May 31, 2016

பிச்சி

நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப்ளாட்பார்மில் அவள்.
தலைக்கு கர்ச்சீபைக் கட்டியிருந்தாள். என்னைப் பார்க்கவில்லை. வானத்தைப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தாள்.
சில வருடங்களுக்கு முன் அவளைப் பார்த்திருக்கிறேன். ஒரு மகன்.. ஒரு மகள் உண்டு. அப்போதும் தெருவில் தான். தெளிவாகப் பேசிய காலம்.
'அண்ணே..ஏதாச்சும் கொடுங்க' என்பாள்.
பணத்தை வாங்கிக் கொண்டு உரிமைக்காரி போலபோய்விடுவாள்.
கொஞ்ச காலம் கண்ணில் படவில்லை. இப்போது அவளேதான்.. தலை நரைத்து.. வாழ்க்கை தன் பேனா இங்க் தீரும் வரை எழுதிக் கிழித்த கோலத்தில்.
என்னைப் பார்த்து விட்டாள்.
'நல்லாருக்கியா'
சிரித்தேன்.
'ரொம்ப நாளாச்சு..உன்னைப் பார்த்து'
தலையாட்டினேன்.
'கையில் என்ன வச்சிருக்கே'
'தயிர் சாதம்.. கோவில் பிரசாதம்'
'கொண்டா' பேசினை எடுத்து நீட்டினாள்.
வாய் ஓயாமல் பேசிக் கொண்டே.
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற அல்லது நானாய் இணைக்க வேண்டிய வரித் துண்டுகளில் பேச்சு.
'அவ்வளவையும் பிடுங்கிக் கொண்டு விரட்டிட்டான்.. எனக்கு வழியில்ல.. மூணு வீடு வச்சிருந்தேன்..கேஸ் போடணும்.. நீ வரியா..மிரட்டிப் பார்க்கிறியா.. எல்லாத்தியிம் வாசல்ல தூக்கிப் போட்டான்.. இப்போ ஆளில்ல.. நிக்க வச்சு கேக்கணும்'
ஒரு ஸ்பூன் பிரசாதமாய் வைத்துக் கொண்டு முழுவதையும் பேசினில் வைத்தேன்.
'எனக்கு ஒரு வீடு பார்த்து வைக்கிறியா..'
அவளைப் பார்த்தேன். காலம் சற்றே பின் நொண்டி அடித்தது.
'ம்'
அவள் திரும்பி இலக்கில்லா பார்வையில் அவளை நிர்க்கதியாக்கியவர்களை கேள்வி கேட்க ஆரம்பித்தாள். கை தன்னிச்சையாய் சாதத்தை எடுத்து அவளுக்கு ஊட்டியது.
நகர்ந்து தெருவில் நடந்தேன். யாரோ கை தட்டினார்கள்.
'அவகிட்ட என்ன பேச்சு.. பைத்தியம்..'
திரும்பிப் பார்த்தேன். பசியடங்கிய நிம்மதியில் அவள் பேசினைச் சுத்தமாய்க் கழுவி இடுப்புத் துணியில் துடைத்து நெகிழியில் சொருகிக் கொண்டிருந்தாள்.
ஏன் ஒரு பெரிய வீட்டைக் கட்டக் கூடாது.. சாப்பாடு.. படுக்கை வசதியுடன்..
யோசனையுடன் நகர்ந்தவனை தெருக்காரர் திட்டியது காதில் விழவில்லை.

7 comments:

மோகன்ஜி said...

பல நாட்களுக்குப் பின் உங்களை இங்கு பார்ப்பது பழைய கோலாகலமான நாட்களை மீட்டு வருகிறது.
நாமெல்லோருமே அவளைப்போல மனதின் கோணிக்குள் துருத்திவைத்த நினைவுக் குப்பைகளுடன் தான் திரிகிறோமோ?

கோமதி அரசு said...

ஏன் ஒரு பெரிய வீட்டைக் கட்டக் கூடாது.. சாப்பாடு.. படுக்கை வசதியுடன்..//

ஈர நெஞ்சின் நினைவுகள் நனவாகட்டும்.

G.M Balasubramaniam said...

இதுபோன்ற கதாபாத்திரத்தை நான் சந்தித்து இருக்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைவரும் இவர்களைப் போன்றவர்ளை வாழ்வில் சந்திக்கிறோம். ஆனால் இவ்வாறாக அனுபவத்தைப் பகிர்வது என்பதானது உங்களைப் போன்றோருக்கு மிக எளிது என்பதை உங்களது பதிவு உணர்த்துகிறது. நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கண் முன்னே பிச்சியை நிறுத்தி வைத்தது உங்கள் எழுத்து! அருமை!

Geetha Sambasivam said...

படிச்சுட்டேனே! :)

Thenammai Lakshmanan said...

மோகன் ஜி சொன்னது உங்கள் கதையின் எஃபக்டில் எனக்கும் தோன்றியது.