”அப்பா” டிராயிங் மாஸ்டர். அவரிடம் நானும் ஞானப்பிரகாசமும் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளப் போனோம். (இப்படி வீணை, புல்லாங்குழல் என்று சகலமும் முயற்சித்து எதுவும் வரவில்லை உருப்படியாய் என்பது வேறு விஷயம்)
ரொம்ப நாள் கழிச்சு ’அப்பா’ என் வீட்டுக்கு வந்தார். இதற்குள் நான் கீழச்சித்திரைவீதி சித்திரைத்தேர் விட்டு மேற்கே வந்தாச்சு. எப்படி அடரஸ் கண்டுபிடிச்சாரோ.. படியேறி வந்தார். பல வருஷ இடைவெளிக்குப் பின் மீட் பண்றோம்.
இளைத்திருந்தார். ஏற்கெனவே ஒல்லி தான். பையனும் இதே லைன்ல ஆர்வம்.
‘படம் வரையறான்.. இப்ப குணசீலம் பெருமாளை ஸ்கெட்ச் எடுத்துருக்கான்’ என்றார்.
அவருடன் போய்விட்டேன். கோடுகளாய் இன்னும் முழுமை பெறாமல் பிரசன்ன வெங்கடாசலபதி.
“சிருங்கேரி பெரியவா.. படம் வரைஞ்சிருக்கேன்.. “ என்றான் பையன்.
அதுதான் மேலே..
அப்பா ஜெகன்னாதன். பையன் பாலாஜி. ’அப்பா’ வரைந்த ஸ்ரீரெங்கநாதர் இப்போதும் நிறைய வீடுகளில்.
ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப்போதும்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாச்சியார் அத்யயன உத்ஸவம் இப்போது. பெருமாளுக்கு பகல் பத்து, ராப்பத்து போல தாயாருக்கு ஐந்து, ஐந்து நாட்கள் உதசவம். இப்போது ரா-அஞ்சு.
காணக் கண்கோடி வேண்டும்.. ஸ்ரீபாதந்தாங்கிகள் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வரும் நடை அழகை தரிசிக்க.
சேர்த்தி மண்டபத்தில் தாயார் .. திருவந்திகாப்பு (தீபாரத்தி) ஆனதும் திரை. கிளம்ப மனசில்லாமல் உட்கார்ந்திருந்தோம்.
பெருமாள் பிரசாதம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க ஸ்ரீபண்டாரம் (பிரசாத விற்பனை இடம்) போனேன்.
வடை சூடாக இருந்தது. வாங்கும்போது ஒருவர் -காவி சட்டை, காவி வேட்டி- கன்னட சாயல் பேச்சு - முகம் பிரகாசமாய்.. வந்தார்.
‘தோடிசி ப்ரசாதம்’ என்றார்.
‘நோ.. நோ’ என்றார் விற்பனையில் இருந்த இருவரில் ஒரு பெரியவர். அதாவது ப்ரீயா தர முடியாதென்று. (முதலில் தமிழில் தரமாட்டேன்.’ என்று சொல்லி அப்புறம் தமிழ் தெரியாது என்று புரிந்து.. நோ.. நோ..
கேட்டவரோ ‘இதுல என்ன கஷ்டம்.. ஒரு ஸ்பூன் ஜஸ்ட் பிரசாதம்’ என்கிற தொனியில் மீண்டும் வேண்டினார்.
எனக்கு மனசாகவில்லை. பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த இன்னொரு சிறு வயசுக் காரரிடம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை இரண்டும் ஒவ்வொரு கரண்டி தரச் சொல்லி ஒரு இலையில் வைத்து அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டு அதற்கும் பணம் எடுத்துக் கொள்ளச் சொன்னேன்.
நான் வாங்கிய வடைக்கு மட்டும் பணம் எடுத்துக் கொண்டு அந்த பிரசாதங்களுக்கு பணம் வேண்டாம் என்று ...
சைகையில் சொன்னார் அந்த இளைஞர் ! வாய் பேச முடியாதவர் என்று புரிந்தது.
இறைவன் விளையாட்டுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை!
21 comments:
ஓவியம் மிக அருமை....
தோடிசி பிரசாத்... - மனது கனத்தது...
நல்லதோர் பகிர்வுக்கு நன்றி ரிஷபன் சார்....
மிகவும் அருமையான சம்பவங்கள் சார்.
சிருங்கேரி பெரியவா படம் வரைந்தது நீங்களா சார்? பாராட்டுக்கள். அது அருமையாகவே வரையப்பட்டுள்ளது.
//’அப்பா’ வரைந்த ஸ்ரீரெங்கநாதர் இப்போதும் நிறைய வீடுகளில்.
ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப்போதும்.//
அடடா! அருமையான சொல்லாடல்.
கடைசி வரிகள் மனதைக்கலங்கச் செய்தாலும், சம்பவம் அந்த சர்க்கரைப்பொங்கல்+புளியோதரை போல ருசியாக சொல்லப்பட்டுள்ளது, உங்களின் தனித்திறமைக்குச் சான்றாக!
பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.
பிரியமுள்ள வீ .... ஜீ [vgk]
ஜகன்னாதன் மாமாவை நன்கு தெரியுமே ஓவியம் அல்ல எல்லாம் காவியம் அவர் விரல்களில் என்பார் என் அப்பா/ஓவியம் வீணை புல்லாங்குழல் எல்லாம் கற்றுகொண்டிருக்கீங்களா க்ரேட் ரிஷபன்!
கடசில அந்த பிரசாத சம்பவம் ரொம்ப நெகிழ்ச்சி.
பெரியவா படம் அற்புதம்.
பிரசாத சம்பவம் மனதை நெகிழ வைத்தது.
அருமை... நண்பரே! ப்ரசாதம் போலவே சுவைத்தது.தங்கள் பகிர்வும்!.அந்த ஜகன்னாதன் E.R.HIGH SCHOOL லில் ட்ராயிங் மாஸ்டரா இருந்தவரா?
காவியமாய் பெரியவா படம்
இவ்வளவு தத்ரூபமாய் வரைவதற்கு திறமை மட்டும் போதாது
அனுக்கிரகமும் வேண்டும்
பிரசாதம் குறித்து சொல்லிப் போகிற விஷயமும்
அதைச் சொல்லிப் போன விதமும் மனம்தொட்டுப் போனது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
Tha.ma 2
//ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி
அந்த ஜகன்னாதன் E.R.HIGH SCHOOL லில் ட்ராயிங் மாஸ்டரா இருந்தவரா?//
ஆமாம்.
மனசு இழைந்து உருகுகிறது ரிஷபன். ஜீவனைத் தரிசனம் செய்கிறேன். மனசோடு மனசு பகிர்ந்ததுபோன்ற பகிர்வு.
அருமையான ஓவியம்.
நல்ல பதிவு. மனம் நெகிழ்ந்தது.
நன்றி ஐயா.
அருமை. சற்று உங்கள் கை வண்ணம் சேர்த்து சிறுகதை ஆக்கியிருக்கலாமோ?
நெகிழ்ச்சியான சம்பவம்.
அருமை
பெரியவா படம் தத்ரூபமாக உள்ளது. நல்ல பகிர்வு சார்! :-)
ஒவியம் அருமையாக இருக்கு சார்...
பிரசாத விஷயம் மனதை கனக்க வைத்தது....
ஓவியம் மிக அருமை....
சிருங்கேரி பெரியவர் படம் தத்ரூபமாய் இருக்கிறது. பாலாஜி அருமையாய் வரைந்து இருக்கிறார்.
தோடிசி பிரசாத்//
இறைவன் உங்கள் மூலம் அவருக்கு கொடுத்து விட்டார் பிரசாதத்தை.
பார்வை ஊடுருவுகிறது மனதை.
எப்போதும் உங்கள் எழுத்துக்கள் செய்வதை இப்போது கோடுகள்.
:) பிடித்திருந்தது...
உங்கள் ஓவியமும்.
மனித மனங்களின் கோணங்களும்.
ஓவியம் அதற்கான ஆட்களைத் தேடி உயிர்த்திருக்கிறது எப்போதும்.//
இறைவன் விளையாட்டுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை!//
சம்பவமென்ன கதையென்ன... உங்கள் கைவண்ணம் அழுத்தமாகப் பதித்து விடுகிறது மனசில். எங்களுக்கான 'ப்ரசாத'மன்றோ!
ரங்கமன்னாரின் அறிதுயில் போல் தங்கள் திறன்களின் பிரதாபமற்ற தன்னடக்கம்!
Post a Comment