January 10, 2010

சங்கீத சாம்ராஜ்யம்


சங்கீத சாம்ராஜ்யம்..
தப்பா புரிஞ்சுக்காதீங்க..
எனக்கு சங்கீதத்துல ஸ ரி க ம ப த னி கூடத் தெரியாது..
ஆனா எனக்கு வாய்ச்ச நண்பர்கள்.. உறவு எல்லாம் தொடையைத் தட்டி விதம் விதமா தாளம் போட்டு முகத்தை எப்படி எல்லாமோ வச்சுக்கும்போது.. ஆஹா.. ஒரு அபூர்வ விஷயத்தை நாம மிஸ் பண்ணிட்டோமேன்னு 'காலங் கடந்து' ஞானோதயம் வந்தது.
சங்கீதம் தெரிஞ்சவங்க கிட்ட ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. எந்த சத்தம் கேட்டாலும்.. அது என்ன ராகம்னு தொளைச்சு எடுத்துருவாங்க.. பூபாளம்னா காலைல.. முகாரின்னா அழுகை.. அல்லது எமொஷன்.. கல்யாணின்னா சந்தோஷம்.. அம்ருதவர்ஷினின்னா மழை.. இப்படி கொஞ்சூண்டு ராக அடையாளம் வச்சுகிட்டு குப்பை கொட்ட முடியல என்னால.
என் நணபர் ஒருத்தர் எங்கிட்டே வந்து அஞ்சு நிமிஷம் பேசிட்டு “இது என்ன ராகம்”னதும் ஆடிப் போயிட்டேன். அவர்கிட்டே தப்பிச்சு ராகம் தெரிஞ்ச இன்னொரு நண்பரைப் பார்த்து ஆறுதல் அடையப் போனா.. அவரும் இதே கஷ்டம்தான் பட்டாராம்.
'பாடினா ராகம் சொல்லலாம்.. பேசினா எப்படிங்க சொல்றது?' என்று புலம்பினார்.
அவ்வளவுதான். இனி பொறுப்பதில்லை.. சங்கீதம் கத்துகிட்டே ஆகணும்னு ஒரு வெறி வந்திச்சு.ஆலோசனை கேட்டப்ப..வீட்டுலயும், நண்பர் வட்டத்துலயும் சொன்னாங்க..
'உனக்கு வாய்ஸ் இருக்கு (!) அது கொஞ்சம் பெருசாவே இருக்கு.. மைக் தேவைப்படாம கூட்டத்தை விரட்டற அளவுக்கு.. பெஸ்ட் இன்ஸ் ட்ருமென்டல் (மென்டல அழுத்தி )மியுசிக் தான் உனக்கு நல்லது.. அதுவும் ப்ளூட் மாதிரி கத்துக்க.. யாராச்சும் அடிக்க வந்தா தூக்கிகிட்டு ஓட ப்ளூட் தான் வசதி '
''அப்படிங்கிறே''
'ஆமா'
'எங்கள் தெருவுலயே ஒருத்தர்.. நாப்பத்தஞ்சு வயசு.. கல்யாணம் பண்ணிக்காம.. எப்பவும் விரக்தியா ப்ளூட் வாசிச்சிகிட்டு இருப்பார். அவர்கிட்ட போனேன்.
'ப்ளூட் இருக்கா.. எத்தனை கட்டை'
என்னைப் போல ஒரு அதிர்ஷ்டக்கட்டையிடம் அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன்.
ஆல் இந்தியா ரேடியோல அவருக்குத் தெரிஞ்ச ப்ளூட் வித்வான் கிட்ட வாங்கித் தந்தார். அவர் அளவுக்கு என்னால தம் கட்ட முடியல. என்னால முடியாம திணர்றப்ப.. 'ஊ ஊன்னு' ஏதோ ஒரு ராகத்தை வாசிச்சு 'இந்த மாதிரி எப்ப வாசிக்கறதுன்னு' பீதி கிளப்பினார்.
ஒரு மாசங்கூட போயிருக்க மாட்டேன். திடீர்னு ஆளைக் காணோம். விசாரிச்சா.. மனுஷன் இமயமலைக்குக் கிளம்பி போயிட்டாராம். ரொம்ப நாளா அவருக்கு இந்த லைப் போரடிச்சுதாம். அவருக்கு அம்மா மட்டும். அப்பா தவறிட்டார். அவங்களுக்காக இத்தனை நாள் இருந்தவர் திடீர்னு ஏன் கிளம்பிட்டார்னு அவங்க வீட்டுல யாருக்கு புரியல. (இதப் படிக்கற உங்களுக்கு புரிஞ்சாலும் சொல்லிடாதீங்க)
அவர் கொடுத்து வச்சது அவ்வளவுதான். ஒரு நல்ல சிஷ்யனை இழந்துட்டார்னு தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனா.. இந்த முறை வீணைக்குப் போனேன்.
குரு கேட்டார். 'வீணை இருக்கா.. எதிர் வீணையும் இருந்தா நல்லது'
'எதிர் வீட்டுல கேட்கட்டுமா மாஸ்டர்'
தலையில் அடித்துக் கொண்டார். வாரம் ரெண்டு கிளாஸ்தான். அதுவரை ஒழுங்கா வந்து கிட்டிருந்தவர் நான் சேர்ந்தப்புறம் பாதி நாள் காணாமப் போயிட்டார். அப்புறம் வாசல்ல 'இன்னிக்கு கிளாஸ் கிடையாதுன்னு' போர்ட் வைக்க ஆரம்பிச்சாங்க.
சரி .. வீணைக்கும் நமக்கும் ராசி இல்லைன்னு விட்டுட்டேன்.
என்னோட சங்கீத அவஸ்தைகளைத் தப்பா புரிஞ்சுகிட்டு இதே போல ஆர்வத்துல இருந்த இன்னொரு நண்பரும் எங்கிட்டே வந்தார். அவர் மிருதங்கம் கத்துக்க போயி அந்த வித்வான் மாரடைப்புல காலமான செய்தியை வருத்தத்தோட சொல்லிட்டு.. 'நமக்கு ப்ளூட் தாங்க பெஸ்ட்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு மாமி நல்லா சொல்லித் தராங்கன்னு ' என்னையும் அழைச்சார்.
'உன் கிட்ட ப்ளூட் இருக்கா. எங்கிட்ட இருக்குன்னு' பெருமை அடிச்சுகிட்டேன்.
மாசம் நூறு ரூபா. பீஸ் கொடுக்கற அன்னிக்கு மாமி ஹார்லிக்ஸ் தருவாங்க. ஏன்னா.. மூணு மாசமா எங்களோட போராடி.. 'காத்துதான் வருது' லெவல்ல இருந்ததால.
அவங்க சொன்னதுதான் பஞ்ச் டயலாக். 'எங்க வாசிப்பு எப்படின்னு' வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம கேட்டுட்டேன்.
'செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரின்னு என் குரு சொல்வார்.. நல்லா வாசிக்கலன்னா.. நீங்க இப்பதானே கத்துக்க ஆரம்பிச்சுருக்கீங்க.. போகப் போக வந்திரும்'
மாமிக்கு எங்க டியூஷன் ஆரம்பிச்ச ஆறாம் மாசம் ஸ்லிப் ஆகி கால் பிராக்சர்.
'உடம்பு நல்லாகட்டும்னு.. அப்புறம் கண்டின்யூ பண்ணலாம்னு' சிரிச்சுகிட்டே சொன்னாங்க.
'வேதனையிலும் எப்படி சிரிக்கறாங்கன்னு' நாங்க வீட்டுக்கு திரும்பும்போது பெருமையா பேசிகிட்டு போனோம்.
மறு நாள் ரெண்டு பேருமே சந்திச்சு ஒரே முடிவை சொல்லிகிட்டோம். 'சங்கீதம் புழைச்சுப் போகட்டும்.. விட்டுரலாம்'
இன்னமும் என் வீட்டில் அந்த இரண்டு புல்லாங்குழல்களும் என் அலமாரியில் பழங்கதைகள் பேசிக் கொண்டு இருக்கின்றன.. யாராவது வராமலா போய் விடுவார்கள்.. என் சங்கீத தாகத்தைத் தணிக்கும் குரு!

11 comments:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

தப்பா எடுத்துக்காட்டி ஒண்ணு
சொல்வேன்.....உங்களோட
இந்தப் பதிவிலே,'முகாரி'
கொஞ்சம் தூக்கல்!!!

Chitra said...

ஏன்னா.. மூணு மாசமா எங்களோட போராடி.. 'காத்துதான் வருது' லெவல்ல இருந்ததால. ................. ஹா, ஹா, ஹா..... நல்லா சிரிப்பு சாம்ராஜ்யம் நடத்துறீங்க.

VAI. GOPALAKRISHNAN said...

'நமக்கு ப்ளூட் தாங்க பெஸ்ட்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு மாமி நல்லா சொல்லித் தராங்கன்னு ' என்னையும் அழைச்சார்.
'உன் கிட்ட ப்ளூட் இருக்கா. எங்கிட்ட இருக்குன்னு' பெருமை அடிச்சுகிட்டேன்.

இந்த இடத்தைப்படித்ததும் சிரிப்பு தாங்க முடியாமல்
எனக்குப் புரை ஏறி விட்டது.

கேஷ் ஆபீஸ் பாலுவும், ரிடயர்ட் ஆன
மீசை நடராஜனும் இதே போன்ற அவர்களின் அனுபவத்தை
ஒரு நாள் என் எதிரில் பேசிக்கொண்டது ஞாபகம் வந்து விட்டது.

பாராட்டுக்கள் வை.கோபாலகிருஷ்ணன்

KALYANARAMAN RAGHAVAN said...

//மைக் தேவைப்படாம கூட்டத்தை விரட்டற அளவுக்கு.. பெஸ்ட் இன்ஸ் ட்ருமென்டல் (மென்டல அழுத்தி )மியுசிக் தான் உனக்கு நல்லது.. அதுவும் ப்ளூட் மாதிரி கத்துக்க.. யாராச்சும் அடிக்க வந்தா தூக்கிகிட்டு ஓட ப்ளூட் தான் வசதி//

ஐயா சா...மீ ஆளை உடுங்க. குலுங்கி குலுங்கி சிரிச்சதிலே கீழே இருந்த வயிறு மேலே வந்துடுச்சு. நல்ல வேலை உங்க வீட்டுக்கு வந்திருந்தப்ப பரணில் தூங்கிக்கிட்டிருந்த அந்த புல்லாங்குழலை நானாவது கத்துக்கறேன்னு உங்க வீட்டு பாஸ் கிட்டே கேட்டு வாங்கிட்டு வந்ததுனால பிழைச்சேன். அதால வயித்தின் மேலிருந்து கீழ் உருட்டி மீண்டும் அதை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்குள் நான் பட்ட பாட்டைப் பற்றி தனியே ஒரு பதிவே போடலாம். நீங்க போட்டுட்டீங்கறதால விட்டுட்டேன்.

ரேகா ராகவன்.

K.B.JANARTHANAN said...

சங்கீதத்தைப் பொறுத்த வரை சுத்த சந்நியாசி ராகம் தாங்க நமக்கு சரி...

பலா பட்டறை said...

அடடா என்ன கேட்டா, அத கத்துக்காம லயிச்சி போற மாதிரி கேட்டுகிட்டு போயிடனும்...முழுசா தெரியும் எதிலயும் குறையை மட்டுமே கண்டுபிடிக்க மனசு விழையும் என்பது என் கருத்து...::)

என் நடை பாதையில்(ராம்) said...

ஹா! ஹா! கம்ப்யூட்டர் முன்னாடி தனியா சிரிச்சா, என்ன வீட்ல ஒரு மாதிரி பாக்குறாங்க சாரே!

வசந்தமுல்லை said...

fine nice joke

வசந்தமுல்லை said...

nice joke of the year 2010!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

thenammailakshmanan said...

ஹாஹாஹா

சங்கீதமே..!! சௌபாக்யமே..!!

சமுத்ரா said...

believe me,
பாடுவதை விட கேட்பதே ஆனந்தம் :)