May 09, 2011

மரக்கிளையில்



கூடு கட்டத் துவங்கியதும்
பறவைக்கு
மரக் கிளையில்
சொர்க்கம் தெரிகிறது.
குஞ்சுகளின் அழைப்பொலி
கேட்டு
எத்தனை வேகமாய்
அதன் சிறகடிப்பு..
அதன் அணைப்பில்
அவற்றின் வளர்ச்சி..
வளர்ந்தபின்
ஏதோ ஒரு திசையில்
போய்விடும்
நாளில்
தாய்ப் பறவையும்
நினைப்பதில்லை
வளர்த்த நாட்களை..
வளர்ந்து பறந்ததும்
நினைப்பதில்லை..
அன்னையின் அணைப்பை..
நினைப்பில் நனைந்து
பிரிவில் கசிந்து
உறவில் உருகுது
மனித இனம் மட்டும்

20 comments:

Rekha raghavan said...

//நினைப்பில் நனைந்து
பிரிவில் கசிந்து
உறவில் உருகுது
மனித இனம் மட்டும்//

உண்மை. நல்ல கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

நமக்கு மட்டும் தான் இந்த உணர்வுகளெல்லாம். நல்ல கவிதை.

Yaathoramani.blogspot.com said...

அதனால்தான் உயிரினங்களில்
உன்னதப் படைப்பாக மனிதன்
கொண்டாடப்படுகிறானோ?
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வசந்தமுல்லை said...

அன்னையின் அணைப்பை..
நினைப்பில் நனைந்து
பிரிவில் கசிந்து
உறவில் உருகுது
மனித இனம் மட்டும்

இதையே இப்படியும் செய்யும் மனித இனம்!!!!

அன்னையை முதியோர்
இல்லத்தில் விட்டு விட்டு
அன்னையின் அணைப்பை..
நினைப்பில் நனைந்து
பிரிவில் கசிந்து
உறவில் உருகும்
மனித இனம்
பிறர் மனதில் பச்சாதாபம்
பெற!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Madumitha said...

பறத்தல் மட்டுமல்ல
மறத்தலும்
மனிதனுக்குச் சாத்யமில்லைதான்
ரிஷபன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இறக்கை முளைத்ததும் பறக்குது பறவை. அத்துடன் அதன் தாயுடனான உறவு துண்டிக்கப்படுகிறது.

மனிதனுக்கு இறக்கை முளைப்பதில்லை. அதனால் தானோ என்னவோ உறவு மட்டும் உள்ளத்திலாவது கொஞ்சம் நீடிக்கிறது.

நல்ல கவிதை. பாராட்டுக்கள். [voted]

Chitra said...

பறவை குஞ்சுகள் பெரிதானதும், சில தாய் பறவைகள் கூட்டை கலைத்து விடுகின்றன.


மனித நேயமும் பாசமும் தனித்துவமானதுதான்.

ஹேமா said...

இதனால்தான் தலைமுறை தாண்டியும் பாசத்தோடு தேடிக்கொள்கிறோம் பிறக்கும் பேரனின் முகத்தில் அப்பாவையோ அம்மாவையோ !

சிவகுமாரன் said...

\\தாய்ப் பறவையும்
நினைப்பதில்லை
வளர்த்த நாட்களை..
வளர்ந்து பறந்ததும்
நினைப்பதில்லை..
அன்னையின் அணைப்பை//

-- மனித இனத்தில் குஞ்சுகளின் குணம் பெருகி பல நாட்களாகி விட்டது. தாய்ப்பறவைகள் தான் இன்னும் நினைத்து தவித்துக் கொண்டிருக்கின்றன .

- அருமையான கவிதை

ராமலக்ஷ்மி said...

மனிதனுக்கும் பிற உயிர்களுக்குமான வித்தியாசம் எங்கு என்பதை அழகாக சொல்லுகிறது கவிதை. அருமை.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

பற்றற்றிருத்தல் - பறவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று என்பதை பூடகமாய் சொல்லும் அருமையான கவிதை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என் கருத்து ஹேமாவோடு ஒத்துப் போகிறது ரிஷபன்.

ஆனாலும் இது கீழை தேசத்துக்கு மட்டுமே உரிய பண்பாகவும் தெரிகிறது.

அருமை.

vasan said...

நாம் அதுவாய் இருந்தால்,
ம‌னித‌ இன‌த்தை அறம் பாடியேனும் அழித்திருப்போம்,
அவ‌னின் பொழுது போக்காய்
ப‌ற‌வைக‌ளைச் சிறை வைக்கும் பாத‌க‌த்திற்காய்.
ம‌னித‌ன், ஒரு சுய‌ந‌ல‌ ந‌ச்சு ப‌டைப்பு.
தான் வாழ‌ த‌ர‌ணியையே அழிக்கும் அர‌க்க‌ர்க‌ள்.

நிரூபன் said...

கட்டுக்களோடும், தளைகளோடும், பிரிக்க முடியாத பாச உணர்வோடும் இறுதி வரை வாழ்வது மனித இனம் தான் என்பதைப் பறவைகளோடு ஒப்பிட்டுக் கவிதையாக வடித்துள்ளீர்கள்.

நிரூபன் said...

பறவைகளுக்கு இருக்கும் சுதந்திரம் பாசத்தின் காரணமாகவும், அன்பின் காரணமாகவும் சில வேளைகளில் மனிதர்களுக்கு கிடைக்காமல் போகிறது என்பது உண்மைதான்.

arasan said...

உணர்வுகளை சுமந்த வரிகள் ...
நல்ல சிந்தனை ,...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பரிவும்,பாசமும் பறவைகளுக்கு இல்லை..அவை ரிஷிகள் போல வாழ்கின்றன...

மோகன்ஜி said...

அற்புதம்.. மதுமிதா சொன்னது போல் பறத்தலும் மறத்தலும் இயலாததால் தான் மனிதன் உணர்வுகளின் ஓடையூடே நீந்தியபடி பயணிக்கிறான்.நல்ல கவிதை ரிஷபன்ஜி !

நிலாமகள் said...

//தாய்ப் பறவையும்
நினைப்பதில்லை
வளர்த்த நாட்களை..
வளர்ந்து பறந்ததும்
நினைப்பதில்லை..
அன்னையின் அணைப்பை..
நினைப்பில் நனைந்து
பிரிவில் கசிந்து
உறவில் உருகுது
மனித இனம் மட்டும்//

என்ன செய்ய... கேவலம் மனுஷப் பிறவியா ஜனிச்சாச்சு...!
சிறுகதை மன்னர் கவிதையிலும் கலக்குகிறீர்கள்!!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அதனால்தான் மானிடப் பிறவியை உயர்ந்ததென்று சொல்கிறார்கள்.