August 12, 2012

சதுரகிரி



வெகு நாட்களாய் எதிர்பார்த்த ஆன்மீகப் பயணம். இந்த பௌர்ணமிக்கு வாய்த்தது.
அலுவலக நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். 
‘சதுரகிரி போனால் சொல்லுங்க’ என்று.
ஆவணி அவிட்டம் அன்று காலை கிளம்பினோம். இரு நண்பர்களும் நானும்.
சண்முகசுந்தரம் முன்பு போய் வந்தவர். நானும் மஹேஷ்வரனும் புதுசு.
‘தங்க இடம் இருக்குமா.. என்னென்ன எடுத்து வரணும்.. கஷ்டமா இருக்குமா’
எஙகள் கேள்விகளுக்கெல்லாம் ”ஷான்” (அப்படித்தான் செல்லமாய் சண்முகசுந்தரத்தை அழைப்போம்) மையமாய் புன்னகைத்தார்.
டார்ச் லைட்.. குளுகோஸ்.. தண்ணீர் பாட்டில்.. ஜோல்னா பை சகிதம் கிளம்பியாச்சு.
திருச்சி டூ மதுரை..  அப்புறம் மதுரை டூ ஸ்ரீவில்லிப்புத்தூர்.. வத்திராயிருப்பு.. அங்கிருந்து ஆட்டோவில் தாணிப்பாறை. இதுதான் சதுரகிரி மலை அடிவாரம்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிஸ்கட் பாக்கட், ப்ரெட் என்று ஷான் வாங்கிக் குவிக்க.. ‘மலை மேல நாம சாப்பிடவா’ என்று ஆர்வமாய்க் கேட்டோம்.
ஷானின் மர்மப் புன்னகை இப்போதும்.
கீழேயும் கடைகள். ஆட்டோ கார் வேன் என்று சகலமும் மலை அடிவாரத்தில்.
‘செருப்பை எங்கே விடலாம்’
பாதிப் பேர் செருப்புடன் தான் நடந்தனர். நாங்கள் ஒரு புதருக்குள் அடையாளம் தெரிகிற மாதிரி போட்டு விட்டு நடந்தோம்.
பக்கா ரோடு இல்லை.. திருப்பதி போல. மலை.. அதன் இயல்பில். பாறை.. கற்கள்.. கால் அழுத்தி வைக்க முடியாமல் குத்தியது பாதை. 
நாங்கள் கிளம்பிய நேரம் மாலை. இன்னும் இருட்டவில்லை. 
ஒரு பக்கம் மலை.. மறுபக்கம் அதல பாதாளம். சறுக்கினால் யாராவது வந்து கண்டு பிடிக்கணும்.
தண்ணீருடன் குளுகோசை கலந்து வைத்துக் கொள்ளச் சொன்னார் ஷான்.
ஆச்சு.. நடக்க நடக்க ஒரு பக்கம் ஆர்வம்.. கூடவே எத்தனை மனிதர்கள்.. எல்லா வயதிலும்.  குழந்தை முதல் தொண்டு கிழம் வரை..
அதிலும் சிலர் தூக்கிக் கொண்டு போன மூட்டைகள்.. ஏயப்பா..
அடிவாரத்தில் ஏறும் போதே எச்சரிக்கை.. பிளாஸ்டிக்.. பாலிதீன் கவர்களை மேலே போடாதீர்கள் என்று. ஆனால் யாரும் கேட்பதாயில்லை.. ஆங்காங்கே இறைந்து கிடந்தன.  200 வாலண்டியர்களை அடுத்த மாதம் வரவழைக்கப் போகிறார்களாம்.. மலை முழுக்க இப்படி கிடக்கும் குப்பைகளை திரட்டி கொண்டு வர. இப்படி அடிக்கடி செய்து மலையை காப்பாற்றுகிறார்கள்..
புனிதமான மலை என்கிற உணர்வில் பலர்.. சினிமாப்பாட்டு அதிர சிலர்.. சிகரெட் குடித்து அப்படியே வீசி விட்டு போன சிலர்.. மதுபாட்டில் கூட..
’நமக்கு பயந்து சாமி மலை மேல வந்து உக்கார்ந்தா.. நாம விடாம துரத்தி வரோம்..’ என்று ஒருவர் கிண்டலடித்தார்.
நாய்களும் குரங்குகளும் தென்பட்டன. உடனே ஷான் உற்சாகமாகி விட்டார்.
பிஸ்கட் பாக்கட்டை பிரித்து கையில் வைத்து நீட்ட அவை அருகில் வந்து எடுத்துக் கொண்டது கண்கொள்ளா காட்சி..
இறங்கியவர்களில் இருவர் எங்களிடம் அவர்கள் கையில் இருந்த கொம்பை கொடுத்தார்கள். 
‘வச்சுக்குங்க.. இப்ப இல்லாட்டியும் இறங்கறப்ப பயன்படும்’
சுந்தர மஹாலிங்கம் தான் அவர்கள் வடிவில் வந்திருக்க வேண்டும். ஏறும்போதே அது மிகவும் பயன்பட்டது. அனாயசமாய் ஏறிப்போன.. இல்லை;.. இல்லை.. தாவித் தாவிப் போனவர்களை பார்த்து எங்களுக்கு ஆச்சர்யம்.
கொஞ்சம் ‘ஸ்லிப்’பினால் சர்ரென்று போய் விடக்கூடிய இடம்.  கால் ஜதி சொல்லாமலேயே ஆட ஆரம்பித்து விட்டது.
‘லிப்ட்ல போனா இப்படித்தான்.. நடக்கணும்’ என்றார் ஷான்.
ஆங்காங்கே இருந்த குட்டி குட்டி கோவில்களை தரிசித்துக் கொண்டு சூழலின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தோம்.
இருட்ட ஆரம்பித்தது..  இத்தனைக்கும் பௌர்ணமி.. நிலா வெளிச்சம் தெரியவில்லை.  கும்மிருட்டு.. முன்னே பின்னே நடப்பவர்களின் பேச்சு சத்தம்.. சிலர் கையில் டார்ச்..
பத்தடிக்கு மேல் பாதை புலப்படவில்லை.. எங்கே கால் வைப்பது என்று புரியாமல்..
“போன தடவை அமாவாசைக்கு வந்தோம்..”என்றார் ஷான். 
அந்த இருட்டிலா..

(தொடரும்)

(படம் கூகுள் உதவி)




15 comments:

CS. Mohan Kumar said...

சார் அருமையான விவரிப்பு. அங்கு காணும் நல்ல/ கெட்ட - அனைத்து விஷயங்களும் சொல்வது நன்று. தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் மகிழ்ச்சியளிக்கும் இனிய பயணக்கட்டுரை. தொடரட்டும்.

//சண்முகசுந்தரம் முன்பு போய் வந்தவர்.//

மிகவும் பொருத்தமான ஆன்மீக நண்பரான நம் திரு. சண்முகசுந்தரம் Sir அவர்களுடன் சேர்ந்து தங்கள் போய் வந்தது கேட்க மேலும் மகிழ்ச்சியளிகிறது.

vgk

vimalanperali said...

பாதியில் முடித்த பயணக்கட்டுரை ,நன்றாககயிருந்தது,மீதியைஎப்போபோடுவீங்க/

தி.தமிழ் இளங்கோ said...

சதுரகிரி. பயணக் கட்டுரை படிக்க படிக்க ஆர்வம் தருகிறது. தொடருங்கள். படங்கள் இருந்தால் பதிவில் போடவும்.

மனோ சாமிநாதன் said...

அருமையாய் விவரித்து எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்!!

ஸ்ரீராம். said...

மிகவும் கடினமான பயணம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் வத்திராயிருப்பு சென்று வரும் வேலை. அப்போது வந்த இந்த வாய்ப்பை பயத்தினாலேயே தவிர்த்தேன்! தொடருங்கள். படங்கள் இருந்தாலும் பகிருங்கள். அருகிலேயே மகாராஜபுரத்தில்தான் நல்லதங்காள் கிணறு இருப்பதாகச் சொல்வார்கள்.

கே. பி. ஜனா... said...

கூடவே நாங்களும் வருகிற மாதிரி.. ஆஹா!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Arumai!
Arumai!!
Arumai!!!

கோமதி அரசு said...

இறங்கியவர்களில் இருவர் எங்களிடம் அவர்கள் கையில் இருந்த கொம்பை கொடுத்தார்கள்.
‘வச்சுக்குங்க.. இப்ப இல்லாட்டியும் இறங்கறப்ப பயன்படும்’
சுந்தர மஹாலிங்கம் தான் அவர்கள் வடிவில் வந்திருக்க வேண்டும். ஏறும்போதே அது மிகவும் பயன்பட்டது.//

சதுரகிரி மலைக்கு சென்று வருபவர்கள் எல்லோரும் சொல்லும்
வார்த்தை.
சுந்திரமஹாலிங்கம் துணை இல்லாமல் போய்வருவது கஷ்டம்.

உங்கள் தரிசன அனுபவங்களை கேட்க ஆவல், தொடருகிறேன்.

vasan said...

//’நமக்கு பயந்து சாமி மலை மேல வந்து உக்கார்ந்தா.. நாம விடாம துரத்தி வரோம்..’ என்று ஒருவர் கிண்டலடித்தார்.//

ஒரு வ‌கையில் ச‌ரிதானோ? எனப்படுகிற‌து அவ‌ரை அங்கே வைத்த‌தே நம் மின்னோர்க‌ள் தானே என்றும் ச‌மாதானமாகிற‌து 'இந்தக்‌ குர‌ங்கு' ம‌னசு

இராஜராஜேஸ்வரி said...

கொஞ்சம் ‘ஸ்லிப்’பினால் சர்ரென்று போய் விடக்கூடிய இடம். கால் ஜதி சொல்லாமலேயே ஆட ஆரம்பித்து விட்டது

பயண அனுபவகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

விறுவிறுப்பாக செல்கிறது...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

சித்திரவீதிக்காரன் said...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்த சதுரகிரி யாத்திரையை நினைவில் கொண்டு வந்த பதிவு. பகிர்விற்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

எனக்கும் போக ஆசை உள்ளதால்
தங்கள் பதிவு நல்ல வழிகாட்டியாக உள்ளது
மிக மிக அழகாக்ச் சொல்லிப்போகிறீர்கள்
வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

அடுத்த முறை சென்றால் சொல்லுங்கள் ரிஷபன் ஜி! முதல் பகுதியே என்னையும் செல்லத் தூண்டிவிட்டது....