December 08, 2020

அப்பாவாம் அப்பா

 அப்பாவாம் அப்பா


ரிஷபன்


வலது காலை வாசற்படிக்கு வெளியிலேயே

வைத்திருந்தேன். தப்பு... வைத்திருந்தோம்.


நான்தான் மிரண்டிருந்தேன். ரமா தைரியமாக  நின்றாள்.


"கூப்பிடுங்க"


தாலி ஏறிய நான்கு மணி நேரத்திற்குள் உரிமையான தொனி.


கூப்பிட்டேன். "ம்மா..."


அப்பாவைக் கூப்பிட முடியாது. பயம்


"யாரு"


"நான் தாம்மா. ஆசீர்வாதம் பண்ணும்மா,"


விழப் போனவன் அப்படியே காலருடன் தூக்கி நிறுத்தப்பட்டேன்.


நிறுத்தியவர் அப்பா.


"நீ உள்ளே போடி. நீ வெளியே போடா” என்றார் ஸ்பஷ்டமாக


அவர் பத்தினி உள்ளே போக, என் பத்தினியுடன் வெளியே நின்றேன்.


"ப்பா... ஸாரிப்பா.... வந்து..."


கெட் அவுட்"


"மாமா நான் சொல்றதை"


"போடா "


“ப்பா "


முகத்தில் கதவு அறையப்பட்டது. சில வினாடிகள் வழி தப்பியவர்கள் போலத் திணறி நின்றோம்.


" போலாம் வா . அப்புறமா கன்வின்ஸ்

பண்ணுவோம்"


"அப்பவே சொன்னேன். கேட்டீங்களா? இப்ப பாருங்க"


"ஸ்ஸ் சத்தம் போடாதே பக்கத்து வீடுகள்ல வேடிக்கை பார்க்கிறாங்க...''


தலை குனிந்து வீதி கடந்தாலும் இரு பக்கங்களிலுமுள்ள வீடுகள் எங்களை உற்றுப் பார்ப்பதை உணர முடிந்தது


பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தோம்


காதல் பெரிதெனக்கு - வீடு பெரிதில்லை என்று அவசர முடிவு எடுத்தது சரிதானா என்று புத்தி குழம்பியது


இத்தனைக்கும் அப்பாவி ன் உயிருக்குயிரான சிநேகிதர் சந்தானத்தின் கடைசிப் பெண்தான் ரமா. நான்கு பெண்கள் அவருக்கு. மகனில்லை. முதல் மூன்று பெண்களைக் கல்யாணம் செய்து கொடுக்க சிரமப்பட்ட போது, அப்பா தம்மால் முடிந்த அளவு உதவினார், நல்ல வரன்களாகப் பார்த்துக் கொடுத்ததின் மூலம்.


சந்தானம் சுயமரியாதை உள்ளவர். எளிதில் அடுத்தவர் உதவியை ஏற்க மாட்டார். அந்தத் தன்மானம் எனக்குப் பிடித்திருந்தது. ரமா வளர்க்கப்பட்ட விதமும் அப்படியே. நல்ல மருமகளுக்குரிய குணங்களுள்ள அவளை அப்பா மறுக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் காதலித்துத் தொலைக்க, எதிபாராத திருப்பம்


"அவளை மறந்துரு"


"முடியாதுப்பா"


"அப்ப வீட்டைவிட்டுப் போயிடு"


அம்மா, தம்பி இருவரும் மௌனமாய் வேடிக்கை பார்த்தார்கள்


அசட்டுத் துணிச்சலில் ரமாவை வற்புறுத்தி நண்பர்கள் முன்னிலையில் ஒரு கோயிலில் வைத்துத் தாலியும் கட்டிவிட்டேன். இப்போது பிரச்சனை வெடித்தே விட்டது. அப்பாவிற்கு பிடிவாதம் அதிகம். பிரிவு நிரந்தரம் தானா.


பஸ்ஸைப் பிடித்து சந்தானம் வீட்டை அடைந்தோம்


அப்பா அளவிற்குக் கோபப்பட்டாலும் எங்களின் நிராதரவான நிலையும், மன்னிப்புக் கோரிய விதமும் அவரைச் சமாதானப்படுத்திவிட்டன. மேலும் ரமா என்னை மணந்ததில் அவருக்குச் சம்மதம்தான். வீட்டை விரோதித்துக் கொண்டதில்தான் வருத்தம்.


"ப்பா... நாங்க தனியா இருக்கறதைக் காட்டிலும் இங்கே நம்ம வீட்டோடவே இருந்துடலாம்னு அவர் பிரியப்படறார். பெரியவங்க கவனிப்புல இருக்கத்தான்

அவருக்கு இஷ்டம்"


"ஊர் என்ன சொல்லும்?"


"எனக்கு ஊரைப்பத்திக் கவலையில்லே.... ரொம்ப நாள் அப்பா, அம்மா கூடவே இருந்து பழகிட்டேன். இப்ப நீங்களும் விலக்கி வச்சுட்டா... அதை என்னால தாங்க முடியாது...” என்றேன்.


பின்னொரு நாள் அம்மாவைக் கடைத்தெருவில் சந்தித்த போது ஏளனமாய்ச் சுட்டிக் காட்டினேன்.


" இப்ப நாங்க நல்லா இருக்கோம். அப்பாவுக்கும் மேல அவர் பிரியமா இருக்கார்."


அம்மா சிரித்தாள்.


"போடா முட்டாள்.... நட்புக்காகப் பையனையே விட்டுக்கொடுத்திட்டார்டா. எந்த உதவி செஞ்சாலும் ஏத்துக்காமே கஷ்டப்படறதைப் பார்த்து சந்தானத்துக்கு இப்படி ஒரு ஏற்பாடு செய்யத்தான், கோபமா இருக்கற மாதிரி நடிச்சார்... காப்பாத்த ஆண் வாரிசு இல்லாமே அவதிப்படற நண்பருக்குத் தன் வாரிசையே கொடுத்துட்ட அவர் மனசு உனக்குப்புரியாதுடா" என்றாள்.


என் கண்களில் நீர் கசிந்தது.


- சாவி பிரசுரம்

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட கதை.

முகநூலிலும் வாசித்தேன்.

இங்கேயும் தொடரட்டும் பதிவுகள்.