May 12, 2012

காதல் காதல் காதல் - 3

எனக்கு இப்படி நிகழும் என்று யாராவது போன மாதம் ஜோசியம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். சில நேரங்களில் உண்மை கற்பனையை விட சுவாரசியமானது.
எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒருவர் தனக்கு பழனி பஞ்சாமிர்தம் வேண்டும் என்று மெயில் அனுப்பியிருந்தார். எனக்கோ என்ன செய்வது என்று முதலில் புலப்படவில்லை. அப்புறம் தெரிந்தவர் ஒருவர் அவரது உறவினர் பழனியில் இருப்பதாகவும் அவரிடம் சொல்லி அனுப்பச் சொல்வதாகவும் உறுதி தந்தார்.
கடைசியில் அவர் உறவினர் செய்த ஏற்பாடு என்ன தெரியுமா? பழனியிலிருந்து வரும் அரசு போக்குவரத்து பேருந்தில் ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்பி விட்டு என்னைப் பெற்றுக் கொள்ள சொல்லி விட்டார். வேறுவழி? நானும் போனேன். பேருந்து எண் சொல்லியிருந்தார். வண்டி வந்து நின்றதும் அருகில் போனேன். 'பஞ்சாமிர்தம்' என்றதும் பையைத் தூக்கி கொடுத்தார். 'தேங்க்ஸ்.. ஆங் உங்க பேர்?' என்றேன் ஓட்டுநரிடம். 'முருகானந்தம்'
சியாமளா என்னுடன் ஒட்டிக் கொண்டதும் இதைப் போல ஒரு அதிசயம்தான். உளவியல் ரீதியாக இதற்குக் காரணங்கள் கற்பிக்கலாம். போன ஜன்ம விட்ட குறை தொட்ட குறையாகக் கூட இருக்கலாம்.
எதுவானால் என்ன.. நேசிப்பதும், நேசிக்கப் படுவதும் வாழ்வின் அர்த்தம் கூட்டுகிறது.
இந்த மூன்று மாதங்களில் எங்கள் மாடர்னைசேஷன் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சியாமளாவுடனான என் நட்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. வித்யா இரண்டாம் பட்சம் ஆகிற அளவுக்கு!
ஒரு நாள் வித்யா எனக்கு ஃபோன் செய்து தனக்கு வீடு திரும்ப தாமதம் ஆகும் அதுவரை சியாமளாவுடன் இருக்க முடியுமா என்று கேட்டாள். எனக்கென்ன.. ஒரு பிரச்னையும் இல்லை. பிறகு அதுவே வாரம் இரண்டு முறையாகிப் போனது. சியாமளா என்னுடன் மனரீதியாக ஒட்டிக் கொள்ள உதவியாகிப்போனது.
நடுவே என் வீட்டிற்கும் அழைத்துப் போனேன். அம்மாவுக்கும் ஏனோ சியாமளாவைப் பிடித்து விட்டது. அவளைத் திரும்ப கொண்டு போய் விட்டு விட்டு வந்ததும் அம்மா வாசலிலேயே நின்றிருந்தது புரிந்தது.
'என்னம்மா'
'மனசு சரியில்லைடா'
'புரியலை'
'சியாமளாவை பார்த்தால் கஷ்டமா இருக்குடா'
'அவளுக்குத்தான் அவ அம்மா இருக்காளே.. இப்ப நாமும் இருக்கோமே'
'இல்லைடா..'
அம்மா எதையோ மறைத்தாள். அவளின் உள்ளுணர்வு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். அதை என்னுடன் பகிர மனசில்லை அம்மாவுக்கு.
மேலே ஃபால்ஸ் ஷீலிங் போட்டாகி விட்டது. டக்டிங் ஆரம்பித்து விட்டது. ஏசி யூனிட்கள் வந்து சேர்ந்து விட்டன. தரைத்தளம் புதுப்பித்து டைல்ஸ் சில பேருக்குப் பிடிக்கவில்லை.
'வழுக்குது. கிரிப் கிடைக்கலை' என்றார்கள்.
'பழகிரும்'
என்ன அற்புதமான வார்த்தை. 'பழகிரும்' எதுவுமே பழகி விடுகிறது காலப் போக்கில். துயரமும் சரி, இன்பமும் சரி. நிகழ்கிற நேரம் கிடைக்கிற அதிர்வுகள் தாற்காலிகம் மட்டுமே.
தற்செயலாகத்தான் அன்றைய தினம் இரண்டாவது மாடிக்குப் போனேன். மணி ஆறு. இந்நேரம் வித்யா வீட்டுக்குப் போயிருக்கலாம் என்கிற நினைப்பில் அவள் இருக்கையை எட்டிப் பார்த்தேன்.
வேலையில் மூழ்கிப் போயிருந்தாள்.
'வீட்டுக்குப் போகலியா'
'ம்ம்..' நிமிர்ந்தவள் நேரம் பார்த்தாள்.
'அடடா'
'என்ன'
'சியாமளா தனியா இருப்பா.. இன்னிக்கு அந்தம்மா வேற வரலே'
'டோண்ட் வொர்ரி.. நான் கிளம்பிட்டேன்.. நேரா அங்கே போறேன்.. உங்களுக்கு இன்னும் லேட் ஆகுமா'
'ம்.. ஒன் ஹவராவது ஆகும்..'
'ஓக்கே.. லீவ் இட் வித் மீ'
ஃபோன் செய்து விட்டேன் சியாமளிக்கு. அம்மாவுக்கும். வர லேட்டாகுமென்று.
சியாமளி ஒரு பெயிண்டிங்கில் ஆழ்ந்திருந்தாள்.
'பிளீஸ்.. இப்ப பார்க்காதீங்க அங்கிள். முடிச்சப்புறம் பார்க்கலாம்'
'ஓக்கே.. டீ வேணுமா'
தலையாட்டினாள். கிச்சனுக்குள் போனேன். தேநீர் வைத்தது கூடத் தெரியாமல் உதட்டைத் துருத்திக் கொண்டு சியாமளி வரைந்து கொண்டிருந்தாள்.
கைக்குக் கிடைத்த புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனது தெரியவில்லை.
சட்டென்று விழித்து வாட்சைப் பார்த்தால் மணி எட்டரை. ஏன் இன்னும் வித்யாவைக் காணோம்?
சியாமளி டீயைக் குடிக்கவில்லை. ஏடு தட்டியிருந்தது. அவளும் அப்படியே சோபாவில் சரிந்திருந்தாள். மிகவும் மெனக்கெட்டு வரைந்ததின் அலுப்பு.
சியாமளியின் கண்கள் மூடி ஆழ்ந்த சுவாசம். மெல்ல எட்டிப் பார்த்தேன். ஆ.. அப்படியே வித்யா. தத்ரூபமாய். கண்சிமிட்டியது ஓவியம் என்று கூடச் சொல்லலாம். அத்தனை உயிரோட்டம்.
என் மூச்சுக் காற்று பட்டு ஓவியம் கலைந்து விடப் போகிறது என்கிற பதட்டம் வந்த மாதிரி வேகமாய் நகர்ந்ததில் எதன் மேலோ மோதிக் கொண்டேன். கீழே விழுந்த சத்தத்தில் சியாமளி விழித்துக் கொண்டு என்னைப் பார்த்தாள்.
'ஸாரி..'
அதே நேரம் செல்போன் கிணுகிணுத்தது.
'காலிங் ஃப்ரம் சூர்யா ஹாஸ்பிடல்ஸ்.. நீங்க யார் பேசறது'
சொன்னேன். உள்மனதில் எதுவோ முனக ஆரம்பித்தது.
'ஸாரி ஸார்.. உடனே வரமுடியுமா.. ஒரு பேஷண்ட்.. வித்யா.. மெட் வித் அன் ஆக்சிடெண்ட்.. அவங்க செல்லுல உங்க நம்பர் பார்த்துட்டு கால் பண்ணோம்'
'சீரியஸா ஒண்ணும் இல்லியே'
'பிளீஸ்.. உடனே நேர்ல வாங்க' டிஸ்கனெக்ட் ஆகி விட்டது.
'என்ன அங்கிள்' என்றாள் சியாமளா.
எப்படி சொல்லப் போகிறேன்..

வித்யாவுடன் ஒரு வாரம் ஹாஸ்பிடலிலேயே இருந்தோம். அம்மா முதலில் வரவே சம்மதிக்கவில்லை. பிறகு அரைமனதாய் வந்தாள்.
'என்னால அழுகையைக் கட்டுப்படுத்த முடியாதுடா..'
ஆனால் துளிக்கூட அழாமல் நின்றாள். வித்யா அம்மாவின் முகம் பார்த்து ஏதோ சொல்ல முயன்றது போல் இருந்தது. தலையில் கட்டு. முகத்தில் ஆக்சிஜன். கையில் டியூப். அசையக் கூட முடியாத நிலை.
அம்மா வித்யாவின் கையைப் பற்றி அழுத்தியதில் இருவருக்கும் பேச்சு அவசியப்படவில்லை.
நானும் சியாமளியும் சேர்ந்தே உட்கார்ந்திருந்தோம். பசித்தால் சாப்பிடப் போவோம். அதுவும் என் வற்புறுத்தலால்.
'நீயும் வீக் ஆயிட்டா.. அப்புறம் அம்மாவை எப்படிக் கவனிக்கிறது'
கொறித்தோம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அழுதது இருவருக்குமே தெரிந்ததில் இன்னும் மனசளவில் ஒட்டிக் கொண்டோம். நர்ஸ் வெளியே வரும்போதெல்லாம் எழுந்து அவள் எங்களைக் கவனிக்காத மாதிரி போனதும் தடுமாறினோம்.
'வி வில் ட்ரை அவர் பெஸ்ட்' டாக்டர் மேலே கையைக் காட்டினார்.
வித்யா டூ வீலரில்தான் வந்திருக்கிறாள். எதிரில் வந்த லாரிக்காரனுக்கு என்ன அவசரமோ.. நால்வழிப்பாதை வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பயங்கர மேடாக புதுச் சாலைக்கான மண் குவிப்பு. இந்தப் பக்கம் நெரிசலான டிராபிக்கில் பெயர்ந்து போன பழைய சாலை. ஒதுங்க முயன்று முடியாமல் தடுமாறிய நேரம் எதிரில் வந்த வேன் கிடைத்த இடைவெளியில் முன்னேறப் பார்த்திருக்கிறது. வித்யா வீசியெறியப்பட்ட நேரம் அதிர்ஷ்டவசமாய் ஒரு ஆம்புலன்ஸ் அந்த வழியே வந்திருக்கிறது.
சூர்யா ஹாஸ்பிடல்ஸின் ஆம்புலன்ஸ்.
எங்கள் ஆபீஸ்காரர்கள் வந்து பார்த்துப் போனார்கள். என் பாஸ் அருகில் வந்து உச்சு கொட்டினார்.
'நடுவுல ஒரு சேஞ்சுக்கு ஆபீஸ் வந்துட்டு போயேன்'
'ஸாரி ' என்றேன்.
'ஓக்கே..ஓக்கே' போய்விட்டார்.
சியாமளி என் மடியில் தூங்கினாள். இப்போது எந்த உறுத்தலும் இல்லை.
வித்யா எங்களுடன் பேசினாள். டாக்டரின் அனுமதியுடன். அவருக்கும் வேறுவழி இருக்கவில்லை. எங்களின் முகம் பார்க்க மறுத்து வித்யாவுடன் பேச அனுமதித்தபோதே புரிந்து விட்டது.
இருவரும் ஒரே பக்கமாய் நின்றோம் வித்யாவின் எதிரில்.
'ஸாரி..' என்றாள் வித்யா என்னிடம்.
'சேச்சே'
'சியாம்.. ஸாரிடா'
'அம்மா.. ரொம்ப வலிக்குதா'
'இனிமே வலி இருக்காதுடா'
'அ..ம்மா'
'அங்கிள் மேல ஏன் இவ்வளவு பாசமா இருக்குன்னு புரியலேன்னியே.. '
'அ..ம்மா'
'பெரிய பொறுப்பையே தரேன்..'
'ஷீ ஈஸ் மைன்'
என் குரலில் அப்பட்டமான உறுதி இருந்தது.
சியாமளியின் கையைப் பற்றிக் கொள்ளுமுன் என்னைப் பார்த்தாள்.
'வேற மாதிரி நினைச்சிருந்தேன்.. ப்ச்.. விதி வேற மாதிரி மாத்திருச்சு'
'பிளீஸ் வித்யா..'
'சியாம்'
இருவர் கைகளும் இணந்திருந்தன.. வித்யாவின் கடைசி மூச்சு பிரிகிறவரை.
சியாமளி அழுதாள். நான் தடுக்கவில்லை. அழுது ஓயட்டும்.
சியாமளி இப்போது எங்களூடன் இருக்கிறாள். நான் இருக்கும் நேரங்களில் மூவருமாய். இல்லாத நேரங்களில் அம்மாவுடன்.
அம்மாவுக்குத்தான் வருத்தம். நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று.
என்னையும் சியாமளியையும் சேர்த்து நேசிக்கத் தயாராய் இருக்கிறவள் யாரேனும் உண்டா.. சொல்லுங்கள்.
இப்போதே சிம்பிளாய் கல்யாணம் செய்து கொள்ள நான் ரெடி.
அதுவரை ஒரு அற்புதமான காதல் என் வாழ்க்கையிலும் கிராஸ் செய்து விட்டுப் போனதன் அடையாளமாய் வித்யாவின் ஓவியமும், அவள் விட்டுச் சென்ற சியாமளியும் என் இன்றைய வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நான் செய்தது சரியா.. என்று விமர்சிக்கிற என் அலுவலக நண்பர்கள்.. ஏன் நீங்கள் கூடத்தான்.. 'ஏன் இப்படி' என்கிற கேள்வி உங்கள் வாழ்விலும் ஒரு முறையேனும் குறுக்கிட்டதில்லையா.. மனசாட்சியோடு யோசித்துச் சொல்லுங்கள்?
அதுவரை.. அதோ சியாமளியின் குரல் கேட்கிறது.. ஆரார் சபாவில் இன்று பெயிண்டிங் கண்காட்சி.. நாங்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறோம். வரட்டுமா?!

தேவி 16.05.12

14 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமை ...அருமை ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தமிழ்மணம் முதல் vote

middleclassmadhavi said...

Ungal soRkaLil enna manthira sakthi?!

Kathanaayagan seidhadhu sariyaagavE thOndRugirathu.

ஸ்ரீராம். said...

சில உணர்வுகளைச் சொல்ல முடியாது. பாவம் வித்யா. கொடுத்து வைக்கவில்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Dear Sir,

கண் கலங்க வைத்த காதல் கதை இது.

//போன ஜன்ம விட்ட குறை தொட்ட குறையாகக் கூட இருக்கலாம்.

எதுவானால் என்ன..

நேசிப்பதும், நேசிக்கப் படுவதும் வாழ்வின் அர்த்தம் கூட்டுகிறது.//

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

;)))))

பாராட்டுக்கள். vgk

ரேகா ராகவன் said...

கதை அருமை.

கே. பி. ஜனா... said...

மூவரின் உலகில் நாங்களும் பயணித்தோம் பிரியமுடன்!

அப்பாதுரை said...

இந்த முடிவும் நிறைவாகத் தான் இருக்கிறது; எதிர்பார்க்கவில்லை.
நிறைய வரிகளில் அற்புதமான சொல்லாட்சி ரிஷபன்!

இராஜராஜேஸ்வரி said...

சில நேரங்களில் உண்மை கற்பனையை விட சுவாரசியமானது.

மாலதி said...

முக்கோண பரிமாணத்தில் சிறப்பான காதல் கதை உள்ளத்தை நெகிழ வைத்தது பாராட்டுகள்

நிலாமகள் said...

சார், ப்ர‌மாத‌ம்!

Jayajothy Jayajothy said...

ச்யாமளியின் ஓவிய கண்காட்சியை . காண நானும் வருகிறேன். ஆரார் சபாவில் சந்திப்போமே,

ரிஷபன் said...

Most Welcome.. Jayajothi :)

G.M Balasubramaniam said...

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு. நடந்து முடிந்த நிகழ்வுகளில் ஏராள மான ifs and buts பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் எதார்த்தம் குறைந்து too good personalities -ஆக சித்தரிக்கப் பட்டுள்ளதோ. ? கதையின் நடையும் சொல்லாட்சியும் பிரமாதம். வாழ்த்துக்கள்