September 22, 2009

அம்மாஐந்தாம் தேதி சனிக்கிழைமை இரவு மணி ஒன்று. அம்மா தன் செயல்பாடுகளை எல்லாம் நிறுத்தி கொண்டு விட்டதாய் டாக்டர் சொன்னார். ஐசியுவில் உள்ளே போய் பார்க்க இப்போது தடையற்ற அனுமதி. அம்மா நிம்மதியான மீளா உறக்கத்தில் . நான் வீட்டுக்கு போன் செய்தேன். 'இன்னும் ஒரு மணி நேரத்தில் அம்மாவுடன் வந்து விடுவதாக'. இன்று மாலை வரை அம்மாவுடன் நான் 'பேசியபோது' சொல்லிக் கொண்டிருந்தது 'நான் வெளியே தான்இருக்கேன். சரியா ' அம்மாவுக்கு என்ன புரிந்ததோ தலையாட்டினாள். சிஸ்டர் என்னை ஒரு அறையில் அமரச் சொன்னாள் சிறு வயசு பெண். மாலையில் பார்த்தபோது 'பாட்டி கிட்ட எந்த ஊருன்னு கேட்டேன். ஸ்ரீரங்கம்னு சொன்னாங்க . ' ஒன்பதரை மணிக்கு 'கஞ்சி வாங்கிகிட்டு வாங்க. அம்மாக்கு கொடுக்கலாம் ' சுடச்சுட கஞ்சியை கொடுத்து விட்டு 'இப்படியேவா கொடுப்பீங்க' என்று பாமரத் தனமாய் கேட்டேன். சிஸ்டர் முகத்தில் கனிவு. 'ஆற வச்சுதான்'. கஞ்சி என்ன ஆனதோ ? மாலை வாங்கிக் கொடுத்த மாத்திரைகள் அப்படியே திருப்பித் தரப்பட்டன. இரண்டரை மணிக்கு இரண்டாவது மாடியில் வீட்டில் ஹாலில் அம்மா படுத்திருக்க பக்கத்தில் நாங்கள். 'போய் வா அம்மா. எங்களால் தர முடியாத ஆனந்தம் உனக்கு வேறெங்கேனும் கிடைக்கக் கூடும் எனில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் ' படுத்திருந்த அம்மா முகத்தில் வேதனைகள் விலகிய அமைதி பார்த்து உள்ளூர நிறைவும், குறுகுறுப்பும்.

9 comments:

K.B.JANARTHANAN said...

அந்த சிஸ்டர், ஆற வாய்த்த கஞ்சி... அந்த இடத்தில் நாங்களும் இருந்த மாதிரி பிரமை. சோகத்தை உள் தாங்கி சித்திரமாக வடித்துள்ளீர்கள் அம்மாவின் பிரிவை. --கே.பி.ஜனா

KALYANARAMAN RAGHAVAN said...

மனதை பிழிய வைத்த பதிவு,

ரேகா ராகவன்.

Jagannathan said...

Manni's smiling face and affection can never be forgotten. She lived a simple life. I am sure you made her proud and happy when she was alive. Even yesterday, we were talking of manni when Sampath mama visited us. Amma feels very bad and very sad she couldn't see her recently and also spoke of Rajam manni's eternal smiling face. God bless you.
- Jagannathan

ரிஷபன் said...

Thanks Jagan. 'Manni' as famously called by everybody.. That point I missed, you have correctly quoted!

padma said...

அம்மா பற்றி எத்தனை எழுதினாலும் போதாது .நேற்று என் அம்மாவின் பதிமூணாவது திதி .இருந்தும் கண்ணீரை கட்டுபடுத்த இயலவில்லை

padma said...

என் அம்மா கவிதை படித்தீர்களா சார்?

cheena (சீனா) said...

அன்பின் ரிஷபன்

ஏழு மாதங்களுக்குப் பிறகு ...

ஆழ்ந்த அனுதாபங்கள் - அம்மாவின் பிரிவு தாங்க இய்லாது - ம்ம்ம்ம்

நிலா மகள் said...

வாழ்வின் சுக துக்கங்களை ஒரு பார்வையாளனாய் தள்ளி நின்று பார்க்கும் பக்குவம் உன்னதம்! காட்சி விவரணைகள் கண்ணீர் பெருக்கின. புகைப்படத்தின் உயிர்ப்பை வெகு நேரம் உற்றுக் கவனித்திருந்தேன். அம்மா என்றென்றும் ... எல்லோர்க்குமான...அற்புதம்!! இழப்பின் துயரத்திலிருந்து எத்தனைதான் மீண்டு எழுந்தாலும் நினைவெழும் போதெல்லாம் கனத்துத் தான் போகிறது மனசு. அனுதாபங்களைப் பரிமாறிக்கொள்வது தவிர என்ன செய்ய முடிகிறது...?!

மஞ்சுபாஷிணி said...

அம்மா மீதுள்ள அன்பை இப்படியும் வெளிப்படுத்தலாம்....

அம்மாவுடனான கடைசி கனக்கும் நிமிடங்களை விவரித்தவிதம் எனக்கு நெஞ்சடைத்தது.....

கத்தி கதறி அம்மாவிடம் கொஞ்சம் முன்பு நன்றாக பேசின அந்த நொடிகளை திரும்ப திரும்ப நினைத்து பார்க்க வைக்கிறது....

அம்மாவின் அமைதியான சிரிக்கும் கண்களை உடைய அம்மாவின் முகம்....

அம்மாவின் ஆத்மா என்றும் இறைவனிடம் ஆசீர்வதிக்கப்பட்டு....

அம்மாவின் அந்த நல்ல கனிந்த அன்பு மனம் தன் பிள்ளையிடம் கொடுத்துவிட்டு சென்றதாக......

எங்கும் போகவில்லை அம்மா.... இன்னமும் இந்தப்பிள்ளையின் மனதில் நிலைத்துஇருக்கிறார்.....