August 15, 2012

சதுரகிரி - தொடர்ச்சி 2

பயணங்களில் ஒரு தனி சுவாரசியம் இருக்கிறது. அதிலும் குறிப்பாய் மலை மேல் போகும்போது.
இயற்கை அதன் எழிலைக் கொட்டி வைத்திருக்கிறது.
ரசிக்கிற சாக்கில் ஆங்காங்கே பாறை மீது அமர்ந்து தான் போனோம்.

குழந்தைகள் பயமே இல்லாமல் ஏறி வருவதைப் பார்த்தால் கூச்சமாய் இருக்கிறது. அதிலும் சிலர் ஏகத்துக்கு குண்டு.. அவர்கள் உடம்பை  தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறி வந்ததைப் பார்த்தால் நமக்கே உற்சாகம் வருகிறது.

ஒரு தாத்தா.. பாட்டி.. அவர்கள் குடும்பம்.. என்று ஏழெட்டு பேர்.  தாத்தா வருவது நான்காவது தடவையாம்.
பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.
"நீங்க எந்த ஊர் ?"
"திருச்சி.. நீங்க..”
“மாம்பழச்சாலை”
அட.. அவரகளும் திருச்சி.. அப்புறம் என்ன.. ஒரே ஊர்க்காரர்கள் என்கிற பாசம் பீரிட திராட்சைப் பழங்களைப் பகிர்ந்தோம்.

முதல் தடவை என்பதால் எங்களுக்கு ரூட் பற்றிய பயம். ஷான் எங்கே என்று பார்த்துக் கொண்டுதான் நடந்தோம்.  அவர் பழகின பாதை என்பதால் சற்று முன்னே வேகமாய் போய்விட்டு எங்களுக்காகக் காத்திருப்பார்.

புதிதாய் போகிறவர்கள் நிச்சயம் பயமே இல்லாமல் போகலாம். அதாவது இம்மாதிரி விசேஷ தினங்களில். யாராவது கூட்டமாய் போய்க் கொண்டே தான் இருக்கிறார்கள். எங்காவது வழிதப்பிப் போவோமோ என்கிற கவலை வேண்டாம். நூல் பிடித்தமாதிரி வழி. 

வழி தப்பினாலும் நாய் உருவத்தில் பைரவர் வந்து வழிகாட்டுவதாய் ஒரு நம்பிக்கை. நாங்கள் போனபோதும் இம்மாதிரி வழி காட்டிப் போன பைரவர்களைப் பார்த்தோம். எங்களுக்கு முன் மலையேறி உச்சியில் நின்றிருந்தன.

இந்த பதிவுகளில் நான் சதுரகிரி புராணம் சொல்லப் போவதில்லை. என பார்வையில் பயண அனுபவம் மட்டுமே. சதுரகிரி பற்றி நிறைய பேர் அழகாக, சுவாரசியமாக பதிவிட்டிருக்கிறார்கள். 

ஆங்..  எங்கே விட்டேன்.. மெல்ல இருட்ட ஆரம்பித்தது. டார்ச் லைட்டை ஒளிர விட்டோம். அதன் வெளிச்சம் பரவிய இடம் மட்டும் பாதை தெரிந்தது. அதற்கு மேல் கும்மிருட்டு.

முன்னால் போனவர்களின் அடியொற்றி   
போக வேண்டி இருந்தது.
வெளிச்சத்தில் எடுத்த புகைப்படம் இது. இதை விட மோசமாய் சில இடங்கள். இருட்டில் எங்கே கால் வைக்கிறோம் என்று புரிபடாத நிலையில் ஏறக்குறைய தவழ்ந்து போகிற மாதிரி. 




ஆனால் எங்களுடன் வந்தவர்கள் அனாயசமாய் போனார்கள்.  வலது கைப்புறம் மலை. இடது கைப்புறம் அதல பாதாளம் !
நடுவில் ஒரு இடத்தில் என்னுடன் வந்தவர்கள் மலையை ஒட்டி மேலே நடக்க நான், எனக்கு முன் போன இருவரைப் பின்பற்றி இடது கைப்பக்கம் இறங்கி... அவ்வளவுதான்.. அதற்கு மேல் இருட்டு.

“அங்கே எங்கே போறீங்க.. வழி கிடையாது..”
“இவங்க போனாங்களே”
“வனதேவதை சிலை இருக்கு பாருங்க.. அதைக் கும்பிட போனாங்க”

வனதேவதையை படம் பிடிக்காதீர்கள் என்று சொல்லி விட்டார்கள்.

அது ஏன் மாலை/இரவில் தான் போகணுமா என்றால்.. பகலிலும் போகிறார்கள். ஆனால் சூடு தாங்காது. கால் வைத்தால் கொப்பளித்து விடும்.  இதனால் விடியல் அல்லது இரவு நேரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பிலாவடிக் கருப்புசாமி கோவில் .. வழியில் வருகிறது.
இது ஒரு லேண்ட் மார்க். 



எப்படியோ  இரவு ஒன்பதரை மணிக்கு மலை உச்சிக்கு போய்விட்டோம்.
கடைகளும் ஸ்பீக்கர் அலறலும்  சுடச்சுட இட்லி தோசை போண்டா சுக்கு காபி என சாப்பிட எந்தக் குறையும் இல்லாத பிக்னிக் ஸ்பாட் போல மலை உச்சி.

ஆனந்தமாய் சுந்தர மஹாலிங்க தரிசனம்.. இதற்குத்தானே அவ்வளவு முயற்சிகள்.  சின்ன கோவில் தான்.  ஆனால் சற்றே சாய்ந்த சிவலிங்க தரிசனம் பார்த்து மனசுக்குள் ஒருவித பரவசம். 

அன்னதானம் அழைத்து அழைத்து தருகிறார்கள். நண்பர்கள் கடையில் டிபன் சாப்பிட எனக்கு சாப்பிடத் தோன்றவில்லை. வீட்டை விட்டு கிளம்பியது முதல் குளுகோஸ் நீரும். திராட்சையும்தான்.

எனக்கு இருந்த ஒரே ஒரு சந்தேகம்.. இயற்கை உபாதைகளுக்கு என்ன வழி..  சிறுநீர் கழிக்க சிக்கலில்லை.. அடுததது.. என்ன செய்வது.. என்கிற கவலை.. நல்லவேளையாய்  மலை விட்டு இறங்கும் வரை அந்தத் தொல்லை வரவில்லை.

ஆங்காங்கே இருட்டில் ஒதுங்கி விடுகிறார்கள்.  அங்கிருக்கும் அருவியில் அவ்வளவாய் இப்போது நீர் வரத்து இல்லையாம். ஒரு தொட்டியில் நீர் பிடித்து வைத்திருக்கிறார்கள். 

பிறகு பௌர்ணமி வெளிச்சத்தில்  இதோ கீழே இருக்கிற வெட்டவெளியில் தான் நியூஸ்பேப்பரைப் போட்டு படுத்திருந்தோம்.




இங்குதான் இரவு படுத்தோம். குளிர் நடுக்கி விட்டது.

போர்வை கொண்டு போகாதது தப்பாகி விட்டது. ஆனால் அந்தக் குளிரும் படுசுகம்.

(முடிச்சிரலாம்)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பயண அனுபவத்தை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

அந்தப் பக்கத்தில் அப்போது மகாலிங்க மலை என்றுதான் சொல்வார்கள். பைரவர் வழிகாட்டிச் செல்வது ஆச்சர்யம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பயணக்கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

த்ரில்லிங்காகவும் உள்ளது.

தொடருங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அன்புடன்

வீ....ஜீ

Yaathoramani.blogspot.com said...

சுவாரஸ்யமாகப் போகிறது பதிவு
படங்கள் பதிவுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது
தொடர வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

மன்னிக்கவும்! இப்போதுதான் நேரம் கிடைத்தது! பயணக் கட்டுரையே படிக்க ஒரு நாவல் போன்று அழகாய்ச் செல்கிறது. இதன் அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.



வெங்கட் நாகராஜ் said...

இனிய அனுபவங்கள். நிச்சயம் செல்லத்தூண்டுகிறது உங்கள் பதிவு... பார்க்கலாம் மகாலிங்கம் எப்போது அழைக்கிறாரென.