May 18, 2011

திருத்தவே முடியாது

சகுந்தலாதான் வந்திருந்தாள். 'ஹோ'வென்ற இரைச்சலும், சிரிப்பும் அவள் அடையாளங்கள்தான்.
வாசல் நடையில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்ததுமே யூகித்து விட்டேன். ஜானகியும் உறுதிப்படுத்தினாள். ஆபீஸ் பேக்'கை வாங்கிக்கொண்டவள் மெல்ல முணுமுணுத்தாள்.
"சக்கு வந்திருக்கா. பத்து நாள் தங்கப் போகிறாளாம்."

அதற்குள் சக்குவின் பெண்ணே ஓடி வந்துவிட்டது. 'மாமா' என்று காலைக் கட்டிக்கொண்டது.
"என்னடி அம்மாவோட வந்தியா...?"
"ம். அப்பா வரலே... லீவு கிடைக்கலே," என்றது.
உள்ளே போனேன்.. அம்மா, முகம் எங்கும் பிரகாசமாய்ச் சக்குவின் எதிரில் அமர்ந்திருந்தாள்.
"..வாங்கம்மா பெரிய மனுஷி! எப்படி இருக்கீங்க..." என்றேன்.
"..ஏதோ இருக்கேன்.." என்றாள் தோரணையாய். " நீங்கதான் பெரிய மனுஷங்க... அங்க வரவே மாட்டீங்க.. அட.. அதான் போவட்டும்...அம்மாவையாவது அனுப்பலாம்... அதுவும் கிடையாது."
"... வந்தா கூட்டிக்கிட்டுப் போயேன். யார் வேணாம்னாங்க?"
"ஏம்மா, நீ வரமாட்டியா?"
"அவன் கிடக்கான். நீ ஏண்டி அவன் கிட்டே பேசறே" என்றாள் அம்மா பொதுவாய்.

போக மாட்டாள். ஒவ்வொரு வருகையிலும் தவறாமல் சக்கு அழைப்பாள். போன வருஷமும் அழைத்தாள். ‘பத்து நாட்களாவது இருந்துவிட்டு வருகிறேன்’ என்று போன அம்மா, மூன்றாவது நாளே திரும்பி விட்டாள்.
"ஏம்மா... என்ன ஆச்சு?" என்றேன்.
"என்னவோடா... என்னால் முடியலே.. பாவம் அவளுக்கு ஏன் சிரமம்னு வந்திட்டேன்."
பின்னால் ஜானகிதான் சொன்னாள்.
".. சாமர்த்தியக்காரிதான். அம்மாவை வச்சு பயங்கரமா வேலை வாங்கிட்டாளாம். அம்மாவால் முடியலே. திரும்பி வந்துட்டா."
"வேறே மாதிரி சொன்னாளே..." என்று இழுத்தேன்.
"பெண்ணை விட்டுக் கொடுப்பாளா?"
மறுபடியும் இப்போது சக்குவின் வருகை. இந்த விஜயத்தில் என்னென்ன நிகழப்போகிறதோ...!

சொன்னபடி நகை தயாராகிவிட்டது. போனஸாக வந்த பணம். உடன் கையிருப்பு கொஞ்சம் சேர்த்து நாலு பவுனில் சங்கிலி செய்ய ஆர்டர் கொடுத்திருந்தேன். செய்யக் கொடுப்பதற்கு முன்பே ஜானகியிடம் பேசிவிட்டேன்.
"ஜானு.. உனக்கு ஆட்சேபணை இல்லியே..."
"என்னங்க இது... அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் இன்னைக்கு காலையிலேயே சொல்லிட்டேன். எதுக்குடீன்னாங்க.. உங்க பையன் ஆசையாப் போடறார்... போட்டுக்குங்கன்னேன்."
நிஜமாகவே நெகிழ்ந்தேன்.
"தேங்க்ஸ்மா... உனக்குச் செய்யலேன்னு வருத்தப்படுவியோன்னு..."
"சேச்சே ... அதான் போன தடவை எனக்குப் பிடிச்சது வாங்கிக்கிட்டேனே.." என்றாள்.
பரவசமாய் அவளை என்னுடன் இறுக்கிக் கொண்டேன்.

இப்போதுதான் குழப்பம். நகையைக் கொண்டு வந்தாகிவிட்டது. அம்மாவிடம் கொடுத்து... போட்டுக் கொள்ளச் சொல்லி... நமஸ்காரமும் செய்தாகிவிட்டது.
அம்மாவுக்குப் பெருமை கொள்ளவில்லை.
"நெஜம்மாகவே எனக்குத்தானே!" என்றாள் குழந்தை போல்.
"என்னம்மா இது. இப்படி கேட்கிறே.. உனக்குத்தான். உனக்கேதான்."
எதிர் வீடு பக்கத்துவீடுகளுக்குக் கொண்டு போய்க் காட்டியாகி விட்டது.
சக்கு கூட சொல்லிவிட்டாள்.
"இது நல்லா இருக்கும்மா... ம்.. பரவாயில்லே.. ஒம் பையன் உன்னை நல்லாத்தான் வச்சிருக்கான்."

மறு நாள் அம்மாவின் கழுத்தில் நகையைக் காணோம்.
"என்னம்மா.. எங்கே அது?"
"கழற்றி வச்சிருக்கேன்..."
அப்போதுதான் எனக்குத் தோன்றியது, ‘என்ன இருந்தாலும்... அம்மாவும் பெண்தானே... சக்கு கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்திருப்பாளோ...’
ஜானகியிடம் தனிமை கிடைத்த போது சொன்னேன்.
"அம்மாவுக்கும் ஆசைதான் போல... நகையைப் பத்திரமாய் பூட்டி வச்சுட்டா."
"ஏன் அப்படிச் சொல்றீங்க?"
"இல்லே... சக்கு கேட்பாளோன்னு பயப்படறாளா அம்மா..."
ஜானகி அழுத்தமாத் தலையசைத்தாள்.
"இல்லீங்க.. எனக்கும் அதுதான் ஆச்சர்யம், சக்கு நல்லா இருக்குன்னு சொன்னதோட சரி... அப்புறம் சங்கிலியைப் பத்தி வாயே திறக்கலே. அம்மாதான் திடீர்னு கழற்றி வைச்சுட்டாங்க."
"ஏனாம்?"
"இத்தனை நாளா எதுவும் போடாமே திடீர்னு போட்டதாலேயோ... என்னவோ தெரியலே."
"உனக்குக் கொடுத்திருவாங்களா?" என்றேன் என்னையும் மீறி
"தெரியலே," என்றாள் யதார்த்தமாய்.
"அம்மா பார்த்து என்ன செஞ்சாலும் சரி. அது அவங்களோடது."

"வரட்டுமா?" என்றாள் சக்கு.
வந்து பத்து நாட்களாகி விட்டன. இன்று ஊருக்குக் கிளம்புகிறாள்.
"பத்திரமா போயிட்டு வா," என்றேன்.
"கொஞ்சம் இருடி..." என்றாள் அம்மா.
உள்ளே போய்த் திரும்பியவள் சட்டென்று சங்கிலியைக் கழுத்தில் மாட்டி விட்டாள்.
".. ம் ..எதுவும் பேசாதே.. நீ வச்சுக்கோ." என்றாள்.
சக்கு ஒப்புக்கு ஏதோ சொல்லி... மறுக்கப்பட்டு.. முகம் முழுதும் மலர்ச்சியாய்க் கிளம்பிப் போனாள்.
“.. என்னம்மா... இப்படிப் பண்ணிட்டே, உனக்காகத்தானே ஆசையா பண்ணிப் போட்டேன்." என்றேன் ஆற்றாமையுடன்.
"உன் ஆசைக்கு ஒரு நாள் நான் போட்டுக்கிட்டேன். இப்ப என் ஆசைக்கு அவளுக்குப் போட்டுட்டேன்." என்றாள் அதே குழந்தைத்தனமாய்.

இந்த அம்மாக்களைத் திருத்தவே முடியாது.

27 comments:

வெங்கட் நாகராஜ் said...

“அம்மாக்களை திருத்தவே முடியாது!” :)

பூட்டி வச்சிட்டாங்கன்னு சொன்னப்பவே எதிர்பார்த்தேன் – பொண்ணுக்குத் தான் கொடுப்பாங்கன்னு! :)

கதை நன்றாக இருக்கு ரிஷபன் சார்.

எல் கே said...

முடிவு எதிர்பார்த்தது என்றாலும், நடை நன்றாக இருந்தது. நன்றி சார்

பத்மா said...

ஹ்ம்ம் ..அம்மா அம்மா தான் .ஆனால் எல்லாத்தையும் பொண்ணுக்கே கொடுத்துட்டா பாவம் மருமகள் தானே !

துளசி கோபால் said...

பொண்ணுங்களும் 'கறக்கவே' வர்றாங்க!!!!

அது ஏன் மருமகளை மகளா நினைக்கத் தோணலை?????

முடிவு நான் எதிர்பார்த்ததுதான்.

நடை நல்லா இருக்கு ரிஷபன்.

Philosophy Prabhakaran said...

நிறைய இடம் கொடுத்துவிட்டீர்கள்... சைடுபாருக்கு...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ஆஹா...இதுவல்லவோ கதை...மிகவும் யதார்த்தமான நடையில் மனம் கொள்ளை கொண்ட கதை..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பெரும்பான்மையானவர்களின் யூகப்படியே கதையின் முடிவு இருப்பதிலிருந்தே இந்திய அம்மாக்களின் குணாதிசயம் வரையறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இல்ல ரிஷபன்?

Chitra said...

"உன் ஆசைக்கு ஒரு நாள் நான் போட்டுக்கிட்டேன். இப்ப என் ஆசைக்கு அவளுக்குப் போட்டுட்டேன்." என்றாள் அதே குழந்தைத்தனமாய்.


..... காலம் மாறி வருவதில், இந்த மாதிரி ஸ்வீட் அம்மாக்கள் மாறி விடாமல் இருக்கணுமே.... :-)

RVS said...

பெண் கல்யாணம் ஆகி புகுந்த வீடு போனப்புறம் அம்மக்களுக்கு மகள் மீது பாசம் பொங்குமாம். கதை யதார்த்த வசனங்களுடன் அற்புதமாய் இருந்தது சார்! ;-))

கே. பி. ஜனா... said...

உணர்வுகளை பிட்டுப்பிட்டு வைக்கிற கதை

vasan said...

க‌தை என்ன க‌தை. எல்லோரும் முடிவை யூகித்து விட்டார்க‌ள், அதை விடுங்க‌ள் ரிஷப‌ன்.
ஆனால் அந்த‌ நடை இருக்கிற‌தே ந‌டை, அதுதான் உங்க‌ளோட‌ த‌னி ஸ்டைல்.

ஹுஸைனம்மா said...

அம்மாக்கள் மட்டுமல்ல, மகள்களும்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கதை..சூப்பர் சார்..வர்ரேன்...
எங்கே சார் போறீங்க?
கதை படிச்சதும் கழுத்து துறுதுறுங்கறது..அம்மா வீட்டுக்குப் போறே..........ன்...அப்ப வரட்டா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

எதிர்பார்த்த முடிவே என்றாலும், நல்ல யதார்த்தமான நடையுடன் கூடிய உணர்ச்சிபூர்வமான அழகிய கதை.

பெண்ணைப்பெற்ற இது போன்ற அம்மாக்களை திருத்தவே முடியாது என்பதென்னவோ உணமை தான்.

ஷர்புதீன் said...

i agree with prabhakaran

Anonymous said...

எதிர்பார்த்த முடிவு என்றாலும்,நடை நல்லா இருக்கு :)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

யதார்த்தமான கதை ரிஷபன்.

நிரூபன் said...

பெற்ற மனசு, சுத்தத்திலும் சுத்தம், எப்போதும் வெள்ளை உள்ளம் என்பதற்கு..
இந்த அம்மா ஓர் எடுத்துக் காட்டு. தன் சந்தோசத்தை விட, தன் பிள்ளைகளின் உணர்வுகளைத் தான் அம்மாக்கள் மதிப்பார்களாம்.

Unknown said...

எல்லா அம்மாக்களுமே இப்படித்தான்.கதை நல்லா இருகுங்க .

Yaathoramani.blogspot.com said...

யதார்த்தமான முடிவு
எப்போதுமே அம்மாக்களுக்கு
மருமகள் மறுமகள்தான்
இது எத்தனை யுகம் ஆயினும்
மாறப்போவதில்லை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

மோகன்ஜி said...

சாமீ! எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் சாமீ! நான் போட்ட பின்னூட்டம் எங்க சாமீ!
ரொம்பவே ரசித்தேன் ரிஷபன் சார்!
மருமகளும் மகளே அல்லவா?

எல் கே said...

/மருமகளும் மகளே அல்லவா//

அனைத்து மருமகள்களும் மகளே ஆனால் அனைத்து மகள்களும் மருமகள்கள் அல்ல

சிவகுமாரன் said...

யதார்த்தமான கதை. என் அப்பத்தாவின் எழுபதாவது வயதில் என் அப்பா அவர்களுக்கு வளையல் செய்து போட்டது நினைவுக்கு வருகிறது. என் அம்மாவும் ஒரு வார்த்தை மறுத்து சொல்லவோ முகம் சுளிக்கவோ இல்லை.

ஹ ர ணி said...

இப்படித்தான் முடியவேண்டும் ரிஷபன். ஆயிரம் ஆண்டுகள் போனாலும் அம்மா என்பது அப்படித்தான். திருத்தவேண்டிய தவறு இல்லை அது. இங்கே பாராட்டப்படவேண்டியது மகனையும் பெருந்தனமையாக நடந்துகொண்ட மருமகளையும்தான். உங்கள் கதைகள் எப்போதும் இந்த சமுகத்தின் ஒளிவீசும் பக்கங்களையே பிரதிபலிக்கின்றன. மனதுக்கு நிறைவாக இருக்கிறது ரிஷபன். ஒரு படைப்பாளியாக என்னென்ன குணங்களைப் பெற்றிருக்கவேண்டுமோ அது அத்தனையும் உங்களுக்கு கைவரப் பெற்றிருக்கிறது. சமுகப்பொறுப்பும் அக்கறையும் வாழ்வின் மீதான நேசிப்புமே இதுபோன்ற கதைகளைத் தர இயலும். உங்களின் நடை எனக்கு எப்போதும் பாந்தமான ஒன்று. அனுபவித்து சுவைக்கிறேன். இன்னும் எழுதுங்கள் ரிஷபன். கொஞ்சம் எழுத்துப்பணிகள் எனவே தாமதம். இனி சூன் இறுதிவரை விடுமுறை என்பதால் தொடர்ந்து வருவேன்.

தக்குடு said...

பொண்களுக்கு வாரிக் குடுக்கர்துல கர்ணன் கூட அம்மாக்கள் கிட்ட நிக்க முடியாது! ..:)

Matangi Mawley said...

என் அம்மா கூட-- ஏதாவது நகை-ய 'இது உன்னுது'... ன்னு நான் சொன்னா- 'ஒன்னுது--என்னுது-ங்காத' ன்னு திட்டுவாள். ஆனா- எனக்கென்னவோ அவளுக்கு போட்டு அழகு பார்க்க தான் பிடிக்கும்... எனக்கு நகை-அவளவு பிடிப்பது கிடையாது... "உன்னையும் ஒத்தி பெத்தாளே"... ன்னு அம்மா சலித்துக் கொள்ளுவாள்... :)

ரொம்பவே அழகான கதை... ஆனா அந்த நகைய- அம்மா கிட்டயே விட்டிருக்கலாம்... கொஞ்சம் வருத்தமா இருந்தது...

நிலாமகள் said...

ய‌தார்த்த‌மான‌ ம‌னித‌ர்க‌ளை வெகு ய‌தார்த்த‌மாக‌ சித்த‌ரிப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர் நீங்க‌ள். என்ன‌ நினைத்து சொன்னீர்க‌ளோ (இந்த‌ அம்மாக்க‌ளைத் திருத்த‌வே முடியாது) அப்ப‌டியே உண‌ர‌ முடிகிற‌து எங்க‌ளால். செல்ல‌த் த‌ட்ட‌லுக்கும் ஓங்கிய‌றைத‌லுக்கும் வித்தியாச‌ம் தெரியாத‌வ‌ர்க‌ளா நாம்?!