January 11, 2016

அம்மு 14




”அப்போ நீ எங்க வீட்டு வழியாத்தான் போவே.. சரியா ஏழு மணி. பிரவுன் கலர் பேண்ட்.. கோடு போட்ட ஷர்ட்.. இது அடிக்கடி நீ போடற ட்ரெஸ். பக்கத்து.. எதிர் வீட்டுல எல்லாம் எப்பவோ வாசல் தெளிச்சு கோலம் போட்டிருப்பா. நான் ஏழு மணிக்கு நீ வரும் போதுதான் வாசல் தெளிப்பேன். உன்னைப் பார்க்கணும்னு.”
என் எதிரில் அம்மு. இது அவள் ஆபிஸ். ஆடிட் ஆபிசில் வேலை. ஆடிட்டர் இப்போது வர மாட்டார்.
“லெமன் டீ குடிக்கிறியா”
“உனக்கு எதுக்கு சிரமம்”
“எனக்கு இப்போ டீ குடிக்கிற டைம். உனக்கும் சேர்த்து செய்வேன்.. பிடிக்கும்னா”
“ம்ம்”
மஞ்சள் பந்து இரண்டாய்ப் பிளந்து தன் ஹ்ருதயம் காட்டியது என்னைப் போல. ஒரு சொட்டு என் கன்னத்தில் தெறித்தது. உதட்டில் ஒன்றுமாய்.
பழங்கதை புளிக்குமா என்ன..
பஸ்ஸை விட்டு இறங்கியபோது சற்று முன் நடந்து கொண்டிருந்த அம்மு கண்ணில் பட்டாள். அதே பஸ்ஸில் தான் வந்திருக்கிறாள். எனக்கு இந்த ஏரியா புதுசு. அலுவலக நிமித்தம் வந்திருக்கிறேன். கண்ணைக் கட்டி காட்டில் விட்ட திகைப்பு. நண்பர் சொல்லியிருந்த வழி திடீரெனக் குழப்பியது. இடது பக்கம் திரும்பணுமா.. வலது பக்கமா..
அந்த நிமிஷம் தான் எதிரில் அம்மு.
சாலையைக் கடக்கத் திரும்பியவள் என்னைப் பார்த்து விட்டாள். முதலில் அனிச்சையாய்.. பின் ஞாபக முடிச்சில் ஏதோ நெருட பின் கவனமாய்..
“கண்ணன்”
“அம்மு”
நாங்கள் பிரிந்து பல வருடங்கள் ஆச்சு. இதைச் சொன்னால்தான் தெரியும். இந்த நிமிஷமோ நாங்கள் பார்த்துக் கொண்டபோது.. விட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பிக்கிற.. நேற்றிரவு சந்தித்துப் பிரிந்து.. இதோ இப்போது மீண்டும் பார்த்துக் கொள்கிற அதே உணர்வு.
அம்முவிடம் நான் எப்போதும் உணர்வது இவ்வித சௌகர்ய நிலை. பிற பெண்கள் போல ‘ஏண்டா என்னை மறந்துட்ட..” என்கிற கூண்டில் ஏற்றுகிற வசனங்கள் கிடையாது.
வந்தியா.. இந்தா இதைச் சாப்பிடு.. பேசு.. நானும் பேசறேன்.. கிளம்பறியா.. சரி போயிட்டு வா..மறுபடி எப்போ வருவ என்கிற கேள்வி இல்லை.
அவள் கண்களில் எப்போதும் அலையடிக்கிற என்மீதான ப்ரியம். பார்வை என் தலை முதல் கால் வரை ஸ்கான் செய்து நான் நலமாய் இருப்பதை உறுதி செய்து கொள்கிற வாத்சல்யம்.. பேசித் திரும்பும்போது விரல் கூட படாத அந்தப் பேச்சின் முடிவில் பார்வையால் அளித்த அழுத்த முத்தம்.
அம்மு…
“கண்ணா.. நிகழுக்கு வா” என்றாள் அம்மு.
“அம்மு.. “
“நீ என்னைத் தேடவே இல்லை.. இல்லியா”
“அப்படி இல்லை.. நான் உன்கிட்ட பேசினது ஞாபகம் இருக்கா”
இந்தக் கேள்விக்குத்தான் முதல் பாரா. அவ்வளவையும் ஞாபக பீரோவைத் திறந்து சொல்லிக் கொண்டே போனாள். இரண்டு வருடமாய் அவளை என் பார்வையால் துரத்தியது.. பஸ்ஸில் என் கவிதை வந்த கணையாழி இதழை அவள் பிரித்து வைத்திருந்தது.. பஸ்ஸை விட்டு இறங்கியவளிடம் என் காதலைச் சொன்னது.. அவள் மென்மையாய் தன் நிலை சொல்லிப் போனது.. பிறகு அவள் ஒரு சிநேகிதியிடம் சொல்லி அனுப்பியது.. ‘என்னை மறந்துரு’
“உன்கிட்ட நான் கேட்ட கேள்விக்கு எவளோ ஒருத்தி.. ஸாரி.. என் கிட்ட வந்து பேசினது எனக்குக் கோபம் அம்மு”
“நீ ரொம்ப டீஸண்ட்டா பேசினதா அவ சொன்னா”
“அவகிட்ட எப்படி என் கோபத்தைக் காட்டறது”
“உன்னை அவ ரொம்பப் புகழ்ந்தா.. என் முடிவு தப்புன்னு திட்டினா”
“ப்ச்.. அது எனக்குத் தெரியாது.. டெல்லிக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனேன்.. நானாவே கேட்டு.. அம்மா.. வசந்திலாம் அழுதா.. ப்ரமோஷன் கிடைக்கும் சம்பளம் கூட வரும்னு பொய் சொன்னேன்”
“ஆனா என்னைத் தேடல நீ”
“நீ என்ன ஆனேன்னு யார்கிட்ட போய் கேட்கறது.. நீ குடியிருந்த வீட்டுல வேற யாரோ இருந்தாங்க.. வசந்திகிட்ட நாசூக்கா கேட்டா அவ ஒழுங்கா பதில் சொல்லல”
டீ குடித்த டம்ளரைக் கை நீட்டி வாங்கிக் கொண்டாள்.
“நான் வாஷ் பண்ணித் தரேனே”
“கொண்டா” அவள் குரலில் அழுத்தம். எதிலும் தீர்மானமாய் முடிவு எடுப்பவள்.
”எனக்கு ஒரு பையன்.. உனக்கு”
“பொண்ணு”
“அவ பேர் அம்முவா” லேசான கேலி அவள் குரலில்.
“எதுக்கு.. தெனம் சாகவா”
அம்மு டம்ளர் அலம்புகிற சாக்கில் எழுந்து போய் விட்டாள். நான் உட்கார்ந்திருந்தேன். எனக்குள் லேசான படபடப்பு. என்ன ஒரு நையாண்டி.. என்னை நிராகரித்ததும் இல்லாமல்..
”இப்போ என்ன திடீர் விஜயம்”
“ஆபிஸ் வேலை”
“ம்ம்.. நானும் உன்னைப் பத்தி விசாரிச்சேன்.. நீ டெல்லி போனது.. வசந்திகிட்ட பேசினேன்.. நீ என்னைக் காதலிச்சதையும் சொன்னேன்.. என் நிலையையும்”
“அவ சொல்லவே இல்லியே”
“சொல்லாதேன்னு சொல்ல மாட்டேன்.. உனக்கு அவசியம்னு பட்டா உன் அண்ணன் கிட்ட சொல்லுன்னேன்.. சொல்லியிருக்க மாட்டா”
என்ன ஒரு திமிர். மனிதரைத் தன் இஷ்டத்திற்கு வளைக்கிற சாதுர்யம்.
இன்னொன்றும் எனக்குப் புரியவில்லை. அம்மு என்னை நிஜமாய் நேசித்தாளா.. இது என்ன கண்ணாமூச்சி விளையாட்டு..
“நிறைய புக் படிப்பியே.. இப்பவும் அந்தப் பழக்கம் இருக்கா”
“ம்ம்”
”மூணு வருஷமா கையில வச்சிண்டு சுத்தறேன்.. என்னிக்காவது உன்னைப் பார்ப்பேன்னு தெரியும். மனசு சொல்லிண்டே இருந்தது.. உன்னைப் பார்க்கும்போது தரணும்னு”
கைப்பையில் பேப்பர் பேக்கில் இருந்த புத்தகத்தை எடுத்து என்னிடம் நீட்டினாள்.
“உள்ளே எதுவும் எழுதல.. எழுதணுமா என்ன”
வாங்கிக் கொண்டேன்.
ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். ரொம்ப இயல்பாய். எதையும் இழக்காதவள் போல. நேரம் ஓடியது. சட்டென்று நிறுத்தினாள்.
”வா.. நீ போகவேண்டிய இடம் பக்கத்துலதான்.. வழி சொல்றேன்”
எழுந்தேன்.
“பைக்குள்ள வச்சிக்கோ”
புத்தகத்தைப் பையில் திணித்துக் கொண்டேன். லிப்டில் இறங்கினோம்.
“உன் ப்லாக் நல்லா இருக்கு.. எழுதறதை விட்டுராதே”
“எப்படித் தெரியும்”
“ஒரு கமெண்ட் போட்டிருந்தேனே..”
அது நீதானா..
“எனக்கு வச்ச இன்னொரு பேர் அது” சிரித்தாள்
தெருவில் நின்று தொலைவில் இருந்த பில்டிங்கைக் காட்டினாள்.
“நாலாவது மாடிலன்னு நினைக்கிறேன்.. அந்த ஆபிஸ்”
என்னை ஒரு தடவை நன்றாகப் பார்த்தாள். ‘போயிட்டு வரேன்’ என்று கூடச் சொல்லவில்லை. சொல்லணுமா என்ன.. திரும்பி அவள் ஆபிசுக்குள் போய்விட்டாள்.
காலச்சக்கரம் ஒரு முறை நன்றாகச் சுழன்று பழைய கண்ணனை மீட்டெடுத்து வந்து மீண்டும் கத்தியால் அழுந்தக் குத்தியது அப்போது.

படம் உதவி கூகிள்  நன்றி திரு. மாருதி அவர்கள்


8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவள் கண்களில் எப்போதும் அலையடிக்கிற என்மீதான ப்ரியம். பார்வை என் தலை முதல் கால் வரை ஸ்கான் செய்து நான் நலமாய் இருப்பதை உறுதி செய்து கொள்கிற வாத்சல்யம்.. பேசித் திரும்பும்போது விரல் கூட படாத அந்தப் பேச்சின் முடிவில் பார்வையால் அளித்த அழுத்த முத்தம்.//

ஆஹா ...... என் எழுத்துலக மானஸீக குருநாதரின் ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு எழுத்திலும், அம்மு அளித்த அந்த அழுத்தமான முத்தத்தைக் கண்டு ரஸிக்க முடிகிறது, என்னால்.

15வது அம்முவுக்காக வெயிட்டிங்.

அன்புடன்
வீ......ஜீ

Thenammai Lakshmanan said...

அஹா எழுத்தால கூட கத்தி மாதிரி குத்த முடியுமா. கண்ணனுக்கு வலித்தது போல வலிக்குதே. ஹ்ம்ம் அம்முபோல சிலரும் இருக்கத்தான் செய்றாங்க. சமயத்துல வலியோட அதையும் ரசிக்கத்தான் செய்றோம்..

ezhil said...

அம்மு வழக்கம் போல் அசத்தல்...

”தளிர் சுரேஷ்” said...

ஒவ்வொரு அம்முவும் அசத்துகிறார்கள்! தொடர்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

அம்மு.... அம்மு.... ஒவ்வொன்றும் ஒரு விதம்.... ஆனால் அனைத்துமே பிடித்த விதம்!

தொடர்கிறேன்.

Yarlpavanan said...

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

ப்ராப்தம் said...

இன்று தான் முதன் முதலாக உங்க பதிவு பக்கம் வந்திருக்கேன். நீங்க என் பக்கம் வந்து ஏதானும் ஸெட்டிங்க்ல மாத்தணுமான்னு கேட்டீங்க. உடனே வந்துட்டேன். யாரு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு காத்துட்டு இருந்தேன். ப்ளாக்ல ஃபாலோவர் கெட்ஜட் எப்படி இணைக்கணும்???? சொல்லி தரீங்களா?? ப்ளீஸ்

ப்ராப்தம் said...

முதலில் போட்ட கமண்ட் வந்ததா உங்க பக்கம் ஃபாலோவரா இணைச்சுகிட்டேன்