முவை அழைத்துக் கொண்டு போவார்கள் என்று பேச்சு எழுந்ததும் நான் சொன்னேன்.
‘இங்கேயே வச்சு பார்த்துக்கலாமே’
‘உளறாதே.. அம்மு அவாத்துக்கு போகிறதுதான் நல்லது.’
‘அம்மு நீ சொல்லு. இங்கே இருக்கியா அங்கே போறியா’
அம்மு மௌனமாய் இருந்தாள்.
‘சொல்லு அம்மு ‘
‘அவா வருத்தப்படுவாளே போகாட்டி’
‘உன் இஷ்டம் என்ன’
‘போயிட்டு வரேனே’
எனக்குள் இருந்த விஸ்வாமித்திரரும் துர்வாசரும் தங்களை வெளிப்படுத்திய முதல் நிகழ்வு அது.
“போய்க்கோ .. அங்கேயே இருந்துக்கோ”
அம்முவின் அம்மா பக்கத்தில் இருந்தாள். என்னை விட நிதானமாய் அழுத்தமாய் சொன்னாள்.
‘அம்முவைப் பார்த்துக்க எங்களுக்கும் தெரியும். நாங்களே வச்சுக்கிறோம்’
முறைத்துக் கொண்டு வந்து விட்டேன். அந்த வாரம் அலுவலகத்திலிருந்து அப்படியே பஸ் பிடித்துப் போனேன். நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து காலிங் பெல் அடித்தேன்.
இரவு 12 மணிக்கு தோசை வார்த்துப் போட்டார்கள். அம்முவை ஒரு வார இடைவெளிக்குப் பின் இருட்டில் அருகில் பார்த்தபோது போன வாரம் நானா கத்தினேன் என்று இருந்தது.
ஜ்வல்யா பிறந்தபோது தற்செயலாய் நான் அங்கிருந்தேன்.
‘அம்முவை வலி எடுத்ததுன்னு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போயிருக்கா’
ஹாஸ்பிடல் ஓடினால் .. ஜ்வல்யா பிறந்தாச்சுன்னு தகவல்.
அப்படியே குட்டி அம்மு. தலைமுடி கருகருவென்று .. அம்மாவுக்கு தகவல் சொல்லி விட்டேன் . அன்று கிளம்ப மனசே இல்லை. மறுபடி புண்ணியாகவசனத்திற்கு வரவேண்டும் .. லீவு போடணும்.
அந்த மூன்று மாசம் நான் நிலை கொள்ளாமல் இருந்தேன். 6 மாதத்தை மூன்றாக குறைத்து எனக்கு சலுகை தந்தார்கள்.
‘மாப்பிள்ளையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு.. அம்முவைக் கொண்டு போய் விட்டுறலாம்’
ஜ்வல்யா வந்தபின் எங்கள் வீட்டில் களை கட்டி விட்டது.
‘என்னடா பொண்ணு தானா ‘ என்று கேட்டால் போதும் என்னை அடக்குவது சிரமம்.
‘ஏன் இப்படி கோவம் வருது உங்களுக்கு ‘ அம்முவுக்கே ஆச்சர்யம்.
எனக்கும் புரியவில்லை. பிறகு வருத்தப்படுவேன். ஆனால் மறுபடி அதே கேள்வியை எதிர் கொண்டால் துர்வாசர் தான்.
ஜ்வல்யா இரவில் விளையாடுவாள். பகலில் தூக்கம். இரவில் அவள் அழுதால் அம்முவை எழுப்புவேன்.
‘விடுங்க ‘
‘அவ அழறாம்மா’
‘கொஞ்ச நேரம் மடில போட்டு ஆட்டுங்க .. தூங்கிடுவா ‘
அது பசி அழுகையா .. தூக்க அழுகையா .. இந்த வித்தியாசங்கள் அம்முவுக்கு எப்படி புலனாச்சு.
மடியில் ரோஜா புஷ்பத்தைக் கிடத்திக் கொண்டு வலது துடை தானாக ஆடியது.
இதுவே கிண்டலாச்சு என் மீதும்.
‘கண்ணன் சும்மா இருக்கும் போதும் தானா தொடையை ஆட்டிண்டு இருக்கான்’
அம்மு தூங்கிக் கொண்டிருந்தாள். ஏன் சட்டென்று விழிப்பு வந்தது .. தெரியவில்லை. ஜ்வல்யா தானாய் கையாட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.
‘குட்டி..’
‘ப்பா’
அம்முதான் கூப்பிடுகிறாள் என்று முதலில் நினைத்தேன். இல்லை.. அவள் தூக்கத்தில். ஜ்வல்யா !
என் எச்சில் முத்தம் அழுத்தமாய் பதித்தேன்.
லைட் எரியும் கீச்சிடும் ஷூ அம்முவால்தான் எனக்குத் தெரிந்தது. ஜ்வல்யா நடக்க ஆரம்பித்ததும் அதை வாங்கினோம். வெளியே போனால் ஜ்வல்யாவை தூக்கிக் கொள்வது என் பொறுப்பில். உச்ச கர்வம் அப்போது. யாரும் சாதிக்காத ஒன்றைச் செய்த மாதிரி.
இதிலும் ஒரு நாள் ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி. அன்று என்னவோ ஒரு சோர்வு. ஜ்வல்யாவை நடக்கச் சொன்னேன்.
‘தூக்கிக்கோப்பா ‘
தூக்கிக் கொண்டேன் .
‘நீ காலேஜுக்கு போனாலும் நான் தான் தூக்கிண்டு போகப் போறேன்’
சொல்லியிருக்கவேண்டாம். வாயில் சனி.
‘இறக்கி விடுப்பா ‘
விடுவதற்குள் அப்படியே சறுக்கி விட்டாள். கடைசி வரை நடந்தே வந்தாள். அம்முவிடம் பொருமித் தீர்த்து விட்டேன். பாரேன்.. எத்தனை வீம்பு.
அதன் பின் அவளை நான் எதுவும் சொன்னதில்லை. அவளாக நடக்கும் வரை என் தோளில் தான்.
அம்முவை என் மனதில் இருந்து ஓரம் கட்ட முடியும் என்று அதுவரை நான் யோசித்ததில்லை. ஜ்வல்யா வந்த பிறகு அம்மு இரண்டாமிடத்திற்கு நகர்ந்தாள். பதவிக் குறைப்பை அம்மு சுலபமாய் எடுத்துக் கொண்டாள்.
ஜ்வல்யா ஸ்கூலுக்கு போக ஆரம்பித்து .. என்னை விட்டு கொஞ்சம் விலக ஆரம்பித்து .. அவளுக்கென்று ஒரு உலகம் சிருஷ்டித்துக் கொண்டபோது .. நானும் அம்முவும் படுக்கையில் இருந்தபோது லேசான குற்ற உணர்வுடன் கேட்டேன்.
“அம்மு என் மேல ஏதாச்சும் கோவமா”
‘எதுக்கு’
‘இல்ல.. இப்பல்லாம் நான் ஜ்வல்யா கூட இருக்கேன்.. அவ கேட்டதை செய்யறேன். உன் கூட இருக்கறது குறைஞ்சு போச்சு ‘
அம்மு சிரித்தாள்.
‘அவ வேற .. நான் வேறயா ‘
அம்முவை இன்னும் அதிகமாய் நான் நேசிக்க ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான்.

4 comments:

G.M Balasubramaniam said...

அப்போதெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சுகமான தருணங்கள் இப்போது நினைத்துப் பார்க்கும் போதுஇதெல்லாம் சகஜந்தானே என்று தோன்றும்

வல்லிசிம்ஹன் said...

அழகு அம்மு. அதைவிட அழகு ஜ்வல்யா.
ஏதாவது சட்டென்று பயமுறுத்திவிடாதீர்கள். ஜ்வல்யா
கல்யாணம்.அவளுக்குக் குழந்தை எல்லாம் எதிர்பார்க்கிறேன். ஜி.

ஹ ர ணி said...

anbulla rishban

vanakkam. arputhamaana nadai. nalla thokuppaaka varum. ellak kathaikalaiyum padithuvittu ezthuven.

vaazhtukkal.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அம்மு + ஜ்வல்யா நல்ல பெயர்கள்.

பிஞ்சுக்குழந்தை ஜ்வல்யா போலவே கதையின் நடையிலும் ஓர் தனி அழகு.

//அந்த மூன்று மாசம் நான் நிலை கொள்ளாமல் இருந்தேன். 6 மாதத்தை மூன்றாக குறைத்து எனக்கு சலுகை தந்தார்கள்.

‘மாப்பிள்ளையைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு.. அம்முவைக் கொண்டு போய் விட்டுறலாம்’//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! கஷ்டத்தை உணர்ந்து சலுகை அளித்த மாமியார் வாழ்க ! :)