தேர்முட்டி என்றதும் கிராமமும் திருவிழாவும் ஞாபகத்துக்கு வந்து விட்டன. ஒன்றுமில்லை. என் நண்பன் சரவணனின் கடிதம் இன்று வந்தது.
அகிலா-என் மகள் ஓடி வந்து, 'நான் தான் படிப்பேன்' என்று அடம் பிடித்தாள்.
தமிழ் படிக்க எப்படியாவது பழக்கப்படுத்த வேண்டும் என்கிற ஆசையில் எப்போதுமே அவளைத்தான் படிக்கச் சொல்வேன்.
"இந்தா.. நீயே படி"
"இனிய நட்பிற்கு.. காலமும் தூரமும் பிரித்து வைத்த நம்மை சேர்த்து வைக்கும் கடிதத்திற்கு நன்றியுடன். சரவணன். இந்த முறையாவது நீ திருவிழாவிற்கு குடும்பத்துடன் வருவாய் என்ற நம்பிக்கை எனக்கு. மங்கையும் திருச்செல்வியும் உங்களைப் பார்க்கும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பாலா..நம் சிநேகிதி தெய்வானையை சந்தித்தேன். அவள் கணவனுடன் வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகம் பிரகாசித்து அடங்கியது. எனக்கோ அவளைப் பார்த்த பரபரப்பில் அருகில் போய் வணக்கம் சொன்னேன். மங்கையும் அப்போது என்னுடன் இருந்தாள். தெய்வானையின் கணவருக்கு எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். எங்கள் வீட்டிற்கு அவர்களை அழைத்தேன். 'வர இயலாது' என்றார்கள்.
உன்னைப் பற்றி அவள் விசாரிப்பாள் என்று நினைத்தேன். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாங்களும் கிளம்பிவிட்டோம். எதற்கும் இருக்கட்டும் என்று என் விலாச அட்டையை அவளிடம் கொடுத்தேன். அதில் என் தொலைபேசி எண்ணும் இருந்தது. அவள் பேசுவாள் என்று நினைத்தேன். இன்றுவரை பேசவில்லை.
எப்படி பாலா.. பெண்கள் மட்டும் மாறிப் போய் விடுகிறார்கள்.. திருமணத்திற்குப் பின்னால்? பழைய நட்பு எல்லாம் அப்புறம் தீண்டத் தகாதவை தானா? மங்கையும் தெய்வானைக்கு ஆதரவாகத்தான் சொல்கிறாள். ஒரு பெண்ணின் நிலைமை உங்களைப் போல் இல்லை' என்கிறாள். அப்படித்தானா.. பாலா"
அகிலா படித்து முடித்ததும் என் கையில் கொடுத்து விட்டாள்.
"ஒண்ணுமே புரியலைப்பா.. மாமா என்ன எழுதியிருக்கார்.. யாருப்பா தெய்வானை.. உங்க கிளாஸ்மேட்டா.."
"ம்"
"திருச்செல்வி இப்ப நல்லா உயரமா என்னை மாதிரி இருப்பாளாப்பா"
"உன்னை விட உயரமா இருப்பா"
"போகலாமாப்பா"
"உங்கம்மாவைக் கேளு. அவங்க முடிவு தான் எப்பவும்"
"அம்மா.. திருச்செல்வியை பார்க்கப் போகலாமா"
"அப்பாவைக் கேளு.. அவர் என்ன சொல்றாரோ அதான்"
"போங்கப்பா.. "
அகிலா சிணுங்கியது ஒரு கவிதை!
இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டோம்.
"போலாம்மா"
தனிமையில் புவனா என்னைக் கேட்டாள்.
"யாருங்க அது தெய்வானை"
"எங்க கூட படிச்சவங்க"
"அழகா இருப்பாங்களா"
"உன்னை மாதிரி இருப்பாங்க"
"இந்த கிண்டல் தானே வேணாங்கிறது"
"நீ அழகுதானேப்பா"
"என்னை நீங்க அகிலா ரேஞ்சுலதான் வச்சிருக்கீங்க"
புவனாவிடம் ஏதோ சொல்லி சமாளித்து விட்டேன்.
தெய்வானை மனசில் இடம் பிடிப்பது யார் என்று அந்த நாட்களில் எனக்கும் சரவணனுக்கும் போட்டியே நடந்தது. நான் அவளுக்கு ஹோம் வொர்க் எழுதிக் கொடுத்தால், சரவணன் படம் வரைந்து கொடுப்பான்.
தேர்வு நாட்களில் அம்மன் குங்குமம் கொண்டு வந்து யார் முதலில் தருவது என்பதில் எங்களுக்குள் சண்டை எப்போதும்.
அவள் உடம்பு சரியில்லாமல் படுத்த ஒரு வாரமும் நாங்கள் எங்கள் வீட்டிற்கு போனதே கொஞ்ச நேரம்தான்.
வளர்ந்ததும் ஆளுக்கொரு திசையாகப் பிரிந்தோம். இப்போது மீண்டும் அவளைப் பற்றி பேச்சு.
கிராமத்துக்குப் போனோம். எங்களைப் பார்த்ததும் சரவணன் குடும்பம் குதூகலித்தது. திருச்செல்வி உயரம் தான் என்று தனியாக வந்து அகிலா என் காதில் சொன்னாள்.
திருவிழா கொண்டாட்டம் எல்லாம் எங்கள் எல்லோருக்கும் உற்சாகமாய் இருந்தது. தெய்வானையையும் பார்த்து விட்டோம்.
"அதோ பாரு"
சரவணன் கிசுகிசுத்தான்.
தெய்வானை, அவள் கணவர், மகள் மூன்று பேரும் நின்றிருந்தார்கள். என்னைப் பார்த்து விட்டாள். அவள் கண்களில் என்ன மின்னியது?
"புவனா அவங்க தான் தெய்வானை"
புவனா அவளைச் சற்று பொறாமையுடன் பார்த்தாள்.
"அழகாத்தான் இருக்காங்க"
அருகில் போனோம். என் குடும்பத்தாரை அறிமுகப் படுத்தினேன். ஒரு மணி நேரம் பேசினோம்.
சரவணன் கண்களில் பொறாமை லேசாகத் தெரிந்தது. 'எங்கிட்ட சரியாவே பேசல.. உன்னோட நல்லா பேசுறாங்க'
என் விலாசத்தைக் கொடுத்தேன். கூடவே என் கைபேசி எண்ணும். தெய்வானை உடனே அதைத் தன் கைபேசியில் ஏற்றி.. ஒரு மிஸ்டு கால் கொடுத்தாள்.
'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..' என் மொபைல் பாடியது.
"நம்பர் சரியா அடிச்சிருக்கேனான்னு செக் பண்ணேன்" என்றாள் சிரிப்புடன்.
விடை பெற்றுக் கிளம்பும் போது புவனா கேட்டாள்.
"உங்க பொண்ணு பேரு சொல்லவே இல்லியே"
தெய்வானை மெதுவாக ஆனால் அழுத்தமாகச் சொன்னாள்.
'சரவணபாலா'
எங்கள் பால்யம் அந்த நிமிஷம் மீண்டும் உயிர் பெற்று எழுந்த மாதிரி இருந்தது அப்போது.
14 comments:
உயிர்ப்பான கதை. உணர்வுகள் அதில் கவிதை.
கடைசி வரியில் அசத்திட்டீங்க.அருமையான சிறுகதை
எங்கள் பால்யம் அந்த நிமிஷம் மீண்டும் உயிர் பெற்று எழுந்த மாதிரி இருந்தது அப்போது.
....So Sweet! :-)
வாவ்! அசத்தறீங்க சார்! கடைசி வரிகளில் கலக்கல்! எதிர்பாராத முடிவு! பகிர்வுக்கு நன்றி.
Another Gem from you Rishaban :)
ரொம்ப பிரமாதம். சபாஷ்
கடைசி வரி பிரமாதம்.
பழைய நினைவுகளை வரவழைத்து விட்டீர்கள்...
நல்ல அருமையான பால்ய கால நட்பை உணர்த்தும் கதை. வழக்கம் போல கடைசி ஒற்றை வ்ரியில், நீங்கள் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போல் உயர்ந்து நிற்கிறீர்கள். பாராட்டுகள்.
//என்னை நீங்க அகிலா ரேஞ்சுலதான் வச்சிருக்கீங்க //
இயல்பா இருக்குங்க இந்த வரி... அருமையான நடை..
பிரமாதம் சார். எதிர்பார்க்காத முடிவு.
கதையைப் படித்து முடித்தவுடன் தலைப்பை மறுபடி போய்த் தேடிப் படிக்க வைத்துவிட்டீர்கள்!..
நட்பு வாழ்க!
அப்புறம் வீட்டுக்கு வந்து புவனாகிட்ட அடி வாங்கின கதையை அடுத்த கதையா எழுதுங்க:)
கிளைமாக்சில் பின்னி விட்டீர்கள்....கதையிலும் ஆங்காங்கே பன்னீராக உணர்வுத் தெளிப்புகள்....நிறைவான கதை...
Post a Comment