July 20, 2010

நிறைவு



ஏனோ அந்தப் பெண்மணியைப் பார்க்கும்போது செத்துப் போன அம்மா ஞாபகம்தான் வந்தது.

வருஷம் தவறாமல் ஆனி மாசம் அம்மா செத்துபோன நாள் வரும். கூடவே சர்ச்சையும்.

"என்றைக்கு"

"பதிமூணாந்தேதி. லீவுக்கு சொல்லிட்டீங்களா"

"சொல்லணும். ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்னை. நடுவுல இது வேற. ம்.ம். பேசாம ஒண்ணு செஞ்சா என்ன"

"வேணாம். பேசாதீங்க" என்று தடுக்கும் நளினியின் குரலில் பதற்றம் தெரியும்.

"எல்லாம் மூட நம்பிக்கை"

"அப்படிச் சொல்லாதீங்க. நாலு வருஷங்களுக்கு முன்னால செய்ய முடியாம போயி கோவில்ல வச்சு செஞ்சோம். அடுத்த வாரமே உங்களுக்கு ஸ்கூட்டர் ஆக்சிடெண்ட். பிழைச்சதே அதிர்ஷ்டம்"

"ஸ்கூட்டர்ல ஏதோ ரிப்பேர். அதைப் போயி.."

"சரி. போன வருஷம் அதேமாதிரி நீங்க டெல்லிக்கு டூர் போகணும்னு கோவில்ல செஞ்சீங்க. என்ன ஆச்சு.. பிரபுக்கு ஜுரம். ஸ்கூலுக்கு ரெண்டு வாரம் லீவு. சீரியஸா போயி புள்ளை புழைப்பானான்னு இருந்தான்"

"இப்ப என்னதான் சொல்றே" என்றேன் எரிச்சலாக.

"விளையாட்டே வேணாம். இந்த வருஷம் வீட்டுலதான் தெவசம்"

"உன்னால அவ்வளவு காரியமும் செய்ய முடியாது. அப்புறம் உடம்பு வலி அது, இதுன்னு படுத்திட்டு செஞ்சதுல ஏதோ குறை அப்படீன்னு அடுத்த புராணம் ஆரம்பிப்பே"

"எனக்குத் தெரிஞ்ச மாமி ஒருத்தி இருக்கா. நமக்குக் கூட ஏதோ தூரத்து உறவாம். சமையலுக்கு அவங்களை வச்சுக்கலாம். நம்ம சாஸ்திரிகளுக்கு நீங்க போன் பண்ணிருங்கோ. சிம்பிளாப் பண்ணாலும் வீட்டோட பண்ணிரலாம்"

தலையசைத்து வைத்தேன்.

மாமி சொன்னபடியே வந்து விட்டாள். மடியாகச் சமையலும் ஆரம்பித்து விட்டது. ரொம்பவும் இயல்பாகச் செய்தாள். சர்வீஸ்தான்!

மாமி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இறுக்கம்தான். சற்று மேடான நெற்றி. முகச் சுருக்கம். சின்னக் கண்கள். அம்மாவும் இதே ஜாடைதான். அதனால்தானோ என்னவோ மாமியைப் பார்க்கும்போது அம்மா ஞாபகம் வந்தது.

கூடையில் இருந்த சின்னச் சின்ன கத்தரிக்காய்களைப் பார்க்கும்போதும் அம்மா ஞாபகம். ரசம் வைப்பாள். மசாலாப் பொடி திணித்த பிஞ்சுக் காய்கள். அம்மாவுடன் போய்விட்டது அந்த ரசமும். இவளிடம் கேட்டால் சிரிப்பாள்.

"கத்தரிக்காயை என்ன பண்ணப் போறீங்க" என்றேன்.

"ஏதாவது உளறாதீங்க. திவசத்துக்கு கத்தரிக்காயெல்லாம் பண்ணமாட்டா"

என்ன அசட்டுத்தனம். அம்மாவுக்கு அதுதானே பிடிக்கும். இன்று அதைச் செய்யாமல் வேறேதோ காய்கறிகளைச் செய்து வைத்து என்ன பயன்?

சாஸ்திரிகளும் இன்னொருவரும் வரவே பதினொரு மணியாகி விட்டது. வாய் இயந்திரமாய் மந்திரங்களை முணுமுணுக்க மனசுக்குள் அம்மா நினைவுகள்தான்.

அடம் பிடிக்கிற பிரபுவைச் சமாளிக்கிற விதமே தனி.

"தோசை சாப்பிட வாடா"

"எப்ப பார் அதே தோசை. வேணாம் போ"

"இங்கே பார். யானை தோசை.. குருவி தோசை"

மாவை வெவ்வேறு ஷேப்பில் கொட்டித் தோசை வார்த்து சாப்பிடச் செய்து விடுவாள்.

"உங்க அப்பனையும் இப்படித்தான் தாஜா பண்ணணும்" என்று கூடவே கமெண்ட் வேறு.

கொஞ்சங்கொஞ்சமாய் வியாதிகள் வர ஆரம்பித்தன. சாப்பாடு குறைந்து கொண்டே வந்து மோர் சாதத்தில் நின்று விட்டது. எது அதிகப்படியாய் சாப்பிட்டாலும் வாந்திதான். பேதிதான். நல்ல வேளை. ரொம்ப கஷ்டப்படாமல் போய்விட்டாள்.

"சுபிட்சமா தீர்க்காயுசா இருக்கணும்" என்றார் சாஸ்திரிகள்.

சாப்பாடு முடிந்தாகி விட்டது. தட்சணையும் கொடுத்தாகி விட்டது. கிளம்ப வேண்டியதுதான்.

"ரொம்ப திருப்தி.. வரட்டுமா"

போய்விட்டார்கள்.ஊஹூம். எனக்கு ஏனோ திருப்தி ஆகவில்லை. மனசுக்குள் ஏதோ குறை நெருடியது. புரிந்தும் புரியாமலும் மந்திரங்களைச் சொன்னதில் அதிருப்தி.மனசு அலை பாய பார்வை தன்னிச்சையாய் மாமி மேல் பதிந்தது. அருகே போனேன்.

"மாமி நீங்க சாப்பிடுங்கோ. நான் பரிமாறட்டுமா"

ஏதோ சொல்ல முயல்வது புரிந்தது.

'நம் அந்தஸ்து என்ன.. போயும் போயும் சமையல்கார மாமிக்கு நீங்க ஏன் பரிமாறணும்?' என்கிற தொனி புரிந்தது.

மாமி சோகையாய் சிரித்தாள்.

"எனக்கு இப்ப எதுவும் ஒத்துக்கிறதில்லை. ஏதோ ருசியா சமைப்பேனே ஒழிய நான் சாப்பிடறது மோர் சாதம் மட்டும்தான். வேறேதாவது சாப்பிட்டா வாந்தி வந்துரும். முடியறதில்லே"

மெல்ல மோர்சாதம் கலந்து தொட்டுக் கொள்ள ஏதுமின்றி ஒவ்வொரு கவளமாக விழுங்கினாள்.

அம்மா...

மனசு உடைத்துக் கொள்ள, கண்ணீர் தானாகக் கொட்ட.. அடக்க இயலாமல்.. விம்ம ஆரம்பித்தேன்.


(கல்கியில் பிரசுரமானது)



19 comments:

நிலாமகள் said...

கனத்துப் போனது மனசு... நினைவில் வாழ்பவர்களின் திதி நாட்கள் கால யந்திரமாய் மாறி அவர்களின் நிஜ வாழ்நாட்களுக்குள் பொதித்து விடும்
வல்லமை பெற்றதாய் அமைந்து விடுகின்றன...

க ரா said...
This comment has been removed by the author.
க ரா said...

என்னுடைய கண்களும் கலங்குகிறது ரிஷபன் (:

திவ்யாஹரி said...

மிக அருமையான கதை.. கலங்க வைத்து விட்டது.. இவ்ளோ நாட்கள் உங்கள் கதைகளை படிக்கச் முடியாமல் பொய் விட்டது ரிஷபன்... இனி தொடர்வேன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படித்து முடித்தவுடன்,
கண்களிரண்டும்...
குளமாயின,
நிஜமாகவே.....!!!

பத்மா said...

எத்தனை நாள் ஆனாலும் அம்மா நினைவு மட்டும் போகுமா?நெகிழ்ச்சி ரிஷபன் சார்

Priya said...

கலங்கவைக்கும் கதை....நன்றாக இருக்கிறது!

சுந்தர்ஜி said...

ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி பின்னப்படும் கொடியில்தான் எத்தனை விதமான பூக்களும் காய்களும் சருகுகளும்.எல்லாவற்றையும் உன்னிப்பாய் கவனிப்பவன் ஒரு கலைஞனாகவோ அல்லது ஒரு ரிஷபனாகவோ ஆகிறான்.

க.பாலாசி said...

அழகா கோர்த்திருக்கீங்க ரிஷபன் இந்த கதையை... படிக்கிறவங்க மனசும் கொஞ்சம் விம்மத்தான் செய்கிறது.. மோர்சாதத்தில் ஒரு அம்மா முடிந்தாள்.. இன்னொரு அம்மா அதில் ஆரம்பிக்கிறாள்... அருமை...

Madumitha said...

உங்கள் கதையை எப்பொழுது
படித்தாலும் மனசு நிறைகிறது
ரிஷபன்.

அம்பிகா said...

மிக அருமையான கதை.. கலங்க வைத்து விட்டது..

vasu balaji said...

ம்ம். என்ன சொல்றது. ஆனா நிஜத்துலயும் பல முறை இப்படி சூசகம் வரும் தெரியுமோ? ரொம்ப நெகிழ்ந்து போனேன். காரணம் என் அம்மாவும் மோரும் ஊருகாயும்தான். :(

ஹேமா said...

தொடக்கமும் நிறைவும் அம்மாதான்.
ரிஷபன் எழுத்தால் இளக வைக்கிறீர்கள் மனதை.

சாந்தி மாரியப்பன் said...

மிக அருமையான கதை ..

VELU.G said...

மனதில் நின்ற மிக அருமையான கதை

வெங்கட் நாகராஜ் said...

அற்புதம் சார். உங்கள் தனித்துவம் இதில் தெரிகிறது. மனதை நெகிழ வைக்கும் கதை சொல்வதில் உங்களை வெல்ல உங்களைத் தவிர யாரும் இல்லை.

vasan said...

மோர் சாத‌த்திற்குப் பின்
கை அல‌ம்ப‌னும், நீங்க‌,
க‌ண் க‌ல‌ங்க‌ வ‌ச்சுட்டிங்க‌.

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் அம்மா 83 வயது வரை (கடைசி ஒரு 6 மாதங்கள் தவிர) தன் காரியங்களைத்தானே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். காலமாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது இருந்தால் 100 வயது ஆகும். எனக்கு இப்போது 61 வயதாகியும், இன்றும் என் அம்மாவை நினைத்துக் கொண்டால் எனக்கு 2 சொட்டாவது கண்ணீர் வரும். யாருக்குமே அம்மான்னா அம்மா தான். என் அம்மாவின் நூற்றாண்டு சமயம் இந்தக் கதையைப் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.

Thenammai Lakshmanan said...

நெகிழ வைத்துவிட்டீர்கள் ரிஷபன்..