November 10, 2010

கடிதம்

பஸ்ஸை விட்டு இறங்கியதுமே மழைத் தூறல். நிமிர்ந்தால் எதிரே உச்சியில் வானவில். சில நேரங்களில் மனசுக்குள் ஒரு குதூகலம் தானாகவே வந்து விடும். இன்றைய மன நிலையும்அப்படியே.

வீட்டுக்குள் வந்தால் எனக்கு ஒரு தபால் !

எத்தனை நாளாச்சு.. கடிதம் பார்த்து. கடிதமே அதைப் பற்றிதான்.

'செல்லரிக்கும் வாழ்க்கையில் நாம் கடிதம் எழுதுதல் எனும் வாய்ப்பைப் புதைக்கத் தொடங்கியிருக்கிறோம். அது கூடாது இனி என்று இக்கடிதம்.'

ஹரணி .. அவரது முத்தான கையெழுத்தில் எழுதியது பார்த்து எனக்குள்ளும் அதே படபடப்பு. கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் கை நிறைய இன்லண்டும் கார்டும் வாங்கி வந்தேன் மீண்டும் கடிதம் எழுதுவதை ஆரம்பித்து விட வேண்டுமென்று.

கடிதங்கள் அற்ற வாழ்க்கை எத்தனை அலுப்பு.. முன்பெல்லாம் மாலை வீடு திரும்பும் போது 'தபால் இருக்கா' என்று பார்வை துழாவிய எதிர்பார்ப்பு.. இருந்தால் கிடைத்த மகிழ்ச்சி.. பதில் போடும் போது கிட்டும் ஆனந்தம்.. சில நபர்களின் கடிதங்களை எடுத்து பத்திரப் படுத்தி வைத்து மறுபடி மறுபடி படித்த உற்சாகம்..

உடனே உட்கார்ந்து அவருக்கும் பதில் எழுதி.. கூடவே இன்னொரு நண்பருக்கும் கடிதம் எழுதி.. அந்த பத்து பதினைந்து நிமிடங்கள் .. அப்படியே டைம் மெஷினில் பழைய பொற்காலத்திற்கு போன மகிழ்ச்சி ..

நன்றி ஹரணி.. மீட்டெடுத்தது கடிதங்களை மட்டுமல்ல.. நம்மையும்.

19 comments:

வெங்கட் நாகராஜ் said...

கடிதம் எழுதுவது ஒரு கலை. கடிதத்திற்காக காத்திருந்து அதைப் படிப்பதில் உள்ள ஆனந்தம் தற்போதைய மின்னஞ்சல்களில் இருப்பதில்லை என்பது உண்மை.

மதுரை சரவணன் said...

பேனா நண்பன் என்ற வார்த்தை இன்று காணாமல் போன ஒன்றாக உள்ளது... நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

குட்டிப்பையா|Kutipaiya said...

மிக உண்மை...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எனக்கு நீங்கள் எழுதிய கடிதங்களும் வானவில்தான் ரிஷபன்.தட்டச்சு வந்தபின் தாளைத் தொலைத்துவிட்டோம்.உசுப்பிவிட்ட ஹரணிக்கும் ஒரு ஜே.(எனக்கும் ஹரணியின் ஒரு கடிதம் ட்யூவில் இருக்கிறது)

vasu balaji said...

ஆமாம். இப்பல்லாம் க்ரெடிட்கார்ட் ஸ்டேட்மெண்டும், டெலிபோன் பில்லும்தான் தபால்:(

அன்பரசன் said...

ரொம்ப அருமையான ஒரு விசயம் நீங்க சொல்லியிருப்பது.

Chitra said...

'செல்லரிக்கும் வாழ்க்கையில் நாம் கடிதம் எழுதுதல் எனும் வாய்ப்பைப் புதைக்கத் தொடங்கியிருக்கிறோம். அது கூடாது இனி என்று இக்கடிதம்.'

.....பர்சனல் மெயில் வரும் போதெல்லாம் - தனி உற்சாகம் பிறக்கும். ஒருவரின் கையெழுத்தில் அவரை அடையாளம் காண முடியுமே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் பள்ளிசெல்லும் நாட்களில் (1956 - 1966) எங்கள் வீட்டுக்கு வரும் தபால்களை அனைவரும் படித்தபின் குத்தி வைக்க என்று ஒரு கெட்டி குடைக்கம்பி போல மாட்டி வைத்திருப்பார்கள். அதில் நூற்றுக்கணக்கான அஞ்சல் அட்டைகள் (post cards), உள் நாட்டுத்தபால்கள் (Inland Letters), கவர்கள் (envelopes), கல்யாணப் பத்திரிகைகள் என குத்தப்பட்டிருக்கும். Back reference க்கும், வெவ்வேறு உறவினர் அல்லது நண்பர்களின் விலாசங்களை கண்டு பிடித்து, சரி பார்த்து, நாம் பதில் எழுதவும் வசதியாக இருக்கும். தங்கள் பதிவைப்படித்ததும் எனக்கு அந்தக் கால தபால்கள் குத்தி வைக்கும் என் வீட்டுக் கம்பியும் அதில் தொங்கிய ஆயிரக்கணக்கான கடிதங்களும் தான் நினைவுக்கு வந்தது. நல்லதொரு பதிவுக்கு நன்றி.

Anonymous said...

நினைவுகளை பின்னோக்க வைத்து விட்டது பதிவு..கையெழுத்து சரியில்லைன்னு கிழித்து போட்டு எழுதியது நினைவுக்கு வருகிறது ரிஷபன்...

நிலாமகள் said...

அருகி வரும் அருமையான விஷயத்தை பதிவிட்டமைக்கு நன்றி. உலகம் விரல் நுனிக்கு சுருங்கவும் பேனா முனைகள் உலரத் துவங்கிவிட்டன. மீட்டெடுப்போம் நாமாவது. வண்ணதாசன் கடிதங்கள் நூலை வாசித்ததுண்டா... கண்ணில் படும் போதெல்லாம் எடுத்து எடுத்து வாசித்தாலும் மையல் குறையாமல் மூழ்கடித்துவிடும். நம் அன்புக்கு இனியவர்களின் கடிதங்களின் அருகிருப்புதான் எவ்வளவு இதமானது!!

ADHI VENKAT said...

கடிதம் எழுதுவதே தனி சுகம். இதை படித்த பின் பல நாட்களாக விட்டிருந்த பழக்கத்தை மீண்டும் தொடர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு விட்டது. என் மாமனார் இன்னமும் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

ஹேமா said...

அப்பாவின் கடிதங்களைப் புகைப்படமாக்கி ஒரு கவிதை எழுதியிருந்தேன் ரிஷபன்.
எனக்குள்ளும் நிறைய ஆதங்கம் கடிதங்கள் பற்றி.

எவ்வளவு நேரம் தொலைபேசியில் பேசினாலும் ஒரு வரிக் கடிதம்போல ஆவதில்லை.அழியாத நினவலைகளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒற்றை எழுத்து.

இப்போவெல்லாம் பிறந்தநாள் வாழ்த்துக்கூட ஒரு நிமிடத் தொலைபேசிக்குள்ளாய் முடிந்துவிடுகிறது !

நிலாமதி said...

வேகமான உலகில் எங்கே கடிதங்களைக் காண முடிகிறது.
பில் ( மாத கட்டணம் ) தான் வருகிறது .நல்ல பதிவு சிந்திகக் வைக்கிறது

roshaniee said...

உண்மையில் கடிதம் என்பது பொக்கிஷம் தான்.என்னென்றால் எப்போதோ எழுதியதை எந்த நிமிடமானாலும் சரி எத்தனை வருடங்கள் கழிந்தாலும் சரி மீட்டிப்பார்கலாம் .உறவுகளை நண்பர்களை கடிதம் வாசிக்கும் போதே நேரிலே பார்த்தமாதிரி ஒரு சுகம் .இப்படி எத்தனையோ விசயங்களை காலம் கடந்தாலும் மீட்டுத்தருகிறது கடிதம் .தபாலை கண்டு பிடித்தவருக்கு ஒரு சல்யுட் .பகிர்விற்கும் நன்றி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல..
அது உள்ளம் அல்லவா..அதனால் தான் இத்தனைத் தாக்கம்..

அன்புடன்,

”ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

கடிதம் ..... இன்று கடினமாகத் தோன்றுகிற இந்த சமாச்சாரம் அன்று எத்தனை ஆறுதலாய் இருந்தது. கணினி வரவாலும் , உலகமயமாக்கலாலும் நாம் தொலைத்த விஷயங்களில் ஒன்று இந்த கடித பரிவர்த்தனை. ஹரணி உங்களுக்கு நினைவுபடுத்தப் போக , இதோ,என்னை நான் கடிதம் எழுதிய அந்த நாட்களுக்குள் புதைத்துக் கொள்கிறேன்.

கே. பி. ஜனா... said...

கடிதம் வழக்கொழிந்தாலும் கரஸ்பாண்டன்ஸ் அதிகரித்திருக்கிறது (நன்றி: செல்போன், இ மெய்ல்) என்பதில் மகிழ்வோம்!

அம்பிகா said...

கடிதத்தில் இருக்கும் சந்தோஷங்கள் தனிதான். செல்போன், எஸ். எம்.எஸ்
வந்த பின் கடிதம் என்பதே இல்லாமல் போய்விட்டது.
நல்ல பகிர்வு.

பத்மநாபன் said...

கார்டு, இன்லேண்ட், கவர் என்று நம்மை படிப்படியாக எழுதவைக்கும் அற்புத ஆசிரியர்களாக கடிதங்கள் இருந்தன ... அதை இனிமையாக வெளிப்படுத்தியது இப்பதிவு....