அலுவலக வளாகத்தில் சர்வ சாதாரணமாக மயில்கள் சுற்றும். அதுவும் மாலை அலுவலகம் முடிகிற நாலரை மணிக்கு மேல் மனித நடமாட்டம் குறைகிற நேரத்தில் பெரிய தோகையை விரித்துக் கொண்டு ஸ்டைலாக போகும் காட்சி மிக அற்புதம்.
அன்றைய தின சோர்வை ஒரு நிமிடத்தில் மறக்கடிக்கிற நிகழ்வு அது.
நேற்று, இரு வார வவுச்சர் ஆடிட் முடிந்து கிளம்பியவர்களை வழியனுப்ப போனபோது மூன்று மயில்களின் அணிவகுப்பு..
சற்று முன் வரை நிகழ்ந்த விவாதம்.. பதில்கள் எல்லாம் மறந்து இயற்கையின் ஜாலம் காட்டிய பிரமிப்பில் நின்றோம் அப்படியே .
கனமான லெட்ஜர்கள்.. கணக்கிலடங்கா எண்கள் .. சரி பார்க்க வேண்டிய வரவு செலவுகள்.. எல்லாம் மூட்டை கட்டிப் போட்டு விட்ட அழகு ..
மனிதனுக்குள் இன்னமும் இயற்கை பற்றிய ரசனையும் , ஆர்வமும், பிரமிப்பும், தேடலும் மிஞ்சி இருக்கின்றன..
இது போதும்.. எப்படியேனும் உள்ளிருக்கும் மனிதத்தை உயிர்ப்பித்து விடலாம் என்றே நம்பிக்கை பிறக்கிறது நம்முள்..
தேவை எல்லாம் அதற்கான முயற்சிகளும்.. பொறுப்பானவர்களும்..
17 comments:
இறைவனின் படைப்புகள் அனைத்துமே அற்புதம் தான். அதுவும் மயில் தோகை விரித்தாடும் ஆட்டமும், அதன் அணிவகுத்துச் செல்லும் அழகும், எல்லோரையுமே மயங்கத் தான் செய்யும். நானும் நம் அலுவலக வளாகத்தில் அடிக்கடி இவற்றைப் பார்த்து பிரமித்ததுண்டு.
//மனிதனுக்குள் இன்னமும் இயற்கை பற்றிய ரசனையும் , ஆர்வமும், பிரமிப்பும், தேடலும் மிஞ்சி இருக்கின்றன..இது போதும்.. எப்படியேனும் உள்ளிருக்கும் மனிதத்தை உயிர்ப்பித்து விடலாம் என்றே நம்பிக்கை பிறக்கிறது நம்முள்.. தேவை எல்லாம் அதற்கான முயற்சிகளும்.. பொறுப்பானவர்களும்.//
வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள், அந்த தோகை விரித்தாடும் மயில்கள் போலவே !
மயில் ஆடும் அழகை தினமும் காணமுடிகிறதா? பொறாமையாக இருக்கிறது.
மயிலையும் அதன் ஆட்டமும் தினமும் காணக் கிடைக்கிறதா உங்களுக்கு. கொடுத்து வைத்தவர் தான். தில்லியில் கூட முன்பெல்லாம் ரிட்ஜ் ஏரியாவில் உள்ள வீடுகளின் மொட்டைமாடியில் வந்து மயில்கள் அமர்ந்து, சிறு ஆட்டம் காண்பித்து செல்லும். இப்போதோ ரிட்ஜ் ஏரியாவே சிறிது சிறிதாய் அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
புள்ளிக் கலாப மயில்... பாட்டு நினைவுக்கு வருகிறது.... ;-);-)
இங்கே, தானும் தன் பொல்லாச் சிறகினை விரித்தாடினால் போலும் சில வான்கோழிகூட இல்லை திரு ரிஷபன். ஆனால் காக்கைகள் கூட்டம் கூட்டமாய். டிவியில் வருது மானாட, மயிலாட...
மயிலின் தோகை விரிய மழை வருமென்பதுண்டு.
நம் மனம் விரியவும் வேண்டியிருக்கிறது காணக்கிடைக்காத தோகை விரித்தல்கள்.
இன்னும் அசைந்து செல்லும் யானையைக் காணும்போதெல்லாம் பின்னாலேயே சென்றுவிடுகிறது மனது.
ஆளற்ற லெவெல் க்ராஸிங்கில் கடக்கும் ரயிலுக்குக் கையசைக்க இன்னும் ஆர்வமிருக்கிறது.
நாமும் இப்படி இருப்பதால்தான் எப்படி எது இருந்தாலும் கடந்துவிட முடிகிறது ஒரு இதழோரப் புன்சிரிப்போடு.
இல்லையா ரிஷபன்?
//மனிதனுக்குள் இன்னமும் இயற்கை பற்றிய ரசனையும் , ஆர்வமும், பிரமிப்பும், தேடலும் மிஞ்சி இருக்கின்றன.// இயற்கையின் உச்ச அழகான மனதை கொண்டுள்ளோம் என்பது பற்றி கூட அறியாமல் செயற்கை குறுக்கு வழியில் மனதை குறுக்கி கொள்கிறோம்... மயில் போல் அழகான பதிவு
நானும் மயிலைப் பார்த்திருக்கிறேன். காலையில் காரில் செல்லும்போது அது பறந்து வந்து என் கார் அருகில் இறங்கி மெதுவாய் அன்ன நடை இட்டு செல்லும் அழகை காண கண் கோடி வேண்டும். மயிலை பார்த்ததும் நான் கன்னத்தில் புத்தி போட்டுக்கொள்வேன். என் அப்பன் முருகனை நேரில் கண்டது போல் புல்லரித்து போவேன்.
ஆம்.
இந்த ரசனையும்
தேடலும் தான்
நம் வாழ்வை
வசீகரமாக்குகின்றன.
போன வருடத்தில் இங்கும் ஒரு அதிசயம்.வெயில் காலத்தில் எங்கள் இளைஞர்கள் சேர்ந்து கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சமயம் ஒரு நாள் எங்கிருந்தோ இருந்து பறந்தடித்து அவலமாக ஒரு வெள்ளை மயில் வந்து அந்த மைதானத்தில் விழுந்திருக்கிறது.
இப்போ அதை அரசாங்க அனுமதியுடன் எங்கள் முருகன் கோவிலில் வைத்து வளர்க்கிறார்கள் !
ரசித்து எழுதியிருக்கிறீர்கள்...
வார்த்தைகள் அழகு சேர்க்கிறது மயிலுக்கு மேலும்..படிச்சதும் மயிலை பார்க்கமாட்டோமான்னு ஏங்குது மனது..
//மனிதனுக்குள் இன்னமும் இயற்கை பற்றிய ரசனையும் , ஆர்வமும், பிரமிப்பும், தேடலும் மிஞ்சி இருக்கின்றன..இது போதும்.
//
உண்மைதான் ரிஷபன்
சுந்தர்ஜி
//இன்னும் அசைந்து செல்லும் யானையைக் காணும்போதெல்லாம் பின்னாலேயே சென்றுவிடுகிறது மனது.
ஆளற்ற லெவெல் க்ராஸிங்கில் கடக்கும் ரயிலுக்குக் கையசைக்க இன்னும் ஆர்வமிருக்கிறது//.
மயிலிறகால் வருடியது போன்ற சுகத்தை ஒரு நொடியில் எழுத்தில் கொடுத்து விட்டீர்களே!.
மயில் தோகை விரித்தாடும் அழகு,முழு நிலா,
கடலின் வெள்ளி அலை,தும்பிக்கை ஆட்டும் யானை,
கள்ளமற்று சிரிக்கும் குழந்தை...
ஆஹா!இவற்றை எல்லாம் பார்த்தால் பார்த்து ரசித்துக் கொண்டே
இருக்கலாம்தான்
மயில் தோகை விரித்தாடும் அழகை நான் இன்னும் பார்த்ததில்லை. ”தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
நலமா?. நலம் நலமறிய ஆவல். மயில் பற்றிய என் இணைப்பு ஒன்று.....
http://kovaikkavi.wordpress.com/2012/05/14/43-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%92%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment