August 06, 2013

இசை 2

அப்பாவுக்கு நாங்கள் மூவரும் கொடுதத வாக்குறுதியே யாரையும் லவ் பண்ண மாட்டோம் என்றுதான். 

ஒரு பெளர்ணமி இரவு மொட்டை மாடியில் அப்பா, அம்மா, நாங்கள் (புவனா, காயத்ரி, சங்கீதா). மூவரும் நைட்டியில். அப்பாவின் சங்கீத ஆலாபனை நடுநடுவே. 'கீரவாணி' என்று முனகுவாள், கொஞ்சம் தெரிந்தவள் சங்கீதா மட்டும். பாட்டு கிளாஸ் போனவள் அவள் மட்டும்தான். நான் (புவனா) பெயிண்ட் அடித்துப் பார்த்து, பிறகு அதுவும் வராமல் விட்டுவிட்டேன். வாங்கி வைத்த வாட்டர் கலர், ஆயில் பெயிண்ட் எல்லாம் காய்ந்தே போய்விட்டன. 

மிஸ்ஸியம்மாவில் சாவித்ரி பாடும் பாட்டை அப்பாவைப் பாடச் சொன்னாள் அம்மா. 

'நல்ல லவ் ஸ்டோரி!'

"நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா" என்றார் அப்பா. 

"என்ன பேச்சு இது?" - இது அம்மா. 

"அப்படி ஏதாச்சும் ஐடியா இருந்தா சுத்தமாத் தொடைச்சிருங்க!" 

"இல்லப்பா" என்றோம் கோரஸாக. அந்த நிமிடம் நிச்சயமாய் எங்கள் மனதில் எதுவும் இல்லை.

மிஸ்ஸியம்மா பாட்டு அப்பா பாடவில்லை. அம்மா எழுந்து வெளிநடப்பு செய்தாள். அப்பாவும் சற்று நேரத்தில் கீழே போனார். நாங்கள் மட்டும் தனியே.

"எப்படிடி தைரியமா லவ் பண்ண மாட்டேன்னு சொன்ன?"

"ஏன்... நீயும்தான் சொன்ன!"

"அப்ப சினிமால காட்டறது பொய்யா?... லோ லோன்னு அலையறாங்களே!..."

"கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாதா நமக்கு?" என்றாள் சங்கீதா கிண்டலாய்.

"ஹிஸ்டரிதான் வொர்க் அவுட் ஆகும்... நம்ம குடும்ப சரித்திரம். தாத்தா... அப்பா... எல்லோருமே ஏற்பாடு செய்த கல்யாணம்தான்."

"அப்பாவோட மியூசிக் திறமைக்கு யாராச்சும் லவ் பண்ணியிருக்கணுமே?"

"இன்னிக்கு ஏன் பாடாம போயிட்டார்?"

படியேறி யாரோ வரும் சத்தம் கேட்டது. அப்பாவும், அம்மாவும்.

"மனசே இல்லைடி அவருக்கு. புலம்பிட்டார்... பாடாம வந்துட்டேன்னு..."

வட்டமாய் அமர்ந்தோம். "பிருந்தாவனமும் நந்த குமாரனும்..." அப்பாவின் குரலில் வசியம் இருந்தது.

"சுத்த சாவேரியா?" என்றேன் கிசுகிசுப்பாய் சங்கீதாவிடம்.

"ச்சே... ஆரபியா?..."

"என்னடி குழப்பறே..."

"ஏ.எம்.ராஜா இல்லாட்டி ராஜேஸ்வர்ராவ் இருந்தா கேட்டுடலாம்."

எங்கள் ராக சர்ச்சையில் குரல் உயரவும் அப்பாவிடம் சிரிப்பு. பாடிக் கொண்டே சங்கீதாவின் தலையில் செல்லமாய்த் தட்டினார்.

"மண்டு... மண்டு... நல்லாக் கவனி!"

அம்மா, அப்பாவையே கிறங்கிப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கள் கவனிப்பை உதாசீனம் செய்து. எங்கள் எதிர்காலம்... கல்யாணம்... நாளைய கவலைகள்... கடன் பாக்கி... அப்பாவின் உடல் நலம்... எல்லாம் மறந்து.


(நன்றி : கல்கி )


21 comments:

aavee said...

இசை இனிமையாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

இசை பற்றிய இரண்டாவது கதையும் மிகவும் ரசித்தேன்.....

தொடரட்டும் சிறுகதைகள்.....

இராஜராஜேஸ்வரி said...

இனிய இசை ..!

தாம்பத்யம் ஒரு சங்கீதம் ...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாகச் செல்கிறது “இசை”.

மிகவும் பிடித்த இடம்:

//நான் (புவனா) பெயிண்ட் அடித்துப் பார்த்து, பிறகு அதுவும் வராமல் விட்டுவிட்டேன். வாங்கி வைத்த வாட்டர் கலர், ஆயில் பெயிண்ட் எல்லாம் காய்ந்தே போய்விட்டன. //

இந்த இடத்தில் இதைப்[காயப்போட்டது] போட்டது மிக அருமை. ;)))))

Easwaran said...

//அம்மா, அப்பாவையே கிறங்கிப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கள் கவனிப்பை உதாசீனம் செய்து. எங்கள் எதிர்காலம்... கல்யாணம்... நாளைய கவலைகள்... கடன் பாக்கி... அப்பாவின் உடல் நலம்... எல்லாம் மறந்து//

அட்டா! காதல் என்பதா! இதுதான் காதல் என்பதா!

அருமை!

ADHI VENKAT said...

//"ஹிஸ்டரிதான் வொர்க் அவுட் ஆகும்... நம்ம குடும்ப சரித்திரம். தாத்தா... அப்பா... எல்லோருமே ஏற்பாடு செய்த கல்யாணம்தான்."//

எப்பவும் கெமிஸ்ட்ரி தான் சொல்வாங்க...இது ரொம்பவே புதுசா இருக்கு....:))

மொட்டை மாடியில் கழிந்த அந்த இனிமையான பொழுதுகள் எங்கள் கண் முன்னும்...

இசை 1ம் நன்றாக இருந்தது...

நிலாமகள் said...

இசையால் வசமாகா இதயம் உண்டோ...!

ராமலக்ஷ்மி said...

இன்னிசை!

Unknown said...

மிக நன்றாக இருக்கிறது. எல்லாவற்றையுமே உயிர்பிக்கவும், மறக்கச் செய்யவும் இசைக்கு மட்டுமே சாத்தியம். எழுந்து போன அப்பா மீண்டும் வந்தமர்ந்து பாடுவதும், அம்மா எல்லாம் மறந்து கிறங்கி நிற்பதும்...ஒரு அழகான காட்சியாக மனதில் விரிகிறது.
:-)

இளமதி said...

ரசிக்கவைத்த இசை அருமை!

கே. பி. ஜனா... said...

மனசை எங்கோ தொட்டுப் பிசைகிறது கதை! Class!

KParthasarathi said...

கடைசி பாரா தான் கதைக்கு சிகரம்.
நன்றாக இருந்தது

vimalanperali said...

நல்ல சிறுகதை.வாழ்த்துக்கள்.

கதம்ப உணர்வுகள் said...

அன்பின் ரிஷபா,

உங்களை கணிணி தொடர் பகிர்வுக்கு அன்புடன் அழைக்கிறேன்...

http://manjusampath.blogspot.com/2013/08/blog-post_11.html

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தி சிறப்பித்தற்கு மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்..!

அப்பாதுரை said...

இடிப்பது போல அடிக்கும் முடிவு. பலமுறை ரசித்துப் படித்தேன்.

கதம்ப உணர்வுகள் said...

இசை…

கதைக்கேற்ற பொருத்தமான தலைப்பு….

இயல்பான கதைக்களம்…. சாதாரண ஒரு மிடில்கிளாஸ் வீட்டில் கதை அமைத்து… ஒவ்வொருவரின் குணாதிசயத்தை கதையின் இத்துனூண்டு வரிகளிலே கொண்டு வந்தது மிகச்சிறப்பு… அதிலும் தொடக்கமே என்னவோ இந்த கதையில் ஒரு சர்ப்ரைஸ் அல்லது ஷாக் இருக்கு என்பதை உணர்த்தும்படி நாங்க யாரையுமே லவ் பண்ணமாட்டோம் என்று அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதி…

மிஸ்ஸியம்மாவில் வரும் பாட்டை அப்பா பாட ஆரம்பிக்குமுன் நல்ல லவ்ஸ்டோரி இல்லை? இது அப்பாவின் மூட் ஆஃப் ஆக வழி செய்து அங்கிருந்து நகர வைத்துவிட்டது.. அம்மாவைத்தொடர்ந்து அப்பாவும்…

கதையை படிக்கும் வாசகர்கள் நாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்.. என்னதான் அப்படி நடந்திருக்கும்? பிள்ளைகளை லவ் பண்ணக்கூடாதுன்னு சொல்லி ப்ராமிஸ் வாங்கிண்ட்டுட்டார்… பாடச்சொன்னால் லவ் ஸ்டோரின்னு சொன்னதும் பாடாமல் நிறுத்திவிட்டார்…

கதம்ப உணர்வுகள் said...

இங்க குழந்தைகள் என்னடான்னா சளசளன்னு தன் கண்ணோட்டத்தை கொட்டுகிறது.. என்னடி நமக்கு என்ன லவ் பண்ண கெமிஸ்ட்ரி வர்க் ஔட் ஆகலையான்னு.. ஆனால் அங்கே கெமிஸ்ட்ரிய விட ஹிஸ்ட்ரி தான் வர்க் ஔட் ஆகுதுன்னு.. பழங்கதை.. பரம்பரையா வரும் கதை.. காதலே கூடாதுன்னு சொல்ற கதை… தாத்தா காலத்தில் இருந்தே இது தொடர்கிறது போலும்… ஆனாலும் இந்தக்காலத்து குழந்தேள் எப்படி லவ் பண்ணாம இருக்கும்? யோசிக்க வைக்கிறது தானே? அதை எல்லாம் புறம் தள்ளவைத்து விடுகிறது குழந்தைகள் அழகாய் தத்து பித்துன்னு லவ் பற்றி தெரியவில்லை என்றாலும் இசைப்பற்றிய ஞானம் சங்கீதாவுக்கு இருக்கிறது.. பெயிண்டிங்கில் அரைகுறையாய் ஒரு குழந்தை என்று….

அம்மா அப்பா திரும்ப வந்தாச்சு வந்தாச்சு.. மூச்.. பேச்சு சத்தம் நின்றுவிட்டது.. அம்மா சமாளிக்கிறா சொல்லி.. திடிர்னு பாடாம இறங்கினது அப்பாக்கு மனசே ஆகலைன்னு…

எனக்கு மட்டும் குடைந்துக்கொண்டே மூளையில்.. அப்படி என்னத்தான் இருக்கும்னு.. அப்பா பாட ஆரம்பிச்சுட்டார்.. குழந்தேள் ரசிக்க ஆரம்பிச்சாச்சு.. எப்போதும் போல்.. அம்மாவோ அப்பாவின் இசையில் கிறங்கி அப்படியே அப்பாவின் மூடியக்கண்களின் லயிப்பில் தன்னை மறந்து.. அப்பாவின் சிதைந்த காதலை மறந்து… சிதைந்த காதல் தன்னால் உயிர்த்ததை மறந்து… மீண்டும் துளிர்த்த இந்த காதலில் விளைந்த மூன்று முத்துக்களின் முன் அமர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கும் அம்மாவின் லயிப்பும் ரசனையும் அப்பாவின் பாட்டிலும் அன்பிலும் தன்னையே மெய் மறந்து…..

கதம்ப உணர்வுகள் said...

கதை மிக எளியது தான். ஆனால் அதில் ஆழ்ந்த வரிகளின் பிரமிப்பு வாசித்து முடித்தப்பின்னரும் மனதில் மெல்லிய மணம் வீசும் மல்லிகைப்பூவின் சுகந்தமாய்…

அருமையா எழுதறீங்கப்பா ரிஷபா… எழுத்துகளில் ஆளுமை, கம்பீரம், அன்பு, கனிவு, பாசம் அப்டின்னு எத்தனை பரிணாமம்…. லயித்து தான் போகிறது மனசு… வசீகரிக்கும் எழுத்துகளில்….

கதம்ப உணர்வுகள் said...

இரண்டு கதையும்... டபுள் தமாக்கா...

அற்புதம்பா ரிஷபா....

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரிஷபா....

Ranjani Narayanan said...

இசையின் இரண்டாவது கதை 'காற்றில் வரு கீதமே' பாடலை கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது.