கூட்டம் நெருக்கித் தள்ளியது. இடிபடாமல தேர் பார்க்க செய்த முயற்சிகள் வீணாகிப் போனது. எவ்வளவு தூரம்தான் பின்னால் நகர்வது?
"இந்த வருசம் கூட்டம் அதிகந்தான்" என்றார் சண்முகம்.
என் ஆமோதிப்பை அவர் கவனிக்குமுன் இன்னொரு தரம் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.தெருமுனை திரும்பிய தேர் ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது. பாதித் தெரு வரை ஜனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள்.கடை வீதிப் பக்கம் நின்றிருந்தோம். தேர் பார்த்து விட்டு அப்படியே கூட்டத்தில் நெருக்கப்படாமல் பக்கத்துத் தெருவிற்கு நகரும் உத்தேசத்துடன்.
"சித்திரைத் தேர்க்குத்தானே சுத்துப்புற கிராமத்திலேர்ந்து பேயாக் கூட்டம் வருது" என்றேன்.
நேர்த்திக் கடன் செலுத்த கால் நடை வரிசை வேறு. நெரிசலில் அதற்கும் அவதி.
"என்ன ஒத்துமையா நிக்கிறாங்க" என்றார் சிலாகிப்புடன்.
என் பதில் வேறாக இருக்கும்போது 'ம்' கொட்டிப் பழகியவன்.சண்முகம் என்னை நெருங்கி நின்றார். அலங்கரிக்கப்பட்ட தேர் தடதடவென வருகிற அழகை கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தோம்.
"சாமி தெரியல.. படுதா இறங்கி மறைக்குது" என்றார்.
"ஆமா.. நல்லா இழுத்துக் கட்டலை போல"
தேர் நெருங்கி வரவர தள்ளுமுள்ளு அதிக்மானது. கடை ஓரம் ஒதுங்கி நின்றதால் எங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டோம்.
"ஆச்சு.. இந்தக் கூட்டத்துக்கு.. ஒம்பது மணிக்கே நிலைக்குப் போயிரும்"
"ஒரு நாக் கூத்து"
தேர் ஓடிவரும்போது இனம் புரியாத கவர்ச்சி இருக்கிறது. யாரோ நம்மைத் தேடி வருகிற மாதிரி.. அத்தனை பெருசாய் அணைத்துக் கொள்ள வருகிற மாதிரி.. மனச்சுமை களைந்து.. மயிலிறகாய் மாற்றி.. ஆலிங்கனத்தில் சுகம் தரப்போவது போல..சண்முகத்திடம் சொன்னேன்.
"என்னமோ ஒரு நிலை கொள்ளாத பரவசம்.."
"நாம சின்னப் புள்ளைங்களா மாறிடறோம்ல.."
தேர் கிட்டே வந்ததில் தேர்த்தட்டு புலனானது. குருக்கள் நின்று துண்டை வீசிக் கொண்டிருந்தார். துண்டின் அசைவில் தேரின் இயக்கம் நிர்ணயிக்கப் படுகிறமாதிரி அவரிடம் ஒரு அலட்டல் பெருமை.சண்முகம் 'ஹர.. ஹர' என்றார்.நான் மெளனமாய் மேலே பார்த்தேன். பிரார்த்தனை அற்ற மனசு என்னவென்று வேண்டிக் கொள்ள?சட்டென்று கலகலப்பு தொலைந்து மனசுக்குள் கனம் அப்பியது.
"அம்மையப்பா" என்ற அலறல் கேட்டது.கன்னத்தில் படபடவென போட்டுக் கொண்ட கிழவி கைகளை உயரே தூக்கி இன்னொரு தரம் கூவினாள்."அம்மையப்பா.."பேரன், பேத்தி பார்த்த கிழவிக்கு இன்னமும் அம்மையப்பன் ஆசை போகவில்லை.
அம்மா.. அப்பா.. மனசு கேவியது. என் கண்களை சண்முகம் படித்திருக்க வேண்டும். என் கையைப் பற்றி அழுத்தினார். சிரித்தேன். ஒட்டாத சிரிப்பு.தேர் விடுவிடுவென நகர பின்னால் தேர்க் கட்டைகளுடன் ஆட்கள் ஓடினார்கள்.
"கூட்டம் குறையறாப்ல தெரியலே" என்றார் பாதி அலுப்பாக.
"கொஞ்சம் பொறுத்துப் போவோம்"
"ராஜகோபுரம் பக்கம் போயிட்டா.. இவ்வளவு நெரிசல் இருக்காது"
தேர் வேகமாய் தெருவின் இன்னொரு மூலைக்கு ஓடித் திரும்ப இயலாமல் தயங்கியது.கூட்டம் சற்று கலைந்து இடைவெளி கிடைத்ததில் நானும் அவரும் நகர்ந்தோம்.
"நல்ல கூட்டம்" என்றார் மீண்டும்.
"வெக்கை தாங்க முடியலே" என்றேன் நனைந்த சட்டையுடன்.
அந்த நிமிஷம் மேலே ஜிவ்வென்று காற்று பட்டு நகர்ந்தது. மறுபடி விட்டு விட்டு வீசியது.
"என்ன இது யாரோ வீசறாப்ல" என்றார் சண்முகம்.
இருவருமே நிமிர்ந்து பார்த்தோம்.பத்தடி முன்னால் அந்தப் பெரியவர். சவுக்குக் கட்டையில் பெரிய மயில் விசிறி கட்டி மேலே உயர்த்தி விசிறிக் கொண்டிருந்தார்.அடர்த்தியாய் மயிற்தோகைகளால் ஆன விசிறி. பெரியவர் வாகாக கடை வீதியின் மையத்தில் நின்று இரு கைகளாலும் இறுகப் பிடித்து முக மலர்ச்சியாய் விசிறிக் கொண்டிருந்தார்.
"என்ன மனசு" என்றார் சண்முகம்.
அதே போல நானும் உணர்ந்தேன். நியாயம்தான். தண்ணீர்ப்பந்தல் ஒருவித சேவை என்றால் விசிறியது இன்னொரு விதத்தில்.எப்படித் தோன்றியது.. கை விசிறி நன்கொடை தருவது வழக்கம். தானே பெரியதாய் விசிறி செய்து சலிக்காமல் வீச யார் சொல்லித் தந்தது?பெரியவர் வேட்டியை இழுத்து இடைஞ்சலின்றி சொருகிக் கொண்டு வீசியதில் ஒரு அழகு இருந்தது.பத்து வினாடியாவது அவர் வீசும் காற்று பட்டுத்தான் ஜனக்கூட்டம் அந்த இடத்தைக் கடக்க முடியும்.திறந்த மார்பு.. வியர்த்துக் கொட்டியது வீசியவருக்கு. கண்களில் கருணை வரம் வாங்கிக் கொண்டு வந்த மாதிரி மயில் விசிறியைச் சுழற்றினார்.சண்முகம் என் கையைப் பற்றினார்.
"கொஞ்சம் இரு"
சட்டைப் பையைத் துழாவி ஐந்து ரூபாய்த் தாளை எடுத்தார்.
"இதை அவருக்குக் கொடுப்பமா?"
"ம்"
அருகில் போய் பணத்தை நீட்டவும் பெரியவர் விசிறுவதை நிறுத்தியது தெரிந்தது. நோட்டை வாங்கவில்லை. என்ன சொன்னாரென்றும் புரியவில்லை.தலையைச் சரித்துக் கொண்டு சண்முகம் தளர்ந்து திரும்பினார்.
"என்ன சொன்னார்"
"பணம் வேணாமாம்"
"ஓ.."
"உதவணும்னு நினைச்சேன்" என்றார் பெருமூச்சுடன்.
நான் எதுவும் சொல்லவில்லை.விசிறியவர் யாரோ பணம் தரப் போகிறார்கள் என்பதற்காகச் செய்யவில்லை. தனி ரகம். மனசைத் திருப்திப்படுத்த செய்கிற ரகம் ஜனம் வேறு, தான் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், 'தன் கடமை' என்கிற மாதிரி, தன்னால் முடிந்ததைச் செய்கிற தோரணையில் வந்து நின்று வீசுகிறார்.
'நல்ல மனுசங்க கொஞ்சம் பிடிவாதமாத்தான் இருப்பாங்க போல'
மனசுக்குள் வந்த விமர்சனம் உடனே அம்மா, அப்பா ஞாபகத்தை மீண்டும் கொணர்ந்தது.
"உன்னோட இருக்கக்கூடாதுன்னு இல்ல.. இங்கே என்ன வசதிக் குறைவு சொல்லு"
"இல்லம்மா.. எனக்கு சங்கடமா இருக்கு. நீங்க கிராமத்திலேயும் நான் டவுன்லயும் பிரிஞ்சு.."
"இதுல என்னடா.. உன் வேலை.. நீ அங்கே இருக்கே.. இங்கேர்ந்து போவலாம்னா.. தெனம் ரெண்டு மணி நேரம் பிரயாணம் பண்ணனும்.. உனக்கு சிரமம்"
அம்மாவின் குரலில் யதார்த்தம்.
"உங்க கூட சேர்ந்து இருக்க.."
"அட அசட்டுப் புள்ளை.. லீவுல வா.. பண்டிகைக்கு வா.. உடம்புதாண்டா பிரிஞ்சு இருக்கு. எங்க மனசுல எப்பவும் நீதான். உங்குடும்பந்தான்"
வார்த்தைகள். தப்பு கண்டு பிடிக்காத அம்மா. குற்ற உணர்வில் கரைந்து போக விடாத பாசம்.போக முடியவில்லை. நினைத்தபடி செய்ய முடியாதவந்தான் மனுசன். லீவில் வீட்டோடு கிடக்க நேரிட்டது. பண்டிகைக்கு வீட்டைப் பூட்ட வேண்டாம் என்று தடுக்கப் பட்டது. மாசம் ஒரு தடவையாவது என்று தீர்மானித்து, கடைசியில் வருசம் ஒருதடவை நிறைவேற்றுவதே சிரமமானது.மனிதன் சுயநலமானவன். தன் தீர்மானங்களை நியாயாப்படுத்திக் கொள்வதில் சமர்த்தன். அம்மாவின் பாஷையில் நானும் சமர்த்து.அழுதிருக்க வேண்டும் நான். சண்முகம் திகைப்புடன் என்னை உலுக்கினார்
என்ன ஆச்சு"
"ஒண்ணுமில்லே"
"போவோமா.. அப்படியே திகைச்சாப்ல நிக்கவும் தடுமாறிட்டேன். திடீர்னு நினைவு தப்பிப் போனவன் மாதிரி"
அவர் பேச்சு பாதி கேட்டது. என் கவனம் முழுக்க மயில் விசிறிப் பெரியவரிடம். எதுவும் எதிர்பாராத மனிதர். என் அம்மா, அப்பாவைப் போல.'செய்யிறதுக்குத்தானே பொறவி..திருப்பி எதிர்பார்க்கறதுக்கு இல்லே.. செய்யறதுல வர்ற சந்தோஷம்.. நெறைவு.. அது போதும் என்று சொல்லாமல் சொல்கிற ஜீவன்கள்.அவருக்கு ஏதாச்சும் பண்ணனும் அவர் குளிர்ந்து போகிற மாதிரி.. என் மனசு நிறைகிற மாதிரி.படபடப்பு அப்பிக் கொண்டது.கோபுர வாசலைத் தாண்டும்போது இடப்புறம் பார்வை தற்செயலாகத் திரும்பியது. சட்டென்று நின்றேன்.
"கொஞ்சம் பொறுங்க"
கூட்டத்தைப் பிளந்து ஓடினேன்.
"தண்ணியா சீவுங்க"
இளநீர்க் காய்களில் தேடியெடுத்து பதமாய்ச் சீவி ஸ்ட்ரா சொருகிக் கொடுத்தான். அவனிடம் பேரம் பேசக்கூடத் தோன்றாமல் கேட்ட தொகையைக் கொடுத்தேன்.சண்முகம் அப்படியே நின்றார்.சீவிய இளநீருடன் திரும்பி ஓடினேன்.பெரியவரை நெருங்க நெருங்க மீண்டும் காற்று உடம்பில் பட்டது.
"இந்தாங்க" என்றேன் மூச்சிரைப்பாய்.
விசிறுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். என்ன செய்யப் போகிறார்..தவித்துப் போனேன் அந்த நிமிடத்தில்.
"அட.. எளநியா.. எனக்கா"
குரலில் குதூகலம்.விசிறிக் கட்டையை தோளில் சார்த்திக் கொண்டு இரு கைகளாலும் இளநீர்க் காயைப் பற்றி உறிஞ்சினார்.காலியானதும் திருப்பி வாங்கிக் கொண்டேன்.மறுபடி விசிறல். திரும்பி நடந்தவன் முதுகில் பட்டு நகர்ந்த குளிர்ச்சிக் காற்று!
ஏனோ தெரியவில்லை.. அந்த நிமிஷம் மனசும் குளிர்ந்து போனது எனக்கு.
(தேவி வார இதழில் பிரசுரமான கதை )
9 comments:
//"அட.. எளநியா.. எனக்கா"
குரலில் குதூகலம்.விசிறிக் கட்டையை தோளில் சார்த்திக் கொண்டு இரு கைகளாலும் இளநீர்க் காயைப் பற்றி உறிஞ்சினார்.காலியானதும் திருப்பி வாங்கிக் கொண்டேன்.மறுபடி விசிறல். திரும்பி நடந்தவன் முதுகில் பட்டு நகர்ந்த குளிர்ச்சிக் காற்று!//
அருமையான வார்த்தைப் பிரயோகங்கள். ஒரு நல்ல சிறுகதையை வாசித்த திருப்தி.
ரேகா ராகவன்.
கதை மாதிரி தெரியவில்லை. உங்க சொந்த அனுபவம் மாதிரி தெரியுது. காற்று கற்பனையில் வீசினாலும், நிஜத்தில் வீசினாலும் சுகம் சுகமே!
மிக அருமையான நடை.ஆம்,காற்றுதான் எவ்வளவு அழகான மொழி வைத்திருக்கிறது வாழ்வை உணர்த்த.
முக்கியமாய் எதிர்காற்று!
சிறுகதை ரொம்ப பிடிச்சிருக்கு ரிஷபன்.
மிக்க நன்றி கிருபா நந்தினி (ஹை, கண்டு பிடிச்சிட்டீங்க ), பா. ராஜாராம் (தங்கள் வரவும் பிடிச்சிருக்கு)
சொந்த அனுபவமோ, கதையோ - என்னவாக இருந்தாலும் நெஞ்சை தொட்டது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அதுவும் பலன் எதிர் பார்க்காம செய்வதில் உள்ள ஆனந்தம் செய்து பார்த்தால் தான் புரியும்.
வெங்கட் நாகராஜ்.
புது தில்லி
ஒரு நல்ல கதையைப் படித்த நிறைவு.
பிரியத்தின் காற்று சுகானுபவமாக இருந்தது......பூங்கொத்து!
நல்ல கரு, நடை, கதை.
காற்றின் மொழியில்
அம்மை அப்பாவையும்
எதிர்பார்ப்பே... அற்ற
செயல்களால், நெஞ்சின்
அடியில் மின்னும்
ஆற்று வண்டலாய்
படிந்தது கிளற
கண்ணீரில் தளும்புகிறது
அவர் வீசிறிய காற்று.
Post a Comment