என்ன யோசிக்கிறீங்க? டைட்டில் பார்த்து குழப்பமா? உங்க வீட்டுல வளர்க்கறீங்களா.. அப்ப மேல படிக்காதீங்க.. என்னை மாதிரியே நாய் பத்தி கொஞ்சம் பயந்த சுபாவம் இருக்கறவங்க மட்டும் கண்டின்யூ பண்ணுங்க..
என் நண்பனைப் பார்க்க பல்லாவரம் போனப்ப (ரொம்ப நாள் முன்னாடி) நான் காலிங் பெல் அடிச்சதும் உள்ளேர்ந்து ஒரு குறைப்பு சத்தம்.. அவ்வளவுதான் ஜகா வாங்கிட்டேன்..
கதவைத் திறந்து வெளியே வந்தவன் 'பயப்படாம உள்ளே வான்னான்'.. 'ஒண்ணும் பண்ணாதே'- இது நான்.
'கிட்டக்க வந்து மோந்து பார்க்கும்.. பிடிக்கலேன்னாதான் கடிக்கும்'.
'நீ கட்டிப் போடு.. உள்ளே வரேன்.. இல்லே இப்படியே திரும்பிப் போறேன்' பத்தாண்டு கால நட்பை கடாசி விட்டு கிளம்ப எத்தனித்தபோது நணபன் மனசு மாறிவிட்டது.
பால்கனியில் கட்டிப் போட்டு விட்டு உள்ளே அழைத்தார்கள். நான் பேசி விட்டு கிளம்பும் வரை அதன் கத்தல் ஓயவில்லை.
நண்பனுக்கு மணமான புதுசில் இந்த என் அனுபவம். பிறகு அவனே ஒரு கதை சொன்னான்.
அவனுக்குக் குழந்தை பிறந்ததும் அவன் மாமனார் வீட்டில் நாயை கொண்டு எங்கோ விட்டுவர முடிவெடுத்தார்களாம். வேறு யார் மீதாவது பாசம் காட்டினால் அதற்குப் பொறுக்காதாம். அததனை பொஸசிவ்!
குழந்தையைக் கொஞ்சிய மாமனாரைக் கடித்து விட்டதாம்.
அவர் குரோம்பேட்டில் விட்டுவிட்டு எலக்ட் ரிக் ரெயிலில் வீடு திரும்புவதற்குள் அது கால் நடையாய் வீடு வந்து விட்டது!
அப்புறம் மடிப்பாக்கம் கொண்டு போய் விட்டாராம்.
'அது எங்க வீட்டுல ஒரு குழந்தை மாதிரி' என்று கண்ணீர் விட்டாராம் மாமனார்.
இதே போல இன்னொரு வீட்டிலும் சொன்னார்கள். சொன்னது வயசான மாமி. அவர் கல்யாணமாகி வந்த போது அவரிடம் சொல்லப்பட்டது. புகுந்த வீட்டில் நாயை அறிமுகம் செய்து 'இதுவும் உனக்கு ஒரு மச்சினன் மாதிரிதான்..' என்றார்களாம்.
மாமி சிரிக்காமல் சொன்னாள். எனக்கு நினைத்து நினைத்து புரையேறியது. தெருவில் நிறைய பேர் நாயுடன் வாக்கிங் போவதைப் பார்த்திருக்கிறேன். நாய் எந்த ஜாடையில் இருக்கிறதோ அதே ஜாடையில் கூட்டிப் போகிறவர் முகமும் இருக்கிற பிரமை எனக்குள் எழுவதைத் தடுக்கவே முடியவில்லை! அதன் விஸ்வாசம் பற்றி நிறைய கதைகள்.
இன்னொரு நண்பன் வீட்டில் என்னை முகர்ந்து பிறகு அனுமதித்த டோனி மறுபடி ஆறு மாசம் கழித்துப் போனபோது சின்ன அசைவு கூட இல்லாமல் லேசாய் கண் திறந்து பார்த்து அனுமதித்தபோது 'நல்ல நாய்களும் ஜகத்தில் உண்டு' என்று அறிந்தேன்.
வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பைக் கடித்து உயிர் விட்ட நாய்கள் பற்றி செய்திகளில் படித்திருக்கிறேன்.
இரண்டாவது மாடியில் பாம்பு வரும் வாய்ப்பு இல்லாததாலோ என்னவோ நாய் பற்றி என் விமர்சனம் துணிச்சலாய் வெளியாகிறது.
இதைப் படிக்கிற (நாய்) அபிமானிகள் 'வள்'என்று விழாமல் என் பயம் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு, நாய் மீது தனிப்பட்ட எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாத நான்!
4 comments:
நாயமான, ஸாரி, நயமான பதிவு.
அதெல்லாம் சரி சார், நாய் மேல எந்த வெறுப்பும் இல்லேன்னு சொல்றீங்க, எங்களுக்கு தெரியுது, ஆனா அது நாய்களுக்கு தெரியுமா? எதுக்கும் கொஞ்சம்... -- கே.பி.ஜனா
//'நீ கட்டிப் போடு.. உள்ளே வரேன்.. இல்லே இப்படியே திரும்பிப் போறேன்' //
அருமையா மடக்கிட்டீங்க. நாய் பற்றி இவ்வளவு விஷயம் இருக்கா? நல்ல பதிவு.
ரேகா ராகவன்.
ராகவ் சார் நன்றி
ஜனா சார் உங்களால மட்டும்தான் முடியும் இப்படி சமயோசிதமா கமென்ட் அடிக்க
I have to learn to use Tamil font.
'இதுவும் உனக்கு ஒரு மச்சினன் மாதிரிதான்..' - Naanum siritthuk kondirukkiraen.
நாய் எந்த ஜாடையில் இருக்கிறதோ அதே ஜாடையில் கூட்டிப் போகிறவர் முகமும் இருக்கிற பிரமை எனக்குள் எழுவதைத் தடுக்கவே முடியவில்லை! - Eppodo oru cartoonist idhai varaindhadhaga gnabagam.
= R. Jagannathan
Post a Comment