March 15, 2013

ஒரு அனுபவம்.. ஒரு கவிதை..

’கால்.. அம்பது சிக்கரி’ 
(அதாவது கால் கிலோ ப்யூர் காபியும் 50 கி சிக்கரியும்)
பையன் துடியாய் இருந்தான்..

மெல்லிய பாடல் கேட்கிற பாவனை எனக்குள் அவன் இயங்கிய விதம்.
காப்பிக்கொட்டையை மெஷினில் போட்டு ஸ்விடசைத் தட்டினான்.
ஒரு இரும்புக் கம்பியால் மெஷின் ஓட்டும்போதெ உள்ளிருந்ததை தட்டிக் கொண்டிருந்தான். சீரான அரவை.

உய்ய்ங்.. என்று ஆம்புலன்ஸ் ஒலி அப்போது தான் கேட்டது. ரோட்டில் எங்களைக் கடந்து போன அந்த ஒலி.
எனக்கு ஏதோ ஒரு பழைய அச்சத்தில் உடம்பு தன்னிச்சையாய் சிலிர்த்து அடங்கியது.

அதே நிமிடம்..
அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. மெஷினுக்குள் வைத்திருந்த பார்வை விலகவில்லை.. விரலை மடக்கி உதட்டில் கொண்டு போய் ஒரு பிரார்த்தனைப் பூ.. முகம் தெரியாத அந்த ஆம்புலன்ஸ் மனிதருக்காக !

அவ்வளவுதான்.. அரைத்ததை டின்னில் கொட்டி சிக்கரி கலந்து பாக்கட்டில் போட்டான்.

அவன் கையைப் பற்றிக் கொள்ளத் தோன்றியது அப்போது !-----------------------------------------------------------------------------------------------------

எழுந்ததும்
ஒரே ஒரு நிமிடம்
நின்று
படுத்திருந்த இடத்தைப்
பார்த்தேன்..

வழக்கமாய்
அன்றைய தின பரபரப்பில்
விலகிப் போகிறவன் தான்..

அது ஏதோ சொல்வது
போலில்லை?

இரவு முழுவதும்
என்னைக் காத்திருந்தது..
இனி
இன்னொரு இரவுக்காய்
காத்திருக்கப் போகிறது..

உறவாடுவதும்
உதறுவதும்
மனித இயல்பென
படுக்கைகளுக்குத் தெரியும்..

மடித்து கூட வைக்காமல்
விலகிப் போகிற
எனக்குத்தான் வலிக்கிறது
அதன் ஊமை பாஷை !


------------------------------------------------------------------------------------------------------

16 comments:

சென்னை பித்தன் said...

அனுபவமே ஒரு கவிதை போல:கவிதை ஒரு புதிய அனுபவமாய்!
அருமை ரிஷபன்

sury Siva said...


// அது ஏதோ சொல்வது
போலில்லை?//

அனுபவத்தைச் சொல்கிறது.

அனு எனின் பின்னே வருவது
பவம் எனின் உலகம்

ஊமைத்தனம் போதும்
உன் எண்ணத்தைச் சொல் என்றேன்.

சொன்னது.


"என்மேல் உறங்கும் நீ
என்றுமே எழுவாய் எனினும்
என்றேனும் ஒரு நாள்
என்னிலே உறங்கிப்போவாய். "

படுக்கையா ? இனிமேலா ?

ஊ....ஹும்..

சுப்பு தாத்தா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனுபவம் அழகாக இருந்தது.

படுக்கை பற்றிய கவிதை அதைவிட மிக அழகாக உள்ளது.

படித்தேன், ரஸித்தேன், மகிழ்ந்தேன். சூப்பர் சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உறவாடுவதும்
உதறுவதும்
மனித இயல்பென
படுக்கைகளுக்குத் தெரியும்..//

ஆஹா, அசத்தலான வரிகள் சார்.

படுக்கை சொல்வது போல அழகாகச் சொல்லிட்டீங்க! ;)))))

கையைக்கொடுங்கோ, கண்ணில் ஒத்திக்கணும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மடித்து கூட வைக்காமல்
விலகிப் போகிற
எனக்குத்தான் வலிக்கிறது
அதன் ஊமை பாஷை !//

நீங்கள் மிகவும் மென்மையானவர் அதுவும் மேன்மையானவர்.

வலிக்கத்தான் செய்யும் இப்படியான ஊமை பாஷைகள்.

சபாஷ்;))))) பாராட்டுக்கள் சார்.ஜீவி said...

//மடித்து கூட வைக்காமல்
விலகிப் போகிற
எனக்குத்தான் வலிக்கிறது
அதன் ஊமை பாஷை ! //

மடித்தால் கூட முடங்கி
விடுமோ வென்று
அதன் இயல்பில் விட்டு
மீண்டது மனம்

கே. பி. ஜனா... said...

ஒரு அனுபவமின்னாலும் சர்ரியான ஒண்ணு!ஒரு கவிதைன்னாலும் நச்சுன்னு ஒண்ணு!

வெங்கட் நாகராஜ் said...

அனுபவம் - கவிதை - இரண்டுமே சொன்ன விஷயங்கள் பொக்கிஷம்!

நல்ல பகிர்வுக்கு நன்றி ரிஷபன் ஜி!

கவியாழி கண்ணதாசன் said...

அனுபவம் புதுமை சரி .அனுபவம் கவிதையும் சரிதான்

நிலாமகள் said...

அனிச்சையான பிரார்த்தனைகளும் பலமூட்டட்டும் அவசர சிகிச்சை வேண்டியிருப்பவருக்கு.
அனிச்சையான செயல்களும்.... மேம்படட்டும் நமக்குதவும் அசையாப் பொருட்களையும் மதித்தொழுக.

கோவை2தில்லி said...

அனுபவம், கவிதை என இரண்டுமே அருமை சார்...

Ranjani Narayanan said...

சிலர் வேலை செய்யும் விதம் நமக்கு நிஜமாகவே இதைப் போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.
படுக்கும்போது
இனி ஒவ்வொரு இரவும் படுக்கையைப் பற்றிய சிந்தனை வேறு விதமாக இருக்கும்.

அருமை ரிஷபன் ஸார்!

மெல்லிய உணர்வுகளை நீங்கள் சொல்லிச் செல்லும்விதம் மனதைத் தொடுகிறது!

அப்பாதுரை said...

உயரமான டைவ் அடிக்கையில் தண்ணீரைத் தலை தொடும் உணர்வைத் தந்த வாசிப்பு.
ஜீவியின் வரிகளிலும் தொக்கி.. 

இராஜராஜேஸ்வரி said...

விரலை மடக்கி உதட்டில் கொண்டு போய் ஒரு பிரார்த்தனைப் பூ.. முகம் தெரியாத அந்த ஆம்புலன்ஸ் மனிதருக்காக !/

அசத்தலான அனுபவம் ..

விமலன் said...

படுக்கைகள் சொல்லிச்செல்கிற கதைகள் இங்கு வலிகளாகவும்,சந்தோஷமாகவும் நிறைந்து தெரிகிறதுதான்.வாழ்த்துக்கள். நன்றாக இருக்கிறது.

கோமதி அரசு said...

அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. மெஷினுக்குள் வைத்திருந்த பார்வை விலகவில்லை.. விரலை மடக்கி உதட்டில் கொண்டு போய் ஒரு பிரார்த்தனைப் பூ.. முகம் தெரியாத அந்த ஆம்புலன்ஸ் மனிதருக்காக !//

அருமை.
நானும் அப்படித்தான் எங்காவது தீ அணைப்பு வண்டி சத்தம் இட்டுக் கொண்டு போனால், ஆம்புலன்ஸ் சத்தம் செய்து போனால் அன்னிசையாக இறைவா அவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்று பிராத்திப்பேன்.
படுக்கை கவிதை அருமை.