பாம்புகளுடனான என் அனுபவம் அத்தனை அதிகம் இல்லைதான். அது என்னவோ எனக்கு எதிரில் வர கொஞ்சம் பயப்படுகிறதோ என்று கூட தோன்றும்.
சின்னவயசில் .. எங்கள் தாத்தா வீட்டில் ஒரு வாழும் பாம்பு இருந்தது. ஐ மீன் .. அதுவும் எங்களோடு குடி இருந்தது. (மத்த பாம்பு வாழாவெட்டியா என்று குண்டக்க மண்டக்க கேட்கக் கூடாது) எங்கள் வீட்டு பூஜை அறைக்குள் மேலிருந்து தொங்கி ஆடிக் கொண்டிருக்கும். கையை தட்டி விட்டுத்தான் உள்ளே போவோம். வீட்டுக்கு எதிரே கோவில். அதன் கீழ்ப் பக்க நீர் வெளியேறும் ஓட்டை வழியாக கோவிலுக்கும் எங்கள் வீட்டுக்கும் அதன் பயணம்.
ஒரு முறை என் அம்மா மேல் விழுந்து விருட்டென்று ஓடி விட்டது.. அத்தனை உயர உத்திரத்தில் இருந்து விழுந்தும் இரண்டு பேருக்கும் ஒன்றும் ஆக வில்லை..
அடுத்த முறை (இப்போது நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேன்) அந்த பாம்பை பார்த்தபோது அதற்கும் வயசாகி விட்டது.
நகர முடியாமல் ஊர்ந்தது. பயத்தில் என் தாத்தாவை கூப்பிட ஓடி விட்டு திரும்பியபோது அதைக் காணோம். அப்புறம் அதை நான் பார்க்கவே இல்லை.
அடுத்த முறை கல்லூரி விட்டு ரெயிலுக்கு திரும்பிய போது ஒரு பச்சைப் பாம்பு .. கூட வந்தவர்கள் வீர சாகசமாக அடித்த போது எட்டி நின்ற எனக்கு தடுக்கவும் இயலாமல் ரசிக்கவும் முடியாமல் ஒரு அவஸ்தை.
அலுவலகத்தில் ஒரு நண்பர் - பாம்புகளோடு சிநேகிதம் வைத்திருப்பவர்...
பாம்பு பற்றிய என் பயம் சொன்னதும் பேன்ட் பக்கத்தில் கை விட்டு எடுத்தார். பாம்பு!
அவர் வீட்டில் மிக சகஜமாக பாம்புகளோடு இருப்பவராம்.
அவர் குழந்தைகளுக்கு பயமே கிடையாதாம்..
அலுவலகத்தில் கம்பியூட்டர் அறையில் எப்போதாவது ஓய்வெடுக்க வரும் பாம்புகள் பிடிபட்டதும் மெயிலில் படத்துடன் தகவல் வரும்.
பிரிமனை என்று நினைத்து சுருண்டு படுத்திருந்த வீட்டு பாம்பின் மீது கொதிக்க கொதிக்க பால் பாத்திரத்தை வைத்து விட்டார் அந்த வீட்டு பாட்டி.
பிறகு வழக்கமாய் வரும் பாம்பைக் காணாமல் திகைத்த போது செத்து போயிருந்தது தெரிந்தது. பின் அவர்கள் வீட்டில் முதல் பிள்ளைக்கு 'நாகநாதன் ' என்று பெயர் வைப்பது வழக்கமாம் .. அவர்கள் வீட்டு வாரிசு என் நண்பன் ..
பாம்பென்றால் சுவாரசியமும் கூட..
17 comments:
நெய்வேலியிலும் பாம்புகள் அதிகம். நிறைய பாம்பு அனுபவங்கள் இருந்திருக்கிறது சிறு வயதில். அதில் ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன் – மனச்சுரங்கத்திலிருந்து பகுதியில் வெளியிடுவதற்காக, இதைப் படித்தவுடன் சீக்கிரம் வெளியிட வேண்டும் எனத் தோன்றுகிறது :)
எங்க வீட்டைச் சுற்றியும் தோட்டம் இருப்பதால் பாம்புகள் நிறைய வந்து போகும்.அடிக்கடி பாம்புகளைப் பார்ப்பதால் அவற்றின் மேல் பயம் குறைந்து போய்விட்டது என் பசங்களுக்கு.
போன ஞாயிறு ஒரு பெரிய கண்ணாடி விரியன்.பயங்கரமான விஷம். எங்கள் வீட்டு நாய் குட்டி போட்டிருந்தது.அதைத் தின்ன வந்தது.கல்லூரி நாட்களுக்குப் பிறகு அதை அடித்துக் கொன்றேன்.
நேற்று ஒரு சாரை வந்தது.அவிழ்த்துவிட்டிருந்த எங்கள் நாய்களே கடித்துக் குதறி விட்டது.
பாம்போடு நேருக்கு நேர் எனக்குப் பரிச்சயம் இல்லை.
நிறைய கேள்விப்பட்டுள்ளதால் பயம் அதிகம் உண்டு.
ஒரு முறை குற்றால அருவியில் நிறைய பேர் கும்பலாக குளித்துக் கொண்டிருக்கும் போது, சற்று நேரம் முன்பு ஒரு தண்ணிப் பாம்பு வந்தது என்பது போல என் காதுப்பட பேசிக்கொண்டனர்.
அவர்களுடன் கும்பலில் புகுந்து நானும் குளிக்கும்போது என் காலை ஏதோ சுற்றுவது போல ஒரு பிரமை.
பயத்தில் பாம்பு பாம்பு என்று கத்திவிட்டு கை கால்களை நான் உதர, பக்கத்திலிருந்த அனைவரும் ஒரே ஓட்டம்.
நான் நிம்மதியாக குளித்து விட்டு வர முடிந்தது.
என் காலைச் சுற்றி அதன் பின் நீரில் மறைந்தது எது என்று 30 வருடங்க்ள் ஆகியும் எனக்கு இன்னும் சரிவர புரியாமலேயே உள்ளது.
அரவம்..அரவம் இருந்தால் அரவம் போகும் என்று எதோ வேலை வெட்டி இல்லாதவன் சொல்லியதை சிரமேற்கொண்டு,ஆரண்ய நிவாஸத் தோட்டத்தில், தண்ணீர் ஊற்றும் போது,
பயம் போக காட்டுக் கத்தலாய் சினிமாப் பாடல்கள் பாடுவேன்..பலன் என் குரல் எனக்கே பயமாய் இருக்கும்!
பாம்பு செண்டிமெண்ட் ரஜினிக்கு மிகவும் வொர்க் அவுட் ஆன விஷயம்.
கீழவாழக்கரை கிராமத்தில் ஒரு புயல் நேரத்தில் உத்தரத்தில் சுருண்டு தொங்கிய கருநாகம் இன்னும் என் கண்களில் ஆடுகிறது... ராத்திரி நேரத்ல பயமுறுத்துறீங்க ரிஷபன் சார்! ;-)
@சுந்தர்ஜி
வீட்ல பாம்புப் பண்ணை வச்சுருக்கீங்களா.. ;-)
நகைச்சுவை இழையோடும் பதிவு....
பாம்புடன் என் அனுபவம் இங்கே
பகிர்வு வித்தியாசமாத்தான் இருக்குங்க ரிஷபன்
பாம்பு பற்றிய நெய்வேலிக் கதைகளை கணவரும், மாமியாரும் சொல்வார்கள். அதை கேட்ட பின்பு தனியே அடுத்த அறைக்கு செல்லவே அலறுவேன். இது தான் பாம்புடனான எனது பரிச்சியம்!
அச்சோ....பா...ம்....பு....எல்லாருமாச் சேந்து பயமுறுத்துறீங்க !
பாம்பு எப்போதும் மனிதனை ஈர்த்தே வந்திருக்கிறது. உலகின் பலநாகரீகங்களும் பாம்பை தெய்வமாய் வணங்கின.
நான் ஆந்திராவில் பணிபுரிந்தபோது என் வீட்டு ரோஜாச்செடிகளூடே இருந்த ஒரு கரியபாம்பு என் இடது கையில் கடித்து விட்டது. மகனின் கிரிகெட் மட்டையால் அடித்து விட்டேன். கடிவாய்மேல் இறுகக் கட்டிக்கொண்டு, பாம்பை ஒரு பாலிதீன் பையில் போட்டுக்கொண்டு, எதிரே இருந்த பார்மசியில் விஷமுறிவு ஒரு வயில் மருதும்,சிரிஞ்சும் வாங்கிக்கொண்டு டாக்டரிடம் போனேன்.
இடது கையில் இருந்த பாம்புப் பையை காட்டி இது கடித்து விட்டது.
உடனே இதைப் போடுங்கள் என்று வலதுகை மருந்தைக் காட்டினேன். டாக்டர் அலறினார் பார்க்கணும்..
"என் அந்த ஊசியையும் நீங்களே போட்டுக்க வேண்டியது தானே!"
என் கைப்பாம்பு பிடுங்கப்பட்டு அவர் ஊழியர்களால் மீண்டும் குதறப் பட்டது.
நான் கொண்டு போன மருந்தும் அவரால் ஒப்புக்கொள்ளப் பட்டு என் கையும் அவர் ஊசியால் குத்துப் பட்டது.அந்தப் பாம்பின் கழுத்து சாம்பல் நிறம் கண்ணில் நிற்கிறது..
The only thing which I am most scared of. When I went for my forest trekking last week @ Dhoni Forest, in palakkad, I am little concerned about this creature only. Good post. My wishes
அத்தனை உயர உத்திரத்தில் இருந்து விழுந்தும் இரண்டு பேருக்கும் ஒன்றும் ஆக வில்லை.. //
//பிரிமனை என்று நினைத்து சுருண்டு படுத்திருந்த வீட்டு பாம்பின் மீது கொதிக்க கொதிக்க பால் பாத்திரத்தை வைத்து விட்டார் அந்த வீட்டு பாட்டி. பிறகு வழக்கமாய் வரும் பாம்பைக் காணாமல் திகைத்த போது செத்து போயிருந்தது தெரிந்தது//
ஸ்ஸ்ஸ்ஸ் ..... அப்பா...!
பாம்பு பிரிமனையா.. நல்ல தில்லான பாட்டி போங்க..
பாம்பை பற்றி எனகென்றும் வழக்கமான ஒரு சென்டிமென்ட் உண்டு.. நான் எப்போது மலைமேலிருக்கும் கோவிலுக்கு சென்றாலும் சரி தரிசனம் முடித்து மலை இறங்குவதற்குள் எப்படியாவது ஒரு பாம்பு என் கண்ணில் பட்டுவிடும். குறைந்தபட்சம் பாம்பு படமாவது. சொந்த ஊர் கோவை என்பதாலும், கோவையை சுற்றி மலைபிரதேசம் என்பதாலும் இது சகஜம் தான். ஆனால் மற்ற ஊர்களுக்கு சென்றாலும் இது தொடர்வது தான் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யம்.
பள்ளி நாட்களில் மீன் பிடிக்கப் போய் தண்ணீர் பாம்பு கை விரலில் கடிக்க சுண்ணாம்பு போட்டு சுகமான அனுபவமும் உண்டு. கல்லூரி கால்த்தில், கட்டு விரியன் காலில் போட, நாக்கு, காதுமடல், நாசிநுனி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் சுரணை இழந்து கொண்டிருக்க, வயதான ம்ருத்துவ ஆசாரி வேப்பிலையால் மந்திரித்து செங்கல் கலரில் பொடியை வெற்றிலையில் மடித்துக் கடித்து முழுங்க வைத்தார். மறுநாள் அவர் சொன்னாராம், மறு பொழைப்பு கண்ட பயன்னு.
:) :) எனக்கு பாம்பு என்றாலே பயமுறுத்தும் கனவுகள் தான்!
Post a Comment