January 25, 2012

அத்யயன உதஸவம்-2இன்றோடு ராப்பத்து தாயாருக்கு பூர்த்தி ஆனது.

சேர்த்தி மண்டபத்தில் தான் தரிசனம். போய் உட்கார்ந்ததும் ஆழ்வார் பாசுரங்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் அரையர் ஸ்வாமி..

வெளியூர்.. உள்ளூர் என்று ஸேவார்த்திகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் அமர்ந்து பாசுரம் கேட்டுக் கோண்டிருந்தார்கள்.

சற்று தள்ளி தான் அமர்ந்திருந்தேன். எங்கிருந்தோ ஒரு குழந்தை தன் கையில் விளையாட்டு பொருள ஒன்றை வைத்துக் கொண்டு கால் தரையில் சரியாகப் பாவாத நடையில் வந்தது.

என்னைப் பார்த்ததும் அதற்கு என்ன தோன்றியதோ.. அருகில் வந்து நின்றது.

அதன் விரல்களைப் பிடித்துக் கொண்டேன். மடியில் அமர வைத்தேன். ஏதேதோ கேட்டுப் பார்த்தேன்.

பதில் மையமாய் சிரிப்புத்தான்.

பத்து நிமிடங்கள் என் கொஞ்சலை அனுபவித்து விட்டு பின்னால் நின்ற அதன் பாட்டியிடம் போனது.

‘மாமாக்கு உன் பேரைச் சொல்லு.. தேஜஸ்ரீ.. சொல்லு “

பிராகாரம் வலம் வந்து வில்வ மரம் எதிரே (ஸ்தல விருட்சம்) அமர்ந்த போது கரெண்ட் போனது. திரும்ப ஜெனெரேட்டர் உபயத்தில் விளக்கு எரிவதற்குள் செல் கேமிராவில் பிடித்த போட்டோ..இரு அகல் விளக்குகளின் ஒளி..

****************************


உதடுகளைப் பார்த்ததும்
ஊதித் தள்ளி விடுகிறது
புல்லாங்குழல்.

*****************************


விளையாடியபின்
வீட்டுக்குத் திரும்பும் நேரம்.
பொறுக்கிய கூழாங்கற்களை
ஆற்றுக்குள்
வீசி எறிந்தாள் ஜ்வல்யா.
‘அதுவும் வீட்டுக்கு
போவட்டும்’
13 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனுபவமும் இரண்டு குட்டிக் கவிதைகளும் அருமை....

வை.கோபாலகிருஷ்ணன் said...

[தேஜஸ்ரீ] நிகழ்வு மனநெகிழ்வாக உள்ளது.

புல்லாங்குழல் கவிதையும்
கூழாங்கல் கவிதையும் வெகு அருமையான அழகான மாறுபட்ட சிந்தனைகளில் ஜொலிக்கின்றன.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

நிலாமகள் said...

இருளில் ஒளிரும் அக‌லின் சுட‌ர் அற்புத‌ம். ப‌ட‌ம் பிடிப்ப‌து எளிதாக்க‌ப்ப‌ட்ட‌து இதுபோன்ற‌ த‌ருண‌ங்க‌ளுக்காக‌வே.

குழ‌ந்தைக‌ளின் சிந்த‌னைப் போக்கின் வீர்ய‌ம் எப்போதும் பிர‌ம்மிக்க‌ச் செய்யும்ப‌டியே. 'அதுவும் வீட்டுக்குப் போவ‌ட்டும்' என்ன‌வொரு காருண்ய‌ம்! அத‌னால்தான் குழ‌ந்தையும் தெய்வ‌மும் ஒன்றென்கிறோமோ...!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடேங்கப்பா........வ்!!!!

ஹ ர ணி said...

‘அதுவும் வீட்டுக்கு
போவட்டும்’

என்ன மனுஷன் நீங்கள்? இதுதான் ரிஷபன் ஞானம். குழந்தை ஞானம். குழந்தை வடிவில் தெய்வ ஞானம். உயிரற்றதை உயிராகப் பார்ப்பது. கல்லை அன்பாக..விளையாட்டுத் தோழமையாக...அவரவர் இல்லத்திற்கு அன்பிற்காகத் திரும்புவோம்.. வீட்டுக்குப் போவது மறுபடியும் சந்திக்கலாம்.. நாளை சந்திப்போம் என்கிற நம்பிக்கையை மௌனமாக உரைத்தபடி.. இந்தக் கவிதை வரிகளைக் கொண்டு இந்த இரண்டு வரிகளைக் கொண்டு ஒரு பெரிய ஆய்வு நிகழ்த்திவிடலாம்.

ஹ ர ணி said...

.
‘அதுவும் வீட்டுக்கு
போவட்டும்’

என்ன மனுஷன் நீங்கள்? ஞானம் இதுதான் ரிஷபன். குழந்தை விளையாட்டுத் தோழமையாகப் பார்ததது..அதற்கும் வீடு உண்டு என்று சந்தேகமிலலாமல் எண்ணியது..போய்ட்டு வா என்று வழியனுப்பியது.. அவரவர் அன்பில் திளைக்கலாம் நாளை மறுபடியும் சந்திக்கலாம்.. எத்தனை நம்பிக்கை.. மனதை அசைக்கிற கவிதை.. அசத்திவிட்டீர்கள்.

அமைதிச்சாரல் said...

கூழாங்கல் அருமை.. குழந்தைகளின் உலகமே தனிதானே.

RAMVI said...

உங்க அனுபவமும்,இரண்டு கவிதைகளும் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

பிராகாரம் வலம் வந்து வில்வ மரம் எதிரே (ஸ்தல விருட்சம்) அமர்ந்த போது/

எனக்கும் மிகப் பிடித்த இடம்..

மானசீகமாக ஸ்தல வில்வ விருட்சத்தின் அடியில் அமரவைத்தது பகிர்வு.. நன்றி..

அகல் விளகின் சுடர் இதயம் நிறைத்தது..

இராஜராஜேஸ்வரி said...

‘அதுவும் வீட்டுக்குபோவட்டும்’//

குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று..

ஷைலஜா said...

நினைவுகளை மறுபடி ஸ்ரீரங்கத்தில் கொண்டு தள்ளிவிடுகிறது உங்களின் ஒவ்வொரு பதிவும்.
குழந்தையின் மனசை அழகாய் படம்பிடித்த கவிதை அருமை

பத்மா said...

குழந்தையின் தொடல், தீண்டல் சிலிர்க்க வைக்கும் அனுபவம்..நான் பல முறை வங்கியின் டென்ஷனான நேரங்களை அவை லகுவாக்குவதை உணர்ந்திருக்கிறேன் .

கவிதைகளும் குழந்தைகளை ஒற்றி ..அந்த மனத்தை தக்க வைத்துக் கொண்டால் எத்தனை இன்பம் ?
உங்கள் பேர் சொல்லுங்க ரிஷபன் சார் :)))

கோவை2தில்லி said...

குழந்தை பற்றிய அனுபவமும், இரண்டு கவிதைகளும் அருமை சார்...