February 17, 2010

மனிதம்


வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான்.

'ஞாயிறு காலை பத்து மணிக்கு' என்றால் மிகச் சரியாக ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில்.

"வாடா.. கன் டைம். நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்" என்றேன்.

மிக நிதானமாய் அரசு முறை பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான்.

"கேசட் கொண்டு வந்தியா"

குரல் என்னையும் மீறி பரபரத்தது.

வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை. ஊஹூம். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்..

"பிளாஸ்க்குல காப்பியா" என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்த்து.

"எடுத்துக்கோ. சாப்பாடு ஆச்சா"

காப்பியின் மணம் எனக்கும் வீசியது.

அதே நேரம்..

'ழெங்கா.. ழேய்.. ழெங்கா'

வாசல்புறமிருந்து குரல் கேட்டது.

சுப்ரமணி காபியை மேலே சிந்திக் கொண்டான். வழிந்ததைத் துடைத்துக் கொண்டான்.

"யா.. யாருடா அது"

"ப்ச்..என்னோட தலைவிதி. இன்னைக்கு எல்லாரும் ஜாலியா பங்களூர் மேரேஜுக்குப் போயிருக்க.. நான் மட்டும் ப்ரெட் ஸ்லைஸ்.. ஆப்பிள்னு அனாதையா ஒக்கார்ந்திருக்கேனே"

என் குரலில் வெறுப்பு பூர்ணமாய் வெளிப்பட்டது.

"உன் பிரதர்னு சொல்லுவியே.. அவனா.. ஸாரி. அவரா"

"அவனேதான்"

"அவரை ஏதோ இல்லத்துல விட்டு வச்சிருக்கிறதா"

"எங்கேயும் இருக்காது. ரெண்டே மாசம். ஏக ரகளை பண்ணி திரும்பி வந்துட்டான். கட்டின பணம் பூரா வேஸ்ட். அழைச்சுகிட்டு போங்கன்னு டெலிகிராம் கொடுக்கிற அளவு ரோதனை பண்ணியிருக்கான்."

"பாவம்டா. அவரை நான் பார்த்ததே இல்லை. எங்கே.. நான் உள்ளே வரப்ப கவனிக்கலியே"

சுப்ரமணி எழுந்துவிட்டான்.

"ப்ச்.. ஒக்காருடா. பெரிய விஐபி. நீ அவசியம் பார்க்கணுமா"

"பிளீஸ்ரா"

"ழெங்கா.. ழேய்"

மீண்டும் அந்தக் குரல். தகரத்தைத் தரையில் தேய்த்த மாதிரி கர்ண கடூரமாய் தூக்கிப் போடுகிற அலைவரிசையில் கேட்டது.

"சனியன். பேசாம கிடக்கறதா பாரேன்"

பின்னாலேயே நானும் போனேன்.

வீட்டின் முன்புறம் இடப் பக்க மூலையில் சின்னதாய் ஷெட். ஆஸ்பெஸ்டாஸ் தொங்கிக் கொண்டிருந்தது.

காற்றோட்ட வசதிக்காக சிமிண்ட் ஜன்னல்.

"அங்கேதான் இருக்கான்" என்றேன் வெறுப்புடன் சுட்டிக்காட்டி.

ஒருவித ஆர்வமுடன் சுப்ரமணி ஷெட்டை நெருங்கினான்.

பாதி உடைந்து தொங்கிய கதவு வழியே எட்டிப் பார்த்தான்.

பிரேதக் களை முகத்தில் சொட்ட, செம்பட்டை தலைமுடி தடித்த பிரஷ் போல சிலுப்பி நிற்க, புழுதி படர்ந்த உடம்பும், வெறித்த பார்வையுமாய் அந்த உருவம் கண்ணில் பட்டது.

சுப்ரமணியை வெறித்தது. மெல்ல எழுந்து நின்றது. கை உயர்த்தி கோணலாய் சிரித்தது.

"குட் மார்னிங்"

"கு..குட் மார்னிங்"

"நீ.. நீ.. நாணாதானே"

அருகில் வந்து கை நீட்டித் தொட முயன்றது.

"டேய்.. கையை எடுரா" என்று அருகே போய் இரைந்தேன்.

"ழெங்கா.. தண்ணி வேணும்டா"

"கொண்டு வரேன். போய் உட்காரு"

"ழெங்கா.. பசிக்குதுடா"

"சனியனே.. இப்பதானே தட்டு நிறைய சோத்தைக் கொட்டினேன். பிசாசு மாதிரி திங்கறியே"

சுப்ரமணிக்கு ஏனோ இந்த வகை உரையாடல் பாதித்தது. அடி வயிற்றில் ஏற்பட்ட சுரீர் இன்னமும் அடங்கவில்லை.

இப்படியும் ஒரு பிறப்பா.. கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தலரிது..

கடவுளே என்னைக் காப்பாற்றினாய்.

"பாவம்டா. தாகமா இருக்கும் போலிருக்கு"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. என்னை விரட்டணும். வேலை வாங்கணும்"

"இங்கே அசெளகரியமா இருக்குமே. ஹால்ல ஒரு ஓரமா உட்கார வச்சு.."

சுப்ரமணி முடிக்கவில்லை. எனக்கு முகம் கடுத்தது.

"மணி.. உனக்கு இவனைப் பத்தி தெரியாது. ஒரு தடவை எங்க மன்னி ஊர்லேர்ந்து வந்தப்ப இதே மாதிரி.. இவனைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா. கூட்டிண்டு வந்தா.. தடால்னு மேலே பாஞ்சு.. கையைப் பிடிச்சு.. அசிங்கம் பண்ணிட்டான். பிரிச்சு விடறதுக்குள்ளே வெலவெலத்துப் போயிருச்சு. நீ வா. உள்ளே போலாம்" என்றேன்.

சுப்ரமணி அரை மனதாய்த் திரும்பிய அந்த வினாடியில் அவன் கையைப் பற்றிக் கொண்டது. எச்சில் ஒழுகி மேலே தெறித்தது.

"பைசா.. பைசா.. கொழு"

"ஏய்.. விடுரா"

"இரேன் ரெங்கா.காசுதானே.. நான் தரேன்"

ஒரு ரூபாய் நாணயத்தைத் துழாவி எடுத்துக் கொடுக்கப் போனபோது தட்டிப் பறித்தேன்.

"பேசாம வா. முழுங்கி வச்சு பிராணனை வாங்கும்"

சுப்ரமணிக்கு அதற்கு மேல் சுதந்திரமற்று செய்வது அறியாது என்னைப் பின் தொடர்ந்தான்.

விசிஆரில் கேசட் சொருகி டியூன் செய்ய அலைகள் முடிந்து படம் தெரிந்தது.

"எப்படிரா கிடச்சுது.. புத்தம் புதுப் படம்" என்றேன் விழிகள் விரிய.

"ம்.. ஒரு நண்பன் கடையில் இருந்தது. துபாய் பிரிண்ட்"

சுவாரஸ்யம் என்னை ஆக்ரமிக்க, சுப்ரமணியை மறந்து போனேன்.

சட்டென்று நினைவு வந்து திரும்ப, சுப்ரமணி இல்லை. எங்கே போனான்?டிவியை ஆஃப் செய்து விட்டு வெளியே வந்தேன்.

ஷெட் அருகே தண்ணீர் சொம்புடன் நின்றிருந்தான். நீர் வழிந்த உதட்டுடன் என் அண்ணா.

"சார்.. நீங்க வேலை பார்க்கழீங்களா"

"ஆமா. பெரிய ஆபீஸ். நெறைய பேர் இருக்கோம். ரூம்ல ஏஸி பண்ணியிருக்கும். மழை பேஞ்சா ஜில்லுன்னு இருக்குமே. அது மாதிரி ஜில்லுன்னு"

சராசரி மனிதனிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தான்.

"காழ்.. இருக்கா"
"காழா"

"அதான்.. டுர்ர்.. காழ்"

"ஓ. காரா.. இருக்கே. பெரிய கார். ஸ்பீடாய் போகும்"

முட்டாள்.

ஒரு ஞாயிறு பற்றி பேசி நிர்ணயித்த அட்டவணைகளை உதாசீனப்படுத்தி இங்கே வந்து நிற்கிறான்.

என்னுள் கண்மூடித்தனமாய் கோபம் கிளர்ந்தது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?

"வாடா. ஹி ஈஸ் இண்ட்ரஸ்டிங்.. ரொம்ப ஆசையாப் பேசறார். நான் சொன்னா நல்லா புரிஞ்சுக்கிறார்"

சுப்ரமணியின் கையை அவன் வருடிக் கொண்டிருந்த வினோதம் என் பார்வையில் பட்டது.

"ஏண்டா.. ஒனக்கென்ன பைத்தியமா.. இவன் கூட வந்து வேலை மெனக்கெட்டு நிக்கறியே"

என்னையும் மீறி வார்த்தைகள் தடித்தன.

என் இரைச்சல் அண்ணனைப் பாதித்து, பற்றியிருந்த கையை உதறி ஷெட்டின் பிறிதொரு மூலையில் ஒடுங்கிக் கொண்டான்.

சுப்ரமணி நிதானமாய் என்னைப் பார்த்தான்.

"எனக்கு.. பை காட்ஸ் கிரேஸ்.. பைத்தியம் இல்லைடா. அதனாலேதான் அவரோட பேசிகிட்டிருக்கேன்"


28 comments:

Chitra said...

சுப்ரமணி நிதானமாய் என்னைப் பார்த்தான்.

"எனக்கு.. பை காட்ஸ் கிரேஸ்.. பைத்தியம் இல்லைடா. அதனாலேதான் அவரோட பேசிகிட்டிருக்கேன்"

............ஒரு நிமிடம் கண்ணை மூடி, யோசித்து பார்க்க வைத்தது. மனித நேயம் மனதில் இருந்தால், மனிதனின் தோற்றம் அன்பால் அழகு ஆகிறது. அருமையான கதைக்கு நன்றி.

மாதவராஜ் said...

வலிக்கிறது ரொம்பவும், ரிஷபன்.

கே. பி. ஜனா... said...

பேனாவில் ஊற்றி எழுதுவது மையா மனிதமா? அருமை! -- கே.பி.ஜனார்த்தனன்

கே. பி. ஜனா... said...

பேனாவில் ஊற்றி எழுதுவது மையா மனிதமா? அருமை! -- கே.பி.ஜனார்த்தனன்

வசந்தமுல்லை said...

நானும் பைத்தியம் இல்லை ! அந்த காரக்டரை பார்க்கணும் போல இருக்கு!!

Thenammai Lakshmanan said...

எனக்கு ரொம்பப் பிடிச்சது ரிஷபன் மூஞ்சியில அடிச்ச மாதிரி சுப்ரமணி சொன்னது சில சமயம் அப்படியும் பேச வேண்டி இருக்கே

வெங்கட் நாகராஜ் said...

//"எனக்கு.. பை காட்ஸ் கிரேஸ்.. பைத்தியம் இல்லைடா. அதனாலேதான் அவரோட பேசிகிட்டிருக்கேன்"//

சில சமயம் இதைப்போன்ற வார்த்தைகள் தான் நிதர்சனமான உண்மையை உரைக்கிறது. நெஞ்சைத் தொட்டது உங்களது பதிவு.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

சென்ஷி said...

அருமையான கதை ரிஷபன்

kavya said...

மனதைத் தொட்டு போனது கதை...
நின்று நிதானாமாய் வாழ முடியாமல் ஓடிக் கொண்டே இருக்கும் இன்றைய சூழலில் மனிதம் மரித்துத் தான் போய்விட்டது.சிந்திக்க வைத்த கதை.

திவ்யாஹரி said...

"எனக்கு.. பை காட்ஸ் கிரேஸ்.. பைத்தியம் இல்லைடா. அதனாலேதான் அவரோட பேசிகிட்டிருக்கேன்"

great ரிஷபன்.. ரொம்ப நல்லா இருக்கு. உங்க கதைகளுக்கு நான் ரசிகை ஆகிட்டேன்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

இறைவன் படைப்பில் சில இடங்களில் சில் பேர் பாவம் இது போல் முடிவு தெரியாத கஷ்டங்களில் உள்ளனர். சுப்பிரமணி போல் மனித நேயம் மிக்க யாராவது எப்போதாவது வந்து போவது சற்று நேரம் அதுபோன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கலாம். கூடவே இருப்பவர்களுக்கு மனதிற்கு மிகவும்
கஷ்டமாகத்தான் இருக்கும். இன்றைய டென்ஷனான வாழ்க்கையில் யாருக்குமே, எந்த சமயத்திலுமே மன நிலை பாதிப்பு ஏற்பட்டு தன சுய நினைவை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். நாம் இன்று சற்று தெளிவாக இருக்கும் பொழுது, மற்றவர்கள் கஷ்டத்தில், நம்மால் முடிந்த ஒரு சிறிய அன்பை வெளிப்படுத்தி மகிழ்விக்கலாம். சிந்திக்க வைத்த நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.

R. Jagannathan said...

Ideal character - Subramani. Also, rare. I doubt if I can be so humane though I will feel sorry for the suffering person. - R. Jagannathan

செ.சரவணக்குமார் said...

மிகப் பிடித்த சிறுகதை ரிஷபன்.

Deepa said...

பிரமித்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன்.

கமலேஷ் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு...தொடர்ந்து படிக்க முடியாத படி எழுத்துக்கள்ள வலி இருக்கு...

Anonymous said...

எதோ ஒரு மன அழுத்தத்தோடு இங்கு வந்தேன் அந்த வருத்தம் அர்த்தமற்றது என தோன்றியது இந்த கதை படித்தவுடன்...அழவெச்சிட்டீங்க.. பெரும்பாலும் சிலர் பதிவுகள் கண்கலங்க வைக்கும் ஆனால் இந்த கதை அழவைச்சிடுச்சி...

மனிதர்கள் வேண்டும் நேயத்தோடு.....

☀நான் ஆதவன்☀ said...

அருமையான கதை ரிஷபன்.

Anonymous said...

ரிஷபன்,
கதை போல் தெரிந்தாலும் உண்மை..இந்த நிலையில் இருக்கும் பெண்கள் வாழ்க்கை மிக மோசம் :((

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் எழுதிய விதம் நன்றாக இருந்தது.

கதையா படிக்கும் போது மனிதாபிமானத்தோட நெகிழ்வா உணர்ந்தாலும், உண்மையில் நிஜத்தில்
நம்மில் எத்தனை பேர் இப்படியிருக்கும் மனிதர்களை இயல்பாய் அணுகுகிறோம்?

ரொம்ப அதிகம் வேண்டாம்,ஒரு காக்காவலிப்பு வரும் மனிதனை கூட அந்த நிலையில் போய் அணுக (சிராய்த்துக்கொள்ளும் கையை, காலை பிடித்துக்கொள்வதற்காகத்தான்)
யோசிக்கிறார்கள். ஹும்.

மயில் விஜி அவர்கள் சொன்னது போல் இந்நிலையில் இருக்கும் பெண்களின் நிலை இன்னமும் மோசம் :((

CS. Mohan Kumar said...

ரொம்ப நல்ல கதை. வாசிக்கும் போது பல உணர்சிகள் வந்து போகின்றன. உங்கள் எழுத்தின் வலிமை!!

ஹேமா said...

சொல்ல வார்த்தைகள் குறைவாகவேயிருக்கு ரிஷபன்.
மனசுக்கு அழகு தேவையில்லை.

ஹுஸைனம்மா said...

கதையில் படிக்க சுவாரசியமாய், நெகிழ்ச்சியாய், கோபமாய், வருத்தமாய், எல்லாம் இருக்கும். ஆனால், நிஜத்தில், நாமும் அவ்விதமே இருப்போம்.

எப்போதாவது ஒருமுறை பார்க்கும்போது இரக்கம் வரும். உடனிருந்து எப்போதுமே பார்க்கும்போது நாமும் இப்படித்தான் இருப்போமோ என்னவோ!! இறைவன் பாதுகாக்கட்டும் எல்லாரையும்.

பத்மா said...

இன்றைக்கு நான் உங்க கதைகள் எல்லாம் படிக்கிறேன் .என்னொரு நடை .என்ன ஒரு மனிதம் .?மனதை தொடும் வரிகள்

vasan said...

ரிஷ‌ப‌ன்,
இதை ப‌டித்த‌ பின்,
உல‌க‌ம் த‌லைகீழாய் சுற்ற‌வில்லை.
த‌ம்பியின், ந‌ட‌ப்பு (ந‌டைமுறை) முறை இல்லாம‌ல் இருந்த‌லும்,
முத‌ன் முத‌லாய், சிறிது நேர‌ம் ம‌ட்டும் ப‌ழ‌கும் ந‌ண்ப‌னிண் பார்வைக்கும்,
தின‌மும் கால‌ம் கால‌மாய் நேரா நேர‌த்திற்கு, அவ‌னை/அவ‌ரை பார்த்துக்கொள்ள‌
வேண்டிய‌ இவ‌ன‌து பார்வைக்கும் (திருட்டு விசிடி பார்க்கும்) வித்தியாச‌ம்
நிச்ச‌ய‌ம் இருக்க‌த்த‌ன் இருக்கும்.
செழித்த‌ சிப்பியில் ந‌ல்முத்து தானெ க‌ருக் கொள்ளும் (இது உங்க‌ள் எழுத்துக்கு).

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சிறப்பான பதிவு
பகிர்வுக்கு மிக்க
நன்றி!

Anisha Yunus said...

கஷ்டம்தான் ரிஷபன். சில சமயம் வெளியாட்கள் புரிஞ்சுக்கற அளவு சக மனிதர்கள் புரிஞ்சுக்க மாட்டாங்க. அனுபவத்துல பல சமயம் உணர்ந்து இருக்கேன்.

Vijay Periasamy said...

மனதை உறுத்தும் பதிவு . ரொம்ப நல்லா இருக்குங்க ..

ezhil said...

##பை காட்ஸ் கிரேஸ்.. பைத்தியம் இல்லைடா. அதனாலேதான் அவரோட பேசிகிட்டிருக்கேன்"##. ஆம் பல நேரங்களில் நாம் பைத்தியமாகத்தான் நடந்து கொள்கிறோம் தலைப்பை சரியாக நிரூபித்த கதை. எழுத வார்த்தைகள் தான் இல்லை