July 22, 2010

எனது விழியில் உனது பார்வை

"பத்ரி"
மூன்றாவது முறையாக அழைப்பு வந்துவிட்டது. ஜன்னலின் அருகில் மழைச்சாரல் படும்படி அமர்ந்திருந்தான்.
"பத்ரி"
காற்றின் மணம் மிக அருகில் வீசியது.
"பத்ரி"
காற்றின் சாரல் உட்புறம் அடித்தது.
"எ... ன்னது... எழுந்திரேன்"
அம்மாவுக்கு மென்மையான குரல். சில நேரங்களில் அலுப்பு தட்டும் போதும் கூட பிசகாத குரல்.
''இந்தா... காபி ஆறியாச்சு"
கப்பை கையருகில் பிடித்துக் கொடுத்தாள்.
"குடி"
குரலில் தெரிந்த மிரட்டலோ அல்லது எல்லை மீறிய அலுப்போ. வாங்கிக் குடித்துவிட்டு காபி கப்பை நீட்டினான்.
"எழுந்து வா... உடம்புக்கு ஆகாது "
"மன்னி வரலியா."
"வருவா, நீ எழுந்திரு..."
"மன்னி வரட்டும். அதுவரைக்கும் நான் இங்கேதான் இருப்பேன்."
இருபத்தாறு வயது மழலை கேட்டது. அம்மா நகர்ந்து போனது புரிந்தது.பத்ரி ஜன்னலோடு முகத்தைத் தேய்த்துக் கொண்டான். மூடியிருந்த கண்களின் மேல் நீர்த் திவலைகள். மனசு புழுங்கி உடலெங்கும் ஜில்லிப்பு. என் இன்னும் வத்சலா மன்னியைக் காணோம்?
நிச்சயம் நேரம் ஓடியிருக்க வேண்டும். யாருக்கு புரிகிறது வினாடி, நிமிஷம் எல்லாம்.
நேத்து காலைல... முந்தா நாள் ராத்திரி... ஜோன்னு மழை கொட்டினப்போ, என்னமா அலங்காரம்... பூ வச்சு ஜோடிச்சு... ஹப்பா... இத்தனை உசரமா...
ஊஹும் எதுவும் புரியாது. புலப்படாது. தொடு. தைரியமா தொடு! கையைப் பற்றி அழுத்தி ஸ்பரிச சந்தோஷம் மட்டும். தகவல் ஒரு புலனில் கிரகிக்கப்படும். இன்னொரு தடவை தொட ஏதோ புலனாகும்.
"இதுவோ... இதுவே..."
''இவதான்.. உன்னோட மன்னி.''
''மன்னி, உங்க பேரு''
''பாரேன், உடனே விசாரணை!''
''இருக்கட்டுமே. தெரிஞ்சுண்டா என்ன தப்பு''
''வத்சலா''
இரைச்சல்களின் நடுவே தம்புராத் தந்தி.
''மன்னி.. உன்னைத் தொடலாமா...''
''எ. என்ன?''
"ச்சீ.. வாயை மூடூரா..''
''ஏன் பதட்டப்படறீங்க. பேசாம இருங்களேன்.''
''சனியன். புத்தி ௬டவா இல்லாம போச்சு... பகவானே... என்னை என் சோதிக்கறே...''

ஆனால் வத்சலா தனிமையில் அவனிடம் வந்தாள். தொடச் சொன்னாள். தயங்கியவனின் கை பற்றிக் கொண்டாள்.

''நான்தான் உன்னோட மன்னி. பேரு வத்சலா. படிப்பு பி.ஏ. ஒத்தைப் பின்னல், கொஞ்ச ஓவல் ஷேப்ல முகம், ஒல்லிதான். கவிதை பிடிக்கும். எழுதுவேன் எப்போவாவது. ரசம் வைச்சா ''சூப்பர்'' னு டம்ளரோட குடிக்க கியூ நிக்கும். ஜஸ்கிரீம் பிடிக்கும். மழைச்சாரல் பிடிக்கும். ஏலக்காய் டீ பிடிக்கும். ஜேசுதாஸ் பிடிக்கும். இப்போ பத்ரியையும் பிடிக்கும்."

மூச்சு விடாமல் பேசினாள்.
''மன்னீ''
"ஸோ... வீ ஆர் ஃ ப்ரெண்ட்ஸ்... ஓகே ''
பார்வை எப்படி மங்கலாகி மறைந்து போனது என்று ஒரு வார்த்தை விசாரிக்காமல் நகர்ந்தாள்.
யார் சொன்னது, அறிமுகத்திற்கும் பழக்கத்திற்கும், பேச்சும் பார்வையும் அவசியம் என்று.
வத்சலாவுடன் நிறையப் பேச முடியவில்லைதான். அவளைப் பார்க்கவே முடியவில்லைதான்.
''ம.ன்..னி''
எதிரில் வந்து நிற்பது புடவை சரசரப்பில் புரியும். கேட்டது கொண்டு வந்து தரப்படும்.
''என்ன செய்யட்டும்?'' என்றதில் அக்கறையும் அன்பும் புரியும்.
அண்ணாவிடம் மன்னி சொன்னாளாம்.
''அப்படியே பத்ரி உங்கப்பா மாதிரியே பரந்த மார்பு. வட்ட முகம். நீங்க கொஞ்சம் பூஞ்சை. பத்ரி நடை கூட உங்கப்பா சாயல். இருட்டுல நின்னா இவரா... அவரான்னு தெரியாது.''
அண்ணா முகம் என்னவாய் மாறியதோ, ஆனால் மன்னி மறுமுறை வேறெதுவும் ஒப்பிட்டு பேசவில்லை. இந்த ஒரு வருஷ காலமாய்.
ஹால் கடிகாரம் ''டோய்ங்'' என்றது. ஏதோ அரை மணி. ஐந்தரையா... ஆறரையா... தெரிந்து என்ன ஆகப்போகிறது.
''வா. பத்தாச்சு படு. விளக்கை அணைச்சுட்டு நாங்களும் படுக்கணும்''
படுத்ததும் நினைப்புகள். அது அலுத்ததும் கனவுகள். அப்புறம் மயக்கம். மீண்டும் விழிப்பு. எழுந்ததும் சுடச் சுட காப்பி.
மன்னியின் வளைகாப்பின்போது ஹால் மூலையில் முகமெல்லாம் பரவசமாய் உட்காந்திருந்தான். நடப்பதை எல்லாம் பக்கத்தில் அமர்ந்த ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
''கை நிறைய வளையலா!'' என்றான் பூரிப்பாய்.
''ம். அதனாலதான் வளைகாப்புன்னு பேரு''
மன்னி வளையல்களைத் தொடச் சொன்னாள். கண்ணாடி வளையல்கள் சப்தித்தது பிடித்தது. அதைவிட அதிகமாய் மன்னியை.
''என்ன... கவிதை எழுதியிருக்கீங்க..''
சில சமயம் மரியாதை. சில சமயம் ''நீ... வா... போ...'' புரிபடாத உறவுக் குழப்பம்.
''அது எதோ... கிறுக்கல்... பத்ரி...''
"சொல்லேன். நானும் கேட்கறேன்.''
மன்னியிடமிருந்து சில வினாடிகள் பதிலில்லை.எழுந்து போய்விட்டாளா..
''மன்னீ''
''ம்''
''சொல்லுங்கோ''
"வேணாம்... பத்ரி''
''ஏன்... ஞாபகம் இல்லியா''
"இருக்கு. ஆனா...''
"சொல்லு" என்றான் பிடிவாதமாய்.
கயல் விழி...
ராஜபார்வை...
மயில் தோகை முழுவதும் கண்களாம்...
வேலும் விழியும் ஒன்றென
இலக்கியம் சொன்னது...
என் பார்வை மட்டும் பழுதடைந்து...
பத்ரியிடம் மெளனம்.
வத்சலா பதறியிருக்க வேண்டும்.
"ஸாரி பத்ரி. சட்டுனு இதான் ஞாபகத்தில வந்தது. அதனாலதான் சொல்ல மாட்டேன்னு..."
"பரவாயில்லே மன்னி. கவிதைதானே"
"கண்ணில்லாத ஒருத்தரைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். சட்டுனு மனசுல வந்த வரிகள். கவிதையோ... என்னவோ... சின்ன வயசுல... எழுதின.. முதல் கவிதை... என்னவோ சின்ன வயசுல... எழுதின.. முதல் கவிதை... இப்பவும் மறக்கலே..."
"வத்சலா"
அண்ணாவின் குரல் உரத்திக் கேட்டது.
"இதோ வரேன்"
எழுந்து போனாள் என்பது புரிந்தது.
"என் பார்வை மட்டும்... பழுதடைந்து..."
பத்ரிக்கு சிரிப்புதான் வந்தது. இந்தக் கவிதையை நான் எழுதியிருக்க வேண்டும். ரொம்பப் பொருத்தமாய் இருந்திருக்கும்.
"பத்ரி... சாப்பிட வரியா."
அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது.தூக்கி வாரிப் போட்டது. நினைவுகளில் அமிழ்ந்தவனைக் கரை சேர்க்கிற மாதிரி.
"மன்னி வரலியா."
"வருவாடா"
"குழந்தை நன்னாயிருக்கா..."
"ஆமா"
"என்ன பேரு"
"ஆதித்யா"
"நல்ல பேரு."
"சாப்பிட வா"
"மன்னி வரட்டுமே"
"எப்போ வராளோ. கார்லதான் கொண்டு வந்து விடறதாய் பேச்சு. இன்னும் காணோம்."
"அண்ணாவும் போயிருக்கானா.."
"ஆமா... நீ சாப்பிட வா. எனக்கும் காரிய ஆனாப்ல இருக்கும்"
"பசிக்கலேம்மா"
"பொய் சொல்லாதே. வா, மோர் சாதமாவது ஒரு வாய் சாப்பிடு..."
"வே..ணாம்..."
போன் ஒலித்தது. அம்மா வேகமாய் போனது புரிந்தது.
"என்ன... நாதான் பேசறேன்.."
பத்ரிக்கு அம்மா பேசியது சிரிப்பாக இருந்தது.
"ஹலோ சொல்லேன். இதென்ன மொட்டையா ஒரு ஆரம்பம்."
"என்னது .. அட .. ஈஸ்வரா .. எப்படி "
அம்மாவின் அலறல் நிசப்தமான ஹாலில் எதிரொலித்து திடுக்கிடச் செய்தது.
"தெய்வமே... இதென்ன சோதனை..."
"அம்மா..."
பத்ரி தடுமாறி எழுந்தான்...
"இப்பவே கிளம்பி வரோம்... சரி... சரி... எனக்கு முடியும்... பத்ரியும் தான்... அவன் வேணாமா. எங்கே விடறது..."
"அம்மா... அம்மா"
"சரி. வச்சிருங்கோ."
பத்ரி உத்தேசமாய் நடந்து அம்மாவைப் பற்றி விட்டான். உலுக்கினான்.
"எ.ன்னாம்மா.."
"மன்னி நம்மை மோசம் பண்ணிட்டாடா"
"என்ன"
"திடீர்னு ஃபிட்ஸ் மாதிரி வந்து நம்மை விட்டுப் போயிட்டாடா. அய்யோ கைக் குழந்தையை வச்சுண்டு அல்லாடப் போறோமே!"
அம்மாவின் அழுகை பிடிக்கவில்லை. மன்னி, உனக்கு என்ன ஆச்சு? போயிட்டு வரேன்னு தானே சொல்லிட்டுப் போனே. ஏன் சொன்னபடி வரலே.
"நீ எதிர் வீட்டுல இருக்கியா"
"நானும் வரேம்மா"
"நீ"
"இல்லேம்மா. நானும் வரேன். பிளீஸ் என்னை விட்டு விட்டு போகாதேம்மா."
அம்மாவுக்கு அரை மனசுதான் . ஆனாலும் மறுக்கவில்லை.
"மன்னி"
இம்முறை அனுமதி கேட்காமலேயே தொட்டான். கை ஜில்லிட்டு... இதுவா மன்னி.அழுகை வரவில்லை. திமிறியதே தவிர கண்கள் ஒத்துழைக்க மறுத்தன. மன்னி... மன்னி. ஜபம் மாதிரி சொல்லிக் கொண்டேயிருந்தான்.
"ஆச்சு. நேரம் ஆகிறது. மற்ற வேலையைக் கவனிக்கணும்"
யாரோ குரல் கொடுத்தார்கள்.இவனை நகர்த்தினார்கள்.
"ஹாஸ்பிடல்லேர்ந்து வந்தாச்சா"
"எதுக்கு"
"அப்பவே எடுத்தாச்சு, சாகறதுக்கு முன்னால அடிச்சுப் பேசிட்டா"
"என்ன மாதிரி மனசு "
"அய்யோ... தங்கமாச்சே. தங்கமாச்சே. இப்படி பரிதவிக்க விட்டுட்டாளே"
"பத்ரி மேல அலாதிப் பிரியம். என் புள்ளை மாதிரிம்பா"
"கடைசீல இப்படி ஆகணும்னு விதி"
என்ன சொல்கிறார்கள். பத்ரிக்கு என்ன? மன்னி என்ன சொன்னா? என்ன செய்தாள்.
அம்மா அருகில் வந்து அழுதாள்.
"அவளோட கண்ணை உனக்குப் பொருத்தணும்னு சொன்னாளாம்டா. பாவி.. இந்த நல்ல மனசுக்கு இப்படி அற்ப ஆயுசா போயிட்டாளே.
"மன்னீ.."
பத்ரிக்கு அழுகை சுதந்திரமாய் பீறிட்டது .



(ராஜம் மாதர் இதழில் பிரசுரமானது )








20 comments:

சாந்தி மாரியப்பன் said...

அட்டகாசமான நடையில் அசத்துறீங்கப்பா.. அருமை.

க ரா said...

ரிஷபன் என்ன சொல்றதுன்னு தெரியல. அட்டகாசமான் எழுத்து. கடைசி வரில கலங்கி அழுதது பத்ரி மட்டுமில்லை...

பத்மா said...

இயல்பான கதையோட்டம் .
கலங்கடிப்பது என்று கங்கணம் கட்டி விட்டீர்கள் போல .
மறக்கவே முடியா கதை

vasu balaji said...

ஒண்ணு மேல ஒண்ணுன்னு அசத்திண்டே போறீங்க ரிஷபன். கலங்க வச்சது.சபாஷ்

கமலேஷ் said...

ரொம்ப அருமையான கதை தோழரே... படித்து முடித்ததும் இதயம் கனக்க துவங்கி விட்டது. நல்ல படைப்பு.

Chitra said...

கதைதான் என்று வாசிக்க ஆரம்பித்தாலும், சொன்ன விதத்தில், அப்படியே பாத்திரங்களுடன் ஒன்றி போக வைத்து விட்டீர்கள். அருமை!
ராஜம் மாத இதழில் வெளி வந்தமைக்கு பாராட்டுக்கள்!

ஹேமா said...

மனசை அழுத்துகிறது கதை.
தாயுமானவளாய் அண்ணி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மீண்டும் படித்ததில், மீண்டும் கலங்கின, என் கண்களும், பத்ரியைப்போலவே !

கே. பி. ஜனா... said...

விழிகள் பனித்தன!

வெங்கட் நாகராஜ் said...

அசத்தல் நடை. படித்துக்கொண்டே இருக்கிறேன். எத்தனை நல்ல உள்ளம் - கதையாக இருந்தாலும் நிஜம் போல உலுக்கியது உண்மை.

Anonymous said...

அசத்தல். அந்தக்கால பாலகுமாரன் கதை படிச்ச மாதிரி உணர்வு

Unknown said...

romba naalaikku appuram nenjai pizhiyavaikkum arumayan kathaiyai padithaen... merkondu solla varigal illai...

Anonymous said...

அருமையான எழுத்து ..பத்ரி கூட நானும் அழுதிட்டேன் ...

துளசி கோபால் said...

:(

அருமையான நடை. பாராட்டுகள்.

பாதி வழியில் ஊகிச்சேன்.
ப்ச்.......


சின்ன அம்மிணி சிபாரிசில் இங்கே வந்தேன் ரிஷபன்.

கண்ணகி said...

நேரில் பார்ப்பதுபோன்ற நடை.....கலங்கிவிட்டது மனசு...

கோபிநாத் said...

;(

அருமையான எழுத்து நடை ரிஷபன்..சின்ன அம்மணி அக்காவின் பதிவில் இருந்து உங்க அறிமுகம் கிடைத்தது ;)

தொடர்ந்து எழுதுங்கள் ;)

விக்னேஷ்வரி said...

Sema.

Thamira said...

நல்ல உணர்வுப்பூர்வமான கதை.

தாராபுரத்தான் said...

பதிவு கண்ணுக்குள்ளேயே நிற்குதுங்க.

பின்னோக்கி said...

அண்ணி மற்ற உருவில் அம்மா என்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள்.

கதை ட்விஸ்ட், கதை இப்படித்தான் போகும் என்று யூகிச்சேன் - என்று சொல்ல ஆசைதான், ஆனால், அதையும் மீறிய கதைக் கரு எதையும் சொல்ல விடாமல், 50 வரிகளில் மன்னி என்ற ஒரு மனிதரை பல வருட நினைப்பிழாழ்த்தும் எழுத்து, அமர்களம். அறிமுகப்படுத்திய சின்ன அம்மிணிக்கு என் நன்றி