September 18, 2010

ரிக்க்ஷா நண்பர்

சித்திரை வீதி வங்கி வாசலில் ரிக்க்ஷா சத்தம் கேட்டால் இரண்டு அர்த்தம். ஒன்று, இன்று பென்ஷன் தினம். அடுத்தது கிழவர் பாட்டியுடன் ஆஜர்.கணக்கு பிசகாத நியதி.

பாட்டி வாசலில் காத்திருப்பாள். ரிக்க்ஷாவில்தான் அமர்ந்திருப்பாள்.

"அவங்களை ஏன் சிரமப்படுத்தணும்."

கிழவர் மெலிதாகச் சிரிப்பார்.

"பென்ஷன் பணத்துக்குச் சொந்தக்காரி அவதான். நான் ஜஸ்ட் பேரர்..."

இந்த வயசிலும் ப்ளீஸ்...

பாக்கெட் ரெடியாக எடுத்து வைத்திருப்பேன்.

"தேங்க்ஸ்!"

நிதானமாய் எண்ணி, தொகை சரி என்று உணர்ந்ததும் இன்னொரு "தாங்கஸ்."

வியாட்நாம் வீடு சிவாஜி போல, வேறு வம்பு எதுவுமின்றி ஸ்டைலாய் திரும்பிப்போவார்.எழுபத்தைந்து வயது. ரிடையரான மறு மாதம் முதல் அதே ரிக்க்ஷா. ரிக்க்ஷாக்காரனும் கிழம். இன்னும் ரிடையர் ஆகாத கிழம்.

"பத்து ரூபா அவனுக்கு..."

"உங்க வயசு எழுபத்தைந்தா?"

"இதே ஜாஸ்தி. போதும். ஐயாம் ஹேப்பி. எப்ப வேணா ரெடி" என்பார் அலட்டாமல்.

பணம் தருவதற்குள் அந்த ஐந்து நிமிட இடைவெளியில் ஒவ்வொரு மாதமும் நிகழ்கிற உணர்வின்றி விட்டுப் போன இடத்திலிருந்து தொடரும்.

"என்ன பண்ணுவீங்க. இரண்டாயிரத்துல?"

"மருமகள் கையில ஆயிரம்... அப்புறம் எங்க மெடிசின்ஸ் ஐந்நூறு... பர்த்டே... மேரேஜ் டே... தீபாவளி, பொங்கல், கார்த்திகை.. இப்படி ஃபங்ஷனுக்கு ஆசீர்வாதம்..."

பட்பட்டென்று பதில் வரும்.

"ஒரு ரூபா சில்லறை."

"வாசல்ல கீரைக்காரி... கட்டு மூணு ரூபாய். தினமும் பாட்டிக்குக் கீரை வேணும்."

கேலியாய்க் கண் சிமிட்டுவார்.மடிப்புக் கலையாத லாண்டரி டிரஸ். தற் செயலாக ஒரு தரம் கோவில் மணல் வெளியில் பார்க்க, அப்போதும் அதே பளீர் ட்ரஸ்.

"ரிக்க்ஷாதான் சகிக்கவில்லை. ஆணி துருத்திண்டு. எப்ப டிரஸ்ஸைக் கிழிக்குமோ. ஆட்டோல வரலாமே...'

என்னை நேராகப் பார்த்தார்.

"ஸாரி... ஜென்டில்மேன்... பத்துப் பதினைஞ்சு வருஷமா வரான் . பொறுமையா வந்து நிதானமா கொண்டு விடறான். அவனை நிறுத்தறதுங்கிறது ' பைனலாத்தான்'. அப்புறம் நோமோர் பேஷன் விசிட்!"

"யூ வில் லிவ் லாங்."

இதற்குண்டான பதில். எழுபத்தைந்து என்பது அதிகம் ."எப்ப வேணா ரெடி."

எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. பிற வாடிக்கையாளர்களை மீறி, அவர் வரும் தினம் சற்று முன்னுரிமை தருவேன்.ஒரு ரூபாய் நாணயங்கள் நூறு எடுத்து வைப்பேன். அவர் திருப்தியுற்று நகரும் வரை லட்ச ரூபாய் டிபாசிட்காரன் கூட எனக்குப் பொருட்டில்லை.

"என் மருமகளுக்கு பென்சன் பணம்னா ஒரு அலட்சியம்" என்று ஒரே ஒரு தரம் வாய்தவறிச் சொல் விட்டதிலிருந்து அவர் மீது கூடுதலாய்க் கரிசனம்.

"நான் உன்னை ரொம்பவும் தொந்தரவு செய்கிறேனா?" என்றார் ஒரு தரம்.

தலை அப்படியே இலவம்பஞ்சு போல. நீண்ட மூக்கு. உதடுகளில் பிடிவாதம். தங்க ஃ பிரேமில் கண்ணாடி.

"நோ... நோ... ஏன் கேட்கறீங்க?"

"சும்மா ஜஸ்ட் லைக் தட்,"

பெஞ்சில் அமர்ந்திருப்பார். எதையும் கவனிக்காத மாதிரி அலட்சியத் தோற்றம். ஆனால் உள்ளுர நிமிடக் கணக்கு. அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். பணத்துடன் வெளியேறிவிட வேண்டும்.

"ரிக்க்ஷால உட்காரருத்துக்கு முன்னால அவ கையில கொடுத்துருவேன். அவ இஷ்டப்பட்டாதான் எனக்கே ரிக்க்ஷா சவாரி."

எத்தனை வயசானால் என்ன. மனைவியைக் கேலி செய்வது ஆண்களின் சுபாவம்.

"பீரோ நிறையப் பட்டுப்புடவை. எப்பா கட்டிக்கன்னு வைச்சிருக்காளோ... வாரத்துக்கு ஒரு தடவை எடுத்து வாசனை பார்ப்பா. பைத்தியம்... என் டிரஸ்... ரெண்டே செட். பனியன். ஷர்ட், வேஷ்டி... கிழிஞ்சாதான் அடுத்தடுத்து."

நான் அவரருகில் வந்து நிற்பது உள்ளூர அவரைச் சந்தோஷப் படுத்தியிருக்க வேண்டும். அதே நிமிஷம் நான் கடமையிலிருந்து தவறி விடவும் கூடாது.

"நீ ஏன் இங்கே நிக்கறே?.."

"இன்னிக்கு எனக்கு வேற டூட்டி... கொஞ்சம் ஃ ப்ரீ... கேஷ் வந்ததும் உங்களை அனுப்பிட்டு..."

"நான் பார்த்துக்கறேன்...போ..."

என் நண்பர் என்ற அடையாளம் வங்கியில் அவருக்கு. சற்றே வினோதம். இரண்டொரு வார்த்தைகள் பேசியதால். நானும் அவரும் நண்பர்கள் என்றாகிவிட முடியாது. ஆனாலும் இந்த விசித்திரப் பிணைப்பு அதன் போக்கில் தொடர்ந்தது.

அந்த மாதம் கிழவர் வரவில்லை. ரிக்க்ஷா சப்தம் கேட்ட பிரமையில் நான் ஓடியது சற்று அதிகம்.

இல்லை.. ஊருக்குப் போயிருக்கலாம். அடுத்த மாதம் சேர்ந்து எடுக்கலாம். பிற அலுவல்கள் என்னை சுவீகரிக்க கிழவரின் நினைவு பின்னுக்குப் போனது. இரண்டு மாதங்களாக வராதது மனத்தில் உறுத்தியது.

எடுத்து வைத்த ஒற்றை ரூபாய் நாணய பாக்கெட் பத்திரமாய் இருந்தது. 'வேண்டும்' என்று கேட்ட சகாவிடம் மறுத்து விட்டேன்.கிழவர் நாளையே வரக்கூடும். தர இயலாமல் சங்கடப்பட முடியாது.அவர்தான் வரவே இல்லை.

என்னால் பொறுக்க முடியவில்லை. லெட்ஜரில் அட்ரெஸ் பார்த்து, வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். தெரு முனையில் திரும்பிவிட்டேன்.

கோடியில் வடம் போக்கித் தெருவுக்குள் கடைசி வீடு. மதிலை ஒட்டிய வீடு.

"வயசானவன்னு இரக்கப்பட்டுத்தான் நீ என்னை அட்டெண்ட் பண்றிய?" என்றார் ஒரு தரம்.

"சேச்சே. எனக்கு எல்லாரும் காமன்... வயசானது.. லேடீஸ்... முடியாதது... இப்படி பேதம் இல்லே... ஈக்வல் ரைட்ஸ் ... ஃபர்ஸ்ட் கம்... ஃ பர்ஸ்ட் ஸர்வ்டு... பாலிசி... நீங்க டாண்ணு ஃபர்ஸ்ட் கஸ்டமரா வரீங்க ஒவ்வொரு தரமும்... ஸோ... முதல் கவனம்...!'

"அதானே..."

கிழவர். முகத்தில் தெரிந்த நிம்மதி... ஞாபகம் வந்தது.

அவர் வீட்டுக்குள் போகவில்லை. திரும்பி விட்டேன். அதுவாக விபரம் தெரிகிறவரை நான் வாசலில் ரிக்க்ஷா எதிர்பார்த்தே காத்திருக்கப் போகிறேன்.

(கல்கி)

25 comments:

நிலாமகள் said...

மனதிற்குள்ளேனும் வாழ்ந்தபடி இருக்கட்டும் அந்தக் கம்பீரக் கிழவர்...!

VELU.G said...

மனதில் நிற்கும் கதை, இந்த மாதிரி யாரோ ஒருவர் நம்மை பாதித்து விடுகிறார்கள் நம் வாழ்க்கையிலும்

அருமையான கதை ரிஷபன்

Chitra said...

கதைதான் என்று தெரிந்து இருந்தும் நிஜம் போலவே இருந்தது.

RVS said...

வேலையில் ரிடையர் ஆன கிழம், வேலையில் ரிடையர் ஆகாத கிழம் ரெண்டுக்குமே ஒரு சல்யூட். எவ்வளவு நாள் அந்த ரிக்ஷா நண்பருக்காக காத்திருக்க முடியும்? என்னையும் சேர்த்து ஏங்க வைக்கிறது ரிஷபன் இந்தக் கதை.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸார்! மிகவும் டச்சிங்காக இருந்தது. வயதானவர்களின் நடை உடை பாவனை பேச்சு எண்ணம் எதிர்பார்ப்பு உருவம் உள்ளம் அனைத்தையும் அற்புதமாக கொண்டு வந்து நிறுத்திய உங்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடணும் போலத் தோன்றுகிறது. நான் சர்வீஸிலிருந்த போது மட்டுமல்ல, இன்றும் இதுபோல பலருடன் பழகி வருகிறேன். அதில் எனக்கும் ஓர் இன்பம் ஏற்படுகிறது. நாம் அவர்களை மதித்து 4 வார்த்தைகள் ஆறுதலாகப் பேசினாலே போதும் - உளமாற நம்மை வாழ்த்துவார்கள். பதிவுக்கு நன்றி !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கும் உள்ளூர படபடப்பாத் தான் இருந்தது.ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துடுத்தோன்னு. நல்ல வேளை
ரிஷபன் அந்த வீட்டுப் பக்கம் போகாம காப்பத்திட்டார் நம்மை!!

வெங்கட் நாகராஜ் said...

அற்புதமான கதை. இரண்டு பெரியவர்களும் மனதில் நிற்கின்றனர். தினம் தினம் இது போல பெரியவர்களை பார்க்கும் போதெல்லாம் நினைவு வரும்.

velji said...

ரிக்ஷா சத்தம் தொடர்ந்து கேட்கட்டும்!

Anonymous said...

உணர்வுகளோடு அற்புதமா இருக்கு கதை. அப்பா பேங்க்குக்கு போய் பென்ஷன் பணம் இன்னும் வித்ட்ரா பண்றது நினைவுக்கு வருது

Anisha Yunus said...

எங்கப்பாவும் டெல்லராகத்தான் நிறைய வருடங்கள் இருந்தார். அதுவும் போத்தனூரில். பென்சன் தினம் அவருக்கு மட்டுமல்ல எங்கள் குடும்பத்துக்கே மிக ஸ்பெசல் தினம்தான். ஒவ்வொருவரைப் பற்றியும் அப்பா தெரிந்து வைத்திருப்பார்...மாதா மாதம் அவர்களைப் பற்றிய அப்டேட்ஸ் வரும். கூடவே அப்பாவுக்கென தன் மகன் போல நினைத்து அவரவர் வயலில் விளைந்தது அல்லது, வீட்டில் செய்தது என்று பண்டமும் பலகாரமும், தனித்துவமான நலம் விசாரிப்புகளும். நாட்டுடைமை வங்கியெல்லாம் தனியார் மயம் போல ஆக்கப்பட்ட பின் இந்த உறவுமுறைகள் விட்டுப்ப்போய்விட்டன. இந்த காருண்யங்களும் கரிசனங்களும் பழங்கதை ஆகிவிட்டன. இப்போதும் ஊருக்கு போனால் அன்றைய வங்கியைப் பற்றியும் அதன் வாடிக்கையாளர்களைப் பற்றியும் இன்னும் வங்கி அலுவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உண்டான உறவுமுறைகளைப்பற்றியும் விடிய விடிய நானும் அப்பாவும் பேசுவோம். அது ஒரு காலம் ரிஷபன் சார். மீண்டும் உங்கள் கதை மூலம் ஞாபகத்திற்கு வந்தது மிக இனிமை. நன்றி.

ADHI VENKAT said...

கதை மிகவும் அருமை சார். எனக்கு தெரிந்த ஒரு தாத்தா ஸ்ரீரங்கத்தில் 95 வயதிலும் பென்ஷன் வாங்கிக் கொண்டு தனிமையில் பிறரை சிரிக்க வைத்துக் கொண்டும் உள்ளார். இந்த கதை அவரை ஞாபகப்படுத்தியது.

எல் கே said...

அருமையான நடை

Dr. சாரதி said...

மனதை நெகிழ வைத்துவிட்டது.....

ஹுஸைனம்மா said...

அவருக்கென்ன ஆனதோ என்று படபடப்பா இருக்கு; அதைவிட அந்தம்மாவுக்கு... போய்த் தெரிந்துகொண்டே வந்திருக்கலாம் நீங்க..

பத்மநாபன் said...

உருக்கமாக இருந்தது ... இந்த கதையில் வரிக்கு வரி முதியவரின் இனிமையாக எடுத்துக்கொண்ட வாழ்க்கையை முன் வைத்துள்ளீர்கள்..வங்கியாளருக்கும் ஏற்பட்ட கனிவு குறிப்பிடதக்கதாக இருந்தது....போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து......எல்லாரும் கடந்து செல்லபோகும் பாதை இது என நினத்தாலே மனதில் ஒரு பிசைவு தவிர்க்கமுடியவில்லை....

vasan said...

வங்கி கேஷிய‌ர் வாயிலாய் ஒரு ஜென்டில்மேன் த‌ரிச‌ன‌ம்.
(பூவாகி, காயாகி) க‌னியான‌வ‌ரின் வ‌ருகைக்காய் ரிக்சா சப்த‌த்தை எதிர்நோக்கி நானும் உங்க‌ளுட‌ன்...

குட்டிப்பையா|Kutipaiya said...

வழக்கம் போல அருமை!! என்ன காரெக்டர்ஸ்!!

கமலேஷ் said...

மனதில் நிற்கும் அருமையான கதை ரிஷபன்

Easwaran said...

உங்கள் ஒவ்வொரு கதையைப் படிக்கும் போதும் உங்கள் மீது பொறாமை கூடிக் கொண்டே போகிறது, இவருக்கு எப்படி ஒவ்வொரு குணச்சித்திரங்களையும் அற்புதமாகச் செதுக்கத் தெரிகிறது என்று!

சுந்தர்ஜி said...

செய்நேர்த்தி மிக்க கதாபாத்திரங்கள்.அதனதன் அளவில் ஒவ்வொரு குணாதிசயங்கள்.முடிவை நோக்கிச் செல்லாது அப்படியே விலகும் தத்துவப் பார்வை.ரிஷபனின் முத்திரை இதுவெல்லாம்.இதிலும் அதெல்லாம் பூரணமாய் நிறைந்திருந்தது.

தவிர ரிக்க்ஷாவா ரிக்‌ஷாவா அல்லது ரிக்ஷாவா என்று சொல்லிப்பார்க்க அசோகமித்ரனின் ரிக்‌ஷா கதை நினைவிலாடியது.

Thenammai Lakshmanan said...

அற்புதமான கதை ரிஷபன்.. உங்க ஈ மெயில் ஐ டி என்ன . எனக்கு அனுப்புங்க ப்ளீஸ்..என்னுடையது thenulakshman@gmail.com.

வசந்தமுல்லை said...

nice listing about the aged people !

Deepa said...

தொடக்கமும் ஓட்டமும் மிக அருமை. முடித்த விதத்தில் ஏனோ எனக்குத் திருப்தி இல்லை. அவர் திரும்பிப் போவதற்கான காரணம் அழுத்தமாக இல்லையென்பது என் தாழ்மையான கருத்து.

Deepa said...
This comment has been removed by the author.
R. Gopi said...

super