நைட் லாம்ப் ஒளிர்ந்தது. அலுப்புடன் படுக்கையில் சாய்ந்தவளை அவன் கை பற்றியது. வியர்வையின் கசகசப்பு எரிச்சலூட்ட உதறினாள்.
"என்னடா செல்லம்"
"ப்ச்'
"பார்த்தியா, ஜாலியான மூடுல நான் இருக்கேன். நீ முகத்தைத் தூக்கி வெச்சிகிட்டா எப்படி"
பக்கத்தில் சிணுங்கிய நான்கு மாதக் குழந்தையை 'ச்ச்ச்' என்று தட்டிக் கொடுத்தாள். இடுப்பில் சரியான வலி. அரை மணியாகக் குனிந்து நிமிர்ந்து பாத்திரங்களைக் கழுவி, சமையறையைச் சுத்தம் செய்த அசதி.
"சொல்ல மாட்டியா.."
சொல்லித்தானா புரிய வேண்டும் என்ற உணர்வில் மௌனமாக இருந்தாள். விலகிச் சில வினாடிகள் படுத்திருந்தாள். மறுபடி நெருங்கினான். நெற்றியில் உள்ளங்கை பதித்தான்.
"தலைவலியா"
"ம்ஹூம்"
"ஜூரமா"
"இல்லே"
"பின்னே.. அம்மா ஏதாவது சொன்னாளா"
"ப்ச்"
"என்னதான் சொல்லேன்..சொன்னால்தானே எனக்குத் தெரியும்"
அருகில் வந்து தலயை வருடினான். நெற்றியில் மெல்ல முத்தமிட்டான்.கன்னங்களை உள்ளங்கை அணைப்பில் ஏந்தினான். 'பாவம்' என்று முனகினான்.
அவனைப் பார்த்தாள். மனசுக்குள் ஏதோ கிளர்ந்தது. இவனிடம் கூடப் பகிர்ந்து கொள்ளத் தயங்கினால் எப்படி என்று தோன்றியது.
"வேலை அதிகம். என்னாலே முடியலே"
"ஏன் அம்மா உதவி செய்யலியா"
"செய்யராங்க. இருந்தாலும்.."
"என்னென்ன வேலை.. சொல்லு"
"காலைல உங்களுக்கு டிபன் ஆறு மணிக்கு"
"அதுதான் வேண்டாம்னு சொன்னேனே.. கேண்டீன்ல சாப்பிடுவேனே"
"அது பிடிக்கலே.. பாதி நாள் சாப்பிடுவது இல்லேன்னு சொன்னீங்களே'
"ம்"
"அப்புறம் எப்படி மனசு வரும், செய்யாம விட"
"சரி.. அப்புறம்'
"மத்தவங்களுக்கு சமையல் செஞ்சு.... குழந்தையின் துணி துவைச்சு.. வேலைக்காரி தோய்ச்சுட்டுப் போன எங்க துணியையும் உலர்த்தி.. சாப்பிடவே மணி ஒண்ணாயிருது. நடுவுல இவனையும் கவனிச்சுக்கணும். குளிப்பாட்டணும்"
"அய்யோ.. ஒரு மணிக்கா சாப்பாடு"
"அப்புறம் சாயங்கால டிபனுக்கு ஊற வச்சு, அரைச்சு, செஞ்சு.. டிப்போவுக்குப் போய் பால் வாங்கி வந்து"
"ஏன் அம்மா எதுவும் செய்யலியா"
"செய்யறாங்க"
"அதுதான் என்ன"
'அவங்களுக்கும் உடம்பு முடியலியா. கறிகாய் நறுக்கறது.. பால் காய்ச்சறது.. பெருக்கறது இந்த மாதிரி சிம்பிளாத்தான் செய்ய முடியும்"
"ம்ம்"
"ரெண்டு வேளையும் வீடு பெருக்கணும். மறுபடி ராத்திரி சாப்பாடு. பாத்திரம் கழுவி.. சமையலறை கழுவி"
"ச்சே.. பாவம்டா நீயி"
"என்னாலே முடியலீங்க. பிரசவமும் கஷ்டமா இருந்துதா. நல்ல ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் வேறே சொல்லியிருந்தாங்க."
பிறந்த வீட்டிலிருந்து அவளை அவன் தான் வற்புறுத்தி இரண்டாம் மாதமே அழைத்து வந்து விட்டான்.
'ராத்திரி முழுக்க இவன் அழறான். மணிக்கு ஒரு தடவை எழுந்திருக்க வேண்டியிருக்கு"
அவளை நெருங்கி மார்பில் சாய்த்துக் கொண்டான். விரல்களைச் செல்லமாகச் சொடுக்கினான். வாசனைப் பொடியின் நறுமணம் அவளிடமிருந்து வீசியது.
"ஸாரிடா செல்லம். என்னோட பிடிவாதத்தால நீ அவஸ்தைப் பட வேண்டியிருக்கு" என்றான் கண்களில் நீர் மின்ன.
"எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம்னு எண்ணம் இல்லிங்க"
"அது தெரியாதா எனக்கு"
"என்ன தெரியும். இன்னைக்கு புதுசா ஒரு கூட்டு செஞ்சிருந்தேனே... ஏதாவது சொன்னீங்களா"
'சட்.. அதுவா. ஹேய் பார்த்தியா.. ரெண்டாந்தடவை கேட்டு வாங்கிச் சாப்பிட்டேனே.. புரியலையா. தூள்.. செல்லம்"
விரல்களைப் பற்றி முத்தமிட்டான்.
"நீ எது செஞ்சாலும் ஸ்பெஷல்தான்"
"போங்க"
"எங்கே போகறது"
இன்னமும் நெருங்கினான்.
"வேணாங்க உடம்பு முடியல்லே"
"சரி"
தள்ளிப் படுத்துக் கொண்டான்.
"சாதாரணமாக் கொஞ்சக் கூட பர்மிஷன் கிடையாது" என்று பொருமினான்.
அருகில் நகர்ந்தாள்.
"ஓகே.. நோ மிஸ்சிஃப்"
"அதென்னமோ தெரியலே.. செல்லம். உன்னோட இருக்கும்போது டென்ஷன் எல்லாம் மறைஞ்சு மனசுல ஒரு அமைதி கிடைக்குது. ரொம்ப சந்தோஷமா உணர்றேன்"
நெகிழ்ந்தாள். தன் விருப்பம் பற்றிய கேள்விக்கு இடமின்றி அவன் புலன்களின் ஆளுமைக்கு இடம் கொடுத்தாள். நோக்கம் ஈடேறிய நிறைவில் அவன் தூங்கிப் போக, அவள் உடம்பில் இன்னமும் வலி அதிகரித்துத் தாக்க, தூங்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தாள்.
(மங்கையர் மலரில் பிரசுரம்)
22 comments:
நீங்க பெண்ணியவாதியா ரிஷபன் :)
All men are men when they are with their wife.
ஆமாம் நித்திய வலிகள்
ஆண்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.
வாழ்த்துகள் ரிஷபன்.
பெண்ணாய் பிறந்தவர்கள் பெரும்பாலும் இதுபோலத்தான் வலி மேல் வலியாய் தாங்கிக்கொண்டு தான் சமாளிக்கிறார்கள்.
நினைத்துப் பார்த்தால் நமக்கும் வலிக்கும்.
"ம்ம்"..... "போங்க"..... "சரி"..... என்ற சின்ன சின்ன வார்த்தைகளில், எத்தனை ஆழம்!!!!!!! superb !
வசப்படுத்துவதும் வசமிழப்பதும் அன்புதானே !
இதை நான் மங்கையர்மலரில் ஏற்கனவே படிச்சிருக்கேன்.கடைசிவரியை வேறுவார்த்தைகளில், ஆனால் அதே அர்த்தத்தில் முடித்த ஞாபகம். நீங்க எழுதினதுதானா!!!. ரொம்ப நல்லாருக்குதுப்பா..
அருமையாய் இருக்கு ரிஷபன்!
அருமையா இருக்கு
அருமை.
அருமை !
அருமை. நல்லதொரு கதையை பகிர்ந்தமைக்கு நன்றி.
பெண்கள்....இப்படித்தான்....அருமை..
இருபாலரின் உளவியல் நோக்கும் துல்லியமாக இழையோடும் யதார்த்தம்... உங்க பலம்! பெண் வலியும் புரிந்து, தன்காரியப் புலியாகவும் இருக்க, கற்றாக வேண்டிய வித்தை. நயமா இருக்கு அண்ணா...
hmmmm purinthal sari pengalin valigal....
வசப்படும் போது வலியெல்லாம் போய்விடும் ரிஷபன்..
மிகவும் அருமை ரிஷபன்
ரிஷபன்!! நடப்பதை நயமாகச்சொல்லி இருக்கிறீர்கள்!
நெகிழ வைத்த கதை, உண்மையிலேயே!!!!
men!!!
அருமை ரிஷபன் சார் ...
Post a Comment