January 06, 2010

சிநேகிதியே

"இருபத்து நாலு மணி நேரமும் டிவி பார்க்கிறேன்.. ஆடியோ .. வீடியோ .. இல்லாம .."
என் சிநேகிதியைப் பார்க்க அவள் வீட்டுக்கு போனபோது சிரிக்காமல் சொன்னதுதான் மேலே கொடுத்த கமெண்ட்!வேலைக்கு போய்க் கொண்டிருந்தவள் வேலையை விட்டாள்.
விருப்ப ஓய்வு.. மகள்.. மகனுக்கு திருமணம் செய்தாள் ..
எதையுமே இயல்பாக எடுத்துக் கொள்ளும் அவளுக்கு கவிதை.. கதைகளில் ஆர்வம்.
'நீ எழுதலாம்பா ' என்றால் சிரிப்பாள் .
"லெட்டர் எழுதவே சோம்பேறித்தனம் .. கதை எல்லாம் உனக்குத்தான்.."
ஆனால் பேச்சில் சரளமாய் வார்த்தைகள் வந்து விழும்..
என்னைவிட வயதில் மூத்தவள் என்கிற உணர்வே எனக்கு வராது.. அத்தனை சௌஜன்யம் ..
இயற்கை அதன் போக்கில் விளையாட்டு விதிகளை எழுதி வைத்திருக்கிறது ..
என் சினேகிதிக்கும் ..
அவள் மாமியார் !
பத்து வருடங்களாய் படுத்த படுக்கை..
அதற்காகத்தான் இவள் தன் பேங்க் வேலையை விட்டதும்.
பக்கத்திலேயே இருந்து ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல பார்த்துக் கொண்டாலும்.. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவள் மாமியார் மனநலமும் பாதிக்கப்பட்டதில் ..
'டிவி போடாதே ..'
'பக்கத்திலேயே ஒக்காரு ..'
சமைக்க.. அல்லது தன் வேலைகளுக்கு எழுந்து போனால் ..
'அதுக்குள்ளே எங்கே போயிட்ட'
'ஏண்டி.. நான் படுத்துட்டா வாய்க்கு ருசியா எதுவும் தரக் கூடாதா..'
'என்னம்மா வேணும் '
'கை முறுக்கு '
அடுப்படி போனால் 'எங்கேடி போயிட்ட .. வா.. எம்பக்கத்துல உக்காரு..'
சிநேகிதியின் கணவன் வெளியூர் மாற்றல்.. மாதம் ஒரு முறை வந்தவர்.. இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வருகிறார்.. ' தன் அம்மாவையே அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை..
'கோவிலுக்கு போவியா ' என்று நான் கேட்டேன் ஒரு முறை.
புன்னகையுடன் சுவர் படத்தைக் காட்டி கை கூப்பினாள்.
இது எல்லாம் 'அவள் தலைவிதி ' என்று உறவினர் சிலர் தீர்ப்பு வழங்கி விட்டார்கள் ..
'உனக்கு கஷ்டமா இல்லியா.. '
கேட்டிருக்கக் கூடாதுதான் .. கேட்டு விட்டேன்.. பொறுக்க மாட்டாமல் ..
'நீ என் பிள்ளையா இருந்தா எனக்கு செய்வாய் தானே ..'
என் கண்களில் நீர். தலையாட்டினேன் பேசாமல்..
'அதைத் தானே இப்ப நான் செய்யறேன்.. '
இப்போது அவள் புன்னகை சற்று கூடுதலாகவே ஜொலித்தது.

11 comments:

Chitra said...

தான் அம்மாவையே அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.. ......என்ன கொடுமை சார், இது?
"என் பிள்ளையாய் நீ இருந்தால் செய்வாய் தானே?"
அந்த மகன் மட்டும் ஏன் அப்படி யோசிக்கவில்லை. நெஞ்சை நெகிழ வைத்து விட்டார்கள். அக்கா நலனுக்கு பிரார்த்தனை.

பலா பட்டறை said...

வயதானால் வரும் தனிமையும் ... வாழ்வின் மீது பிடிப்பும் செய்யும் கோலங்கள் இவை.... குழந்தைதான் என்ன செய்ய ..??

கமலேஷ் said...

மிகவும் வலியுடன் முடிகிறது....நெகிழ வைக்கிறது...

thenammailakshmanan said...

//'நீ என் பிள்ளையா இருந்தா எனக்கு செய்வாய் தானே ..'
என் கண்களில் நீர். தலையாட்டினேன் பேசாமல்..
'அதைத் தானே இப்ப நான் செய்யறேன்.. '
இப்போது அவள் புன்னகை சற்று கூடுதலாகவே ஜொலித்தது.//

fantastic Rishaban

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

என் பிள்ளையாய் இருந்தால் நீ செய்வாய் தானே? இந்த மாதிரி செண்டிமெண்ட்டை
'டச்' செய்து தான் நிறைய காரியத்தை
சாதித்துக் கொள்கிறார்கள். படைப்புக்கு
பொருத்தமான அந்த படம் சூப்பர்.
படித்து முடித்து விட்டு, படத்தினை ஒரு நிமிடம்
பார்த்தேன்! நிறைய விஷயங்களை
சொல்லியது அந்த படம்!
வாழ்த்துக்கள், ரிஷபன்!


அன்புடன் ஆர்.ஆர்.

பூங்குன்றன்.வே said...

வாழ்வியலையும்,மனிதத்தையும் உணர்த்தும் நல்ல இடுகை .வாழ்த்துகள் நண்பா.

வி. நா. வெங்கடராமன். said...

மனதைத்தொட்டு விட்டது உங்கள் இடுகை. புகைப்படம் உங்கள் இடுகைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்து உள்ளது.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

மோகன் குமார் said...

//என் பிள்ளையாய் இருந்தால் நீ செய்வாய் தானே? இந்த மாதிரி செண்டிமெண்ட்டை
'டச்' செய்து தான் நிறைய காரியத்தை
சாதித்துக் கொள்கிறார்கள். //

சரியாய் சொன்னார் ஆர். ஆர். அவர்களை நன்கு பார்த்து கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்பது.. இதற்க்கு நல்ல doctor-இடம் counselling தான் செய்ய வேண்டும்

ரிஷபன் said...

டாக்டர் சொல்லிவிட்டார் மோகன்.. வயதானது மட்டுமின்றி இத்தனை நாட்களாய் படுக்கையில் இருந்தது மன நலமும் பாதிக்கப்பட்டிருப்பதை.. எண்பது வயது மூதாட்டிக்கு இனி எந்த சிகிச்சையும் தர சாத்தியமில்லை.. என்கிறார்.

Ranjini said...

I don't know what I can write as a comment to this post. Similarly affected person or particularly her relatives should not read this and understand it is about them. - R. J.

Sathish said...

அடடே....வாழ்க்கை துளிகள்...