December 15, 2011

ஸ்ரீரஞ்சனி

கொஞ்சம் அழகாய் கொஞ்சம் சங்கீதமும் தெரிந்த பெண்ணாய் இருந்தால் அவளையும் மீறி ஒரு அலட்டலும் கம்பீரமும் வந்து விடுகிறது. ஸ்ரீரஞ்சனிக்கும் அதே விதி.

ஷங்கர்நாராயணன் எனக்கு போன் செய்தபோது என் மடிக்கணினியில் பி. சுசீலாவின் பின்னணிக் குரலுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ஆர். ஆர். சபால கச்சேரி.. புதுமுகம்.. ஆனா வாய்ஸ்ல அப்படி ஒரு மிக்ஸிங்க்.. வந்து கேளு.. டோட்டல் சரண்டர்தான்"

இஷ்டத்துக்கு ஏற்றி விட்டான்.

என் சங்கீத ஞானம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. சித்திரை வீதிகளில் வருடா வருடம் ஆராதனை உத்ஸவங்களில் பிரபலங்கள் பிளஸ் புதுமுகங்கள் பெயர்களை ஆளுயர நோட்டிஸ் போர்டில் படித்துவிட்டு, இயன்ற நாட்களில் எட்டு மணிக்கு போகிறவன். பந்தலுக்குள் உட்கார்ந்தால் சுலபமாய் எழுந்து வர முடியாமல் போனதில் நீண்டு கிடக்கிற வீதியில் யார் வீட்டுத் திண்ணையிலாவது அமர்ந்து கேட்பேன். எதிரில் உட்கார்ந்தால் சில சமயம் சேஷ்டைகள் பார்க்க அடக்க இயலாமல் சிரிப்பு வரும் அபாயம் எனக்கு உண்டு.

எனக்கு இன்னார் என்கிற ஆதர்ச கோட்பாடுகள் இல்லை. சூப்பர் சிங்கரில் குழந்தைகள் சரளமாய் கைக்குறிப்புகள் இல்லாமல் முழு பாடலையும் அப்படியே பாடும் சுட்டித்தனத்திற்கு சல்யூட் வைக்கிறவன். இசை.. இசை.. அது போதும். ஆள் எவராய் இருந்தால் என்ன.. வடிவம் எதுவாய் இருந்தால் என்ன..

"வந்து.." என் சால்ஜாப்பு கேட்க ஷங்கர் தயாராய் இல்லை.

"நீ வருகிறாய்.. ஷார்ப்பா ஆறு மணிக்கு" கட் செய்து விட்டான்.

5.59க்கு ஆர்.ஆர் சபா வாசலில் வந்து நின்ற போது ஷங்கர் என்னைப் பேச விடாமல் மாடிக்குக் கொத்திக் கொண்டு போனான்.

"எப்படி வந்தே" என்கிற கேள்வியுடன்.

"புரியல.. என் பைக்ல தான்"

"டோட்டல் டவுனே இன்னிக்கு ஷட் டவுன்.. ரோட்டுல ஒரு பஸ் பார்த்தியா.. "

"எனி பிராப்ளம்"

"தெரியல.. ஆளுக்கொரு தகவல் சொல்றாங்க.. பட் நெட் ரிசல்ட் நோ ட்ராபிக்"

"அப்போ கச்சேரி?"

"மேலே போனாத் தெரியும்"

எண்ணி பத்தே பேர். அரங்கு நிறைய காலி இருக்கைகள். அஞ்சு மணிக்கே வந்து விட்டார்களோ என்னவோ.

செகரட்டரி ஷங்கருக்குத் தெரிந்தவர். அத்தனை டென்ஷனிலும் அரைச் சிரிப்பு சிரித்தார்.

"பவர் கட்டும் சேர்ந்தாச்சு.. " என்றார்.

அப்போதுதான் அதையும் கவனித்தோம்.

"ஜெனரேட்டர்?"

"அதுலயும் ஒரு பிரச்னை.. ஸ்டார்ட் ஆகல"

"சூப்பர்" என்றேன் சிரிக்காமல்.

மணி 6.10. மேடையில் சுருதி சேர்க்கிற ஒலி. ஆச்சர்யமாய் பார்த்தால்.. பக்க வாத்தியங்களுடன் நடுவே அவள். ஸ்ரீரஞ்சனி!

ஆங்காங்கே அசட்டையாய் நின்றவர்கள் பத்து பேரும் ஏதோ வகுப்பு ஆரம்பித்த கவனத்தில் தடதடவென்று வந்து அமர்ந்தார்கள்.

"நல்ல இசைக்கு எதுவும் அவசியம் இல்லை.. லயிச்சு கேட்கிற பத்து பேர்.. பாடறதுக்கு நான்.. போதும் தானே" என்றாள் மைக்கில்லாமல்.

எனக்குள் கிடாரின் தந்தி அதிர்ந்தது. புன்னகையுடன் நானும் ஷங்கரும் அமர்ந்தோம். அத்தனை பேரும் சொல்லி வைத்த மாதிரி எழுந்து முன் வரிசைக்குப் போய்.

வழக்கம் போல விநாயகர்.. அப்புறம் சிம்மேந்திர மத்யமத்தில் "தாழ்சடையும் நீள் முடியும்." பெரியாழ்வார் பாசுரம்.. 'மருகேலரா' ஜெயந்தாஸ்ரீ.. "வசுதேவயனி" கல்யாணி.. "மோஷமுகலதா" சாருமதி .. "மாமவ பட்டாபிராம" மணிரங்கு.. (இதெல்லாம் ஷங்கர் அப்புறம் சொன்னது.. நான் தான் ஆரம்பத்திலேயே எழுந்து வந்து விட்டேனே)

அரை மணிக்குப் பின் என் மொபைல் ஒலித்தது. அமைதியான சபாவில் இடைச்செருகலாய். லேட்டஸ்டாய் வைத்த டியூன். மலையாளப் பாடல்.
ஸ்ரீரஞ்சனி முகம் சுளித்தாள்.

"வில் யூ பிளீஸ் ஸ்விட்ச் ஆப் யுவர் செல்" என்பது போல முறைப்பு.
அழைத்தது என் பாஸ்.

எழுந்து வெளியே வந்து விட்டேன். வேண்டுமென்றே நான் நடந்து போகிறவரை அதன் இசை ஒலித்துக் கொண்டு. பேசி விட்டுத் திரும்பியபோது அடுத்த கீர்த்தனைக்கு ஆயத்தமாய் இருந்தாள்.

என் போதாத காலம் மீண்டும் என் செல்லில் அழைப்பு.

"உங்களால் ஒத்துழைக்க முடியாதா" என்றாள் ஸ்பஷ்டமாய்.

ஷங்கர் என்னை அழுத்தினான். வெளியே வந்து விட்டேன் மறுபடி. ஒரு மணி நேரம் கழித்து ஷங்கர் வந்தான்.

"போடா.. மிஸ் பண்ணிட்ட.. ஷீ ஈஸ் மார்வலஸ்"

அப்புறம் போகும் வழியெல்லாம் என் ஹெல்மெட்டைக் கழற்றி வாங்கிக் கொண்டு அவள் புகழை ராகமாலிகையாய் பாடிக் கொண்டிருந்தான். தேர்ட் கிராஸில் அவனை இறக்கி விடும் வரை ஓயவில்லை.

இறங்கியபிறகும் பைக்கைப் பிடித்துக் கொண்டு ப்ளா.. ப்ளா.

"டேய் வுடுரா.. நான் நைட் சென்னை போகணும்.. தல வரச் சொல்லிட்டான்.." என்று தப்பித்தேன் .

கச்சேரி நடுவில் வந்த இரு அழைப்புகளும் பாஸிடமிருந்துதான்.
'
இப்பவே கிளம்பு.. சென்னைக்கு போ. கிளையண்ட்டை பார்'

ராத்திரி ராக்போர்ட் வரை அவகாசம் கேட்டு வைத்தேன். ஈகியூவில் ஏசி டூ டயரில் கிடைத்தது ரயில்வே நண்பர் உபயத்தில். அடுத்த ஆச்சர்யம் அதே கம்பார்ட்மெண்ட்.. எதிர் சீட்டில் ஸ்ரீரஞ்சனி.. மற்ற இரு சீட்டுகளும் ஆள் இல்லை.
என்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் எந்த குறிப்பும் இல்லை.

என் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் " இன்னிக்கு உங்க கச்சேரி சூப்பர். ஆர். ஆர் சபால" என்றேன்.

"ம்" என்றாள் எனக்குக் கேட்காத குரலில்.

"டு பீ ப்ராங்க்.. எனக்கு அவ்வளவா சங்கீத ஞானம் இல்லை.. ஆனா எனக்கே உங்க வாய்ஸ் பிடிச்சுது"

உண்மையான தொனியில் சொன்னேன்.

"தெரியும்"

"எப்படி" என்றேன் வியப்புடன்.

"அதான் பார்த்தேனே.. மொபைல் அட்டெண்ட் பண்ணவே நேரம் சரியா இருந்துச்சே.. "

வித்தியாசமானவள்தான். என்னைக் கவனித்திருக்கிறாள்.

"ஸாரி.. ஸாரி.. கொஞ்சம் குழந்தைத் தனமாவே நடந்துகிட்டேன்.. "

"ஒரு அட்வைஸ்.. ரசனை இல்லாம கச்சேரிக்கு போகாதீங்க.. உங்களால மத்தவங்களுக்கும் தொந்திரவு" என்றாள் என்னை சீண்டி விடும் தொனியில்.

" அப்படியா.. எனக்குத் தெரிஞ்சு சில பெரிய பாடகிகள் எல்லாம் அவங்க கணவர் பேச்சைக் கேட்டுத்தான் அடங்கிப் போயிருக்காங்க.. இன் ஃபாக்ட் சில பேரோட ஹஸ்பண்ட் சங்கீத ரசனையே இல்லாதவங்க"

இதற்கும் அவள் சொன்னதற்கும் என்ன சம்பந்தம்.. என்பது போல பார்த்தாள்.

என் அம்மாவுக்கும் இப்படித்தான் ஆச்சு

என் குரல் பிசிறியது. அதை ஏன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை. அரியலூரைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. எங்கள் தனிமை.. என் அலுவலக அயற்சி.. ஸ்ரீரஞ்சனியின் இயல்பான பேச்சு. எதுவோ என்னைத் தூண்டியிருக்க வேண்டும்.

அவள் 'சொல்' என்று கேட்கவில்லை. சொல்லிக் கொண்டே போனேன்.

'அம்மாவுக்கு படிப்பு வரவில்லை. கேள்வி ஞானத்திலேயே பாடுவாள். தாத்தாவின் செல்லம். அவர்தான் பிடிவாதமாய் தஞ்சாவூருக்குக் குடி போனார். சொந்த வீடு, நிலம் எல்லாம் விட்டு விட்டு. அம்மா சங்கீதம் கற்றுக் கொண்டது எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. தாத்தாவின் கோபத்திற்கு பயந்தார்கள். எங்கள் கிராமத்து கோவிலில் அம்மா உத்ஸவத்தின் போது பாடினாள். அதுதான் முதலும் கடைசியுமான கச்சேரி. வீட்டுக்குள் பாடிக் கொண்டிருப்பாளாம். பாட்டி சிரமப்பட்டு அடுப்பூதி சமையல் செய்த போது அம்மா முற்றத்தில் ராக ஆலாபனையுடன்..'

ஸ்ரீரஞ்சனியின் முகத்தில் இப்போது கதை கேட்கும் சுவாரசியம் ததும்பியது.

'அந்த உத்ஸவத்தில்தான் அப்பா அம்மாவைப் பார்த்திருக்கிறார். அண்டர்லைன் இட்.. பார்த்தார்.. கேட்கவில்லை! அம்மாவின் அழகு ஜொலித்துக் கொண்டிருந்தது.. அப்பாவுக்கு எதுவுமே தனக்குத்தான் என்கிற பேராசை.. தாத்தாவை என்ன சொல்லி மயக்கினாரோ.. அம்மாவைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டு விட்டார். ஃபர்ஸ்ட் நைட்டில் ஒரே கண்டிஷன்.. கச்சேரி பாடக் கூடாது..'

'குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு.. பாட்டு கேட்டதுண்டா.. அது அம்மாவைப் பத்திதான்..அப்பா இல்லாத நேரத்தில் அம்மா பாடிக் கொண்டிருப்பாள். போறாத நேரம்.. அப்படி ஒரு சமயம் பாடும்போது யாரோ ஒருத்தர்.. அப்பாவைப் பார்க்க வந்தவர் கேட்டுத் தொலைத்து விட்டார்.. அப்பாவிடம் புகழ்ந்து பேச.. வீட்டிலும் பாடாதே என்று அடுத்த கட்டளை.'

ஸ்ரீரஞ்சனி இப்போது முழுவதுமாய் கவனம்.

'நான் பிறந்தபோது எனக்கு தாலாட்டு கிடையாது.. அழகில் நான் அம்மாவைக் கொண்டிருப்பதாய் சொன்னார்கள்.. விவரம் தெரிந்தபோது அப்பாவின் மேல் கோபம் வந்தது. சங்கீதத்தின் மேல் எரிச்சல் வந்தது. அம்மா என் மனசை மாற்றினாள்.. அப்பாவின் கோபத்துக்கு சங்கீதம் என்ன பண்ணும்.. கொஞ்சம் லேட்டாய் இசையில் லயிக்க ஆரம்பித்தேன்.. என் டென்ஷனுக்கு அங்கே நிம்மதி கிடைத்தது.. இப்போதும் எனக்கு ராகம், தாளம் தெரியாது.. அப்பா தவறிப் போனார்.. இப்பவாச்சும் பாடும்மா.. என்றேன்.. முடியலடா.. என்கிறாள்..'

அழுதிருக்க வேண்டும். ஸ்ரீரஞ்சனி என்னைக் கரிசனமாய்ப் பார்த்தாள்.

'ஸாரி.. என் கதையைச் சொல்லி அனாவசியமாய் உங்கள் தூக்கத்தைக் கெடுத்து விட்டேன்'

சேச்சே.. அதெல்லாம் இல்லை

ம்

நான் உங்கம்மாவைப் பார்க்கணும். ஆசையா இருக்கு

.. என்னைப் பத்தி புகார் சொல்லவா

ஆமா. இப்படி சங்கீதம் தெரியாத மக்கா வளர்த்துட்டீங்களேன்னு

ஸோ.. வாட்.. தெரிஞ்ச ஒருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டா போச்சு

ரியலி..

யெஸ்

அம்மா இப்பவும் பாடுவதில்லை. ஆனால் கச்சேரிக்கு வருகிறாள். முன் வரிசையில் இருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பியதும் அம்மாவும் ஸ்ரீரஞ்சனியும் அன்றைய கச்சேரி பற்றி பேசுகிறார்கள். அம்மா சிலாகித்த.. 'இந்த இடத்துல உன்னோட நிரவல் கிளாஸ்'.. 'இல்லம்மா.. எனக்கு இன்னும் முழு திருப்தி வரல..' நடுங்கும் குரலில் அம்மா அந்த வரியைப் பாடிக் காட்ட.. ஸ்ரீரஞ்சனி அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு 'நீங்க விட்டிருக்க கூடாதும்மா'

யார் சொன்னது.. சங்கீதம் தெரியாமல்.. ரசனை இல்லாமல் பாடகியுடன் குடித்தனம் பண்ண முடியாது என்று.

இதோ நானும் ஸ்ரீரஞ்சனியும் அம்மாவும் இருக்கிறோமே.. ஆனந்தமாய்.


(கல்கி - சீஸன் ஸ்பெஷல் - 18.12.2011 பிரசுரம்)



24 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கல்கியில் படித்தேன் ரிஷபன்..அருமையான கதை..
ஆர்.ஆர்,சபாவில் நான் நாடகம் போட்ட நாட்கள் நினைவிற்கு வந்தன.
வாழ்த்துகள்

iniyavan said...

சார், அப்படியே உங்கள் கைகளைப் பிடித்து என் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

பால கணேஷ் said...

ஸ்ரீ ரஞ்சனி ராகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த ராகத்தின் இனிமை கதையிலும் இருந்தது ரிஷபன் ஸார். மென்மையாக மனதை வருடிச் சென்றது. பல நினைவுகளை மீட்டியது. இந்தாங்க... பிடியுங்க இந்த பெரிய பொக்கேவை!

கே. பி. ஜனா... said...

மோகன ராகம் போல அழகான கதை. 'அம்மா இப்பவும் பாடுவதில்லை' என்ற தலைப்பு இதைவிட பொருத்தமா இருக்குமோ?

சி.பி.செந்தில்குமார் said...

தாளம் போட வைக்கும் பதிவு

Shobha said...

Ver Nice

ஷைலஜா said...

ஆஹா அருமை என்பதை மீறிய ஏதோ ஒரு ரசனை நிறைக்கிறது மனசை.ஜனா சொல்வதுபோல தலைப்பு அப்படி இருந்திருக்கலாம். கல்கில வந்திருக்கா வாங்கிப்படிக்கிறேன் வாழ்த்துகள் இசைமாதத்திற்கு இசைவான கதை ரிஷபன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஸ்ரீரஞ்சனி ராகம் விஸ்தாரமாய் ஆலாபனை நடந்தது, மனத்துள் இந்த கதை படித்து!

கோமதி அரசு said...

சங்கீத சீஸன் கதை, மிக அற்புதமாய் இருக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Respected & Dear Sir,

கல்கி 18.12.2011 பக்கம் 20-23 இல் படித்து விட்டு, ஸ்ரீரஞ்சனி ஐப் பத்திரப்படுத்திக் கொண்டேன்

சூப்பரா எழுதியுள்ளீர்கள் சார்.

மிகவும் ரஸித்து ருசித்துப்படித்தேன், சார்.

மின் தடை,
நோ டிராபிக்,
நோ மைக்,
நோ கூட்டம்.
ஜெனெரேட்டரும் வேலைசெய்யாதது
ஆனாலும் கச்சேரி நடந்தது.
சங்கீத ஞான சூன்யம் [என்னைப்போலவே ஒரு கதாபாத்திரம்]
செல்போன் இடையூறுகள்.
எந்தக் கலைஞருக்கும் ஏற்படும் கோபம்
என எல்லாவற்றையும் வெகு அழகாக யதார்த்தமாகக் கொண்டு வந்து விட்டீர்கள்.

பாடகி பெயரும் “ஸ்ரீரஞ்சனி” என அழகாக ஒரு ராகம் போலவே கொண்டுவந்துள்ளது மிகச்சிறப்பு.

ஒரே ரயிலில் கூட்டமில்லாத ஏ.ஸி. கோச்சில் பிரபல பாடகியுடன் இந்த ஆளின் பயணம், அது
நல்ல திருப்பு முனை இந்தக் கதையில்.

அவளை ஒப்புக்காகப் பாராட்டி விட்டு, பிறகு அவள் ஞாபகமாகச் செல் போன் பற்றிச் சொன்னதில் சற்றே அசடு வழியும் கதாபாத்திரம் வெகு அருமை.

பிறகு அதை சமாளிக்கும் விதமாக அவளுக்கு இவன் கதை சொன்னது நல்லதொரு சுவாரஸ்யத்தின் உச்ச கட்டம்.

அம்மாவை சந்திக்க வைத்தது. பிறகு அவளையே மனைவியாக்கிக் கொண்டது! சூப்பர் சார். மிகவும் ரஸிக்கும்படியான அருமையான கதை.

படித்து முடித்ததும் அவ்வளவு ஒரு திருப்தி எனக்கு.
எழுதிய தங்கள் பொற்கரங்களுக்கு என் அன்பு முத்தங்கள்.

சூப்பர் கதை சார். நெஞ்சில் நிற்கும் அழகான அருமையான கதை.
இதுபோல என் மானஸீக குருநாதராகிய தங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.

பிரியமுள்ள
vgk

manichudar blogspot.com said...

ரசமான ராக ஆலாபனை போல ஸ்ரீரஞ்சனி.

அப்பாதுரை said...

ஆகா!

ஹ ர ணி said...

கல்கியில் படித்துவிட்டேன். பயணத்தில் படித்தேன். நடை ரொம்ப சுகமாக இருக்கிறது ரிஷபன். படிக்கப் படிக்கப் பாந்தமம் மனசுக்கு. இசைவாய் ஒரு கவிதை கதையல்ல.

arasan said...

தென்றல் வருடுவதாய் ஒரு மெல்லிய கதை ...
அற்புத படைப்புக்கும் , அதனை அங்கீகரித்த கல்கி இதழுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

நிலாமகள் said...

இசை.. அது போதும். ஆள் எவராய் இருந்தால் என்ன.. வடிவம் எதுவாய் இருந்தால் என்ன..//

க‌தை எப்ப‌வும் போல் திருப்தியாய்! ப‌சிநேர‌த்தில் கிடைத்த‌ அறுசுவை விருந்து! திரும்ப‌ ப‌டிக்க‌ணும். திரும்ப‌த் திரும்ப‌! சாப்பாடென்றால் செரித்த‌பின் தான் ம‌றுப‌டி உண்ண‌ முடியும். எழுத்தில் அந்த‌ இடையூறு இல்லையே...!

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீ ரஞ்சனி ராகம் மோகனமாய் மனம் நிறைத்து தென்றலாய் தவழ்ந்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்...

மாதேவி said...

ஸ்ரீ ரஞ்சனியுடன் கலந்தோம். அருமை.

சிவகுமாரன் said...

அருமை.
கல்கியிலா?
வாழ்த்துக்கள் ரிஷபன் சார்.

Rekha raghavan said...

ஏ கிளாஸ் கதை! எழுதிய உங்கள் கைகளுக்கு என் அன்பு முத்தங்கள்.

நெய்வேலி பாரதிக்குமார் said...

உங்கள் உரையாடல் பாணி வாசிக்க வைக்கிறது கதாபாத்திரங்களின் மிகையற்ற உண்மைத்தன்மை ரசிக்க வைக்கிறது

Yaathoramani.blogspot.com said...

அருமையான கதை
முடிவும் அருமை
சிறப்பாக வாழ எந்த ஞானம் தான் எதுக்கு
புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் போதுமே
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

Shakthiprabha (Prabha Sridhar) said...

ரொம்ப ரசிச்சேன். கண்களில் நீர், ஆனந்தத்தில் தான் என்று நினைக்கிறேன்....பலரின் வாழ்கையும் இது தான்....இருந்தாலும் தனியாகவேனும் பாடச் சொல்லி ரசித்திருக்கலாம் அப்பா...என்னவோ... :)
வாழ்த்துக்கள் !

R. Gopi said...

சூப்பர்.

\\"தாள் சடையும்\\

"தாழ் சடையும்" என்று நினைவு.