நண்பர் மாதவராஜ் சொன்னது போல சில விஷயங்கள் மனசோடுதான். பகிர்தலற்ற அந்தரங்கம். நானே எடுத்துப் புரட்டிப் பார்க்கக் கூட தயக்கம். அதன் ஒரிஜினல் செளந்தர்யம் வாடிப் போய் விடும்.. என்கிற பயம்.
அப்பா போஸ்ட்மாஸ்டராய் வருடத்திற்கு ஒரு முறை கிரகங்களைப் போல இடப் பெயர்ச்சி ஆவார். அதனால் என் பள்ளி நாட்கள் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊரில் என்று ஆனது.
முதல் 5 வகுப்புகளை 6 பள்ளிகளில் படித்த பெருமை எனக்குண்டு. பிறகுதான் எங்களை ஸ்ரீரங்கத்தில் விட்டு அவர் மட்டும் அவதிப்பட்டார்.
முதல் வகுப்பு அரியலூர் அருகே விக்கிரமங்கலத்தில். பத்தடி வைத்தால், அந்த ஊர் அம்பாப்பூர். இந்த பகுதி விக்கிரமங்கலம்! போஸ்டல் விலாசம் அம்பாப்பூர். அப்பா இதனால் இன்றுவரை 'அம்பாப்பூர்' என்றே அழைக்கப்படுகிறார், ஓய்வு பெற்ற பிறகும். ஒரே பெயரில் 4 பேர் தபால் துறையில் பணியாற்றிய நேரம் அது.
ஞாபகங்களை பின்னோக்கி தள்ளினால்.. முதல் நினைவே நான் வாங்கிய அடிகள்தான்.
தங்கையை கீழே போட்டதால் அவள் அழுது ஒரு குட்டு.
பள்ளி விட்டு வரும் போது கீழே கிடந்த சிகரெட் (அ) சுருட்டு எதையோ எடுத்துப் பார்க்க நண்பன் தூண்ட, ஆர்வக் கோளாறு. எடுத்த மறு நிமிடம் தூக்கிப் போட்டு விட்டாலும் வத்தி வைக்கப்பட்டு, அடுத்த குட்டு.
பக்கத்து வீட்டில் திராட்சைக் கொடி பயிரிட்டு இருந்தார்கள். அதனூடே போய் வந்த பிரமிப்பு இப்போதும்.
கோடை விடுமுறையில் தாத்தா வீடு. கோவில் வாசலில் குளம். இந்தக் கரையில் குதித்து நீருக்குள் நீச்சலடித்து அடுத்த கரை தொட்டு திரும்பிய சாகசங்கள். தாத்தாவிற்குத் தெரியாமல்.
'ஏண்டா ஊமைச்சாமு.. ஒங்கப்பனுக்கு எவன் பதில் சொல்றது' என்று குட்டு வெளிப்பட்ட போது திட்டினார். டிராயர் நனையாமல் கழற்றி வைத்து கோவணம் கட்டி கூத்தடித்த குளம். கரையிலேயே ஒரு மரத்தில் கட்டி காயப் போட்டு வைத்திருப்போம்.
தாத்தாவின் பீரோ பல ரகசியங்களுக்கும் அதன் பிரத்தியேக வாசனைக்கும் சொந்தமானது. அந்நாள் கோகுல் சாண்டல் பவுடர் டப்பா தாத்தாவின் பேவரைட். அவசரமாய்த் திறந்து முகத்தில் பூசிக் கொண்ட அதே நிமிடம் வெளியே போயிருந்த தாத்தா வந்து விட்டார். நிச்சயம் வாசனை காட்டிக் கொடுத்திருக்கும். ஆனால் எதுவுமே கேட்கவில்லை.
என் இலக்கிய வீதிக்கு அடையாளம் காட்டியது அவர் பீரோதான்!
கல்கி, கலைமகள் என்று அவர் சேகரித்த புத்தகங்கள்.. அழகாய் அவர் பெயர் எழுதி வைத்திருந்த தொகுப்புகள்.. வி.ஸ.காண்டேகர்.. தி.சா.ராஜு, தி.ஜா., லா.ச.ரா.. என்னைப் புரட்டிப் போட்ட காலம் அது.
வெறியாய் படித்தேன். பின்னாளில் நான் எழுத வருவேன் என்று அறியாத பருவம். விதம் விதமாய் வார்த்தைகள் எனக்குள் இறங்கி என்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தன.
அம்பாப்பூர் பள்ளி சினேகிதியைப் பல வருடம் கழித்து ஒரு திருமணத்தில் பார்த்தபோது அவள்தான் என்னை நினைவு வைத்திருந்தாள்.
தாத்தா ஊரிலும் ஒரு வருடப் படிப்பு. அம்மை ஊசி போட வந்த அலுவலர்களிடம் தப்பித்து சுவர் ஏறிக் குதித்து ஓடி வந்த போதே எனக்குப் புரிந்து விட்டது. நான் சமர்த்துப் பிள்ளை லிஸ்ட்டில் இல்லை என்று.
மீன்சுருட்டி என்கிற ஊரில் பள்ளி சிநேகிதி பக்கத்து வீட்டு பெண்ணே. வகுப்பில் அமைதியை நிலைநாட்ட என்னை நியமித்துப் போன ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த அவளைக் காட்டிக் கொடுத்து அடி வாங்க வைத்தேன். வீட்டின் பின்புறம் இரு வீட்டாரும் பேசிக் கொள்ளும் வகையில் சுவரற்ற திறந்த வெளி. அவள் அம்மாவிடம் அழுது என்மீது புகார் வாசிக்கப் பட்டு என் அம்மா சமாளிக்க வேண்டியதாகி விட்டது.
சமயபுரம் அருகில் புரத்தாக்குடியில் ஒரு வருடப் படிப்பு. முதல் மாணவனாய் மதிப்பெண் பெற்றதால் பள்ளி இறுதி வகுப்பு வரை லீடர் பதவி.என் கையில் ஒப்புவித்த பிரம்பைத் தொலைத்ததால் (முதல் நாள் அடி வாங்கிய மாணவனின் விஷமம்) மூங்கில் காட்டுக்கு விரட்டப் பட்டேன். புதுப் பிரம்புடன் திரும்பி வந்ததும் முதல் அடி எனக்கு! 'இனிமேல் ஜாக்கிரதையா இரு'
ஏழாம் வகுப்பு முதல் ஸ்ரீரங்கம். ஸ்டோர் என்று சொல்வோம். ஒண்டு குடித்தனம். அதாவது ஒரே வீட்டில் பல குடித்தனக்காரர்கள்.
எதிர் போர்ஷன் மாமி மட்டும் வருடா வருடம் வாசல் பக்க அறைக்குப் போய் திரும்பும் போது கையில் எப்படி குழந்தை வருகிறது என்கிற திகைப்பு. பிரசவ நேரங்களுக்காக ஒதுக்கப் பட்ட அறை அது.
கணவர் தன் முயற்சியில் சற்றும் தளராமல் ஆறு பெண் மகவுகளுக்குப் பிறகு இரண்டு மகன்களையும் உருவாக்கிக் கொடுத்தார்.
மூத்த பெண்ணும் நானும் ஒரே வகுப்பு.
பெண்கள் பள்ளி தனியே இருந்தது. இரண்டு பள்ளிகளுக்கும் இடையே ஒரு காம்பவுண்ட் சுவர் சற்றே பலவீனமாய். மைக்கில் அந்த ஹெச். எம். மாணவிகளைத் திட்டி அலறுவது எங்களுக்குக் கேட்கும். கல்யாணம் செய்து கொள்ளாமல் கல்விப் பணி.
பிரேயர் நேரத்தில் ஸ்ரீரங்கமே அதிரும் அளவு இரைச்சல். இரு பள்ளிக்கும் பொதுவாய் ஒரு பியூன். பெயர் பாவாடை. 'நீராரும் கடலுடுத்திக்' கொண்டிருந்தபோது பியூன் குறுக்கே போய் தடுக்கி விழ.. மைக்கில் ஹெச்.எம். 'பாவாடையைத் தூக்கு' என்று அலற.. தப்பாய் புரிந்து.. ஒரு அற்ப ஜோக் எங்கள் மத்தியில் அப்போது பிரபலம்.
இந்த நாட்களில்தான் கையெழுத்துப் பிரதி அறிமுகம். கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி சர்குலேஷன் விட்டோம்.
குமுதம், கல்கண்டு படிக்க ஆரம்பித்தேன். ரா.கி.ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி, புனிதன், எஸ்.ஏ.பி., தமிழ்வாணன் என்று என்னை ஆக்கிரமித்த எழுத்துக்கள். அப்புசாமிக்கு நான் சிரித்தது போல அதன்பின் அவ்வளவு மனம் விட்டு சிரிக்கவில்லை.
கல்லூரி நாட்களில் திருச்சிக்கு ரெயில் பயணம். ஆபீஸ் வண்டி என்று அதற்குப் பெயர். அந்த நேரம் பெரும்பாலும் பணி புரிபவர்கள்தான் போவார்கள். சீட்டுக் கச்சேரி அப்படித்தான் அப்போது அறிமுகம். பிறகு ஒரு நாள் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்மில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் பார்த்து வருத்தப்பட்டார். திட்டக் கூட இல்லை. எங்களுக்குள் ஒரு சுருக்! தண்டவாளத்தில் வீசி எரிந்து உதறினோம் அந்த ஆசையை.
நாங்கள் ஜங்ஷன் போக.. அதற்கு முன் டவுன் ஸ்டாப்பில் பெண்கள் இறங்கி விடுவார்கள். ஸ்டேஷனில் அவர்கள் பார்க்கிறார்களா என்று நாங்கள் தவிக்க ஆரம்பித்த காலம்!
மிகப் பெரிய ஓப்பன் வைத்த ஜாக்கெட்டில் சற்றே வளர்த்தியான பெண் முதுகில் சிறுகல் எறிந்து ஒருவன் வீர சாகசம் நிகழ்த்தினான். அவள் தன் அண்ணனிடம் அப்போதே முறையிட, 'நீ ஒழுங்கா டிரெஸ் பண்ணிக்கோ' என்று நிராகரிக்கப்பட்டாள்.
எனக்குப் பிடித்த மாதிரி இருந்த ஒரு பெண் பற்றி தகவல் அறிய தவித்தது இப்போதும் வெட்கம் தருகிறது. கடைசி வரை அவளிடம் பேசவே இல்லை.
எங்களுடன் ஒரு நண்பன் வருவான். சீனியர். இரு குரலிலும் பாடுவான் . வசந்த கால நதிகளிலே பாடலை அவனை பாட சொல்லி கேட்பது எங்கள் பொழுது போக்கு.
அடுத்த தெருவில் இன்னொரு பெண் கவர்ந்தாள். அவள் கையில் கணையாழி மேகசின் பார்த்து அன்றே ஒரு கவிதை எழுதி போஸ்ட் செய்தேன்.
சிகரத்தின் உச்சி
தொலைவானால் என்ன..
முதலடி பெயர்க்காதவரை
இடைவெளி குறையாது..
கால்களைச் சுற்றி சிலந்தி
கூடு கட்டும் வரை
யோசித்தது போதும்..
இது செயல்படும் காலம்.
என்னவோ கவிதை பார்த்து உடுத்திய துணியுடன் அவள் வரப் போகிற மாதிரி ஒரு பிரமை. கவிதை கணையாழியில் பிரசுரமானது மறு மாதமே. என் உறவினரிடம் சொல்ல, அவர் பெண் கேட்டு போனார். அடுத்த வருடம் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது, வேறு ஒருவருடன்!
என் சிநேகிதிகள் எல்லோருமே என்னை விட மேம்பட்டவர்கள். என் மீதான அவர்களின் புரிதல், கரிசனம், காதல் சொல்லில் அடங்காதது.. இப்போதும் என் பார்வையின் நிச்சலனம் அவர்கள் எனக்கு சொல்லாமல் சொல்லித் தந்தது.. என்னைக் கோட்டுக்குள் வெகு இயல்பாய் நிறுத்தி குற்ற உணர்வே வராமல் பார்த்துக் கொண்ட அவர்களின் திறமையால் இன்னமும் இழந்து விடாத நல்ல நட்பின் பிடியில் என்னால் அழகாய் ஜீவிக்க முடிகிறது.
ஆண்.. பெண் என்கிற பேதமற்று 'நண்பர்கள்' என்கிற ஒரே அடையாளம் மட்டுமே இத்தனை வருடங்களில் நான் சேகரித்து வைத்திருக்கும் புத்தி கொள்முதல். உள்ளிருக்கும் சுடர் இப்போதும் ஆடாமல் ஒளிர்வதும் அந்த பாக்கியத்தால்தான்.
நிறைய சொல்வதற்கு இருக்கிறது.. சுய வரலாறுக்கு இன்னும் காலம் இருக்கிறது.. அதற்கு முன்பாக ஆகச் சிறந்த படைப்பு ஒன்றினை இனங்கண்டு பிடித்து பதிந்து விட்டு வரலாம் என்றே ஒத்திவைப்பு!
நண்பர்கள் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, கே.பி.ஜனா, ரேகா ராகவன் பிடித்தால் தொடரலாமே.. இளமைக் கோலங்களை !
14 comments:
மைக்கில் ஹெச்.எம். 'பாவாடையைத் தூக்கு' என்று அலற.. தப்பாய் புரிந்து..
paavaataiyaiththookkinaarkaLaa ?
AppuRam enna aachchu ?
endra viparam puriyaamal ore kavalaiyil thookkam varaamal uLLathu.
paavam anthap paavaatai endra peyaril keezhe vizhuntha school peon.
ஆண்.. பெண் என்கிற பேதமற்று 'நண்பர்கள்' என்கிற ஒரே அடையாளம் மட்டுமே இத்தனை வருடங்களில் நான் சேகரித்து வைத்திருக்கும் புத்தி கொள்முதல்.
............ Thats a blessing!
அருமையான பயணம் ரிஷபன் ச்ரீரங்கம் டேஸ் என்ற நாவல் எழுதலாம்
பகிர்வுக்கு நன்றி ரிஷபன்!
//உள்ளிருக்கும் சுடர் இப்போதும் ஆடாமல் ஒளிர்வதும் அந்த பாக்கியத்தால்தான்.//
நிதர்சனமான உண்மை. மிக அற்புதமான ஒரு இளைமைக் கோலங்களை போட்டுவிட்டு என்னையும் அழைத்து தொடரச் சொன்னதற்கு நன்றி சார்.
ரேகா ராகவன்.
நல்ல பகிர்வு ரிஷபன். உங்கள் உரைநடையும் வெகு அழகு, கவிதையைப் போலவே.
s”நிறைய சொல்வதற்கு இருக்கிறது.. சுய வரலாறுக்கு இன்னும் காலம் இருக்கிறது.. அதற்கு முன்பாக மிகச் சிறந்த படைப்பு ஒன்றினை இனங்கண்டு பிடித்து பதிந்து விட்டு வரலாம் என்றே ஒத்திவைப்பு!”
- இது உங்கள் தன்னடக்கத்தை காட்டுகிறது.இப்போதே உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளலாம். உங்களின் மிகச் சிறந்த படைப்பினை உங்களால் இனம் கண்டு கொள்ள முடியாது.உங்களின் எந்த படைப்பு மட்டம்? எது ஒஸ்தி? சொல்லுங்கள் பார்ப்போம்!எல்லாமே மிகமிகச் சிறந்த படைப்புகள் தான்.
தாய்க்கு ஏது ஸார் பேதம்?
- ‘என்’னுள்ளே உள்ள எழுத்தாளனை இனம் கண்டு மிக சாதாரணமான என்னையும் எழுதத்தூண்டிய உங்களுக்கு,
ஆழ்ந்த நன்றி உணர்வுடன்,
ஆரண்யனிவாஸ் ராமமூர்த்தி.
அழகாய்த் தொடங்கி இடைநிறுத்தியிருக்கிறீர்கள்.வாழ்வின் இரைச்சல்களுக்குள் எம் வாழ்வை ஒரு இசையாய் நகரவிடுவதென்பது !
சுஜாதாவின் தேவதைகளை தரிசித்த பிறகு. ஸ்ரீரங்கத்தை இப்போதான் உங்களது எழுத்தின் மூலம் காண்கிறேன்.
நல்லபகிர்வு.
நல்ல பகிர்வு ரிஷபன்.
எங்களுக்கெல்லாம் அழைப்பு இல்லையா ரிஷபன்? நான் சின்ன வயசில் சைக்கிள் ஓட்ட கத்துக்கொண்ட விதம் என்ன?
ஒரு பைத்திய கிழவியை கீழே தள்ளி வாங்கிய திட்டுக்கள் கொஞ்சம் நஞ்சமா?அதெல்லாம் கூட இல்லை. இன்னும் நிறைய !!!!
என்னையும் உங்களுடன் சேர்த்துகொள்ளமாட்டீர்கலா ?
அள்ளிட்டீங்க சார் உள்ளத்தை! தொடர அழைத்ததற்கு நன்றி! தகுதி வரட்டும் முதலில்!
அனுபவங்கள் நல்லாருக்குங்க.... சொல்லியவிதமும் ரசிக்கவைக்கிறது...
அதெல்லாம் நெனைச்சி பாக்குறப்போவும் ஒரு சொகம் கெடைக்கத்தான் செய்யுது...
சரசர ஓட்டம் தான் உங்கள் ஸ்பெஷாலிட்டி .ஒரு ஜெப்ப்ரிஆர்ச்சர் புஸ்தகம் போல
Post a Comment