February 04, 2012

கடிதம்

நள்ளிரவில் விழித்துக் கொண்டு கடிதம் எழுதுகிறவனைப் பார்த்திருக்கிறீர்களா? குறைந்தபட்சம் சந்தித்தது உண்டா? இருக்க முடியாது. மனிதன் ஆறறிவு படைத்த பிராணி. அன்பிற்கும் பாசத்திற்கும் சுலபமாய் வசப்படுகிற பிராணி.

எதிர் அறையில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஹாஸ்டல் விதிப்படி இந்நேரம் விளக்கெரிந்தால் தவறு. வார்டன் தூங்கிப் போயிருந்தால் கூட அவர் கவனத்திற்குப் போய் விடும். நாளை, முதல் வேலையாக தண்டிப்புத் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வருவார். ஆனாலும் விழித்திருந்தான். சாட்சியாய்ப் பாடப் புத்தகம். நடந்தே இராத பக்கம் பிரிந்து கிடந்தது. விழித்துக் கொண்டு வந்து வார்டன் பார்த்தாலும் இந்தக் கோடை இரவில் சிலிர்த்துப் போகக் கூடும். 'அட்வான்ஸ்டு' சப்ஜெக்டில் இத்தனை அட்வான்ஸாய்ப் படிக்கிறவனைப் பெருமிதமாய்ப் பார்த்து ஸ்பெஷல் டீ கூடப் போட்டுத் தரலாம். பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் காட்டலாம்.

கலாவை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நள்ளிரவிலும் அந்த ஆராய்ச்சிதான். விரிவாக ஒரு கடிதம் எழுதி அதன் மூலமாவது அவள் புரிந்து கொள்ளக்கூடும் என்று நினைத்தான்.

மேஜையின் ஒருபுறம் எழுதிக் குவித்த நோட்டுகள். மூன்று செமஸ்டர்களில் நடத்தப்பட்ட வெவ்வேறு பாடங்கள். சரளமாய் கை வைத்த மாத்திரத்தில் அருவி போல கொட்டிய எழுத்துகள். ஆனால் கடிதம் மட்டும் நினைத்தபடி எழுத முடியவில்லை. பேனா திறந்தே கிடந்தது. எழுத எடுத்த வைத்த பேப்பரில் எந்த சுவடுமின்றி.. அவன் மனது போல வெறித்திருந்தது.

"பேச வேணாம்"
"எ.... ன்ன"
"பேச வேணாம்".

ஓர் ஆள் மட்டுமே நிற்கிற அளவு மிகச்சிறிதான டெலிபோன் கூண்டுக்குள் வெளியே காவலாய் அமர்ந்திருக்கிற பூத் கிழவரைத் தவிர வேறு ஆளரவமற்ற இடத்தில் ரிசீவரில் கேட்கிற குரலுக்கு என்ன பதில் தரலாம்?

கலா மிரட்டிப் பேசியதில்லை இதுவரை. குரலில் சிநேகம் அப்பியிருக்கும். சில நேரம் வசதியான கூண்டு கிட்டாத தருணங்களில் நடைபாதை, திறந்த டெலிபோன்களில் பேச்சின் வார்த்தைகள் துல்லியமாய்க் கேட்காமல், இன்னொரு தரம் விசாரித்தால் கூட பொறுமை இழக்காமல் சொல்லுகிறவள். இப்போதும் மிரட்டவில்லை. ஆனால் குரலில் எத்தனை சுலபமாய் தொற்றிக் கொண்டுவிட்ட அன்னியம். சிநேகமற்றுப் போன மாதிரி! எதிர் வீட்டுப் பெண்மணி வந்து கதவைத் திறந்து அவசர ஃபோனில் பதில் சொன்ன மாதிரி, "பேச வேணாம்."

சத்தியமா? என்ற யோசனையிலேயே நேரம் ஓடியது. பதில் தரவேண்டும் என்கிற அவசரத்தில் படபடப்பு கூடியது. வார்த்தைகள் வசப்படாத திணறலில் உடம்பு நடுங்கியது.

"என்ன திடீர்னு?"

"வச்சிரட்டுமா"

காத்திராமல் வைத்து விட்டாள். புத்திக்குப் பிறகுதான் புரிந்தது. அவசரமாய் இன்னொரு தரம் டயல் செய்தான். எங்கோ மணி அடித்துக் கொண்டிருந்தது. அழுகிற குழந்தையைப் போல எடுத்து ஆறுதல் படுத் த எவரும் முன்வராத நிலையில்.

கிழவரின் கவனம் வேறெங்கோ இருப்பது போல கூண்டுக்குள் இருப்பவன் மீது படர்ந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. எத்தனை பேரைப் பார்த்திருப்பார். அவர் நோக்கம் எல்லாம் சிவப்பில் ஒளிர்கிற மீட்டர் ரீடிங் அதிகபட அவர் வாழ்கையில் சந்தோஷம் கூடும். பேசு... ஏன் பேசுவதை நிறுத்தி விட்டாய்?- பேசு. மானசீக ஜபம்தான் அவருடையது.

இன்னொரு தரம் முயற்சி செய்யலாமா? என்று யோசித்து மனந்தளர்ந்து வெளியில் வந்தான்.

"ஒரு ருபாய் இருபத்தாறு பைசா"

இத்தனை நாட்களில் மிகக் குறைவான பில். கலா இல்லாத நேரங்களில் அவள் அப்பாவுடன் கூட இரண்டொரு வார்த்தைகள் பேசிய பிறகுதான் ஃபோனை வைத்திருக்கிறான். ஏழெட்டு ரூபாய் பில் வரும்வரை.

ஒண்ணரை ரூபாய் மனிதர்களும் பூத் கிழவருக்கு வேண்டியிருக்கிறது. லைனே கிடைக்காமல் போகிறவனைவிட இவன் மேல்.

மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்தான். மனசுக்குள் வழி நெடுக பேசிக் கொண்டு. எந்த மீட்டரும் அளவெடுக்காத தொலைபேசியில், சகாவின் விசாரணைக்கு அரை மனதாய்ப் பதில். பசியற்ற அறைக்குள் முடங்கி சகா திரும்புவதற்குள் தூங்கிப் போய் நள்ளிரவில் திடுமென்று விழித்துக் கடிதம் ஒரு வார்த்தையும் எழுதப்படாமல்.

இப்போதே கிளம்பி ஊருக்குப் போய் விடலாமா? வாட்ச்மென் அறியாமல் சுவர் எறிக் குதித்தாவது. தெளிவற்ற ஆலோசனைகளை மனசு வழங்கியது. இன்னொரு தரம் ஃபோன் செய்து. இந்த நடுநிசியிலா...? அத்தனை பெரும் ஆழ்ந்த உறக்கத்தில். அமைதியைக் கலைத்து டெலிபோன் மணி வித்யாவை அனுப்பி கலாவுடன் பேசச் சொல்லலாமா? என்னவென்று சொல்வது? எப்படி புரிந்து கொள்வாள்?

கலாவின் சுபாவத்திற்கு மூன்றாம் மனிதரின் தலையீடு நிச்சயம் எதிர்மறை விளைவைத்தானே தரும். கலாவுக்குப் பிடிக்காது. பிடிக்கும் என்ற பட்டியல் கைவசம் இருந்தது. இத்தனை கால பழக்கத்தில் சேகரித்தது. கலாவுடன் பேசும், பேசாத நேரங்களில் கண் எதிரே பட்டியல் விரிந்து கிடக்கும். புதுப்புது விஷயங்களை அதில் சேர்த்தும், ஏற்கெனவே தவறாய்ச் சேர்த்த விஷயங்களை நீக்கியும், சரி செய்தும் அவனின் ஒரு பகுதி கவனம் செலவழியும்.

"பேசறப்ப முழுசா கவனிக்க மாட்டீங்களா?"

"கவனிக்கிறேன். நேத்து திடீர்னு மழை பெருசாக் கொட்டினது. வீட்டு படிக்கட்டு மேல மழை பெருசாக் கொட்டினது. வீட்டு வாசல்ல படிக்கட்டு மேல தண்ணி வந்தது. மழைன்னா உனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் பார்த்தா ஒரு செடி மழை வேகம் தாங்காம சரிஞ்சு கிடந்தது... நீ தவிச்சுப் போனது".

முந்தைய நிமிடம் வரை அவள் பேசியதை ரீப்ளே செய்ததும் அவள் மறுபடியும் தன் கருத்தை வலியுறுத்தியதும். "நீங்க என்னதான் சமாளிச்சாலும் உங்க முழு கவனம் என் பேச்சில் இல்லை. அதுதான் நிஜம்".

நிஜம்தான். பேச்சில் இல்லை. உன்மீதுதான். ஆனால் சொல்ல முடியாது. சொல்லத் தோன்றவில்லை. சில விஷயங்களை ஆழ்மனதில் பத்திரப்படுத்தத் தோன்றுகிறது. வெகு சிநேகமான மனிதரிடம் கூடப் பகிராமல். சொல்லக் கூடாது என்றில்லை. சொல்லத் தோன்றாமல் இன்னொரு பயமும். வெளிப்படுத்திய மறுநிமிடம் அது தன் சுவாரசியத்தை இழந்து விடுகிறது. மனசுக்குள் புதைந்து கிடைக்கிறவரை அதன் வீர்யம் குறைவதில்லை.சொல்வது மட்டுமில்லை. நினைப்பதில் கூட, எந்த ஒரு ஆழ்மனது விஷயத்தையும் பூரணமாய் மனசுக்குள் கூட விரித்துப் பார்க்க அனுமதி இல்லை. இலேசாய் எதேனும் ஒரு பக்கம் பார்த்துப் பிற பகுதிகளை அனுமானித்து சந்தோஷப்படலாம். மனசுக்குள் எடுத்து முழுசாய்ப் பார்த்தால் கூடப் போச்சு.

இந்த விளையாட்டை கலாவுடன் இருக்கிற, இல்லாத நேரங்களில் எல்லாம் விளையாடுகிறான். அதனால்தான் இப்படி மாட்டிக் கொள்ள நேர்கிறது. அவளுக்கு எதுவும் விளையாட்டில்லை. நூறு சதவீதத் தீவிரம். எதுவானாலும், நேசிப்பைச் சொல்வதானாலும். "பேசாதே" என்று கட்டளையிட்டாலும்...

எழுந்து விளக்கை அணைத்து விட்டான். இரவு முழுக்க விழித்திருந்தாலும் ஒரு வரி கூட எழுதப் போவதில்லை. என்ன எழுதுவது என்ற தீர்மானமற்று பேனாவை திறந்தால் இப்படித்தான். ஏற்கெனவே அச்சிட்ட பாடப்பகுதி போல எழுத அத்தனை சுலபமில்லை. துக்கமும் தடங்கல் செய்ய போகிறது. ஹாஸ்டல் எதிரே பூத் திறக்க எட்டு மணி ஆகும். அவனுக்கு முன்பே காத்திருக்கிற பிற மாணவர்கள், ஆசிரியர்கள். ஏன் சில சமயம் வார்டன் கூட!

விளக்கு அணைத்துப் படுத்த மறு நிமிடம் தடங்கலே இல்லாமல் ஓர் அற்புதமான கடிதம் மனசில் ஓட ஆரம்பித்தது. "எழுந்திருக்காதே" என்று யாரோ அன்பாய் எச்சரித்தார்கள். "கடிதம் முழுவதும் கேள்" வார்த்தைகளில் முழுவதுமாய் அவன் மனத்தைச் சொல்லி... கலாவுக்கு அவன் எழுத நினைத்த கடிதத்தைவிட உசத்தியாய்... நேர்த்தியாய்... சரளமாய்... மனத்தின் பக்கங்கள் சரசரவென விரிந்து... குண்டு குண்டாய்க் கையெழுத்தில்..... இதுநாள் வரை யாருமே எழுதியிராத கடிதம். கலாவை முன்னிறுத்திப் பேசிக் கொண்டு போன தொனியில்.

காலை பத்து மணிக்கு பூத்தின் கதவு மூடிக் கொண்டு, எதிர்முனையில் கலாவின் குரலுக்காக அவன் காத்திருந்த நேரம்... நள்ளிரவில் எழுதிய கடிதம் ஒரு வார்த்தை கூட நினைவில் இல்லை.

ஆனால் எதிர்முனையில் மணி அடிப்பது நின்று குரல் கேட்டது. பிரியமாய்... இனிமையை முறித்துப் போடாத விதமாய்... எழுதப்படாத கடிதம் அதற்கான நபரிடம் சேர்ந்து தன் விளைவை நிகழ்த்தி விட்டதைப் போல.

"என்ன ஸ்ரீ?"

சுருக்கமாய் அவன் பெயரை அவளுக்கேயான சுவாதீனத்தில் சொன்னபோது, நேற்று ஏன் அப்படிப் பேசினாள் என்று கேட்கத் தோன்றவில்லை அவனுக்கு.

(கல்கி - பிரசுரம்)

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமயான கதை சார். அழகழகான வரிகள்.

மிகவும் ரஸித்தவை:

//கலா மிரட்டிப் பேசியதில்லை இதுவரை. குரலில் சிநேகம் அப்பியிருக்கும். சில நேரம் வசதியான கூண்டு கிட்டாத தருணங்களில் நடைபாதை, திறந்த டெலிபோன்களில் பேச்சின் வார்த்தைகள் துல்லியமாய்க் கேட்காமல், இன்னொரு தரம் விசாரித்தால் கூட பொறுமை இழக்காமல் சொல்லுகிறவள்.//

//ஆனால் எதிர்முனையில் மணி அடிப்பது நின்று குரல் கேட்டது. பிரியமாய்... இனிமையை முறித்துப் போடாத விதமாய்... எழுதப்படாத கடிதம் அதற்கான நபரிடம் சேர்ந்து தன் விளைவை நிகழ்த்தி விட்டதைப் போல.//

CS. Mohan Kumar said...

அருமை. கதை சொல்லாமல் சொல்லும் விஷயங்கள் நிறைய. குறிப்பாய் கோபமாய் இருக்கும் போது கடிதம் எழுதாமல் இருப்பது நல்லது

சார்.. உங்களுக்கு இந்த மாதிரி ரொமாண்டிக் அனுபவம் எல்லாம் வேற உண்டா? :)))

வெங்கட் நாகராஜ் said...

பல நேரங்களில் மனசுக்குள் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் கோர்வையாக விழுந்தாலும், கடிதத்தில் கொண்டு வர முடிவதில்லை......

நல்ல கதை. கல்கியில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துகள்....

G.M Balasubramaniam said...

பேச வேண்டாம் என்ற சொல் கேட்டு மனம் பேசிய அத்தனை சிந்தனைகளும் அருமை. சிறு கதையின் இன்னொரு பரிமாணம். வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

சொல்லாமல் தேக்கப்படும் சுவாரசியம், எழுதாதக் கடிதத்திலும் நிகழ்ந்துவிட்ட அற்புதம்! மனம் அறிந்தவர்க்கு மறுப்பும் வெறுப்பும் கணநேரம்தான். ஊடலின் தவிப்பும், அது தவிர்க்கப்பட்டவிதமும் மெய்சிலிர்க்கவைக்கிறது. மிக அருமையான தருணங்களை அழகானக் கதையாக்கியிருக்கிறீர்கள். பாராட்டுகள் ரிஷபன் சார்.

கோமதி அரசு said...

பிரியமாய்... இனிமையை முறித்துப் போடாத விதமாய்... எழுதப்படாத கடிதம் அதற்கான நபரிடம் சேர்ந்து தன் விளைவை நிகழ்த்தி விட்டதைப் போல.//

பிரியமானவர்களின் மனதோடு பேசிய பின் கடிதம் எதற்கு!
அதன் வலிமை மறுநாள் ஸ்ரீ’ இனிமையான அழைப்பு.
அருமையான கதை.
அன்பின் வலிமையை கூறுகிறது.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

attahaaaaasam....!!

Shakthiprabha (Prabha Sridhar) said...

பல பல இடங்கள் ரொம்ப ரொம்ப ரசித்தேன். முடித்த விதம் உட்பட.

//சொல்லத் தோன்றாமல் இன்னொரு பயமும். வெளிப்படுத்திய மறுநிமிடம் அது தன் சுவாரசியத்தை இழந்து விடுகிறது. மனசுக்குள் புதைந்து கிடைக்கிறவரை அதன் வீர்யம் குறைவதில்லை.//

இந்த கதை முழுவதும் ஆண் பெண் அணுகுமுறையில் வித்தியாசத்தை மெல்லியதாய் கோடிட்டு இயல்பாய் எடுத்துக்காட்டுகிறது.

RAMA RAVI (RAMVI) said...

சிறப்பாக இருக்கு, கதை.

எழுதப்படாத கடிதம் நிகழ்திய விளைவு அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட...அருமை..எனக்கு என்னமோ,
‘ மன விகாரம் களைந்து..” ஞாபகம் வந்தது..

ADHI VENKAT said...

அழகான கதை சார்....

மனதில் எவ்வளவோ கோர்வையாய், அழகாய் தோன்றினாலும்.....
எழுதும் போதோ, பேசும் போதோ ஒன்றுமே நினைவில் இருக்காது தான்.....

கல்கியில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

தங்கள் எழுத்தின் மேல் நான் வைத்துள்ள மதிப்பின் சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன். என் தளத்துக்கு வருகை தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

http://minnalvarigal.blogspot.in/2012/02/blog-post_08.html

vasan said...

துயிலும் போது அவர‌வ‌ர் எண்ண‌ அலைக‌ள் மிதந்து ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்து பேசி தீராத‌ சில‌ பிர‌ச்னைக‌ளை தீர்க்கும் என "சில்வா ம‌னக் க‌ட்டுப்பாட்டு முறை" என்ற‌ வ‌ழிமுறை கூறுகிற‌து.

ஆகவே ப‌டுக்கும் முன் அந்த‌ பிர‌ச்னைக்கு தீர்வு வேண்டும் எனத் தீர்மானித்து (வேண்டி) விட்டு பாதி கிளாஸ் த‌ண்ணீர் குடித்து விட்டு மீதியை அருகில் வைத்து தூங்கிவிட‌ வேண்டும். காலையில் அந்த‌ பிர்ச்னைக்கு ஒரு தீர்வு ந‌ம‌க்கே தோன்றும் என்கிற‌து அது.

இந்த‌ உங்க‌ளின் அற்புத‌மான க‌தை ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு க‌ன்னிமாராவில் அதைக் க‌ற்ற‌ நினைவுக‌ளை கிளறிவிட்ட‌து.
Ref: "The Silva mind Control Method" Author Jose Silva. Published by - POCKET BOOKS.

ஹ ர ணி said...

அன்புள்ள...

உறரணியின் பணிவான வணக்கங்கள்.

லீப்ஸ்டர் பிளர்க்

இது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும். இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே?) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.

பகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.

நான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.

1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.

2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.

நன்றிகள்.


எனக்குப் பிடித்தவை ஏழு.

1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன
அப்பா.

2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.

3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும
எப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி
என் மகன்.

4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க
நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த
தனிமை
.
5. கடவுள் வழிபாடு,

6.. குழந்தைகள்.

7. தமிழ்மொழியின் இலக்கியங்கள்.பகிர்தல் நேரம்


1, எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்
இல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்
என் நண்பன்...உடன்பிறவா சகோதரன்...உணர்வான
எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன்....
நண்பன் மதுமிதா - க்கு..

2. இடைவிடாமல்...துவண்டுவிடாமல்...அப்படி நாங்கள்
துவள்கிற தருணங்களில் உரையாடி,,தன்னுடைய
பன்முகத் திறனால் பளிச்சென்று,,,உறவுகளை
மேன்மையுறச் செய்யும் படைப்பாளி..
என் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...

3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்
மனதிற்குப் பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை
களைப் பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்
அவர்களுக்கு...

4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்
தேர்வும்,, மனதிற்கு இதமும்....ஆழமும் என
இயங்கிக் கொண்டிருக்கும் சைக்கிள் மிருணாவிற்கு...

5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
வகையான சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
அவர்களுக்கு...


அனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.

நிலாமகள் said...

எழுதப்படாத கடிதம் அதற்கான நபரிடம் சேர்ந்து தன் விளைவை நிகழ்த்தி விட்டதைப் போல.//

க‌தைத் தொட‌க்க‌ம் முத‌லே ஒவ்வொரு வ‌ரியும் வார்த்தைக‌ளும் வெகு ஆழ‌ம்! ம‌றுப‌டி ம‌றுப‌டி ப‌டித்தும் அவ்வுண‌ர்வுக‌ளை அடைந்து மீள்கின்ற‌ வீர்ய‌ம். அனுப‌வித்து... அனுப‌விக்க‌ எழுத‌ப்ப‌ட்ட‌தொரு ப‌டைப்பு. ஒவ்வோர் சொல்லும் செதுக்க‌லாய்... நிதான‌மாய் சீர‌ணிக்க‌ ஆட்ப‌ட்டு அமைதியாய் துயிலுமோர் விருந்துக்குப் பிந்தைய‌ ம‌னோநிலை.


//சார்.. உங்களுக்கு இந்த மாதிரி ரொமாண்டிக் அனுபவம் எல்லாம் வேற உண்டா? :)))//

ந‌ட்பிலும் இத்த‌கைய‌ பூ ம‌ல‌ரும் தானே...!

'சில்வா ம‌ன‌க்க‌ட்டுப்பாட்டு முறை' ப‌ற்றி அறிய‌த் த‌ந்த‌ வாச‌ன் ஐயாவுக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி!

நிலாமகள் said...

கலா இல்லாத நேரங்களில் அவள் அப்பாவுடன் கூட இரண்டொரு வார்த்தைகள் பேசிய பிறகுதான் ஃபோனை வைத்திருக்கிறான். ஏழெட்டு ரூபாய் பில் வரும்வரை.//

:-)

க‌தாபாத்திர‌ங்க‌ள் ஒவ்வொருவ‌ரின் ம‌னோநிலையையும் துல்லிய‌மாக‌ அறிய‌த் த‌ந்த‌து சிற‌ப்பு. முக்கிய‌மாக‌ பூத் கிழ‌வ‌ரின் ம‌ன‌வோட்ட‌ம் ப‌ற்றிய‌ அவ‌தானிப்பு வெகு க‌ச்சித‌ம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறுகதை சூப்பர்!