February 11, 2010

பூஞ்சிறகு


திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான்.

பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன்.

"பாபு.. நீயும் வா"

அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை.

எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன.

திடுக்கிட்டு திரும்பினேன்.

புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின.

ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை.

தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது.

இடைவேளை வெளிச்சத்தில் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

இது முதல் பூஞ்சிறகு !

கைவிரல்களை மெல்ல நிதானித்துப் பிரித்து காற்றில் பறக்காமல் நோட்டமிடும் சிறுவனாய் நினைவுகளைப் பிரிக்கும் நான்.

ரயிலின் தடக்..தடக்கில் கூடவே மனசும்.

ஆறு வருட இடைவெளிக்குப்பின் இதோ புஷ்பாவைத் தேடிப் போகிறேன்.

இன்னொரு பூஞ்சிறகு !

"டிபன் சாப்பிடறியா..பாபு"

"எதுக்கு.. வேணாம்"

"சும்மா பிகு பண்ணாதே"

தட்டில் கேசரி,பஜ்ஜி. நெய் விரல்களில் ஈஷிக் கொள்கிறது.

"இந்தா சீயக்காய். தேய்ச்சுக் கழுவு"

கைநீட்டி வாங்க முயன்றவனை விரல் பற்றி தேய்த்துக் கழுவி.. பளிச்சென்ற முத்தம் உள்ளங்கையில்.

"எ..ன்ன"

"புஷ்பா.."

குரல் கேட்டுத் திரும்பிப் போகிறாள். போகுமுன் என்னிடம் கள்ளச் சிரிப்பு வீசி.

ரயில் நின்று சிக்னலுக்காகக் கூவுகிறது.

'ழே..'

மனசும்.. 'புஷ்பா..'

அடுத்த பூஞ்சிறகின் ஸ்பரிசம் !

புதுப் புடவை. முகத்தில் பளிச். இன்று என்ன விசேஷம்? சாக்லேட் எதற்கு?

"பிரிச்சு வாயிலதான் போடேன்"

'ஆ' காட்டினாள்.பின்பக்க வராண்டாவின் தனிமையா.. அது தந்த துணிச்சலா.. போட்டதைப் பாதி கடித்துத் திருப்பித் தந்தவளை ஆச்சர்யமாய் பார்க்க.. சாக்லேட் இத்தனை தித்திக்குமா!

"சொல்லு. மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்"

ஓ. பிறந்த நாளா. விறுவிறுவென்று பேப்பர் எடுத்து எழுதினேன்.

சூரியக் கதிர்களில்ஏன் இத்தனை மென்மை?

மரங்களில் ஏன் இன்றுமலர்க்கூட்டம்?

வண்ணத்துப்பூச்சிகள்கூடபுத்தம்புது நிறங்களில்!

வானவில்லும் தரையிலா?

இன்று புஷ்பித்தது யார்,நீயா..

இல்லை..என் மனசா?!

எழுதிய கையைப் பற்றி இன்னொரு முறை உதடுகளின் ஒற்றல். நழுவி விடப் போகிறது என்று இன்னும் இறுக்கமாய் விரல்களை மூடிக் கொண்டு நான்.

தடக்.. தடக்.ஆறு வருஷம். அலைச்சல். கால்கள் தரையில் பதிய எனக்கொரு அடையாளம், அங்கீகாரம் கிடைக்க. இன்று தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடிகிறது. புஷ்பாவைப் பெண் கேட்க இயலும். எதிராளியை பணத்தால் புரட்டிப் போட முடியும்.

பூஞ்சிறகுகளின் பலத்தில் நான்..

படியேறும் போது முரளி எதிரில் வருகிறான். அவள் தம்பி.

"வா. ரொம்ப நாளாச்சு பார்த்து"

புஷ்பாவின் அம்மா முகம் சுளித்து.. இனம் புரிந்து லேசாய் புன்னகையின் தீற்றல்.

அவள் எங்கே.. பார்வை துழாவிக் கொண்டே இருக்கிறது.

"லெட்டரே போடலை. எங்கே இருக்கேன்னே தெரியலே. அப்படி என்ன அழுத்தம்? உங்கம்மா தினம் அழுகைதான்"

மழுப்பலாய் சிரித்தேன்.

"நீ வரப் போறேன்னு லெட்டர் வந்த பிறகுதான் அவ கண்ணுல உயிர் வந்தது"

"சாதிச்சுட்டானே.. அதைச் சொல்லு"

முரளியின் கைக்குள் என் கை சிறைப்பட்டு மீண்டது.

"வா. உட்கார். ஏன் நின்னுண்டே இருக்கே. காப்பி கொண்டு வரேன்"

சோபாவில் சாய்ந்து உள்ளுக்குள் தவித்தேன். கேட்டு விடலாமா? புஷ்பா எங்கே?பார்வை அலைபாய்ந்தது.

எதிர்ச்சுவரில்.. என்ன.. யாரது..

விலகிய பார்வை மீண்டும் புகைப்படத்தில் பதிய.. உறைந்த புன்னகையுடன் புஷ்பா.

கைக்குள் பூஞ்சிறகுகள் அதிர்ந்தன.

"என்னமோ ஜுரம். பத்து நாள் போராடி.. ஆச்சு. ஒரு வருஷம். தேத்திக்கவே முடியலே. உனக்குத் தகவல் கூட சொல்ல முடியலே"

புஷ்பாவின் அம்மா புத்தம் புதிதாய் அழுதாள். படத்தில் அசைவில்லை. இழப்பு நிஜம்தான்.விஷயம் பாதித்த திகைப்பில் வெறித்தேன்.

யாரோ வலுக்கட்டாயமாய் என் விரல்களைப் பிரித்து.. ஒவ்வொன்றாய்.. பூஞ்சிறகுகள்.. காற்றில் பறக்க ஆரம்பித்ததை என்னால் தடுக்க முடியவே இல்லை அந்த நிமிஷம்.


6 comments:

Rekha raghavan said...

//காற்றில் பறக்க ஆரம்பித்ததை என்னால் தடுக்க முடியவே இல்லை அந்த நிமிஷம்//

கதையை படித்து முடித்ததும் என் கண்கள் குளமானதை என்னால் தடுக்க முடியவில்லை. அருமையான கதை.

ரேகா ராகவன்.

ஹேமா said...

என்ன இது அழகான பூஞ்சிறகை இப்பிடி நாலு சட்டத்துக்குள்ள அடைச்சிட்டீங்களே ரிஷபன் !
எழுதி நகரவிட்டது அழகு.

ஆர்வா said...

Soooo... Sweeeeet

Chitra said...

புஷ்பாவின் அம்மா புத்தம் புதிதாய் அழுதாள். படத்தில் அசைவில்லை. இழப்பு நிஜம்தான்.விஷயம் பாதித்த திகைப்பில் வெறித்தேன்.


............சில வார்த்தைகளில், எத்தனை உணர்ச்சிகள். ரிஷபன் சார், kudos!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று புஷ்பித்தது யார்,நீயா..
இல்லை..என் மனசா?!

புஷ்பாவின் அம்மா புத்தம் புதிதாய் அழுதாள். படத்தில் அசைவில்லை. இழப்பு நிஜம்தான்.விஷயம் பாதித்த திகைப்பில் வெறித்தேன்.

நினைவலைகளில் மட்டுமே பறக்க முடிந்த பூஞ்ச்சிறகு !
வலியை உணர்த்திய விதம் அருமை !

பத்மா said...

வார்த்தைகளில் விளையாடி உள்ளீர்கள் .அந்த கணம் எதுவும் புரியாது .ஆனால் அந்த கணத்தை நினைக்கும் போதெல்லாம் வலி தாங்காது .