October 21, 2009

சார்.. தபால்

ப்ரியமான தபால்காரர்கள்
வழக்கொழிந்து போன சொல் போல தெரிகிறதா?
கூரியரில் நாம் இப்போது தபால்களை அனுப்ப ஆரம்பித்து விட்டோம். கூடுதல் செலவானாலும் நிம்மதி. நிச்சயம் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கை.
இதைத்தான் முன்பு தபால் நிலையங்கள் செய்தன. அதுவும் பர்சனல் டச்சுடன்! எங்கள் தெரு தபால்காரர் (முன்பெல்லாம் ஒரு நாளைக்கு இரு முறை டெலிவரி) தபால் அலுவலகம் விட்டு வெளியில் வந்ததும் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அவர் போக வேண்டிய பீட்டில் வரிசைக் கிரமமாய் தபால்களை அடுக்கிக் கொள்வார்.
என்னைப் போல சற்று பரபரப்பான ஆசாமிகள் அவர் எங்கள் வீட்டுக்கு வரும்வரை காத்திருக்க பொறுமையின்றி தபால் அலுவலகம் வாசலுக்கே சென்றால் 'தம்பி.. எம் ஓ வந்திருக்கு' என்பார்.
அது எப்படி ஆளைப் பார்த்ததுமே அவரவருக்கான தபாலைப் பற்றி சொல்ல முடிகிறது என்கிற வியப்பு.
'இல்லை' என்றாலும் அதையும் சரியாகச் சொல்லுவார்!
'உனக்கு நாளைக்கு' என்று அவர் சொல்கிற அழகே தனி.இல்லையென்ற வார்த்தை அவர் வாயில் வராது.
என் கதைகள் பிரசுரமான இதழ்களைத் தரும்போது முதல் தடவை கேட்டார். "பணம் கட்டி வாங்கறீங்களா தம்பி"
கொஞ்சம் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு 'என் கதை வந்திருக்கு' என்றதும் அவர் முகத்தில் கூடுதலாய் ஒரு மகிழ்ச்சி.
என் அப்பாவை அவருக்குத் தெரியும். அப்பா சம்பாதிப்பதை வீண் செலவு செய்யவில்லை.. சொந்த முயற்சியில்தான் புத்தகங்கள் வருகின்றன என்று புரிந்ததால் வந்த மகிழ்ச்சி.
தீபாவளி மலரில் என் கதை வந்தபோது ரெஜிஸ்தர் தபாலில் மலர் வந்தது. "கையெழுத்து போடுங்க தம்பி" என்று என் கையெழுத்திற்கு ஒரு அந்தஸ்து உருவாக்கினார்.
என் விஷயம் என்றில்லை.. அவர் செல்கிற ஒவ்வொரு வீட்டு நிலவரமும் அவருக்குத் தெரிந்திருந்தது.
வம்பு பேசும் நோக்கமின்றி அக்கறையுடன் நின்று பேசிப் போகும் அவர் ஒரு ஹீரோ ரேஞ்சில் எங்கள் மனதில் பதிந்ததில் ஆச்சர்யமில்லைதான்.
இன்று கூரியர் வரும்போது அந்த பர்சனல் டச் இல்லை. விசாரிப்புகள் இல்லை. "மோர் சாப்பிடுங்க" என்கிற உபசரிப்பு இல்லை. தபால்கள் வந்து விடுகின்றன.
எல்லாமே இயந்திர மயமாகிப் போன உலகில் தபால்களும் அப்படியே ஆகிவிட்டன.
ஒரு தபால்கார்டு தந்த சந்தோஷம் இப்போது எஸ் எம் எஸ்ஸில் கிடைக்கவில்லை.
நானும் நண்பர்களும் தொடர்ச்சியாய் எழுதிக் கொண்ட தபால்களில் (சில சமயங்களில் ஒரே நாளில் 1,2,3 என்று எண்ணிக்கையிட்டு தொடர் கடிதங்கள்) அதிலும் வித்தியாசப்படுத்தி எழுதிய கடிதங்கள்..
இப்போதும் எனக்குக் கடிதம்தான் எழுதுவேன் என்றிருக்கிற சில உள்நாட்டு அயல்நாட்டு நண்பர்களின் பிடிவாதத்தால் என் மேஜை மீது விதவிதமான கையெழுத்துக்களைப் பார்க்க முடிகிறது.
ஓய்வு பெற்ற சில தெரிந்த தபால்காரர்களைப் பார்க்கும்போது 'தம்பி.. நல்லா இருக்கீங்களா.. இப்பவும் எழுதிகிட்டு இருக்கீங்களா' என்று ஞாபகப்படுத்தி கேட்கும்போது எனக்குள் லேசாக ஏதோ தளும்புகிறது.
தங்கள் சர்வீஸை ஒரு அழகியலாக செய்து விட்டுப் போன / செய்து கொண்டிருக்கிற அத்தனை தபால்காரர்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!

4 comments:

Rekha raghavan said...

எழுத்தாளர்களுக்கு சார் போஸ்ட் என்ற சத்தம் கேட்டாலே ஒரு குறுகுறுப்பு. கதை பிரசுரமாகி புத்தகம் வந்திருக்குமோ அல்லது கதை திரும்பியிருக்குமோ என்ற கேள்விகளுடன் அதை பெற்றுக்கொள்ள விழைவார். தபால்காரர்களுக்கு நன்றி சொன்ன விதம் அந்த தபால்காரரின் செய்கைகளை மீண்டும் நினைவில் கொண்டு வந்தது. மிக அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

velji said...

நல்ல பதிவு!

கே. பி. ஜனா... said...

'தபால்'னு மனசில விழுந்திட்டது உங்க 'சார் தபால்'! -- கே.பி.ஜனா

ரிஷபன் said...

நன்றி வரவிற்கும் கருத்துக்கும் வேல்ஜி! பத்திரிக்கை ஆபிஸ் கவர்னாலே தனியாத் தெரியும் இதயம் துடிக்கறது காதுக்குக் கேட்கும் ரேகா சார்!