March 05, 2013

செத்துப் போனவள்
அம்மா
தன் பிரசவங்கள்
பற்றி
அக்கா.. தங்கைகளுடன்
பேசிக் கொண்டிருந்தாள்..
அனுமதி மறுக்கப்பட்ட
பிரதேசம் அது.
’இவனைப் பெத்தப்பதான்
ரொம்ப கஷ்டப்பட்டேன்’
அக்கா கேட்டாள்..
எனக்கும் தங்கச்சிக்கும்
நடுவுல ஒருத்தி இருந்தாளாம்மா..
அம்மாவின் முகம்
நசுங்கியது..
பொறந்தப்ப அவ்வளோ அழகு அவ..
’என்னைய விடவா’
அக்கா.. தங்கச்சி
முகங்களில் பொறாமை..
‘ம்ம்..’
அம்மாவின் கண்களில்
இறந்த காலம் குடியேறியது..
’யாரைப் போல இருப்பா’
‘என்னாச்சு அவளுக்கு’
‘எந்த வயசுல போனா..’
அம்மா.. துவண்டு
அக்கா மடியில் படுத்தாள்..
செத்தவள்
அந்த நிமிஷம்
எதிரே வந்து நின்றாள்..
மானசீகமாய்.

18 comments:

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வு.

vasan said...

"நினைவுப் பிர‌வ‌ச‌ம்"
மாத‌ம் க‌ணக்கில்லை
இது ம‌னக் க‌ண‌க்கு
மாளா ம‌னக்கிறுக்கு!

நிலாமகள் said...

என் கண்களிலும் இறந்த காலத்தை குடியேற்றிய கவிதை...

அம்மாவும் சகோதரியும் ஒருங்கே உயிர்த்தனர் மனத்திரையில்.

அமைதிச்சாரல் said...

பாதியிலேயே பறி கொடுத்திருந்தாலும் பெற்றவளுக்கு ஒவ்வொரு பிள்ளையும் பொக்கிஷமல்லவா..

அருமை.

RAMVI said...

//செத்தவள்
அந்த நிமிஷம்
எதிரே வந்து நின்றாள்..
மானசீகமாய்.//

மனதை கலங்க வைத்துவிட்டது.

கோமதி அரசு said...

இந்த கவிதையில் என் அம்மாவைப் பார்க்கிறேன். அவர்களுக்கும் இது போல் அனுபவங்கள் இருக்கிறது.
சிலநேரங்களில் அம்மா மகளாய், மகள் அம்மாவாகும் உண்ர்வுகளை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.
எப்படி இவ்வளவு அழகாய் உணர்வுகளை கவிதைகளாய் வடித்து விடுகிறீர்கள்!

ezhil said...

படித்தவுடன் எனக்கும் பிடித்த இறந்த என் அண்ணன் கண்முன் வந்து செல்கிறான்....

Geetha Sambasivam said...

:((((( மனம் கலங்கியது.

Jayajothy Jayajothy said...

மானசீக தரிசனம் எனக்கும் கிட்டியது தங்கள் கவிதையின் வழியாக.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அம்மாவின் கண்களில்
இறந்த காலம் குடியேறியது..
’யாரைப் போல இருப்பா’
‘என்னாச்சு அவளுக்கு’
‘எந்த வயசுல போனா..’
அம்மா.. துவண்டு
அக்கா மடியில் படுத்தாள்..
செத்தவள்
அந்த நிமிஷம்
எதிரே வந்து நின்றாள்..
மானசீகமாய்.//

மிகவும் நெகிழவைத்த / மனதை கலங்கச்செய்யும் வரிகள்.

உணர்வுகளை அப்படியே எழுத்தினில் செதுக்கியுள்ளது மிக அருமை.

பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பொக்கிஷத்ட்தில் ஒன்றை இழந்த பெற்றவள் ..

மனதைக்கனக்க வைக்கிறாள்..

சிவகுமாரன் said...

கலங்கியது மனம்

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ வைத்த பகிர்வு.

sury Siva said...

உனக்கு முன்ன இன்னும் இரண்டு பொண்கள் புறந்ததே !!

புறந்து ?

ஒன்னு இரன்டரை வயசிலே போயிடுத்து. இன்னொன்னு ஆறு மாசம் கூட இல்ல..

அவங்களும் இருந்தா இப்ப பத்து பேர் இருப்போம் இல்லையா அம்மா ?

ஆமாண்டா கண்ணே... என்ன அழகு அந்த செல்லக்குட்டிகள் எல்லாம்....

அவங்க போனது கூட ஒருவிதத்திலே சரி தான் மா....

ஏன்டா அப்படி சொல்கிறாய்... ?

அவங்க இருந்தா உனக்கு இந்த இரண்டு வாய் கஞ்சி கூட மிச்சம் இருக்காதே !‍!

அம்மா இன்னும் சாப்பிடவில்லை. எங்களுக்கெல்லாம் இருக்கும் அரிசியில் கஞ்சி வைத்துக் கொடுத்து
அப்பொழுது தான் முடித்தாள்.

அந்த வெங்கலப்பானையில் அங்கங்கெ கஞ்சி ஒட்டிக்கொண்டு இருந்தது.

வழித்தெடுத்து வாயில் உண்டாள்.

ஒரு கரண்டி கஞ்சி இருந்தது.

சுப்பு தாத்தா.

1967 ல் நடந்தது.

Ranjani Narayanan said...

எத்தனை காலமானாலும் இழப்பு இழப்புத்தான், இல்லையா?
தனது இழப்பை தான் பெற்றவர்களிடமே தேடும் அம்மா....
மனம் கனத்துவிட்டது ரிஷபன் ஸார்!
சுப்பு தாத்தாவின் கதையில் மனம் இன்னும் கனமாகி....தாங்க முடியவில்லை.

Ranjani Narayanan said...

எத்தனை காலமானாலும் இழப்பு இழப்புத்தான், இல்லையா?
தனது இழப்பை தான் பெற்றவர்களிடமே தேடும் அம்மா....
மனம் கனத்துவிட்டது ரிஷபன் ஸார்!
சுப்பு தாத்தாவின் கதையில் மனம் இன்னும் கனமாகி....தாங்க முடியவில்லை.

கோவை2தில்லி said...

மனதை நெகிழ வைத்த வரிகள். சென்ற்வர்கள் எல்லாம் ஒரு நிமிடம் கண் முன்னே வந்தது போல் இருந்தது.


சுப்பு தாத்தா - நிதர்சனம் மனதை கனக்க வைத்தது.

வல்லிசிம்ஹன் said...

புத்தர் சொன்ன கதை போல ஆனதே.
எல்லோர் வீட்டிலும் ஒரு நிகழ்வு,ஒரு தாயின் நினைவழிப்பு.
கலங்க வைக்கிறது உங்கள் கவிதை.
@சுப்பு சார் ,உங்கள் துக்கம் பெரிதே.