புரட்டாசி மாதம் வந்தாலே 'கோவிந்தா' கோஷம் தான். திருப்பதிக்கு நிகராய் ஸ்ரீரங்கமும் களை கட்டி விடும்.
மெயின் கோவிலை விடுங்கள். அது எல்லோருக்கும் தெரியும். அவ்வளவாய் தெரியாத இன்னொரு தகவல்.
பிரசன்னா பள்ளிக் கூடம் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதன் இடது பக்கம் எங்கள் பழைய (குடியிருந்த) வீடு. வலது பக்கம் ஒருஅரிசி மில். அதைத் தாண்டி ஒரு வீடு.
இப்போது அந்தப் பக்கம் கிட்டத்தட்ட 90 வீடுகள் உள்ள பன்மாடிக் குடியிருப்பு வந்து விட்டது. க்ஷ வீட்டில் அந்த நாளில் 'அப்புச்சா' என்று ஒருவர். அவர் குடும்பம் குடியிருந்தது.
ஸ்ரீநிவாசர் உபாசனை அவருக்கு. புரட்டாசி கடைசி சனிக்கிழமை திண்டு போல மிகப் பெரிய பந்தம் கொளுத்திக் கொண்டு எட்டு, ஒன்பது மணிக்கு மேல் கிளம்புவார். அதற்கு முந்தைய தினங்களில் விசேஷ பூஜைகள் நடக்கும்.
அவர் நான்கு வீதிகளையும் சுற்றிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவார். கிளம்பும்போது சாதா நடை. தெருவில் இறங்கியதும் அப்படியே ஜிவ்வென்று பறக்கிற (அ) ஓடுகிற நடை.
ஆங்காங்கே அவரிடம் தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி அருள் வாக்கு கேட்பார்கள். 'பெண் கல்யாணம்'.. 'மகன் படிப்பு/வேலை' இத்யாதி.
தீ பெரிதாய் ஜொலிக்க அவர் தெருவில் வரும் போது லேசாய் பயமும் ஒருவித ஆர்வமும் வரும். அவர் பாசிட்டிவாய் சொல்லிவிட்டால் கேட்டவர் முகத்தில் தெரியும் ஆனந்தம் சொல்லில் அடங்காது.
'அவர் பந்தம் எடுத்துண்டு கெளம்பும் போது கேட்கணும்.. அப்பதான் ஆவேசத்துல இருப்பார்' என்று கூட்டம் அவர் வீட்டை மறித்து நிற்கும்.
இத்தனைக்கும் ரொம்ப சின்ன வீடு. பத்துப் பேர் உள்ளே போனாலே தாங்காமல் அழும். மற்ற நாட்களில் வெறிச்சோடி கிடக்கும் வீடு புரட்டாசியின் வருகைக்கு வருடம் முழுக்கக் காத்திருக்கிறதோ என்று தோன்றும். (இப்போது அவர் வம்சத்தில் ஒருவர் பந்தம் எடுப்பதாய்த் தகவல். ஆனால் வேறொரு வீதியில் இருந்து.)
ரொம்பவும் தீவிரமாய் அலசிப் பார்த்தால் மனிதரின் தேவைகள் அப்படி ஒன்றும் பிரமாதமாய் இல்லை. பணம், சொத்து என்கிற தேடல்கள் வெளிப்பார்வைக்குத்தான்.
நான் சொல்வது சராசரி மனிதருக்கு. ஏதோ ஒரு வேலை.. கொஞ்சம் பணம்.. கொஞ்சம் மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. காவிரிக்கரை தகனம்.. முடிந்தபோது உள்ளே மூலஸ்தானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் (யாரும் விரட்டாமல்) கடைக்கண் பார்வை.. சொர்க்கவாசல் மிதித்தல்.. இப்படி ஒரு சின்ன லிஸ்ட்டில் அடங்கி விடும். 108 ல் சவாரி செய்யாமல் 'என்னப்பனே ரெங்கா' என்றதும் துளசி தீர்த்தம் பாதி உள்ளே போய் புன்சிரிப்பு மாறாமல் டாட்டா காட்டும் பக்குவம் வந்தால் போதும் என்பதே அபிலாஷை.
என் சின்ன வயசில் (வயசு போட மாட்டேன்.. என்னை விட படிப்பவருக்குத்தான் அதில் ஏகப்பட்ட குழப்பம் வருது) அப்புச்சாவைப் பார்க்கக் காத்திருக்கும் ஜனங்களைப் பார்க்கும்போது 'அவரால் இப்படி இவ்வளவு பேரின் பிரச்னைகளைத் தீர்க்க இயலும்' என்று உள்ளூர உதறும்.
ஆனால் 'உன் பேத்திக்கு நல்ல இடம் அமையும்' என்று அவர் சொன்னதும் புளகாங்கிதமாகிற பாட்டி அடுத்தவருடம் வரை தாக்குப் பிடிப்பாரா.. தெரியாது. அந்த நிமிட நிம்மதியை அப்புச்சாவால் சுலபமாய்த் தர முடிந்தது.
வேலைக்கு போனதும் 'எப்படி கதை எழுதறது.. அதை எப்படி பத்திரிகைக்கு அனுப்பறது' என்கிற ஆலோசனைக்காக வெல்பேர் டிபார்ட்மெண்ட்டில் வேலை பார்த்த நண்பர் அழைத்தார்.
போனதும் என்னைத் தனியே ஒரு அறைக்கு அழைத்துப் போய் கதவைத் தாளிட்டார். மிரண்டு போய் 'அப்படி எதுவும் ரகசியம் இல்லை' என்றேன்.
"தொந்திரவு இல்லாம பேசலாம். பாஸ்கிட்ட கவுன்சலிங்க் கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன்" என்றார்.
நான் பார்த்த படிப்பில்லாத அப்புச்சா தான் முதல் "ஆற்றுப்படுத்துபவர்" (வாழ்க தமிழ்)
19 comments:
அந்த குடியிருப்பில் மொத்தம் 99 வீடுகள்....
கொஞ்சம் மனைவி [?], கொஞ்சம் குழந்தைகள்.. :))
அப்புச்சா, நல்ல நினைவுகள்... தினம் தினம் ஸ்ரீரங்கம் கதை போட்டு அசத்தறீங்க!
”அப்புச்சா” அச்சா
அனுபவம் தான்.
தமிழ்மணம்:2 யூடான்ஸ்:3 இண்ட்லி:4
vgk
நானும் இந்த மாதிரி உபாசகர்களை பார்த்திருக்கிறேன்.கூட்டம் அலை மோதும்.சீட்டு எழுதி பழம், முடிந்த அளவு தக்ஷினையோடு வைப்பார்கள்.எல்லோருமே அன்றாட கஷ்ட ஜீவனத்தில் உழலும் சாதாரணப்பட்ட மக்கள்.
ஏகப்பட்ட குறைகள்,எதிர்பார்ப்புகள்.
இந்த அப்புசா மாதிரி உள்ள உபாசகர்களின் அருள் வாக்கு அந்த சமயத்தில் பாட்டிக்கு கிடைத்த மாதிரி ஒரு தாற்காலிக நிம்மதி தரும். . ஒருவேளை பலித்தால் நல்லதே.
படிக்க சுவாரஸ்யமாக இருந்தது
புரட்டாசிக்காக அப்புச்சாவுமே காத்திருந்தாரோ..?!! ஸ்ரீரங்க ஞாபகங்கள்னு தொடராகவே போடலாம் போல இருக்கே. ரொம்ப சுவாரஸ்யம்.
எப்படியோ நீங்களும் சின்ன அப்புச்சா ஆகிட்டீங்க! எப்ப எங்களுக்கு சொல்லித் தரப் போறீங்க?! :-)
moderator.... ஆற்றுப்படுத்துபவர்..... :-))
அப்புச்சா.... அச்சா!!! :-)
கேரளக் கோயில்களில் காணும் “ வெளிச்சப்பாடுகள்” பொன்றவரா இந்த அப்புச்சா.?
அருமை ரிஷபன்.
அருமையான பதிவு.
நன்றி ஐயா.
ஸ்ரீரங்க கதையா?? அப்புச்சா சூப்பர். தொடருங்கள்...
// 108 ல் சவாரி செய்யாமல் 'என்னப்பனே ரெங்கா' என்றதும் துளசி தீர்த்தம் பாதி உள்ளே போய் புன்சிரிப்பு மாறாமல் டாட்டா காட்டும் பக்குவம் வந்தால் போதும் என்பதே அபிலாஷை.//
எனக்குள் எழும் ஆசையும் அதுதான்.
அப்புச்சா தரும் ஆறுதல் நன்றாக இருக்கிறது.
ஸ்ரீரங்க நினைவுகள் எல்லாமே அற்புதம்.
ரிஷபன்...
புரண்டு படுக்கும் வாழ்க்கை புத்தகத்தின் வெளியீடுபோல ஒரு கலந்துரையாடல் வைத்திருக்கிறேன். தஞ்சை பெரியகோயில் நடராசர் சன்னதியில் முக்கியமான பத்து பேர் மட்டும் இயலுமாயின் வருக. கருத்துரைகள் வழங்குக. நாள். 15.12.2011 மாலை நம் வசதிபோல.
என் வாழ்த்துகள் ஹரணி. முடிந்தால் நிச்சயம் தகவல் தெரிவித்து வருகிறேன்.
நல்ல பதிவு!நண்பரே!
கண் காணாத அப்புச்சா
மனக் கண்முன்னே தோன்றுகிறார்!
புலவர் சா இராமாநுசம்
த ம ஓ 5
புலவர் சா இராமாநுசம்
//அவர் நான்கு வீதிகளையும் சுற்றிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவார். கிளம்பும்போது சாதா நடை. தெருவில் இறங்கியதும் அப்படியே ஜிவ்வென்று பறக்கிற (அ) ஓடுகிற நடை.//
உங்கள் 'நடை' மட்டுமென்ன, அப்படியே ஜிவ்வென்று பறக்கிற மாதிரியே...
//நான் சொல்வது சராசரி மனிதருக்கு. ஏதோ ஒரு வேலை.. கொஞ்சம் பணம்.. கொஞ்சம் மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. காவிரிக்கரை தகனம்.. முடிந்தபோது உள்ளே மூலஸ்தானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் (யாரும் விரட்டாமல்) கடைக்கண் பார்வை.. சொர்க்கவாசல் மிதித்தல்.. இப்படி ஒரு சின்ன லிஸ்ட்டில் அடங்கி விடும். 108 ல் சவாரி செய்யாமல் 'என்னப்பனே ரெங்கா' என்றதும் துளசி தீர்த்தம் பாதி உள்ளே போய் புன்சிரிப்பு மாறாமல் டாட்டா காட்டும் பக்குவம் வந்தால் போதும் என்பதே அபிலாஷை.//
ஆஹா!
சில வாக்கியங்கள் மிக சிறியதாகவும், சில வாக்கியங்கள் நீளமாகவும் நீங்கள் சொன்ன விதம் ரசித்தேன்
நானும் பால்யத்துக்குப் போய் வந்தேன். அப்புச்சா மாமாவாத்துக்கு அந்தப் பக்க ஸ்டோரில் (அதுதான் இன்றைய பன்மாடி குடியிருப்பு!)இருந்த் காலம். அவர் நெற்றிமுழுதும் நிரம்பி வழியும் திருமண், ஸ்ரீசூர்ணமும் அந்த ‘திண்டு’ சைஸ் பந்தமும் கண்முன்னே!
ப்ரசன்னா பள்ளிக்கூட பதிவை தேடி படிக்கவேண்டும். அதன் திறப்புவிழாவுக்கு வந்த முதல்வர் காமராஜரின் எளிமை இன்னும் வியக்க வைக்கிறது. என்ன, 2,3 போலீஸ் இருந்திருப்பார்களா? ராயரின் றாயபாளய நிலயம் இப்போது களையிழந்து காணப்படுகிறதே, யாரும் இருக்கிறார்களா? அவர்கள் வீட்டு கொலு பற்றி எழுதலாமே!
-ஜெ.
Post a Comment