November 30, 2020

 ஈரம்

ரிஷபன்
_____________
மனிதன் தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறரால் நிமிர்த்தி வைக்கப்பட்டவனாக இருக்கக் கூடாது.
--- மார்க்ஸ் அரேலியஸ்.
_______________
"கிழம் கடைசியில என்னதான் சொல்லிச்சு ? " என்றார் தட்டிலேயே கை கழுவியபடி. பேசாமலிருந்தேன். இவர் எதிர்பார்க்கிற பதில் என்னிடம் இல்லை .
"கிழவிக்கு என்னைத் தவிர மத்தவங்க எல்லோர் மேலயும் அன்பு பொங்கி வழியுது. கேட்காமலேயே பணம் தருது " என்றார் மறுபடி.
மூலையில் கட்டிலில் படுத்திருந்த மாமியாரிடம் அசைவில்லை. மகன் பேசுவதைக் கவனித்துக்கொண்டு இருக்கிறாரா.. அல்லது, தூங்கிவிட்டாரா என்று புரியவில்லை. இப்போதே மணி
பதினொன்றரை ஆகி விட்டது.
இப்போதெல்லாம் தாமதமாகத்தான் இரவில் வீடு திரும்புகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் மூன்று மணிக்கு மேலும்! இதர தினங்களில் இரவு ஒன்பது மணிக்குள் கடை அடைத்துவிடுவார் முன்பெல்லாம். சரியாக ஒன்பது பதினைந்துக்கு வீட்டில் இருப்பார். வாசலில் மொபெட்டின் சத்தம் கேட்கும்.
இப்போது சைக்கிள்தான். மொபெட்டையும் விற்றாகிவிட்டது. கடையை மூடிவிட்டாலும் திரும்புவது லேட்டாகத்தான். கேட்டால், 'சரக்கு பிடிக்க போனேன். அது.. இது.' என்று ஏதேதோ காரணங்கள்
கடை அப்படியொன்றும் இப்போது பிரமாதமாக நடக்கவில்லை அருகிலேயே இருபது அடியில் இன்னொரு கடை... அழகான கண்ணாடி ஷோகேஸ்களுடன். கூட்டம் இப்போது அங்கே போகிறது பின்னே... எந்தச் சாமானைக் கேட்டாலும் 'இல்லை' என்று பதில் வந்தால் யார்தான் விரும்புவார்கள், கடைக்கு வர.
சொன்னால் இவருக்குக் கோபம் வரும்
"என்னையே குறை சொல்லு... நான்தான் தலைதலையா அடிச்சுகிறேனே... கையில பணம் இல்லே.. சரக்கு வாங்கிப் போடணும்னு .... கிழவி வச்சுக்கிட்டே தரமாட்டேங்குது.''
தராமல் இல்லை. முன்பெல்லாம் கொடுத்தவர் தான். ஆனால், பண விஷயத்தில் கிழவி கெட்டி. கேட்ட பணத்தை எண்ணிக் கொடுத்து விட்டு, பேங்க் வட்டி கொடுக்கவேண்டும் என்று கறராகச் சொல்லிவிடும்.
இவரும் நாலைந்து முறை ஐந்து ஐந்தாகப் பணம் வாங்கிவிட்டு, இன்று வரை வட்டியில் பாதிதான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதைத் தவிர வெளியிலும் கடன். கேட்டால் என்னென்னமோ பதில்கள்.
நல்ல வேளை. குழந்தை ஒன்றோடு நின்றது. பிறந்ததும் பெண். அபிராமியை வளர்த்து ஆளாக்கினால் அதுவே பெரிய காரியம் என்று பெருமூச்சுவிடத் தோன்றும்.
படுக்கையில் முன்பு போல் படுத்ததும் தூக்கம் வருவதில்லை. இப்போது என்னென்னவோ நினைவுகள் மனசு அலை பாய்கிறது. கணவனும் முன்புபோல் இல்லை. ஆதரவான தொடுதல்களும், சீண்டல்களும் அற்று, தேவைக்கு மட்டும் வாரத்தில் ஒருநாள் இயந்திரத்தனமாய் இயக்கங்கள். மனசு ஒட்டாமல் காரியங்கள். எதிர்பார்க்கிற ஆசையும் அற்றுப்போய் எதிர்பார்க்க வைக்கிற தூண்டுதல்களும் இல்லாமல் போனது
"தூங்கிட்டியா"
எப்படித் தூக்கம் வருமா....? இந்த மனிதர் ஏதோ கடை கண்ணி வைத்தும் நல்ல செயலாக இருக்கிறார் என்றுதான் கட்டிக் கொடுத்தார்கள். முதலிரவன்றே நாலு பவுனில் செயினை அன்புப்பரிசு என்று போட்டவர் தான்.
அது பழங்கதை. நான் போட்டுக்கொண்டு வந்ததும் சேர்த்து இப்போது போய்விட்டது. கேட்டால் எவர் நம்புகிறார்கள்.
" உம் புருஷனுக்கு ஏதாச்சும் கெட்ட பழக்கம் இருக்குதோ என்னவோ.. எப்படி இந்த மாதிரி செலவாகும்....?'' என்றுதான் சொல்கிறார்கள்
எனக்குத் தெரிந்து வேறு பழக்கங்கள் இல்லை. என்ன.. கொஞ்சம் செலவாளி! கையில் பணம் இருந்தால் கண் மண் தெரியாது. செலவாகிற வரை தூக்கம் வராது. அபிராமிக்கே செயின், வளையல் என்று வாங்கித் தந்து அசத்தியவர்தான். இப்போது அதுவும் இல்லை .
"அபிக்குட்டி அதுக்குள்ளாற தூங்கிருச்சா?'' என்றார் மறுபடி
"இப்ப மணி என்ன தெரியுமில்லே?"
"என்ன பொழைப்பு போ. கடையைக் கொஞ்சம் நல்லா பண்ணிரலாம்னுதான் பார்க்கிறேன் ரெண்டு மூணுபேர்கிட்டே பணத்துக்கு அலைஞ்சு பார்த்தேன். ஒண்ணும் தேறலே...''
கால்களை நன்றாக நீட்டிக் கொண்டேன் காலையிலிருந்து ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலை. இரவு படுத்தால் இடுப்பு நோகிறது
"இந்தக் கிழவி கூட இப்படிச் சதி பண்ணுதே..."
"அவங்களைக் குறை சொல்லாதீங்க... முன்னால் கேட்டப்ப எல்லாம் கொடுத்தவங்கதானே?" என்றேன் உணர்ச்சியை அடக்க இயலாமல் .
"அதையே சொல்லு. இப்ப என்ன... வேணும்னா கேட்கறேன். தேவை வந்திருச்சு"
"அப்படி என்ன தேவை? முன்னால் எல்லாம் நீங்களே சமாளிச்சீங்களே...?''
"அதெல்லாம் உனக்குப் புரியாது. நானும் மனுஷந்தான்... உனக்கே தெரியும். அப்படி இப்படி போகற வழக்கம் இல்லே. ஏதோ... ரெண்டு ஒண்ணு தப்பா முடிவு எடுத்து.. பணம் நஷ்டமாயிருச்சு.... சரி இப்ப ஈடு கட்டிரலாம்னு பார்த்தா ஒத்து வர மாட்டேன்னா"
சுருண்டு கிடக்கிற புருஷன் மீது அனுதாபம் சுரந்தது. ஆனாலும், என்னால் ஏதும் செய்ய இயலாது. இனி கழற்றிக் கொடுக்க கட்டிய சேலை மட்டும்தான் மிச்சம். ஒரிஜினல் இருந்த இடங்களில் இப்போது கவரிங் மட்டுமே!
"இவகிட்டே தொங்கக் கூடாதுன்னுதான் பார்க்கறேன். சனியன் பிடிச்ச விதி. வெளியே நமக்கு தோதுப்பட மாட்டேங்குது "
கிழவியின் சாதாரண இருமல்கள் இவ்வளவு பெரிய ஜுரத்திற்கு அஸ்திவாரம் என்று முதலில் புரியவில்லை.
சோதனையாய் கிழவியின் உயிர் பிரிகிற நேரம் இவர் வீட்டில் இல்லை. அபிராமியைத்தான் அனுப்பினேன் கூட்டிவரச் சொல்லி.
" கொஞ்சம் பொறுத்துக்குங்க. இதோ வந்திருவாரு" என்றேன், மாமியாரின் நெஞ்சை நீவி விட்டு
"எனக்குத் தாங்காது... போதும் போ! இனிமே இருந்து என்ன செய்யப்போறேன்?'' என்றார் மூச்சுத் திணறல்களுடன்
வென்னீரின் பலத்தில் மறுபடி சொன்னார். டம்ளரைக் கீழே வைத்தேன்.
"இங்கே பாரு.. நீ எனக்கு ஒரு சத்தியம்
செய்யணும் "
"எ...ன்னம்மா ?"
''தலையணைக்குக் கீழே ஆறு ரூபா இருக்குது. புரியுதா...? ஆறாயிரம்"
தொண்டை உலர, மாமியாரையே வெறித்தேன்
''அவன்கிட்டே காட்டிராதே... எல்லாம் என் பேத்திக்குத்தான். புரியுதா? அப்புறமா பேங்க்ல போட்டிரு... அவ பேர்ல இது இருக்குதுன்னு தெரிஞ்சா
இதையும் காலி பண்ணிருவான்.."
அந்த நிலைமையிலும் எனக்கு ரோஷம் வந்தது.
"அவரு ஒண்ணும் மோசமான ஆளில்லே"
"புரியுதுடி... ஆனா.. பிடிவாதக்காரன். எது நமக்கு ஒத்துவரும், ஒத்துவராதுன்னு விவேகம் வேணும். பிஸினஸ்ல லாபநஷ்டம் வரலாம்... ஆனா... இப்படிப் பணத்தை அழிச்சுக்கிட்டே இருக்கிறது புத்திசாலித்தனமில்லே.. அதனாலத்தான் கடைசியா இந்த பணத்தையாவது சேர்த்து வச்சிரணும்னு பார்த்தேன் போ...! இதைப் பத்திரமா வச்சிட்டு வா. அவன்கிட்ட காட்டாதே"
உள்ளூற உறுத்தியது. கிழவியின் பேச்சில் தெரிந்த நியாயத்தையும் மீறி தாலி கட்டிய கணவனுக்குத் தெரியாமல் ஒரு காரியம் செய்வதா என்ற தடுமாற்றம்
"ஏதாச்சும் அப்புறம் கேட்டா நான்தான் சத்தியம் வாங்கிட்டேன்னு சொல்லிக்க.. அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான்.. புத்தியா நடந்துக்க... அவனை மட்டும் நம்பி புண்ணியமில்லே. நீயும் சமயத்துல உஷாரா இருந்தாதான் குடும்பம் ஓடும். போ... போ!''
கிழவி மனசு அப்படி ஒன்றும் கல் இல்லை. உள்ளூர குடும்ப நன்மைக்கு உருகுகிற ஈரம் இருந்திருக்கிறது என்று எனக்கு மட்டும் புலப்பட்டு என்ன பயன்....? இதை மறைக்காமல் அவருக்கும் வெளிப்படுத்தினால் ஒரு
வேளை அவரும் மாறுவாரோ....?
"சமயம் வரப்ப... பேசிக்க... இப்ப வேணாம்" என்றார் என் மனசு புரிந்தவர் போல .
எழுந்து போனேன். பணத்தைப் பத்திரப்படுத்தி விட்டுத் திரும்பியபோது, வாசல் கதவு திறந்து இவரும் அபிராமியும் உள்ளே வந்தார்கள்
கிழவியின் தலை தொங்கியிருந்தது.
- சாவி - "பொன்மொழிக்கதைகள்"

No comments: